Skip to main content

Ashoka the 2nd

அன்பெனும் அருமருந்து

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் அறையில் உடலில் அணிந்திருந்த பாதுகாப்பு ஆடைகளை களைந்து விட்டு சானிடைசர் போட்டு கைகளை கழுவிக் கொண்டு முகத்தை அலம்ப கண்ணாடியில் பார்த்தபோது தான் மாஸ்க் இன்னும் கழட்டப்படாமல் இருந்ததை பார்த்தாள் ஆர்த்தி. மெதுவாக  மாஸ்க்கை முகத்திலிருந்து உரித்தெடுக்க,  சிவந்த முகம் கன்னிப் போயிருந்தது. மாஸ்க் மூக்கின் மேல் அழுந்திய இடம் சிவப்பு கோடிட்டிருந்தது.  முகத்தை அலம்பிவிட்டு வெளியே வந்தாள்.  நைட் ஷிப்ட் எட்டு மணிக்கே முடிந்திருந்தாலும் வெளியில்வர காலை பத்து மணி ஆகியிருந்தது. கோவிட் வைரஸ் உலகெங்கும் கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. ஸ்டான்லியின்  அனைத்து டாக்டர்களுக்கும் விடுமுறை மறுக்கப்பட்டு இரவு டூட்டிக்கு பின்னர் தரப்படும் ஓய்வும் இல்லாமலிருந்தது.  உடலின் ஒவ்வொரு அணுவும் ஓய்வு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ய, ஆர்த்தி தளர்வாக நடந்தாள்.  ரிஸப்ஷனருகே நின்றிருந்த சீப் டாக்டர் சங்கர் ஆர்த்தியிடம் “குட் மார்னிங் அண்ட் குட் நைட்” என்றார். ஆர்த்தி கையால் சல்யூட் வைத்துவிட்டு வெளியேறினாள். அடுத்த வருடம் ரிடையர்மெண்டை எதிர்நோக்கி இருந்தாலும் எந்நேரமும் ரவுண்ட்ஸில் இருப்பவர். தினமும் டாக்டர்களுக்கு மீட்டிங் வைத்து மோட்டிவேட் செய்பவர். “வெள்ளைக் கோட்டை அணிந்து விட்டால் டாக்டர் என்பவன் காக்கும் கடவுள். அழிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். காப்பதை  நம்மால் மட்டுமே செய்ய முடியும். நம்மால் நூறு பேர் பிழைக்கலாம். ஆனால் ஒருவர் கூட இறக்க கூடாது. நமக்கு நூறை விட ஒன்று பெரியது” என்பவர்.  ஸ்கூட்டியை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு திரும்பியபோது ஒரு பெரியவரும், அவரது மகனும் நின்றனர். “ரொம்ப நன்றிம்மா” என்றார் பெரியவர் கூப்பிய கரங்களுடன்.  ஜனார்தனனும் அவரது மகனும் அவளது வார்டில் அனுமதிக்கப்பட்டு பத்து நாட்களாக சிகிச்சை பெற்று இன்று டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். இருவரின் பின்னால் அவர்களின் குடும்பத்தினர் நின்றுகொண்டிருக்க… “இரவு பகலா நீ எங்களை இப்படி கவனிக்கலன்னா நாங்க ரெண்டு பேரும் உயிரோடு வெளியே வந்திருக்க மாட்டோம்” என்றார்.  “அப்படியெல்லாம் இல்லை. மறுபடி ஏதும் பிரச்னைன்னா நேரா வார்டுக்கு வந்துடுங்க”  “அப்பா உடல்நிலை ரொம்ப மோசமானப்ப விடிய விடிய உட்கார்ந்து மருந்துகளை குடுத்தீங்களே மறக்க முடியுமா என்னால” என்றான் மகன்.  “அது என் டூட்டி தானே.   எல்லாம் கடவுள் கையில தானிருக்கு” “எங்களை பொறுத்தவரை நீதாம்மா கடவுள்” என்றாள் பின்னாலிருந்த பெண். உள்ளத்தால் உருகி நின்றவர்களை ஒருவழியாக சமாளித்து அனுப்பிவிட்டு ஸ்கூட்டியை திருகியபோது ஆர்த்திக்கு தூக்கம் கலைந்து, உயிர்களை காப்பாற்றிய பரவச உணர்வு மனமெல்லாம் நிரம்பியிருந்தது.  இதற்காகத்தான் இரவு பகலாக உழைக்கிறார்கள். இதுபோன்று சிலசமயங்களில் நடக்கும்.  கண்ணீருடன் கைகளை குவித்து நிற்பவர்களை பார்க்கும்போது மனம் நெகிழ்ந்து போகும்.  டாக்டரின் ஆன்மாவை நிறைக்கும் இந்த உணர்வே மென்மேலும் பணி செய்யத்தூண்டும். பிளாட்டில் வண்டியை நிறுத்தி விட்டு காலிங் பெல்லை அடிக்க கணவன் ஆகாஷ் கதவை திறந்தான். திறக்கும்போதே “மறுபடி எத்தனை மணிக்கு போகணும்” என்றான். “ஏழு மணிக்கு” என்றவாறு உள்ளே நுழைய அவர்களின் மகள் மேகனா ஓடிவந்தாள். “பக்கத்தில் வராத மேகி” என்று ஆர்த்தி சத்தமிட்டதை கேட்காமல் ஓடிவந்தவளை இடைமறித்து ஆகாஷ் தூக்கிக் கொண்டான். “இருடா அம்மா குளிச்சிட்டு வருவா” மேகனா ஏழு வயது அழகு தேவதை.  தோள் வரை புரளும் பாப் முடியுடன் பிராக்கில் திரியும்  குட்டிப்பிசாசு.  மேகி செல்ல பெயர். ஆர்த்தி குளித்துவிட்டு வந்தபோது குட்டி குட்டியாய் இட்லி போட்டு சட்னி, சாம்பாருடன் டைனிங் டேபிளில் ஆகாஷ் காத்திருந்தான்.  மேகி ஓடி வர ஆர்த்தி அவளை தூக்கிக்கொண்டாள். “டயர்டா இருக்கு நீங்க சாப்பிடுங்க.  நான் தூங்குறேன்பா” என்றாள் ஆர்த்தி.  “ஏய் எங்க அப்பாவை அப்பானு சொல்லாதே” என்றாள் மேகி வெண்ணிற கண்களை உருட்டியபடி. “சரிம்மா தாயி”  என்றபடி ஆர்த்தி நிற்க  “நான் உன் தாயி இல்ல மேகி”  “மத்தியானம் எழுப்பலை.  இப்ப சாப்பிட்டுட்டு போ” இப்படித்தான் சொல்வான்.  ஆனால் ரெண்டு  மணிக்கு மீண்டும் எழுப்புவான்.     “சரி. மதியானம்  ரெண்டு மணிக்கு எழுப்பாத. அஞ்சு மணிக்கு எழுப்பு. ஒரேடியா சாப்பிட்டு கிளம்பறேன்” “சரி” “இப்படித்தான் சொல்ற.  அப்புறம் ரெண்டு மணிக்கு எழுப்புவ” “நாங்க ரெண்டு பேர் மட்டும் எப்படி தனியா சாப்பிடுறது? நீ லீவு போட்டுட்டு வீட்டில இருன்னாலும் கேட்கிறதில்லை” இருவருக்கும் இப்போதெல்லாம் இதில் தான் சண்டை வருகிறது. ‘கொரோனா உனக்கு வந்துட்டா என்ன பண்றது’ என்பது ஆகாசின் வாதம். ‘எல்லோரும் இப்படி சுயநலமா இருந்தா எப்படி’ என்பது ஆர்த்தியின் வாதம். ஆர்த்தி அமைதியாய் சாப்பிட “இன்னிக்கி டிபன் செய்ய நான் தான் ஸ்டவ் பற்ற வைத்தேன்.  டேஸ்ட்டா இருக்கா?” என்றாள் மேகி. “அதான் சூப்பரா இருக்கு. இல்லாட்டி இவருக்கு இப்படி சமைக்க தெரியாதே” “மதியம் உனக்கு என்ன வேணும்?” என்றான் ஆகாஷ். “எதுன்னாலும் சமைங்க. என்னை அஞ்சு மணிக்கு எழுப்புங்க” ஆகாஷ் ஐடியில் இருந்ததால் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தான். அருமையாக சமைப்பவன். டிபனை வேகமாக முடித்துவிட்டு செல்போனை ஹாலில் வைத்தாள். “டாக்டர் சங்கர் போன் பண்ணினால் என்னன்னு கேளுங்க. வேற யாரும் போன் பண்ணினா நான் அமெரிக்கா போயிட்டேன் ஆறு மணிக்கு வந்துருவேன்னு சொல்லுங்க” “அம்மாச்சி போன் பண்ணினா?” “நான் நிலாவுக்கு போயிட்டேன். திரும்ப ஒரு வாரம் ஆவும்னு சொல்லுடி” இவர்களின் வீடு பாரிஸ் கார்னரில் இருக்க ஆர்த்தியின் அம்மா வீடு கொளத்தூரில் இருந்தது. வாரம் ஒருமுறை ஆர்த்தியின் அப்பாவும், அம்மாவும் வந்து பார்த்துச் செல்வர். “அப்படியே சொல்லட்டுமா” “அப்படியே சொல்லுடி நாரதி” “சரி நாராயணா” திரைச்சீலைகளை மறைத்து முழுதும் இருட்டாக்கிவிட்டு ஆர்த்தி தூங்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் எழுப்பினான்.   “அஞ்சு மணி ஆயிடுச்சு எழுந்திரி” நேரம் போனதே தெரியலையே என நினைத்தபடி எழுந்து அவள் கடிகாரத்தைப் பார்க்க அஞ்சு பத்து என காட்டியது. “சாப்டுட்டு குளிக்கப் போ” “குளிச்சு ரெடி ஆகிட்டு சாப்பிடுறேன்” “ஏற்கனவே மதியானம் சாப்பிடலை. கிளம்பும்போது ஜூஸ் போட்டு வைக்கிறேன். இப்ப சாப்பிடு” “மூஞ்ச கழுவிட்டு வர்ரேன்” என்றபடி எழுந்தவள் அருகில் சிரித்தபடி நிற்கும் மேகிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பாத்ரூம் போய்வந்தாள். ஒரு தட்டில் மூன்று கிண்ணங்கள் வைத்து சாம்பார் சாதம், தயிர் சாதம், பொரியலை ஸ்பூனுடன் தனித்தனியாக வைத்திருந்தான். சாப்பிடும்போது “நீ ஸ்டவ்வ பத்த வச்சியாடி” “இல்ல ஏன்?” “சாப்பாடு டேஸ்டா இல்ல.  அதான் கேட்டேன். ஏண்டி சிரிக்கறே” “ஒன்னுமில்ல.  சாப்பிடு சொல்றேன்” “சொல்றியா?” என்னப்பா பண்ணுனீங்க? எதையாவது உடைச்சுட்டிங்களா” என்று தட்டை சிங்கிள் போட்டுட்டு வீட்டை சுற்றி வந்தாள். “அஞ்சு மணிதாம்மா உண்மையா” என்று மேகி சொல்ல, ஹாலில் இருந்த கடிகாரம்  இரண்டு முப்பதைக்   காட்டியது. “அரே சைத்தான் கி பச்சே” என்றபடி ஆர்த்தி ஓடிவர மேகி சிரித்தபடி ஆகாஷிடம் ஓடினாள். ஆகாஷ் மேகியை தூக்கிக்கொண்டு பெட்ரூமுக்கு ஓட இருவரையும் ஆர்த்தி துரத்தினாள்.  மூவரும் பெட்டில் படுத்து உருண்டனர். “எல்லாம் இவ ஐடியாதான் என்ன சொல்லாத” என்றான் ஆகாஷ். ஆர்த்தி மேகியை கட்டி பிடித்து அவளுடம்பில் கிச்சு கிச்சு செய்ய சத்தமாக சிரித்தாள் மேகி.  அவள் பார்க்காதபோது ஆகாசிற்கு ஒரு முத்தமிட்டாள். ‘மறுபடி தூங்கலாம்’  என்று நினைப்பே பேரானந்தமாய் இருந்தது. “நானும் அம்மா கூட தூங்குறேன்” என்று மேகி ஆர்த்தியை கட்டிப்பிடித்தபடி படுத்திருக்க “அம்மாவ தொந்தரவு பண்ணாம தூங்கு” என்றபடி கதவை சாத்தி விட்டு போனான் ஆகாஷ். சரியாக ஏழு மணிக்கு ஆர்த்தி புறப்பட்டதும் “அப்பாவை பத்திரமா பாத்துக்கடி” என்று சொல்லியபடி டாடா காட்டிவிட்டு புறப்பட்டாள். அடுத்த இரண்டாம் நாள் மேகிக்கு கொரானா வந்தது.    ஆர்த்திக்கும், ஆகாசுக்கும் கொரோனா இல்லாமலிருக்க மேகிக்கு மட்டும் எப்படி வந்தது என தெரியாமலிருந்தது.   மேகியை தனது வார்டிலேயே வைத்து பார்த்துக் கொண்டாள் ஆர்த்தி.   இரவு பகலாக அவளுடனே  அவளுடனேயே இருந்தாள். பிளாட்டுக்கு போகும்போதெல்லாம் ஆகாஷ் “உன்னால்தான் கொரோனா வந்தது.  லீவு போட்டுட்டு இருக்க சொன்னா கேட்டியா” என்று கத்திக் கொண்டிருக்க நாலைந்து நாட்கள் நரகமாய் இருந்தது ஆர்த்திக்கு. கொரானாவிற்கென தனிப்பட்ட மருந்தேதும்  இல்லாததால் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டவும் மருந்துகளை தந்து கொண்டிருந்தாள். ஆறாவது நாள் இரவு மேகி அமைதியாக இறந்துபோனாள். ஆர்த்தியின் உலகம் இருண்டு போக,  மேகி இறக்க காரணம் தான் தானோ என்ற எண்ணம் மனதை கிழித்தெறிந்தது.  மேகியின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கக்கூட முடியாமல் போன கோபத்தில் ஆகாஷ் கண்டபடி திட்டிவிட்டு “இனி உன்னுடன் வாழ முடியாது.  டைவர்ஸ் வாங்கிக்கலாம்” என்று சொல்லிவிட்டு போய்விட ஆர்த்தி உறைந்து போனாள்.   கணப்பொழுதில் வாழ்வின் சகலமும் பிடுங்கி எறியப்பட்டது. அதிர்ச்சியின் உச்சத்தில் அழக்கூட முடியாமலிருக்க ஆர்த்தியின் பெற்றோர் அவளை அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.   ஆர்த்திக்கு அவளின் மனமே எதிரியாய் நின்றது. நினைவுகள் வாழ்வை நரகமாக்கியது. நினைவுகளிலிருந்து விலகி நிற்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் ஆகாஷிடமிருந்து டைவர்ஸ் நோட்டீஸ் வந்தது. ஆர்த்திக்கு அழுகை வரவில்லை. சீப் டாக்டர் சங்கர் “நீ லீவுல இரு” என்று சொல்லிவிட்டார்.  அம்மா வீட்டிலும் ஆர்த்தி பிரமை பிடித்தது போலவே அமர்ந்திருந்தாள். ஆர்த்தியின் அப்பா ஆகாசிடம் பேச முயன்று கொண்டிருந்தார். போனை சுவிட்ச் ஆப் பண்ணி இருந்தான் ஆகாஷ்.  அன்று காலை ஆர்த்திக்கு புது நம்பரில் இருந்து போன் வர அம்மா பேசிவிட்டு ஆர்த்தியிடம் கொடுத்தாள். “நான் ஜனார்த்தனன் பேசறேன்மா.  மனசே கலங்கிப் போச்சி.  இப்பதான் நடந்ததை கேள்விப்பட்டேன். ஊரில் இருப்பவங்களோட உயிரை காப்பாத்துற  தெய்வம் நீ.  கலங்கக் கூடாது. மனுஷங்க மனசு ஒடிஞ்சா அந்த குடும்பம் பாதிக்கும். உன்னை மாதிரி டாக்டர்ஸ் மனசு உடைஞ்சா மனிதகுலமே பாதிச்சிடும்.  அந்த கடவுளுக்கு உயிர்தான் வேணும்னா நான் கொடுத்து உன் மகளை காப்பாத்தி இருப்பேன்” என்று அவர்  சொல்லிக்கொண்டே போக ஆர்த்தி ஒரு முடிவுக்கு வந்தாள்.  அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டாள். முப்பரிமாண உலகம் அவளுக்கு ஒரு பரிமாணமாய் சுருங்கிப்போனது. வீடும், ஆஸ்பத்திரியும் வாழ்க்கையாகப் போனது.  சீப் டாக்டர் சங்கர் ஹாஸ்பிடலில் சைகாலஜிஸ்ட்டை அனுப்பி இவளுக்கு கவுன்சிலிங் செய்ய முயன்றார். நைட் டூட்டி

Read More

ஊழ்வினை

பொதிகை மலைச்சாரலில் புதுப்பெண்ணின் நாணத்துடன் சுழித்தவாறு ஓடிக்கொண்டிருந்தது சிற்றாறு. மண்ணுக்கடியில் நீர் வேர்களைத் தேடிச் செல்ல, மரங்களில் பூக்களும், காய்களுமாய் வளம் கொஞ்சின. நீரின் சலசலப்பும், இலைகளின் முணுமுணுப்பும் காற்றின் மடியிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தன. வான் படுக்கையில் ஒட்டிக் கிடந்த நிலவும், கதிரவனும் விலகிச் செல்ல, இரவின் நிறம் குலைந்து கொண்டிருந்தது.   ஆற்றையொட்டி அமைந்திருந்த தவக்குடில்களின் எதிரிலிருந்த ஓமக்குண்டத்தின் எரிகட்டைகள் அணைந்திருந்தன. நிலத்தின் கணகணப்பில் மான்கள் குட்டியுடன் படுத்திருக்க, சில மயில்கள் கூரையில் குறுகி அமர்ந்திருந்தன. படலை ஓசையின்றித்  திறந்து வெளியே வந்த பரந்தாமனின் கையில்   மாற்றுடையுடன் பூக்குடலை  இருந்தது. முகத்தில் பேரமைதி ஒளியாய்ச் சுடர் விட, நெற்றியை அலங்கரித்த திருநீரின்  கீற்றுகள் படுக்கையில் புரண்டதில் கலைந்திருந்தது. “ஓம் நமோ பக்வதே சர்வேஷ்வராய!  ஷ்ரியஹ் பதயே நமஹ” என்று உதடுகள் முணுமுணுத்தன. மற்ற சீடர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் படலைச்  சாத்தி விட்டு ஆற்றை நோக்கி நடக்க துவங்கினான். இரவுப் பூச்சிகள் உறக்கம் கலைய விருப்பமில்லாமல் முனகலாய் இசையொலித்தன. உலகம் இசையாலானது. காற்று அதிகாலையில் நிலத்தைத் தழுவி பூபாளம் பாடுகிறது. இரவில் தாலாட்டாய் மாறி உயிர்களை உறங்க செய்கிறது. ஐம்பூதங்களும் ஒன்றையொன்று தழுவி ஓயாமல் பண் இசைக்கின்றன. அதைக் கேட்க ஐம்புலன்களும் உயிர்த்திருக்க வேண்டும். ஒவ்வொரு புலனின் எல்லையையும் கட்டவிழ்க்க வேண்டும். அகத்திய முனிவரிடம் இருபதாண்டுகள் அவன் பயின்றது அதைத்தான். புலன்களை மேம்படுத்துவது. மேம்படுத்தி பிரம்மத்தை நோக்கி திருப்புவது. இது அத்தனை எளிதல்ல. இருளை அறியும் ஒளியாய் ஒவ்வொன்றாய் அறிவது. அறிவது அவற்றை விலக்கவே. அனைத்து மாணவர்களுக்கும் முதல்வன் என்று அகத்தியர் அவனையே கூறியிருந்தார். இன்று தீட்சை பெறும் நாள். பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது. இரவு முழுதும் உறக்கம் வராமல் மனம் விழித்திருந்தது. அதிகாலையில் நடப்பது பேரானந்தமாய் இருந்தது. இறையும் இயற்கையும் ஒன்றிணைந்து இருக்கும் நேரம். மரங்கள் அடர்ந்த இடத்திற்கு சென்று உடலெனும் மாயையின் பரிகாரங்களை முடித்து, குளித்து, உடை மாற்றினான். மனதின் ஒவ்வொரு அறையிலும் இறையருளை நிரப்பி மூச்சுக்காற்றில் அமைதியைக் கோர்த்து நாவில் திருமந்திரத்தை பூட்டினான். பனித்துளி துளிர்த்த மலர்களைப் பறித்து கூடையை நிரப்பினான். மலர்கள் மாசற்ற இயற்கையின் மென்னகையாய் உருவம் கொண்டிருந்தன. பழக்கப்பட்ட கால்கள் பர்ணசாலையை நோக்கி நடக்க மனம் பிரம்மத்தை நோக்கி நகர்ந்தது. அமைதியை சுக்குநூறாக்குமாறு திடீரென பெண்களின் சிரிப்பொலி கேட்டது. கலகலவென்ற ஓசை வனமெங்கும் உருண்டோட இளமனதில் குறுகுறுப்பு ஏற்பட்டது. பருவத்தின் கண்கள் விழித்தன. விதியின் வழியில் கால்கள் திரும்பின. மெதுவாக நடந்து சென்று மரத்தில் மறைந்தவாறு சுனையை நோக்கினான். பெண்ணொருத்தி பாறையின் மறைவிலிருக்க, மற்றொருத்தி சுனை நடுவிலிருந்தாள். அவள் மேலாடை அவிழ்ந்து நீரில் மிதந்தது. பொன்னில் செதுக்கியது போன்றிருந்த மேனியைக் கண்டதும் உள்ளம் அதிர்ந்தது. உடல் நடுக்கமுற மூச்சுக் காற்று துண்டுகளாய் உடைந்தது. கண்கள் விரிய அவளையே பார்த்தான். மனதில் ஆசை கனன்றெழுந்தது. ஆயிரம் இதழ் தாமரை மொட்டாய் குவிந்திருந்த மனம் மோகமெனும் புயலில் சிதைய, இதழ்கள் காற்றில் பறந்தன. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் நீராடி மேலேற, மெதுவாக விலகினான். கால்கள் தடுமாற இலக்கின்றி நடந்தான். எண்ணங்களை உதறி சீராக்க முயன்றான். மனம் நொறுங்கிய பாறையாய் ஒட்ட மறுத்தது. மரத்தின் வேரில் அமர்ந்தான். துயரமும் திகைப்பும் மனதை வருத்தியது. உள்ளத்தின் ஒளி அணைந்ததை போலிருந்தது. கண்களை மூடினாலும் நினைவுகளின் மேற்பரப்பை கிழித்து அவள் உடலே வெளிவந்தது. உலகம் அவளின் உடலாயிருந்தது. நினைவுகளை புறந்தள்ளி ஆற்றில் முங்கி முங்கி எழுந்தான். பஞ்சாட்சரத்தை ஓலமாகக் கத்தினான். அவனுடைய குரலே மாறியிருந்தது. ஆற்று நீர் உடல் அழுக்கை நீக்கினாலும் உள்ளத்தை தூய்மையாக்க முடியாமல் தோற்றது. பூக்குடலையை தேடி எடுத்துக்கொண்டு குடிலை நோக்கி நடந்தான். வலது கால் முழந்தாளில் ஏதோ குத்தியது போலிருக்க குனிந்து நோக்கினான்.  ராஜநாகம் ஒன்று அவனைத் தீண்டி விட்டு நெளிந்தபடி சென்றது. உள்ளம் வெறுத்திருக்க, பதட்டமின்றி நடந்து சென்று குருவின் குடிலுக்குள் நுழைந்தான்.  குடிலின் நடுவில் அமர்ந்திருந்த அகத்தியரின் அருகே பதப்படுத்தி, நறுக்கிய பனை ஓலைகள் கட்டு கட்டாய் வைக்கப்பட்டிருந்தன. எதிர்கால சந்ததியின் வாழ்வைக் கணித்து சோதிடம் எழுதிக் கொண்டிருந்த அகத்தியர் தலைநிமிர்ந்தார். ஒற்றைச் சுடராய் சுடர்ந்த மனம் வெடித்து காட்டுத்தீயாய் நாற்புறத்தையும் எரிப்பதை கண்டார். குருவை நெருங்கிய பரந்தாமன் நெடுஞ்சாண்கிடையாக அவரின் காலில் விழுந்தான். உடலில் நஞ்சின் நீலம் பரவத் துவங்கியிருந்தது. “என்னை மன்னித்து விடுங்கள்” “ஊழின் கைப்பாவைகள் நாம். பிரம்மத்தின் கடைசி படியில் தடுக்கி விட்டாய்” “மீண்டும் எப்போது பிரம்மத்தை நோக்கி செல்வேன் என்று கூறுங்கள்” “அடுத்தது இழிந்த பிறவி, முப்பதில் முடியும். அதனால் வாய்ப்பில்லை. அதற்கடுத்ததில் வாய்ப்பு கனியும்” “வழிகாட்ட நீங்கள் வரவேண்டும் குருவே” நீண்ட மூச்சை விடுத்த அகத்தியர் “அவசியம் வருவேன். ஆசையைத் துறந்தால் அமைதி கிட்டும்” என்றார். “நன்றி குருவே” என்று நிம்மதியுடன் கண்களை மூடினான் பரந்தாமன். கண் விழித்தபோது உடம்பு முழுதும் வலித்தது. ஆட்டோவிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் பரமன். நைட் சரக்கு அடித்து விட்டு வீட்டுக்கு வந்தவன் மனைவி பார்வதிக்கு பயந்து ஆட்டோவை வீடிருக்கும் தெருமுனையிலேயே நிறுத்தியிருந்தான். சட்டைப் பையில் துழாவி பீடியை எடுத்து பற்ற வைத்தான். இரவு எதுவும் சாப்பிடாததால்  காலி வயிறு கத்தியது.  பையில் நயா பைசா துட்டில்லை. “சவாரி வருமா?” பரமன் திரும்பி பார்க்க, பேண்ட் சட்டையில் ஒருவன் நின்றான். “எங்க நைனா போனும்?” “சென்ட்ரலு” “முன்னூறு ஆவும்” “எரநூறு வாங்கிக்க” “வழியல்லாம் தோண்டி போட்டு வச்சிருக்கானுங்க. சுத்திகினு போவுணும்” “வியாசர்பாடி வழியா போலாம். நேத்து நைட் அப்புடி தான் வந்தேன். எருநூத்து அம்பது வாங்கிக்க” ஐம்பதுக்கு பெட்ரோல் அடித்தால் கொஞ்சம் மிச்சமாகும். “குந்து நைனா” பீடியை வேகமாக வலித்து எறிந்தான். ஆட்டோவை சந்து சந்தாய் வளைத்து வேகமாக ஓட்டினான். சென்ட்ரலில் சவாரியை இறக்கி விட்டு வண்டியை திருப்பும் போது “ஏ பரமா” என்று சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் நமச்சிவாயம் நின்றான். அவனுடைய ஜிகிரி தோஸ்த். “இன்னா மச்சான்?” “ஏப்பி பர்த்துடே” ‘அட உனுக்கு எப்புடி தெரியும்?” “எலே! நேத்து ராவுல தண்ணியடிக்கும்போது சொன்னியே. இன்னிலருந்து முப்பது வயசுனு. மறந்து போச்சா?” “ஆமாமுல்ல. நீயும் தான வந்த” “அது செரி போ. இன்னிக்கி பார்ட்டி கீர்ட்டி இல்லையா?” “கைல சுத்தமா துட்டு இல்ல. சவாரி முடிச்சிட்டு சாய்ங்காலம் ஆறு மணிக்கு வர்றேன். கொளுத்துவோம்” “அட நம்ம ரங்கன் கிட்ட கடன் வாங்கிக்குவோம் வா” “செரி வா” இரண்டாயிரத்தை கடனாக வாங்கிக் கொண்டு இருவரும் டாஸ்மாக் பாருக்கு சென்றனர். ஒரு புல்லு, பத்து முட்டை, தண்ணி பாக்கெட் என ஜமா தொடங்கியது. மதியம் ஒரு மணிக்கு வெளியே வரும்போது இருவரும் போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தனர். “நூறு வைசு வாழுவடா நீயி” “இன்னாத்துக்கு வாழுனும்? இன்னிக்கு செத்தா கூட சந்தோஷமா சாவேன். எப்ப செத்தாலும் எவன் சந்தோசமா சாவுறானோ அவந்தான் குட்த்து வச்சவன். இன்னா சொல்ற” “கரீட்டு.  ஊட்டுக்கு போயிருவியா. கொண்டாந்து உடுட்டா” “நான் இன்னா மொத தாட்டியா குடிக்கிறன். போவியா” “அக்கா மொத்த போவுது போ” கட்டைவிரலை உயர்த்திய பரமன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய, கிரகிர்ரென்று மக்கர் பண்ணியது. “சாவுகிராக்கி” என்று திட்டியபடி மீண்டும் சாவியை முறுக்க, பக்பக்கென்று ஸ்டார்ட் ஆனது. ஆட்டோவை ஓட்டத் துவங்கினான். வட்டிக்கு வாங்கிய பணத்தில் ஆயிரம் ரூபாய் பாக்கெட்டில் மிச்சமிருந்தது. அதை கொடுத்து விட்டால் பார்வதி கத்த மாட்டாள். ஆட்டோ குறுக்கு சந்திலிருந்து வெளிப்பட்டு மெயின் ரோட்டில் திரும்பியது. இருட்டில் தெரியும் அவளுடைய உடல் வளைவுகள் ஞாபகத்தில் வர, உடல் ஒருமாதிரி முறுக்கேறியது. ஆக்சிலேட்டரை  திருகி இடப்புறம் வேகமாக திருப்ப, சடாரென்று வெளிப்பட்ட லாரியிலிருந்து விலக முயன்றான். பெருஞ்சத்தத்துடன் லாரியின் முன்புறம்  ஆட்டோவில் மோத, மூஞ்சி நசுங்கிப் போன ஆட்டோ வானில்  பறந்து மற்றொரு காரில் விழுந்தது. ட்ராபிக் ஸ்தம்பித்தது. அங்கிருந்தோர் பரமனை இழுத்து கிடத்தியபோது காது, மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகியது. “ஆம்புலன்சுக்கு போன் பண்ணு, பூட்டாம்பா” என்ற குரல்கள் காதில் விழுந்தன. மெதுவாக கண்களை திறந்து கடைசியாக ஒரு முறை உலகத்தை பார்த்தான். காதில் வலி தெறிக்க, கண்களை மூடினான். வலது காதில் தோடு போல் அணிந்திருந்த சிலிக்கான் சிப்பிலிருந்து கிர்ரென்று விட்டு விட்டு சத்தம் கேட்க பரம்ஸ் கண்விழித்தான். “காலை வணக்கம். மணி ஏழு”  என்று ரூமிலிருந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பெண் சிலுசிலுப்பான குரலில் அறிவிக்க எழுந்து அமர்ந்தான். சோம்பலுடன் கண்களை திறந்து “நிகழ்ச்சி நிரல்?” என்று கேட்டதும், “காலை ஒன்பது மணிக்கு லிங்கநாதன் கோயில். மதியம் அலுவலகம். மாலை ஆறு மணிக்கு அரசு மருத்துவமனை” என்ற பெண்குரல் சற்று கரகரவென்றது. வாய்ஸ் சிந்தஸைசரை பார்க்க வேண்டும். வலது காலை பெட்டிலிருந்து கீழே வைக்கையில் பாம்பு கொத்தியது போல முழங்கால் கடுகடுத்தது. இதுபோல் அடிக்கடி திடீர் திடீரென்று முழங்காலில் வலிக்கும். டாக்டர்களிடம் பல முறை சென்றும் பயனில்லை. அனைத்து ரிபோர்ட்டுகளும் சரியாக இருக்க, அவர்களுக்கும் ஏனென்று விளங்கவில்லை. காலிலிருந்து ஏதோ ஏறுவது போல சற்று நேரம் வலித்தது. மெதுவாக எழுந்து உடலின் தேவைகளை நிறைவேற்றி, சில்லென்ற வீசிய காற்றில் குளித்து வெளியே வந்தான். உடை மாற்றும் போதே காதிலிருந்த சிப் அதிர்ந்து “நமச்சிவாயம், போன்” என்று ஸ்பீக்கரில் ஒலித்தது. “சொல்லுங்க பாஸ்” “பரம்ஸ், லிங்கநாதன் டெம்பிளில் கஷ்டப்பட்டு பெர்மிஷன்  வாங்கிருக்கேன். ஒன்பது மணிக்கு ஷார்ப்பா வந்துரு. குருஜிய பார்க்க இன்று கடைசி நாள். வேறு கிரகத்துக்கு போக இருக்கார்” “பாஸ் மறுபடியும் கேட்கிறேன். எனக்கு விருப்பமே இல்ல. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்” “நோ வே மேன். கண்டிப்பா நீயும் வர்ற. குருஜிய பார்த்தவங்களுக்கு நிறைய சேஞ்சஸ் நடந்துருக்கு. நம்முடைய பழைய பிறப்புகளைத் புரட்டி பார்த்து வாழ்வுக் கோட்டை நேர் பாதைக்கு திருப்பும் சக்தி உள்ளவராம். கண்டிப்பா வா” நமச்சிவாயம் அவனுடைய பாஸ். அகத்தியர் என்ற சித்தர் கோயிலுக்கு வந்திருக்கிறார். முக்காலமும் உணர்ந்தவர். போய்  பார்த்து வரலாமென ஒரு வாரமாக சொல்லிக் கொண்டு இருந்தார். அவனுக்கு இவற்றிலெல்லாம் பெரிதாக

Read More

கற்றது காதல் அளவு

யமஹா பைக்கை சர்வீசுக்கு கொடுத்துவிட்டு ஹெல்மெட்டுடன் வேகமாக நடந்தான் சித்தார்த். புருஷ லட்சணமாக கொளத்தூர் ஸ்டேட் பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜராய் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. உயரமும், சிகப்பு நிறமும் அவன் அம்மா கொடுத்த வரம். திடமான உடலும், களையான முகமும் அற்பாயுசில் போய்ச் சேர்ந்த அப்பாவைப்போல. பத்து நிமிடம் பேசினால் எவருடனும் உயிர் நண்பன் ஆகக்கூடிய வாயை உடையவன். “மார்க்கெட்டிங்கில் போயிருந்தா இந்நேரம் நீ அம்பானி ஆகியிருப்ப” என்பார் அவனுடைய பிராஞ்ச் மேனேஜர். “நான் பொறந்தப்ப எங்கப்பா சரஸ்வதி கோயிலுக்கு கூட்டிட்டு போயி என் நாக்கில் ‘அ’ எழுத்தை எழுத சொன்னாராம். அடுத்ததா வேற யாரும் இல்லாததால ஐயரு தமிழில் இருக்கும் 494 எழுத்தையும் எழுதிட்டாருனு அம்மா சொல்வாங்க” “மொத்தம் 247 தானே?” “நாக்கு நீளமா இருப்பதால் இம்போசிஷன் மாதிரி ரெண்டு தடவை எழுதிட்டாரோ என்னவோ” மேனேஜரும் மற்றவர்களும் சிரிப்பார்கள். மேனேஜர் என்ற நினைவு வந்ததும் இலவச இணைப்பாக பேங்க் பத்து மணிக்கு திறக்கும் என்பதும் ஞாபகம் வந்தது. அதென்னவோ  சித்தார்த்துக்கு காலையில் பத்து மணிக்கு டாண்னு  வேலைக்கு போவது கழுதைக் கொம்பாக இருந்தது. குதிரைக் கொம்போ, கழுதை கொம்போ! பெயரில் என்ன வித்தியாசம் என்று ஷேக்ஸ்பியரே சொல்லியிருக்கிறார். பஸ் நிறுத்தத்திலிருந்து கொளத்தூர் பஸ் புறப்படுவது தெரிய, அவசரமாய் ஓடிச் சென்று முன் வாசல் வழியாக வலது காலை எடுத்து வைத்து ஏறினான். யாரோ பார்க்கிறார்கள் என்று ஏழாம் அறிவு எச்சரிக்க, திரும்பினான். இடப்புறத்தில் இருவர் அமரும் சீட்டில் அப்போதைய ஐஸ்வர்யா ராயின் தங்கை போல ஒரு பெண்ணும், இப்போதைய அம்பிகாவின் அக்காவைப் போல ஒரு அக்காவும் இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது  தெரிந்தது. “பஸ்ல ஹெல்மெட் போட்டுட்டு போக சொல்லி புதுசா ரூல் வந்துருச்சு போல” என்று அம்பிகா கூறியதற்கு தான் இருவரும் சிரித்தபடி இருந்தனர். “சும்மா இருங்க மேடம். அவர் பார்க்கிறார்” என்றாள் ஐஸ்வர்யா. “ஆமாம். போஸ்டரை பார்க்கிற மாடு மாதிரி உன்னைத்தான் பார்க்கிறான்” என்றதும் கீழே குனிந்து கொண்டு இருவரும் சிரித்தனர். அவள் நிமிர்ந்து பார்க்க சித்தார்த் கணப்பொழுதில் காதலில் விழுந்தான். அதென்னவோ ஆண்களுக்கு மட்டும் கண்டதும் காதல், கண்ட கண்ட இடத்தில் எல்லாம் காதல் வந்து விடுகிறது. இன்ஸ்டன்ட் காபி போல. பெண்களுக்கோ அக்கினி மூலை, வாயு மூலை, காதல் மூலை பார்த்து, ஆற அமரத்தான் வருகிறது. பில்டர் காபி போல. சித்தார்த்தின் மனதில் “இந்த உலகத்தில் யாருமே இவ்வளவு அழகான அழகைப் பார்த்திருக்க முடியாது” என்று சூர்யாவும், “நீ அழகுனு நினைக்கல, என்னைக் காதலிப்பனு நினைக்கல” என்று மாதவனும் டயலாக் பேச, இடையில் “சீட் காலியா இருக்கு. போயி உட்காருங்க” என்ற கண்டக்டரின் டயலாக் சி. கரடியாய் நுழைந்தது. ஐஸ்வர்யாவுக்கு வலப்பக்கத்தில் மூவர் அமரும் சீட்டில் சென்றமர்ந்த சித்தார்த் சொர்க்க வாசல் திறக்க காத்திருக்கும் பக்தனைப் போல அவள் திரும்புவதற்காக காத்திருந்தான். இருபது பெர்சன்ட் இடத்தில் மெல்லிய கொடியாய் ஐஸ்வர்யா அமர்ந்திருக்க, மீதமிருந்த இடத்தை அம்பிகாக்கா ஆக்ரமித்திருந்தாள். சற்று நேரத்தில் எதேச்சையாய் திரும்புவது போல ஐஸ் திரும்பி அவனைப் பார்க்க, மனதுக்குள் ஜிவ்வென்று இருந்தது. உடலின் ஏழு சக்கரங்களும், எண்ணற்ற வாசல்களும் வெடித்து திறந்தன. “கண்ணே உன் கண்கள் என்ன மேட்டூர் டேமா ! பார்வையில் இவ்வளவு கரெண்ட் உற்பத்தியாகிறது. இல்லை கட்ச் வளைகுடாவா! இத்தனை நீளமாக நெஞ்சில் பாய்கிறது” என எண்ணங்கள் அலையடித்த்தன. “வாலாய் இருந்த என்னை வாலி ஆக்கிவிட்டாய். முத்தாய் இருந்த என்னை வைரமுத்து ஆக்கிவிட்டாய்’ என்று கவிதை பிரவாகமெடுக்க, ‘எடுறா அந்த நோட்டை’ என்றது மனது. ‘எங்கே இறங்குறாங்கனு தெரியலயே. ஒரு நடை கோயம்பேடு வரைக்கும் போயிட்டு வந்துரலாமா’ என்று நினைத்தான். லேட்டாக வரும் மாணவர்களை வரவேற்க கையில் பிரம்புடன் காத்திருக்கும் வாத்தியாரைப் போல, மேனேஜரின் முகம் மனதில் தோன்றி மிரட்டியது. எப்போது டிக்கெட் வாங்கினான், எப்படி கீழிறங்கினான் என்பது எதுவும் தெரியாமல், குணா கமலைப்போல ‘பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க’ அவர்களைப் பின்தொடர்ந்தான். இரண்டு பெண்களும் கொளத்தூர் ஸ்டாப்பில் இறங்கியிருக்க, மெலிதான ஆச்சர்யத்துடன் பின்தொடர்ந்தான்.     நிலத்தில் நடை பயிலும் இளந்தென்றலைப் போல மென்மையாக ஐஸ்வர்யா நடந்து போக, ‘பெண்கள் எப்படி இவ்வளவு மிருதுவாக நடக்கின்றனர்’ என்று எண்ணினான். பேங்க் இருக்கும் திசையிலேயே இருவரும் நடந்தனர்.  காட்டன் சேலையை ஐஸ் கனகச்சிதமாய் உடலில் நெய்திருக்க, மைசூர் சில்க்கை அம்பிகா மம்மியை பாடம் செய்வது போல உடலைச் சுற்றியிருந்தாள். இருவரையும் ஒன்றாக பார்க்கையில் யானையை அழைத்துச் செல்லும் யானைப்பாகனைப் போலிருந்தாள் ஐஸ். இவன் பின்தொடர்வதை இருவரும் உணர்ந்து விட்டதாய் தோன்றியது.           பேங்கிற்கு பக்கத்தில் இருந்த லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இருவரும் நுழைய, செக்யூரிடி வணக்கம் வைத்தான். ‘இங்கு தான் வேலை செய்கிறார்களா’ என்றெண்ணிய சித்தார்த்துக்கு பழம் நழுவி ஜூஸரில் விழுந்த மாதிரி இருக்க, ‘எதுக்கும் பேங்கை எட்டி பார்த்துட்டு வந்துருவோம். மேனேஜர் வருத்தப்படுவார்’ என வேகமாக பேங்கிற்கு சென்றான். உள்ளே நுழைந்ததும் கண்ணாடி அறைக்குள் இருந்த மேனேஜர் பத்து என்கிற பத்மநாபனைப் பார்த்து சிறிய இளிப்புடன் வணக்கம் வைக்க, பத்து அவசரமாய் கையசைப்பது தெரிந்தது. “இன்னைக்கு ஆஃபீஸுக்கு ஆடிட்டர் வர்றார். அவரை நீ தான் அட்டென்ட் பண்ணனும், சீக்கிரம் வான்னு நேத்தே சொன்னேன் இல்ல” “சாரி சார். மிஸ்ஸு பஸ் ஆயிடுச்சு. ஐ மீன் பஸ்ஸு மிஸ் ஆயிடுச்சு” “ராமஜெயம்னு ஒருத்தர் வந்திருக்கார். உன்   சீட்டிற்கு பக்கத்து கவுண்டரில் உட்கார வச்சிருக்கேன். ஓடு” “நான் பாத்துக்கிறேன் சார். கவலைப்படாதீங்க” என்று சொல்லி விட்டு “ஏன் சார் இந்த பொண்ணுங்க மட்டும் எப்படி ஒரு எறும்பு கூட நசுங்காத மாதிரி தென்றலா நடந்து போறாங்க?” என்று கேட்டான். மஞ்சள் காமாலை வந்து மஞ்சளாய் இருப்பவனைப் பார்ப்பது போல அவனைப் பார்த்த பத்து “கல்யாணம் ஆனதும் புயலா நடப்பாங்க. அப்ப நிலநடுக்கம் கூட வரும். நீ போயி அவரைக் கவனி” என்று துரத்தினான்.  சீட்டிற்கு சென்ற சித்தார்த் “சாரி பார் தி லேட் சார்” என்றான். “இட்ஸ் ஓகே. ரெஜிஸ்டர்ஸ் எல்லாம் ரெடியா?” அவரைக் கண்டு கொள்ளாமல் “சேகர் சாருக்கு காபி கொடுத்தியா?” என்றான் ஆபீஸ் பையனிடம். “இல்ல சார்” “பக்கத்துல ஐயர் கடை இருக்கு சார். அவரு கைக்கு ஒரு நாளு தங்கத்துல வளையல் போடலாம்னு இருக்கேன். அவ்வளவு நல்லா இருக்கும். நீங்க புரூவா, நெஸ்கபேவா?” “பில்டர் காபி” “சாருக்கு சுகர் கம்மியா போட்டு ஒரு காபி வாங்கிக்க சேகர். எனக்கு சுகர் அதிகமா” “எனக்கு சுகர் கம்மியானு எப்படி கரெக்ட்டா சொன்னீங்க?” “கொஞ்சம் வயசாயிருச்சே அதனால” என்று சிரித்தான். காபி வந்தபோது அதிக சர்க்கரை போட்ட டம்ளர் எதுவென்று கேட்டு ஆடிட்டர் எடுத்துக்கொண்டார்.       “மொத்தம் நூற்று பதினெட்டு ரிஜிஸ்டர் இருக்கு. ஆன்லைன் ரிஜிஸ்டர் நாற்பத்தி ஆறு இருக்கு. ரெடியா எடுத்து வச்சிருக்கேன்.” “என்பிஏ லிஸ்ட் வேணும்” “கேஸுக்கு, கோல்டுக்கு தனித்தனியா எடுத்து வச்சிருக்கேன்” “இன் ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ் லிஸ்ட்?” “எக்செலில் பிரிண்ட் போட்டு வச்சிருக்கேன்” சித்தார்த் வேலையில் கில்லி. ஏதாவது பிரச்னை இருந்தாலும் சமாளித்து விடுவான் என்பதால் தான் ஆடிட்டருடன் இருக்க சொல்லியிருந்தான் பத்து. பம்பரமாய் சுற்றி அவர் கேட்பதையெல்லாம் பிரிண்ட் அவுட் போட்டு கொண்டு வந்தான் சித்தார்த். எள் என்றால் எள்ளுருண்டையாய் இருந்தான். சுவிஸ் பேங்கில் அகௌண்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் பெயரைக் கேட்டால் கூட கொண்டு வருவான் போலிருந்தது.  இரண்டு மணி நேரம் அவர் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான். அனைத்தும் பக்காவாக இருக்க ராமஜெயத்தின் முகத்தில் திருப்தி தெரிந்தது.  பன்னெண்டு மணிக்கு காபியுடன் பஜ்ஜியை பிச்சி வாயில் எறியும் போது நெருங்கிய நண்பனாகியிருந்தான். “மத்தியானம் சாப்பாட்டுக்கு எருமை மாட்டு தயிர் வேண்டாம். உங்களுக்கு வயிற்று பிரச்னை இருக்கு. அதனால பசு மாட்டு தயிர் வாங்க சொல்லிருக்கேன்” என்றான். “சரி” “அம்பத்தூர் கோட்டக்கல் வைத்திய சாலையோட மேனேஜர் நம்ம பிராஞ்ல தான் அகௌண்ட் வச்சிருக்கார். போன் பண்ணி லேகியம் கொண்டு வர சொல்லிருக்கேன்.  தினமும் இரவு சாப்பிட்டு படுங்க. காலைல பூவா கொட்டும்” “அடடா என் வைஃப் எல்ஐசி பாலிசி கட்ட சொல்லிருந்தா. மறந்தே போச்சு. இன்று கடைசி நாள். பக்கத்துல ஏதாவது எல்ஐசி ஆபீஸ் இருக்கா சித்தார்த்?” என்றவர் கேட்டபோது தான் ஐஸ்வர்யாவின் ஞாபகம் வந்தது. “பாலிசி நம்பரைச் சொல்லுங்க. பக்கத்து பில்டிங்கில் பிரான்ஞ்ச் இருக்கு. என் ஒன்னு விட்ட குளோஸ் பிரண்ட் இருக்கா. நானே கட்டிட்டு வர்றேன்” என்று பணத்தை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த எல்ஐசி ஆபீஸிற்கு சென்றான். அவன் கவனித்துக்கொண்ட விதத்தைப் பார்த்த போது ஆடிட்டருக்கே கண்ணில் நீர் வைத்துக்கொண்டது. எல்ஐசி அலுவலகத்தில் நுழைந்ததும் கண்கள் சுற்றிலும் படபடப்புடன் ஸ்கேன் செய்தது. “ஆண்டவா, ஐஸ் இங்க வேலை செய்யணும். அப்படி செஞ்சா அவளோட அப்பாவுக்கு மொட்டை போடுறேன்’ என வேண்டியபடி தேடினான். பேங்கைப் போலில்லாமல் ஆளரவமின்றி அமைதியாய்  இருந்தது ஆபீஸ்.    பணம் கட்டுமிடத்தில் அம்பிகா அமர்ந்திருக்க, அங்கே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை திரிஷா என்றது. ‘இந்த விஷயம் திரிஷாவுக்கு தெரிஞ்சா அந்தம்மா மான நஷ்ட வழக்கு போடும்’ என நினைத்தான்.       இவனைக் கண்டதும் அம்பிகா எனும் திரிஷா அதிர, அதைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்த துண்டு சீட்டில் ஸ்ரீராமஜெயம் எனத் துவங்கி பழக்க தோஷத்தில் மூன்று முறை எழுதினான்.  அதற்கடுத்து  பாலிசி நம்பரை எழுதி பணத்தைக் கொடுத்தான்.        சீட்டைப் பார்த்தவள் “பாலிசிக்காரர் பேரு எழுதுங்க” என்றாள். “ராமஜெயம்தான். ஒரு மரியாதைக்கு ஸ்ரீ போட்டேன்” அவனை ஒரு மாதிரி பார்த்த திரிஷா பணம் கட்டிய ரசீதைப் பிரிண்ட் எடுத்து கொடுத்தாள். “பக்கத்துல இருக்க பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்கேன். பாலிசி பற்றி டீடைல்ஸ் வேணும்” மேனேஜர் என்றதும் கண்களில் ஒரு மரியாதைத் தோன்ற, “அவங்களை கேளுங்க. என்று தொலைவில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவைக் காட்டினாள். ஐஸ் அமர்ந்திருந்த விதம் மதுரை மீனாட்சியே  எல்ஐசி

Read More

நிலவில்லா வானம்

நிலா. பனிரெண்டாவது முதல் குரூப்பில் படிக்கும் பெண்.  சிவப்பான சருமம், சுருண்ட கேசம், சற்றே பூனைக் கண்கள். பூசினாற் போன்ற தேகம். செதுக்கிய நாசி. மொத்தத்தில்  பெயருக்கேற்ற அழகானப் பெண். “மிக அழகான”. டாக்டராவது கனவு மற்றும் லட்சியம். அவசரமாக பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். ஒரு நாள் கூட லீவ் போடாமல் போய் வருடக்கடைசியில் சர்டிபிகேட் வாங்குபவள்.  “அம்மா லஞ்ச் பேக் ரெடியா ?” “இருடி பேக் பண்ணிட்டேன். வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்துக்க” என்றாள் காயத்ரி.  நிலாவின் அம்மா. மகள் தான் உலகம் என்றிருப்பவள். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ப்ரோக்ராமராக இருந்து மகள் பிறந்தபோது அவளுக்காக வேலையை விட்டவள். ஒரே மகள். பெண்ணுக்கு அதிகம் செல்லம் குடுக்க கூடாது என்று கண்டிப்பாக இருப்பதாக நடிப்பவள். “வேன் வரப்போகுது” “வந்தா நிப்பான் இரும்மா” என்ற ரமேஷ், நிலாவின் அப்பா. பேங்க் மேனேஜர்.  ஆபீஸ் விட்டால் வீடு. வீட்டை விட்டால் ஆபிஸ் என்றிருப்பவன். தினமும் பெண்ணிடம் சற்று நேரம் அரட்டை அடித்தால் தான் அவனுக்கு திருப்தி.  அவள கட்டிக்கொடுத்த பின் என்ன செய்வீங்க என்று காயத்ரி கிண்டலடிப்பாள். வீட்டோட மாமனாரா நானும் போய்டுவேன் என்பான் ரமேஷ். திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து, ஏகப்பட்ட வேண்டுதலுக்குப்பின் பிறந்தவள் என்பதால் அதிக செல்லம். லேட்டாக பிறந்தாலும் தேவதையை மகளாக பெற்றதாய்  பூரிப்பவன். வாசலில் ஹாரனுடன் வந்து நின்ற வேனுக்கு வேகமாக ஓடினாள் நிலா. டாடா என்று கையசைத்தாள் பக்கத்துக்கு வீட்டு சிறுமி.  பட படவென்ற  சத்தத்துடன்  வீதியை அதிர வைத்துக்கொண்டு ஒரு யமகா கடந்து சென்றது. “ஹாய் நிலா, என்னாடி இருட்டா இருக்கே” என்று வேன் ஜன்னலில் இருந்து வரவேற்றாள் அவள் பிரெண்டு வர்ஷா. நிலா அவள் தந்தையிடம் கேட்டிருக்கிறாள்.  “எனக்கு ஏம்ப்பா நிலான்னு பேர் வச்சீங்க, ஏன் பிரென்ட்ஸ் கிண்டல்  பண்றாங்க.” “உனக்கு ரோஜா அல்லது நிலானு பேர் செலக்ட் பண்ணிருந்தோம்.  நீ நிலா வெளிச்சமுள்ள அழகான இரவு நேரத்தில் பொறந்தனால நிலானு வச்சோம்” என்பான் ரமேஷ்.  “அன்னைக்கு அமாவாசையா இருந்திருந்தா என்ன பண்ணயிருப்பீங்க?” “தென்றல்னு  வச்சிருப்போம். “போச்சுடா… அதுக்கு நிலாவே பரவாயில்ல.” “சொல்லுடி பூஸ்ட்டு” என்றாள் நிலா.  வர்ஷா சற்று குண்டாக இருப்பாள்.  இருவரும் இணைபிரியா  தோழிகள். ஐந்தாவதிலிருந்து ஒன்றாக  படிப்பவர்கள். “மேத்ஸ் டெஸ்டுக்கு படிச்சிட்டியா” என்றாள் வர்ஷா. “படிச்சிட்டேண்டி” “நீட் கோச்சிங் போய்க்கிட்டு எப்புடிடீ டைம் கிடைக்குது?” “என்ன பண்றது, இல்லன்னா மார்க் வாங்க முடியாதே” “நீ டாக்டராகிட்டா எனக்கு பிரியா வைத்தியம் பார்க்கிற நீ” “நீயும் ஆகிடு, அவ்வள தான்”. “வேண்டாம்ப்பா.  இப்படி கஷ்டப்பட்டு டாக்டராவதற்கு பேசாம நான் ஒரு டாக்டரை கல்யாணம் பண்ணிக்கிறேன்”. அதே நேரம் தெருவின் முனையிலிருந்த “பைக் உலகம்” கடையில் பைக் சத்தம் கம்மியா இருக்குனு கவலை பட்டுக்கொண்டிருந்தான் ராகுல். பன்னிரெண்டாவது மாணவன். அப்பா அம்மா இருவரும் கிளாஸ் ஒன் ஆபிசர்ஸ். அளவில்லா சொத்து. அளவில்லா பாசம். பைக் ஓட்டுவது முதல் வேலை. படிப்பது கடைசி. இரவில் ஓஎம்ஆர் சாலையில் ரேஸில் கலந்துக்கொண்டு பேய்த்தனமா ஓட்ட யமகா எம்.டி15.  பகலில் தெருவை அதிர வைத்து கொண்டு ஓட்ட யமகா பெய்சர். அடுத்து எந்த பைக் வாங்குவதென்பது மற்றொரு கவலை.  இப்போது சைலென்சர் கவலை. “ஏன் சத்தம் கம்மியா இருக்கு” “இருங்க. மப்ளர கொஞ்சம் ட்டுயூன் பண்றேன். அடுத்த வாரம் பெய்சருக்குனு தனி எக்ஸ்சாஸ்ட் பைப் வருது. அத போட்ருலாம்”.  “இதனால ஸ்பீட் ஒண்ணும் கொறையாதில்லை?” “இல்ல கொறையாது”. “எதுவும் பிரச்னையிருந்தா சாயங்காலம் வர்றேன்” என்று சொல்லிவிட்டு வண்டியில் சீறிக்கிளம்பினான் ராகுல். “ஹாய்டி” என்ற சத்ததுடன் நிலாவும், வர்ஷாவும் வகுப்பில் நுழைந்து மூன்றாவது பெஞ்சில் அமர்ந்தனர். “குளிப்பிச்சு குளிப்பிச்சு. குஞ்சனை கண்டில்லானு சொன்னா மலையாளத்துல என்ன அர்த்தம் தெரியுமா” என கேட்டு சிரித்தாள் வர்ஷா. “போடி எரும” “நீ நினைப்பது இல்லடி” மேலும் அதிகமாக சிரித்தாள் வர்ஷா. குளிப்பாட்டி. குளிப்பாட்டி குழந்தையை காணோம்னு அர்த்தம் பக்கி” பையாலஜி மேடம் வகுப்பில் நுழைந்ததும்  லொக் லொக்கென்று இருமி விட்டு “ஸ்டெர்ணம், கோஸ்டல் கார்டிலேஜ் என மார்பக எலும்புகளை பற்றி பேசத் தொடங்க…. “மாஸ்டர் ட்ரைலர் பார்த்தியா?” என்றாள் வர்ஷா மெதுவாக . “இல்லடி, எப்படி இருக்கு” “மாஸ். இந்த சரோஜா தேவி பாடத்த நடத்திட்டு போகட்டும். போன்ல காட்றேன்”. போன் ஒன்றை எப்போதும் ஒளித்து சைலன்ட் மோடில் வச்சிருப்பாள். ராகுல் பைக்க ஸ்கூலின் வெளியே பார்க் பண்ணிட்டு, வாயிலிருந்த பானின் மிச்சத்தை துப்பிவிட்டு, சின்ன பேக்குடன் கிளாஸுக்குள் ஓடிவந்தான். “மறுபடியும் லேட்டா?  போய் உட்கார்” என்றார் டீச்சர். ராகுல் உள்ளே சென்று  வினோத்தின்  அருகில் உட்கார்ந்தான். “ஏண்டா லேட்டு?’ “பைக்ல சத்தம் கம்மியா வருதுடா. அதான் மெக்கானிக்கிட்ட போயிருந்தேன்.” லஞ்ச் பிரேக்கில் நிலா பயாலஜி மிஸ்ஸின் ஹோம் ஒர்க்கை பண்ணிக்கொண்டிருக்க, வர்ஷா அரட்டை அடித்து கொண்டிருந்தாள். நிலாவின் பக்கம் திரும்பி “எப்பதாண்டி கேப் விடுவ, அப்துல் கலாமே ஸ்கூலுக்கு கட் அடிப்பது தான் பின்னாளில் ஞாபகம் இருக்கும், மார்க் இருக்காதுனு சொல்லிருக்கார்”. “MBBS, MS ஒண்ணு, ரெண்டு டிப்ளமோ கோர்ஸ் படிச்சு முடிச்சதும் ஜாலியா இருப்பேன்” “அதுக்குள்ள நீ பாட்டி ஆயிடுவ”. ஸ்கூல் முடிந்து ஆறு மணிக்கு வீட்டில் நுழைந்ததும், டீயை உள்ளே தள்ளி விட்டு, நீட் புக்ஸை எடுத்து கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டாள் நிலா. “பார்த்து போயிட்டு வாடி” என்றாள் காயத்ரி.  தேர்வுக்கும் வகுப்புகள் நடத்தும் ஆகாஷ் கோச்சிங் சென்டர் பக்கத்துக்கு தெருவில் இருந்தது. நிலா வேகமாக நடக்கத் தொடங்கினாள். ராகுல் மீண்டும் மெக்கானிக் ஷாப்பில் பேசிக் கொண்டிருந்தான். “பிக்கப் கம்மியா இருக்கு. யமஹா வண்டின்னா சீற வேண்டாமா?” “ஹெட்லைட் இன்னும் பிரைட்டா வேணும் “ “செனான் பல்ப் போட்டுடலாம், செம பிரைட்டா இருக்கும்” மணி எட்டை தாண்டியிருந்தது.  வண்டிய முழுதும் சரி செய்து கொண்டு ராகுல் பைக்கில் ஏறி அமர்ந்தான். இருட்டு முழுவதும் நிரம்பி இருக்க, ஒரு தெரு லைட் மெலிதாக போராடிக் கொண்டிருந்தது. ஒரு பான்பாக்கெட்டை கிழித்து வாயினுள் கொட்ட, ஜிவ்வென்று இருந்தது. பைக்கை ஸ்டார்ட் செய்து படபடவென்று சத்ததுடன் சீறிக்கிளம்பினான்.  அடுத்த 10 நொடிகளில் பைக் நூறை தொட, லாவகமாக உடலை வளைத்து திருப்பத்தில் திரும்பினான். நிலா சென்டரை விட்டு வெளியே வந்து நண்பிகளுக்கு டாடா காமித்து விட்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள்.  நாளை ஸ்கூலில் மேத்ஸ் டெஸ்ட் இருந்தது.  கோச்சிங் சென்டரில் நீட் மாடல் எக்ஸாம் சண்டே இருந்தது.  இரண்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.  ரோட்டின் குறுக்கே இருபுறமும் பார்த்துவிட்டு நடக்க தொடங்கியபோது, அந்த விபரீதம் நடந்தது. அசுரவேகமாக ஒரு வண்டி இரண்டு ஹெட்லைட்டுகளுடன் அவளை நோக்கி வர, கண்கள் கூசி ஓடவா, நிற்கவா என பதைத்து அப்படியே நின்று விட்டாள் நிலா.  வெகுவேகமாக திருப்பத்தில் திரும்பிய ராகுல் ரோட்டின் குறுக்கே அந்த பெண்ணை சற்றும் எதிர் பார்க்கவில்லை. சற்றே திகைக்க. ராகுலுடன் சேர்த்து 200 கிலோவுக்கு அதிக எடையுடைய அந்த பைக் 110 கிலோ மீட்டர் வேகத்தில் நிலாவின் நெஞ்சில் மோதியது.  நிலா தூக்கியெறியப்பட, ராகுல் வண்டியுடன் சாய்ந்து சறுக்கிக்கொண்டு சென்றான். மோதிய வேகத்தில் நிலாவின் ஸ்டெர்ணம், கோஸ்டல் கார்டிலேஜ் என அனைத்து நெஞ்செலும்புகளும் நொறுங்கி இதயத்தின் பெரிகார்டியத்தை துளைத்து சென்றது. கீழே விழுந்த நிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. வலி, பயம் எதுவுமில்லாமல் ஒரு நிர்மலமான நிலை. எழ முயற்சி செய்தாள். முடியவில்லை. கையை சற்று உயர்த்த முடிந்தது.  தன் அருகே வந்து நின்று குனிந்து பார்த்தவனின் நெற்றியில் ரத்தத்துடன் காயம். அடப்பாவமே என நினைத்தாள். உன் நெத்தியில் ரத்தம் வருகிறது என சொல்ல முயற்சிக்க, நிலாவின்  வாயிலிருந்து ரத்தம் வெளி வரத்தொடங்கியது. மெதுவாக நினைவுத் தப்ப தொடங்க அவள் கடைசியாக நினைத்தது  “மேத்ஸ் டெஸ்ட், நீட் மாடல் எக்ஸாம் வேற இருக்கே, எப்ப வீட்டுக்கு போய் படிக்கிறது”. ராகுலின் போனில் அவன் தந்தை சொல்லிக் கொண்டிருந்தார்.  “பயப்படாத. பைக்க எடுத்துக்கிட்டு வந்துடு, பார்த்துக்கலாம்”.  அங்கே “எங்க நிலாவ இன்னும் காணாம்”  என நிலாவின் தந்தை ரமேஷ் கவலைப்படத் தொடங்கினான்.  நிலவில்லாமல் வானம் இருண்டிருந்தது.

Read More

மேகத்தை கடத்தியவன்

IMS எனும் இந்தியன் மெட்ரோலோஜிக்கல் சொசைட்டியின் சென்னை அலுவலகம். அந்த தனியார் நிறுவனத்தின் வினோதமான மேகத்தைக் கடத்தும் புரொஜெக்ட்டைப்பற்றி அறிவிப்பதற்காக அனைத்து ஊடகங்களின் நிருபர்களையும் வரவழைத்திருந்தனர். சீலிங்கின் பக்கெட் ஏசியிலிருந்து வெளியேறிய சில் காற்று குளிர்ச்சியாய் சத்தமிட்டது. நிருபர்கள் தமக்குள் பேசி சிரித்து கொண்டனர். அறையின் ஒவ்வொரு அங்குலமும் பணத்தால் இழைக்கப்பட்டிருந்தது. கண்ணாடிக்  கதவை நுனிவிரலால் தள்ளி உள்நுழைந்த மாடர்ன் மங்கை வெள்ளாவி வச்சு வெளுத்ததுபோல் வெண்ணிறமாய் இருந்தாள். செபோராவின் உபயத்தில் முகமும் திறந்தவெளி தோள்களும் ஆயில் பெயிண்டிங்காய் மினுமினுத்தன. தலைக்கேசத்தில் ஆங்காங்கே தங்க கலரில் முடிகள் பிளீச்சிட, அடர் சிகப்பு நிற மிடியை தொடை வரை இழுத்து, உயரமான ஹீல்ஸில் டக் டக்கென வந்தவளை கண்டவுடன் சில நிருபர்கள் பதட்டத்தில் எழுந்து நின்றனர். அவளை தொடர்ந்து தவழ்ந்து வந்த சுகந்தமான வெர்ஸாச்சே பர்ப்யூமின் மணம் அறையை நிறைத்தது. அவள் கையை நீட்டி புரொஜெக்ட்டைப் பற்றிய சிற்றேடை கொடுக்க அனைவரும் பவ்யமாக குனிந்து பிரசாதம் வாங்குவது போல் வாங்கினார்கள்.  “உங்களை எம்டி பதினோரு மணிக்கு சந்திப்பார்” என்று குயில் குரலில் சொல்லிவிட்டு செல்ல, தந்தி டிவி டேனி “நீங்க” என்றான். சின்ன புன்முறுவலுடன் “நான் அவரோட அசிஸ்டென்ட்” என்று சொல்லி விட்டு செல்ல,  பார்வைகள் அவள்  மறையும் வரை ஹட்ச் நாயாக பின்தொடர்ந்தன.  சிலர் மீண்டும் மூச்சு விட்டனர். சிலர் பொறாமையுடன் டேனியை  பார்த்தனர். “இப்படி மயில் மாதிரி பொண்ணு ஒண்ணு கூட இருந்தா மேகத்தை என்ன, நான் சூரியனையே கடத்துவேன்” என்றான் டேனி. எல்லோரும் சிரித்தனர். சரியாக பதினோரு மணிக்கு யூனிபார்ம்டு செக்யூரிட்டி கதவைத் திறக்க கைத்தடிபோல ஒல்லியாக இருந்த வயதானவர் உள்ளே நுழைந்தார். அதற்கடுத்து ராகேஷ் இரண்டு அழகான பெண் மயில்கள் சூழ நடந்து வந்தார். நிருபர்களின் கண்கள் மயில்களிடமிருந்து பிரிய பெரும் சிரமப்பட்டன. ராகேஷ் அந்த நிறுவனத்தின் தலைவர்.  ஐஐடி  கரக்பூரில் மெட்ரோலோஜி படித்து முடித்து மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றவர். பத்து வருடங்களுக்கு பின்னர் இந்தியாவுக்கு திரும்பி இந்த நிறுவனத்தை தோற்றுவித்தார். அவருடன் கண்ணாடி அணிந்திருந்த ஒல்லி மனிதர் நரசிம்மன். ராகேசின் பர்சனல் அசிஸ்டென்ட். கம்பெனியை தொடங்கியதிலிருந்து உடனிருப்பவர். பெண்களை பற்றி பின்னே நேரமிருந்தால். மேகத்தை கடத்தப்போகும் புரொஜெக்ட்டின் பெருமூளை இந்த ராகேஷ் . கோதுமை கலர் சருமம்.  டை அடித்து  மறைத்த நரை. கண்களில் ரேபேன் கண்ணாடி.  கச்சிதமாக அளவெடுக்கப்பட்டு தைக்கப்பட்ட சூட். முகத்தில் தெனாவெட்டும், அதிகாரமும் தெறித்தன. இருக்கையில் அமர்ந்து கண்ணாடியை கழற்றி… “தேங்க்யூ ஆல்  பார் கம்மிங் அட் எ ஷார்ட் நோட்டீஸ்” என்று ஆங்கிலத்தில் துவங்கி தமிழுக்கு தாவினார். “நியூஸ் பேப்பரில் ஏற்கனவே இந்த நிறுவனத்தோட புராஜெக்ட்டைப்பத்தி படிச்சிருப்பீங்க. உங்க கையிலிருக்க  சிற்றேட்டில் விரிவாக எழுதியிருக்கோம். இனி உங்க கேள்விய கேட்கலாம்” குங்குமம் ரிப்போர்ட்டர் மங்கலகரமாய் பிள்ளையார் சுழியிட்டார். “மேகத்தை கடத்தும் திட்டத்தைப்பத்தி  சுருக்கமாக சொல்ல முடியுமா?” “தண்ணீர் இந்த நாட்டோட சாபம்.  ஒரு மாநிலம் மழை வெள்ளத்தால் அழிஞ்சா பக்கத்து மாநிலம் தண்ணீர் இல்லாம வறட்சியால அழியுது.  நதிகளை இணைக்க பேச்சுவார்த்தை பல வருசமா நடக்குது. 1800லயே பிரிட்டிஷர்ஸ் நதிகளை இணைக்க திட்டம் போட்டாங்க. ஆனால் பல காரணத்தால நிறைவேத்த முடியல. இன்னைய தேதியில இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பல லட்சம் கோடி செலவாகும்”. திட்டத்தின் இமாலய  செலவு அனைவரின் மனதிலும் பதிய சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார் ராகேஷ். “என்னுடைய திட்டமானது முற்றிலும் புதுமையானது. பல நாடுகளில் இன்னும் பேச்சளவிலேயே உள்ளது.   இந்த திட்டத்தின்படி அதிகமாக மழைபொழியும் இடத்திலுள்ள மேகங்களை குறைவாக மழை  பொழியும் இடத்திற்கு நகர்த்திப்போய் அந்த இடத்தில் மழை பொழிய வைப்பதே. சுருக்கமாக சொல்வதென்றால் மேகத்தை நகர்த்திச் செல்வது”. அறையில் சின்ன சலசலப்பு ஏற்பட ராகேஷ் காத்திருந்தார். “இது எப்படி சாத்தியம் சார்”  சன் டிவி நிருபர். “விமானத்தில் மேலே பறக்கும் பொழுது மேகங்கள் சின்ன சின்ன தீவு கூட்டங்களாக, வெண்பஞ்சு பொதிகளாக வானில் மிதப்பதை பார்த்து இருப்பீர்கள்.  பொதுவாக இந்த மேகங்களை காற்று ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளிக்கொண்டு செல்கிறது.  உதாரணத்திற்கு தமிழ் நாட்டில் குளிர் காலத்தில் சூல் கொண்ட மேகங்கள் தென்மேற்கு பருவக்காற்றால் நகர்த்தப்பட்டு தெற்கிலிருந்து உள்ளே நுழைந்து நவம்பர் மாதத்தில் மழை பொழிகிறது என்று நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த இயல்பான தென்மேற்கு காற்றைப் போல செயற்கையான ஆனால் அதே தன்மையுடைய காற்றை நாம்  மேகங்கள் மேல் செலுத்தினால் என்ன ஆகும்”? “மேகங்கள் நகரும்” தினத்தந்தி நிருபர். “எக்சேக்ட்லி. அதே தன்மையுடைய செயற்கை காற்றை உருவாக்கவே இவ்வளவு நாட்களாக நாங்கள் ஆராய்ந்து வந்தோம். இந்த முயற்சிக்காக அமெரிக்காவிலிருந்து நாற்பது  பிரத்யேக F35B ரக விமானங்களை வாங்கியுள்ளோம். அவற்றை எங்கள் தேவைக்கேட்ப அமெரிக்க மற்றும்  HAL பெங்களூர் விஞ்ஞானிகளின் உதவியுடன் இங்கேயே மாற்றி வடிவமைத்திருக்கிறோம். இந்த விமானங்களின் மூலம் செயற்கையான காற்றை ட்ரோபோஸ்பியரில் உருவாக்கி மேகங்களை நகர்த்த முடியும். இதன்படி ஒரு இடத்தில் தேவைக்கு அதிகமாக மழை பெய்யும் பொழுது, மழை மேகங்களை நாம் விரும்பும் திசையில் நகர்த்தி தேவைப்படும் இடத்தில் மழை பொழிய வைக்கலாம். இந்த முயற்சியில் இந்திய மெட்ரோலோஜிக்கல் டிபார்ட்மென்ட் மற்றும் WMO எனப்படும் வேர்ல்ட் மெட்ரோலோஜிக்கல் ஆர்கனைசேசன் விஞ்ஞானிகளும் பங்கேற்று உள்ளனர். மீண்டும் சிறு சலசலப்பு ஏற்பட,  ராகேஷ் காத்திருந்தார். சலசலப்பு அடங்கியபின் “என்ன சார் மேகத்தை கடத்தி மழை பொழிய வைக்கிறதா”  டிவி18 நிருபர் கேட்க  சிலர் சிரித்தனர். “பத்து வருடத்திற்கு முன் கையடக்க கருவியில் அமெரிக்காவுக்கு பேசலாம் என்று யாராவது சொல்லி இருந்தால் அவனை பைத்தியக்காரன்னு சொல்லி இருப்போம். ஜெட்டை முதுகில் பொருத்திக்கொண்டு ஒரு மனிதன் பறக்க முடியும் என்று சொல்லியிருந்தால் சிரிச்சிருப்பீங்க. இப்ப பிரென்ச்காரர் பிரெங்கி ஜப்படா 35 கிலோமீட்டர் இங்கிலிஷ் கால்வாயை இருபது நிமிடத்தில் கடந்திருக்கிறார்”.  “முதன்முதலாக செயற்கையான மழையை 1990களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெய்ய வைக்க செய்த முயற்சிகளின் போதும் இது போலவே நிருபர்களும், மக்களும் சிரித்தனர்.  ஆனால் சில்வர்  அயோடைடு தூவி மழை  பெய்ய வைக்க முடியும் என்று நிரூபணம் ஆனது.  இன்று உலகில் பல இடங்களில் செயற்கை மழை  பல காரணங்களுக்காக பெய்ய வைக்கப்படுகிறது”. “மழையை மனிதன் செயற்கையாக உருவாக்கும் வல்லமையை பெற்றபின் இது அடுத்த கட்டம்.  மனிதன் இறைவன் ஆகும் தருணம். இந்த அறிவை வறண்ட பகுதிகளுக்கு மழையை பெய்விக்க மட்டுமல்லாமல் ஓரிடத்தில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுத்தலாம்”. “இந்த முயற்சி வெற்றி பெற்றால் புயல்கள் உருவாகி காற்றின் வேகத்தால் நகர்ந்து நகரங்களுக்குள் வரும்போது மழை தேவையென்றால் நகரத்திற்குள் அனுமதிக்கலாம். இல்லையெனில் எதிர் காற்றை உருவாக்கி கடலுக்குள் திருப்பி விடலாம். தேவையற்ற சேதங்கள் இருக்காது”. “மேலும் இந்த முயற்சி வெற்றி பெற்றால், நதிநீர் இணைப்பு தேவைப்படாது. இப்போது பிரதமர் இதற்காக ஒதுக்கியுள்ள 5.5 லட்சம் கோடிகளை வேறு இந்தியாவின் நல்ல முயற்சிகளுக்கு பயன் படுத்தலாம். மேலும் நதி நீர் இணைப்புக்காக பல இடங்களில் செயற்கை ஆறுகளை உருவாக்குவதால் ஏற்படும் சுற்றுப்புற சூழ்நிலை சீர்கேடுகளை  தவிர்க்கலாம். இந்த முயற்சியின் பலன்களை  யோசித்துப் பாருங்கள்”. “இந்த புரொஜெக்ட்டின் முதல் சோதனை முயற்சியாக இப்போது பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்கிறது. போதுமான அளவு மழை நீர் பெங்களூரில் சேர்ந்து விட்டது.  ஆனாலும் இடைவிடாது மழை பொழிந்து சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கிமுனோலிம்பஸ் வகை மேகங்களை இன்று மதியம் தமிழகத்தில் எங்களது F35B ஏரோபிளான்கள் மூலம் நகர வைக்கும் முயற்சியை மேற்கொள்ள போகிறோம்.  நீங்களே சொல்லுங்கள்.  தமிழகத்தில் உங்களுக்கு எங்கு மழை வேண்டும் என்று கிண்டலாகக் கேட்டார்.  அனைவரும் சீரியசாக யோசித்திருக்க “காஞ்சிபுரத்தை சுற்றி மழை பெய்ய வையுங்கள்” என்றார் கேப்டன் டிவி. “ஏன் காஞ்சிபுரம்? என்ன காரணம்?” “இன்றோடு காஞ்சிபுரத்தில் அத்திவரதரின் 48 நாட்கள் தரிசனம் முடிந்தது. பெருமாளை குளத்தில் வைக்கும்போது பரவலாக மழை  பெய்யும் என்பது ஐதீகம். ஆனால் இப்போது என்னிடம் போனில் பேசிய எங்கள் டிவி நிருபர் அங்கு வெயில் சுட்டெரிக்கிறது என்றும் அனல் காற்று வீசுகிறது என்றும் அங்கு மழை வர சற்றும் வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.  பக்தர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் உள்ளதாக தெரிவித்தார்”. “அப்படியா! கவலைப்படாதீர்கள். உங்கள் பெருமாளை நாங்கள் காப்பாற்றுகிறோம். கடவுளும் மனிதனின் அறிவுக்கு முன் மண்டியிடும் காலம் நெருங்குகிறது”.  “எவ்வாறு மழையை காஞ்சிபுரத்தின் மேல் பெய்ய வைப்பீர்கள்?”  கலைஞர் டிவி. “இன்று மதியம் ஒரு மணிக்கு எங்களது F35B ஏரோபிளான்கள் செயற்கையான காற்றின் மூலம் பெங்களூரிலிருந்து மேகங்களை காஞ்சிபுரத்தை நோக்கி நகர்த்திவரும். காஞ்சிபுரத்தை அடைந்ததும்  மேகங்களுக்குள் சில்வர் அயோடைடை விதைத்து மழை  பெய்ய வைப்போம்.  வேறு ஏதும் கேள்விகள்”? எல்லோரும் அமைதியாக இருக்க “நிருபர்களுக்கு ரெப்ரஸ்மென்ட்ஸ் அரேஞ்ச் பண்ண ப்பட்டுள்ளது. முடித்துவிட்டு ஆடிட்டோரியதிற்கு  ஒரு மணிக்கு வந்தீர்கள் எனில் நிகழ்ச்சியை லைவ்வாக பார்க்கலாம். தேங்க்யூ ஜென்டில்மென் ” என் சொல்லிவிட்டு மெதுவாக எழுந்த ராகேஷ் மற்ற அசிஸ்டெண்டுகளுடன் கண்ணாடிக்கதவை திறந்துகொண்டு வெளியேறினார். “இது சாத்தியமானு தெரியலையே” என்றார் ஒரு நிருபர். “அவரு சொல்ற லாஜிக் கரெக்டா தான் இருக்கு” மற்றொருவர். “எப்படியும் சாயங்காலம் தெரிஞ்சிடும். ஆனா இது நடந்துச்சின்னா சூப்பரா இருக்கும்.” என்றார் இன்னொருவர். கண்ட்ரோல் ரூமுக்கு அனைவரும் நுழைந்தவுடன் ஒருவர்  நரசிம்மனிடம் ஒரு பேக்ஸ் மெசேஜை குடுக்க   “ஸ்டேட் கவர்மென்ட் மற்றும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட்  கிளியரன்ஸ் வந்துடிச்சி சார்” என ராகேஷிடம் நரசிம்மன் சொன்னார். “நரசிம்மன் டார்கெட் இடம் காஞ்சிபுரம் என எல்லா அரசு பொறுப்பு அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லிடுங்க. அந்த ரூட்டில் உள்ள அனைத்து விமானப்படை தளங்கள், விமான கண்ட்ரோல்டவர்களுக்கும் தகவல் அனுப்பிடுங்க”. “எல்லாருக்கும் சொல்லியாச்சி  சார். இப்ப டார்கெட் காஞ்சிபுரம்னு சொன்னா போதும்”. “ஓகே. ஒசூரிலுள்ள ரோகித்துக்கு போன் போடுங்க” என்றார் ராகேஷ்.  ரோகித் “டீம் கிளவுட்” எனப்பட்ட 40 விமானங்களின் குரூப்புக்கு பொறுப்பு அதிகாரி. ரோகித் இணைப்பில் வந்தவுடன் ” ஹாய் ரோகித் கவர்ன்மெண்ட் கிளியரன்ஸ் கிடைச்சிடுச்சி.

Read More

பறம்பின் முதல் போர்

1.         மணக்காடு தென்பொருப்பு மலையிலிருந்து புறப்பட எத்தனிக்கும் குதிரையின் தலையைப் போன்றிருந்தது குதிரைமலை. அதன் மடியில் காடுகளின் கருவறையாக இருந்த இடம் மணக்காடு. உலகம் மணங்களால் ஆனது. அந்த மணத்தை அறுவடை செய்யப் பயின்ற நறவர்கள் வாழும் இடம் மணக்காடு. பூவுலகின் அத்தனை மலர்ச்செடிகளையும் அடுக்கடுக்காக பயிரிட்டு மலையின் பசும் ஏடுகளைப் புரட்டி வண்ணங்களை வாரி இறைத்திருந்தனர். தொலைவிலிருந்து பார்க்கையில் ஒருக்களித்துப் படுத்திருக்கும் மலையரசி கூந்தலில் பலவண்ண  மலர் சூடியது போலிருக்குமிடம். மொய்க்கும் வண்டுகளின்  இசையொலி தூங்கா பூங்கிராமம். கிராமத்தைச் சுற்றிலும் மலர்களைப் பயிரிட்டு, அறுவடை செய்து, பதப்படுத்தி நறுமணத்  திரவியங்களை உருவாக்குபவர்கள் நறவர்கள். மலர்களை வெயிலில் உலர்த்தி, பொடியாக்கி, நீரில் கொதிக்க வைத்து அதன் நீராவியை இறுக்கியும், மலர்களை எண்ணெயுடன் சேர்த்து கொதிநிலைக்கு உயர்த்திப் பின் குளிர வைத்தும் பரிமளங்களை வடித்தெடுக்கும் ஆதிக்குடியினர். மலர்களின் நாற்றத்தையும், அதிகாலையின் மணத்தையும், மழையின் வாசத்தையும், மகிழ்வின் ரகசியத்தையும், மனிதர்களின் உணர்வுகளையும் குப்பிகளில் சிறைபிடிக்க கற்றவர்கள். நாசிகளின் மூலம் சிந்தையை பணியச் செய்பவர்கள். ஒரு புலனின் வழியே ஐம்புலன்களையும் ஆண்டவர்கள். உலகின் நறுமணங்கள் அவர்களிடம் கைகட்டி ஏவல் செய்தன. ஒவ்வொரு மலரின் தனித்துவமான மணத்தை திரவியமாய் பிரிப்பது மட்டுமின்றி, ஒரு சில மலர்களைக் கதம்பமாகச் சேர்த்து புதிய வகை பரிமளங்களை உருவாக்குபவர்கள். ஆறறிவு உயிர்களை மட்டுமின்றி ஐந்தறிவு உயிர்களையும் மயக்கத் தெரிந்த வித்தகர்கள். நாகசம்பங்கி திரவியத்தின் இருதுளிகளை மரக்கிளையில் விட்டு வைத்தால் அதன் மணத்தில் கிறங்கி தேனீக்கள் அங்கேயே கூடு கட்டும்.           இவ்வாறு காய்ச்சும் நறுமணத் தைலங்களை மண் குடுவையிலும், மூங்கில் குழாய்களிலும், கண்ணாடி குப்பியிலும் சேமித்து வைத்தனர். நறவப் பெண்கள் உடலில் பூசிக் கொள்ளும் மணமிக்க திரவம் மற்ற குடியினரையும் சுண்டி இழுக்க, தேனையும், தேறலையும் பண்டமாற்றாகத் தந்து நறுமணத் தைலங்களை வாங்கிச் சென்றனர். பாடினிகளும், விரலியர்களும் தேடி வந்து பெற்றுச் சென்றனர்.  நறுமணத்தின் மயக்கத்தில் மனம் கிறங்கினர். நறவர்களின் பரிமளம் அரசவைக்குள்ளும், நகரங்களுக்குள்ளும் அடியெடுத்து வைக்க அரசவையின் ஆடை ஒப்பனை பொருட்களில் நறவர்கள் தயாரித்தனுப்பிய பரிமள வகைகள் முக்கியப்  பொருளாயின. வணிகம் இவர்களின் வாசலில் யாசித்து நின்றது. வணிகத்தின் பொருட்டு மூவேந்தர்களின் அவைக்கு வந்த அயல் நாட்டு  விருந்தினர்களுக்கு பெருமதிப்பு மிக்க பரிசாக அவை வழங்கப்பட, அவற்றின் சிறப்பு கப்பலேறி பயணப்பட்டு யவன நாடுகளையும் அடைந்தது. நறுமணத் தைலங்கள் யவன நாடுகளுக்கும் ஏற்றுமதியாகத் துவங்கின. நாசியில் நுழைந்து மனதை ஈர்க்கும் இந்த பரிமளங்களின் வாசத்தில் அவர்கள் மயங்கினர். தேவை அதிகரிக்கவே நறவர்கள் மற்ற தொழில்களை விடுத்து மணக்கும் தைலங்களை முழுமூச்சாய் செய்யத் துவங்கினர்.    வளங்கள் வரிசை கட்டி நின்றன. கழுகின் அலகினைப் போன்று மலையிலிருந்து நீட்டிய பெரும் பாறையில் நரந்தம்புல் வேயப்பட்ட நாற்பதற்கும் மேற்பட்ட குடில்களும் சில குகைகளும் இருக்க, குடில்களின் வாசலில் கோங்கு, சண்பகம், குளவி, மரோடம், காயா, தில்லை, வகுளம், பன்னீர்ப்பூ, வழை மலர்கள் பரவலாய் வெயில் சருகென உலர்ந்திருந்தன. கழுகுப் பாறையில் குலதெய்வமான மணக்காட்டு அம்மனுக்கு கிராமத்தினர் பூசை நடத்திக்கொண்டிருக்க, அனைவரது முகங்களிலும் துயரம் சூல்கொண்டிருந்தது. குலத்தலைவன் தாழையன் வெறித்த விழிகளுடன் பார்த்திருக்க, குலமூதாய் அம்மனுக்கு படையலிட்டு கொண்டிருந்தாள். வாழை இலையில் மூங்கிலரிசி, பொங்கல், சாமை உருண்டைகளுடன், கனிகளும், மலர்களும் குவிந்திருக்க மணம் தரும்  இலைகள்  புகைந்து கொண்டிருந்தன.   செல்லுமிடத்தில் இடரின்றிப் பாதுகாக்க மூதாய் சொல்லெடுத்து இறைஞ்சினாள். விசும்பலுடன் ஒலித்த குரலில் உயிரின் ஒலியொன்று நொறுங்கிக் கிடந்தது.  விழிமலர்களில் சுரந்த திரவம் மணமிழந்து இருந்தது. அனைவரது முகங்களிலும் கண்ணீர் வடிய, நினைவுகளின் மடல்களில் குருதி வழிந்தது. தீவர்த்தியைக் காட்டி பூசையை முடிக்கையில் பெண்கள் குலவையிட்டனர். காற்று தளிர்க் கைகளை விரித்து ஆறுதலாய் அனைவரையும் தொட்டுச் சென்றது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் வசித்த இடத்தைப் பிரிந்து செல்ல முடிவெடுத்த பின்னர் அவர்கள் நிகழ்த்தும் இறுதி பூசை அது.  வளத்தைக் கொண்டு வந்த வணிகம் இடரையும் கொண்டு வந்து சேர்த்திருந்தது.  ஆற்றலின் செருக்கொன்று பேருருவம் கொண்டு அடிபணியக் கேட்டு  மிரட்டியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் சேரநாட்டுத் தூதுவன் ஒருவன் மணக்காட்டிற்கு வந்திருந்தான். அவனை வரவேற்று தாழையன் குடிலுக்குள் அழைக்க…. நுழைவு வாயில் தாழ்ந்திருந்த குடிலை ஏளனத்துடன் பார்த்த தூதுவன் வாசலிலேயே நின்றான். “தாமதமாக வந்திருக்கிறாய். நறுமணத் தைலம் அனைத்தும் தீர்ந்து  விட்டது. மீண்டும் செய்து முடிக்க இன்னும் சில நாட்கள் ஆகும்” என்று தாழையன் பேச்சைத் துவங்க… குரலில் இறுக்கத்துடன் “தைலத்திற்காக வரவில்லை”  என்றான் வீரன். தாழையனின் புருவம் நெறிய……. “பின்?” “சேரமான் கடுங்கோவிடமிருந்து தகவல் கொண்டு வந்துள்ளேன்” “என்ன தகவல்?” “இங்கிருந்து தேவையான பூவகைகளை சேகரிக்க மட்டும் சிலரை விட்டுவிட்டு மீதமுள்ள நறவர்கள் அனைவரையும் சேரநாட்டிற்கு வந்து தங்கிக்கொள்ளும்படி சேரமான் உத்தரவிட்டுள்ளார். அங்கு நீங்கள் பரிமளங்களை உருவாக்கத் அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறியுள்ளார்” “எங்களுக்கு அழைப்பு விடுப்பதன் காரணம்?” “நீங்கள் உருவாக்கும் பரிமளத்தை யவன மங்கையர் பெரிதும் விரும்புகின்றனர். பெரும் பொருள் தந்து அவற்றை வாங்க முன்வருகின்றனர். அவர்கள் கேட்குமளவு பரிமளத்தை சேரமானால் அளிக்க இயலவில்லை. அதனால் உங்களைக் கரூருக்கு அழைத்துச் சென்று சேரர்களுக்கும் திரவியங்கள் செய்வதைக் கற்றுத் தர முடிவெடுத்துள்ளார். நீங்கள் உருவாக்கும் பரிமளம் முழுவதையும் பெரும் பொருள் அளித்து பெற்றுக்கொள்வார். அதன் மூலம் சேரநாடு ஏற்றுமதியில் சோழ, பாண்டியர்களை விஞ்சும்” “காலம் காலமாக கழுகுப்பாறையில் வாழும் பூர்வ குடி நாங்கள்.  பொன்மழை பொழியும் இடமும் எங்கள் மலைக்கு ஈடாகாது.  நாங்கள் இங்கிருந்தே பரிமளத்தை தருகிறோம் என்று கூறு” “தைலம் உருவாக்கும் வித்தை சேரநாட்டிற்கு மட்டும் உரித்தான அறிவாக இருக்க வேண்டுமென வேந்தர் விழைகிறார். நீங்கள் தனித்திருந்தால் இவ்வறிவு இடம்பெயர வாய்ப்புள்ளது. இதன் வணிகம் சேரத்திற்கு மட்டுமே கிடைக்க வேண்டும்” “எங்களின் பெண்கள் உருவாக்கும் வித்தை அது. அதன் நறுமணத்திற்கு இங்கிருக்கும் சூழலும் ஒரு காரணம். எங்களால் வர இயலாது” “உங்களின் இசைவைப் பெறுவதற்காக வரவில்லை. இரண்டு நாட்களில் வரவேண்டுமென்று கூற வந்துள்ளேன். நீங்கள் வராவிட்டால் சேரத்தளபதி நாகநாடன் வீரர்களுடன் வந்து அழைத்துச் செல்வார் என்று கூற உத்தரவு”.  வீரனின் குரலில் ஆணவம் தெறித்தது. தாழையன் அதிர்ந்து போனான். சேரத்தின் போர்களில் நாகநாடன் நிகழ்த்திய கொடூரங்களையும், வக்கிரங்களையும் நகரத்தார் கூற கேள்விப்பட்டிருந்தான். செவிகளை நடுங்கச் செய்து,  மனங்களை பதறச் செய்தவை அவை. “உங்களுக்கு வேறு வழியில்லை. கடுங்கோ எண்ணுவதை நிறைவேற்றுபவர் நாகநாடன். உயிர்களைக் கொள்வதில் இறும்பூதுபவர். அவர் வந்தால் தைலம் தயாரிக்கும் விதத்தை அறிந்தவர்களை மட்டுமே அழைத்துச் செல்வார். மீதி ஆண்களும், சிறுவர்களும் பிழைத்திருப்பது இயலாத செயல்” தாழையன் ஒலியிழந்து அமர்ந்திருக்க… “நாளை மறுநாளின் மதியத்தில் தளபதி வருவார். அதற்குள் வந்து சேருங்கள்” என்ற சேரன் சிற்றூரின் மகிழ்வையும் இழுத்துக் கொண்டு வெளியேறினான். நறவர்கள் ஆயுதங்கள் கையாள்வதை அறியாதவர்கள். வேட்டைக்கு கூட வில்லினைத் தொடாதவர்கள். சிற்றூரைச் சுற்றிலும் காட்டுப் புதர்ச் செடிகளால் இயற்கை வேலி அமைத்து விலங்குகளின் அச்சமின்றி வாழ்பவர்கள்.         சேரத்தளபதி நாகநாடனை எதிர்கொள்வது ஆயுதத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இயலாத செயல். நாகநாடன் பகைவரின் குருதியில் சிகை முடிப்பவன். தாழையன் இடிந்து போய் அமர்ந்திருக்க, நிகழ்ந்தது அனைத்தையும் குடிலினுள் இருந்து கேட்டிருந்த தாழையனின் துணையாள் பயினி மூத்த மகன் வேரலை அனுப்பி, குலத்தினர் அனைவரையும் உடனடியாக கழுகுப்பாறையிலிருந்த குலதெய்வத்திற்கு எதிரில் கூட செய்தாள். ஒரு நாழிகையில்  குலமுதியவர்கள் ஒருபுறமும், மூத்த பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க தாழையன் எதிரே நின்றான்.  அருகில் பயினி அமர்ந்திருக்க, அவள் மடியில் கன்னங்களில் குழி விழ மூன்று வயதாகும் இளைய மகன் சூரல் அமர்ந்திருந்தான். கையின் கட்டை விரல் வாயில் இருந்தது.  பயினி கையை  எடுத்து விட எழுந்து ஓடினான்.  “சேரநாட்டிற்குச் செல்வதே உயிர் பிழைத்திருக்க ஒரே வழி”  முற்றிலும் இடிந்து போன மனநிலையில் ஒரு முதுமகன் துவங்கினான். “ஓரறிவு உயிராய் பிழைத்திருப்பதில் அர்த்தமில்லை. சேரனிடத்தில் அடிமையாய் வாழ்வதைவிட மரணத்தைத் தழுவலாம்” என்றான் தாழையன்.  “எவரும் கண்டறியவியலா நிலத்திற்கு குடிபெயர்ந்து விடுவோம்” “எல்லைத் தாண்டிச்செல்லும் விலங்குகளாய் ஆவோம்” “விலங்கினை வேட்டையாடுவது போல நம்மை தேடி வந்து சிறைபிடிப்பான் சேரத்தளபதி. நாம் பாதுகாப்புடன் இருக்க ஒரு நாடு தேவை” என்றாள் பயினி. வெவ்வேறு திசையில் அலைபாய்ந்த  முடிவுகள் ஒரு நாழிகைக்கு பின்னர் முடிவை நெருங்கியது. காலம் காலமாய் வலிமையை எதிர்கொள்கையில் எளியவர்கள் எடுக்கும் இறுதி முடிவே அது. மணக்காடை நீங்கிச் செல்வது.   “சேரமானை எதிர்த்து நமக்கு எவரும் அடைக்கலம் தரமாட்டார்கள். சோழ, பாண்டியர்களைத் தவிர” “மூவரையும் விட மனதாலும், வீரத்தாலும் உயர்ந்தவள் பறம்பின் தலைவி தானவி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றாள் ஒரு முதுமகள். “அவளும் நம்மைப்போல பழங்குடியின் தலைவி தானே. சேரப்பேரரசை  எதிர்த்து எப்படி நம்மைக் காக்க இயலும்?” “வீரம் என்பது அளவில் இல்லை. உதவும் மனதில் இருப்பது. மனதளவில் வானமாய் பரந்தவள் தானவி. பறம்பில் நடந்த கூத்தில் அவர்களைக் கண்டிருக்கிறேன். உறுதியாக உதவுவாள்” என்றார் ஒரு குலமுதியவர். “குடியினரை அழைத்துக்கொண்டு அவ்வளவு தொலைவு  செல்லும் முன்னர் அவளைக் கண்டு அவளின் இசைவைப்  பெறுதல் அவசியம். ஆனால் பறம்பிற்கு எப்படி செல்வது?” “பறம்பிற்கு நாம் செல்ல முடியாது. அவள் நினைத்தால் தான் பறம்பை அடைய முடியும்” என்றாள் முதுமகள். “வேறன்ன செய்வது?” “பறம்பின் காடுகளுக்கும் கண் உண்டு. அதற்குள் நுழைந்து விட்டால்  பறம்பு வீரர்கள் வந்து அழைத்துச் செல்வார்கள்” “யார் செல்வது?”  “எனது மூத்த மகன் வேரல் நண்பன் ஒருவனுடன் உடனடியாக புறப்பட்டு செல்லட்டும்.  நமக்கு நேரமில்லை” “எனில் இப்போதே புறப்படட்டும். நறவர்கள் உயிருள்ளவரை பறம்பிற்கு உயிர்கடன் கொண்டிருப்பர் என்று கூறட்டும்” சற்று நேரத்தில் வேரல் நண்பன் ஒருவனுடன் பறம்பை நோக்கி புறப்பட்டான். திசையை மட்டும் பற்றுக்கோலாய் கொண்டு இருவரும் விசையாய் சென்றனர். மறுநாளின் இரவு துயருடன் இருள் போர்த்தியிருக்க நேரம் நீண்டு கொண்டேயிருந்தது. கிராமத்தின் நடுவிலிருந்த சிறிய இடத்தில் விறகுகளும், நினைவுகளும் எரிந்து கொண்டிருக்க அனைவரும் சுற்றி அமர்ந்திருந்தனர். ஒன்றாக விளையாடிக் களைத்த குழந்தைகள் ஏதோ ஒரு குடிலில் உறங்கச்

Read More

பிராய்லர் கோழிகள்..

அறையில் ஓடிக்கொண்டிருந்த சீலிங் ஃபேன் ரிவர்சில் ஓடுவது போல் வேகமாக  சுற்றிக்  கொண்டிருக்க, தீபிகாவின் மனப்புழுக்கம்  அறைக்குள்  சுழன்று கொண்டிருந்தது. நாலைந்து நாட்களாக அப்பா ஒழுங்காக பேசுவதில்லை. அம்மாவும் ஒருவித   சிடுசிடுப்புடன் தான்  இருந்தாள். வாழ்வின் நோக்கங்கள் உடலின் வியர்வையோடு ஆவியாகிக் கொண்டிருந்தன. இளம்பச்சை நிறத்திலிருந்த மணி பிளான்ட் பற்றுவதற்கு கொம்பின்றி காற்றில் அலையாடிக் கொண்டிருந்தது. “இந்தா டீ குடி” கையில் சமைக்கையில் சுட்டுக் கொண்ட தழும்பு,  கலைந்த தலை,   முகத்தில் களைப்புடன் சாயமிழந்த சேலையில் உள்ளே வந்த அம்மாவைப் பார்க்கும்போதே சலிப்பாய் இருந்தது. இனி தனது வாழ்வும் இப்படித்தான் நிறமிழந்து இருக்குமோ என்று.  “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன் மா. அப்புறம் செஞ்சுக்கலாம்” “வேலை கெடக்குடி. நாமென்ன வேலைக்காரங்களா வச்சிருக்கோம்?”.  அம்மா சுத்தி எங்கே வருகிறாள் என்று தெரிந்தது. தீபிகா வீட்டின் மூத்த பெண். சிறுவயதிலிருந்தே படிப்பில் சுட்டி. காலேஜ் முடித்த கையோடு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து பெங்களூர் கம்பெனியில் கம்ப்யூட்டர் புரோகிராமராக சேர்ந்தாள். காண்ட்ராக்ட் பீரியட் முடிந்ததும் சென்னை இன்போசிஸின்  பரிட்சைகளில்  தேறி சென்னைக்கு மாறியிருந்தாள். விரைவில் டீம் லீடர் மற்றும் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் என்று எதிர்காலம்  கிளை விரிக்கக் காத்திருந்தது. சிறியவள் பார்கவி  இவள் காட்டிய பாதையிலேயே கோயம்புத்தூரில்  கம்ப்யூட்டர் படித்து வந்தாள்.  தீபிகாவின் பெற்றோர் அவளின் திருமணத்துக்கு வரன் பார்க்கத் துவங்கியவுடன் முதன்முதலாய் வந்த  சம்பந்தமே பெரிய இடமாய் இருந்தது.  பல ஏக்கர் கணக்கில் காடு, நாலைந்து வீடுகள், இரண்டு கார், இத்யாதி என ஏகப்பட்ட சொத்து. தீபிகாவின் வீடு சேலத்துக்கு அருகில் வாழப்பாடியில் இருக்க, மாப்பிள்ளையின் வீடு சேலத்தில் இருந்தது.  நல்ல நிறத்தில், உயரமாய் திருத்தமாக இருந்த தீபிகாவை உறவினரின் திருமணம் ஒன்றில் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அவளைப் பற்றி விசாரித்து, தெரிந்தவர் ஒருவர் மூலம் பெண் கேட்டு அனுப்பியிருந்தனர். “நாலஞ்சி நாய்ங்க, ரெண்டு மூணு வேலைக்காரங்கனு பெரிய இடம். பெண்ணை நல்லா பாத்துக்குவாங்க” என்று தெரிந்தவர் மூச்சுக்கு முன்னூறு தடவை கூற…  ‘சரி பேசுவோம் ஞாயிற்றுக் கிழமை வீட்டுக்கு வரச் சொல்லுங்க” என்றார் தீபிகாவின் அப்பா.   மாப்பிளை வீட்டார் சொந்தக்காரர்களுடன் இரண்டு இன்னோவா கிரிஸ்ட்டாக்களில் அமர்க்களமாய்ப் பெண் பார்க்க வந்தாலும் எளிமையான மனிதர்களாய் தெரிந்தனர். சேலத்தில் கார்மெண்ட்ஸ் கம்பெனி ஒன்றை அப்பாவும், மகனும் நடத்துவதாகவும் திருப்பூரில் ஒரு கம்பெனி இருப்பதாகவும் கூறினர்.  “மாப்பிள்ளையோட அப்பா சாதாரண நிலைமல இருந்து   சொந்த உழைப்பால் மேலுக்கு வந்தவர். சிம்பிள் மனுஷன்” என்று அவர்களுடன் வந்த உறவினர் பத்திரம் வாசித்தார். மாப்பிள்ளை கெளதம் எம்எஸ்சி படித்து பார்ப்பதற்கும் நன்றாய் இருக்க அனைவருக்கும் பிடித்துப் போனது. பவுன் போடுவது என்று எதைப்பற்றியும் பேசாமல் “பெண்ணை திருமணத்தில் பார்த்தோம். எங்களுக்கு பிடிச்சிருந்தது. அதான் கேட்டு அனுப்பினோம். எங்க  பொண்ணு மாதிரி பாத்துக்குவோம்” என்று ஓப்பனாய் பேசினார் மாப்பிள்ளையின் அப்பா.   “வெளிநாட்டிலிருந்து ஆர்டர் வாங்கறது, எக்ஸ்போர்ட்டை கவனிக்கிறது    இதெல்லாமே இவன் தான் பாத்துக்கிறான்” என்றாள் மாப்பிள்ளையின் அம்மா. “தங்கமான குடும்பம். மாப்பிளையோட தங்கச்சியை கட்டி குடுத்தாச்சி. அமெரிக்காவுல இருக்கா. எந்த பிரச்சனையும் இருக்காது” என்றார் அத்தை. அனைவருக்கும் ஓகேயென்று தோன்றியபோது “கல்யாணத்துக்கு அப்புறம் தீபிகா வேலைக்குப் போக வேண்டாம். வீட்லயே இருந்தா போதும்” என மாப்பிள்ளையின் அம்மா கூற, தீபிகாவின் மனது திடீரென எதிர்ப்பட்ட  ஸ்பீட் பிரேக்கரில் தடுமாறியது “சின்ன வயசுலருந்து பொண்ணு வேலைக்குப் போக ஆசைப்பட்டா” என்று இழுத்தார் தீபிகாவின் அப்பா. “சாஃப்ட்வேரில் வேலை பார்ப்பது ரொம்ப கஷ்டம்.  பிரஷர் அதிகம். எனக்கு தெரிஞ்சி நாலஞ்சி பேரு வேலையவே விட்டுட்டு வந்துட்டாங்க” என்றார் மாப்பிள்ளையின் அப்பா. “பொண்ணு எதுக்கு ஒருத்தர் கிட்ட கை கட்டி வேலை செய்யணும். போரடிச்சா எங்க கம்பெனிக்கே போயிட்டு வரட்டும்.  பையன் பாரின் போகும்போது கூடவே போய்ட்டு வரலாம்” என்றாள் அம்மா.  “இப்பெல்லாம் பெண்ணுங்க வெளிய போறது பாதுகாப்பே இல்ல” என்றார் ஒருவர். இரண்டு மகள்களுக்கும் சிறுவயதிலிருந்தே “பர்ஸ்ட் ரேங்க் வாங்கணும், பெரிய வேலைக்குப் போகணும், வாழ்க்கையில் எதையாவது சாதிக்கணும்” என்று சொல்லி வளர்த்தவர் தீபிகாவின் அப்பா. ஒவ்வொரு பரிட்சைக்கும் போட்டி போட்டுக்கொண்டு ராப்பகலாய் படிக்கையில் முதலாய் வரும் வெறியே தீபிகாவை துரத்தும். இன்போசிஸின் ஆறு கட்ட இன்டர்வியூவையும்  ஒரே அட்டெம்ப்டில்  தாண்டி வந்த   பெண்  அவள் ஒருத்தி தான்.  மாப்பிள்ளை வீட்டார் போனதும் “எனக்குப் பிடிக்கல” என்று தீபிகா கூற, பிரச்சனை  ஆரம்பித்தது.  “இதைவிட நல்ல குடும்பமே கிடைக்காது’ என்றாள் அம்மா, பல வருடம் அவர்களுடன் பழகியதுபோல. “ஏன் பிடிக்கல?” என்றார் அப்பா. “இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சி நல்ல வேலைக்கு வந்துருக்கேன். அதை விட்டுட்டு எதுக்கு கல்யாணம் பண்ணனும்?” “நீ வேலைக்குப் போயி எதுக்கு கஷ்டப்படணும். உன்னோட டீம் லீடர் வேற திட்டுவான்னு அடிக்கடி சொல்லுவல்ல. இப்போ பாரு அவங்க கிட்டயே அம்பது பேரு வேலைக்கு இருக்காங்களாம்” “உன்ன மாதிரியே வீட்லயே சமைச்சி போட்டுட்டு இருக்கச் சொல்றியா?” “ஆமாடி. வீட்லயே இருக்கிறதால நான் எது சொன்னாலும் உனக்கு எளக்காரமா இருக்கு” “அதைத்தாம்மா நானும் சொல்றேன். நாளைக்கு என்னையும் இதே மாதிரி இளக்காரம் பண்ணக்கூடாது இல்ல” தவறான திசையில் பேசியதை உணர்ந்து “ஓங்கிட்ட பேசமுடியாது” என்றாள் அம்மா. தீபிகாவின் தாத்தா, பாட்டிகள் மூலம் “இந்த மாதிரி நல்ல வரன் மீண்டும் அமையாது” என்று கூறி ப்ரெயின் வாஷ் செய்ய முயன்றனர். “பையனுக்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. இந்த காலத்துல இப்படி ஒரு பையன் அமையறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” “கல்யாணம்னா எதையாவது ஒண்ணை விட்டுக் குடுத்து தான் ஆவணும். அழகான மாப்பிள்ளை, வசதி, வேலை, சொத்து இப்படி எல்லாம் அமையாது. உனக்கு எது முக்கியமோ அது இருக்குதான்னு பாரு.  வேற வழியில்லை. பெண்களுக்கு இவ்வளவு தான் கிடைக்கும்” என்று அருகில் அமர்ந்து பொறுமையாக பேசிப்பார்த்தார் அவளின் அப்பா. “கொஞ்சம் டைம் குடுங்க” என்று தீபிகா பெற்றோரிடம் கூற, சென்னைக்கு போனால் இவளை மாற்ற முடியாதென்று “நீ கொஞ்ச நாள் வீட்லருந்தே வேலை செய்ய பெர்மிஷன் வாங்கிக்க” என்றார். தீபிகாவின் மனதில் நிறைய கனவுகள் இருந்தன. ‘சென்னையில் தனியாக ஒரு வீடு. அவளும், கணவனும் வேலை பார்க்க வேண்டும். முடிந்தால் ஒரே ஆஃபீசில். நாலைந்து வருடங்கள் பாரினில் வேலை செய்து விட்டு வரணும். அவளுடைய ஊர், ஸ்கூல் லைப்ரரிக்கு தொடர்ந்து உதவிகள் செய்யணும். சென்னையில் ஜோடியாக சுற்றும் பாரின் தம்பதிகளை பார்க்கும் போதெல்லாம் இதே போல வெளிநாடுகளுக்கு வருடம் ஒரு முறை சென்று வரணும். எதுவும் வாங்காவிட்டாலும் வாரமொரு முறை அருகிலிருக்கும் மாலுக்கோ, கோயிலுக்கோ போகணும். காரில் நெடுந்தூர பயணம்’ என எண்ணற்ற ஆசைகள். இப்போது அனைத்தையும் மறந்து விட்டு சேலத்தில் கல்யாணம் செய்து கொண்டு கிச்சனில் முடங்கியிருப்பதை நினைக்கவே பயமாயிருந்தது. வாழ்க்கை முழுதும் வீட்டிலேயே இருக்க வேண்டுமா. சொந்தக்காரர்களின் விசேசங்களில் உடலெங்கும் நகையுடன் பெரிய வீட்டு பெண்ணாய் போய் வந்தால் போதுமா. சொத்து கம்மியாக இருந்தாலும் மனதுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ பெண்ணுக்கு அனுமதி கிடையாதா. சொத்து மட்டுமே வாழ்க்கையா என்று கேள்வி எஞ்சி நின்றது. அவளுடன் பேசிய அனைவரும் திரும்ப திரும்ப அதைத்தான் கூறினர்.  “பெரிய இடம். ராணி மாதிரி இருக்கலாம்”. ஒரு வாரம் காத்திருந்த மாப்பிள்ளை வீட்டார் நண்பர் மூலமாக விசாரிக்க “வேலைக்கு போக வேணாம்னு சொன்னதால பொண்ணு தயங்கறா. கன்வின்ஸ் பண்ணிட்டு இருக்கோம்” என்று தகவலனுப்பினார் தீபிகாவின் அப்பா. “நமக்கு வேண்டியதெல்லாம் வீட்லயே இருக்கு. பொண்ணுங்க எதுக்கு வெளிய போயி கஷ்டப்படணும்” என்று மாப்பிள்ளையின் அம்மா கூறியதாக நண்பர் கூறினார்.    “இப்ப எதுக்கும்மா ஆளாளுக்கு மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்கீங்க?” என்றாள் தீபிகா அம்மாவிடம். “டீ ஆறிடப் போவுது. குடி. நாங்கெல்லாம் சொன்னா எங்க கேட்கறீங்க.  நிறைய படிச்ச திமிரு” “மேல மேல படின்னு நீங்கதானே சொன்னீங்க.  இப்ப என்னாச்சு?” “படிக்கிறதே நாலு காசு சம்பாரிச்சி நல்ல நிலையை அடையணும்னு தான். இப்ப நேரடியா நல்ல நிலைக்கு போகப்போற. அப்புறமென்ன. நாளைக்கு குழந்தை பெத்துக்க வேலையை விட்டுத்தானே ஆகணும்” “அதை ஏம்மா ஏதோ பெண்களோட சாபம் மாதிரி சொல்ற? அந்த ஒரு மாசம் வீட்லருந்து வேலை செஞ்சிட்டு மறுபடி வேலைக்கு போனா குத்தமா என்ன?  பாரின்ல எல்லாம் குழந்தை பிறந்ததும் வீட்டை பாத்துக்குற மெஷினா மாறிடுறாங்களா? அதுக்கப்புறம் முன்னேறக் கூடாதா?” “குழந்தையை யாரு பாத்துக்குவா?” “நீ வந்து இரு. இல்லாட்டி ஒரு  டே கேர்ல விட்டுட்டு போறேன்” ‘நீ விட்டாலும் விடுவடி. திமிரு புடிச்சவ” என்றபடி அம்மா சென்றாள்.  இதுவரையில் எந்த விஷயத்திலும் எதிர்த்து பேசாதவள் தீபிகா. முதன்முறையாக ஒரு வாரத்திற்கு மேல் பிரச்னை நீடித்தது. திருமணத்திற்கு மறுத்து விட்டால் பெற்றோர் மனமுடைந்து போய் விடுவார்களோ என்பதுதான் தீபிகாவுக்கு  இப்போது பெரும் பிரச்னையாய் இருந்ததது.  இவர்களை திருப்தி படுத்த திருமணம் செய்து கொண்டால் காலமெல்லாம் வீட்டிலேயே இருக்க வேண்டுமே என்று பயமாகவும் இருந்தது. “நீ என்ன நினைக்கிறியோ அதைப் பண்ணு” என்று தங்கை ஒதுங்கிக் கொண்டாள்.  பக்கத்து ஊரிலிருந்து அவளது மாமா வந்தார் “அம்மா சொல்றதைக் கேளு தீபிகா. “உன் வாழ்க்கையை முடிவெடுக்க கூடிய வயசில்லை உனக்கு. பின்னாடி வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை” என்று அட்வைஸ் பண்ணி விட்டு கிளம்பினார். அத்தை “அப்பா சொல்றதை கேளு. வேலைக்கு போயி என்ன பண்ணப்போற?” என்று போனில் ஒரு மணி நேரம் அட்வைஸ் செய்தாள். பொற்கிரீடம் அணிவித்து தன்னை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதாய் அனைவரும் நினைத்தனர். தங்கக்கூண்டில் கிளியாய்ப் போவதாய் அவளுக்குத் தோன்றியது. பிராய்லர் கோழிகளை உணவிட்டு கொழுகொழுவென்று வளர்த்து நல்ல இடம் கிடைத்தவுடன்  வெட்டி விடுவதுதான் பெண்களின் வாழ்க்கையா. அவர்களுக்கென்று தனித்த உணர்வுகள் கிடையாதா? அவளின் மகிழ்ச்சியை விட சொசைட்டியில் பெருமையும், பாதுகாப்பும் பெற்றோருக்கு முக்கியமாய் தெரிந்தது. அவளின் விருப்பம் பெரிதாகப்  படவில்லை. அனைவரையும் எதிர்த்து நிற்க திராணியின்றி மனதின் ஆசைகளைப் புதைத்து விட்டு திருமணத்திற்கு தலையசைத்தாள். வானத்தை அளக்க விரும்பிய மனச்சிறகுகளை

Read More

பிரிவெனும் நரகம்..

ஹாலில் அமர்ந்தபடி சாக்ஸை பிரபாகர் அணிந்து கொண்டிருக்க அவரின் மகள் ரம்யா “பாட்டி பாய், பாய் ப்பா” என்றபடி கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள். கூல் வாட்டர் நறுமணம் அவரை கடந்து செல்ல அவளின் சுடிதார் லூசாகி இருப்பதை பிரபாகர் கவனித்தார். மனதில் மீண்டும் கவலை எட்டிப்பார்த்தது. வெளியே ஸ்கூட்டி ஸ்டார்ட் செய்யும் சத்தமும், வாட்ச்மேன் கேட்டை திறக்கும் சத்தமும் கேட்டது. பிரபாகர் எல் அண்ட் டி கம்பெனியில் தென்னிந்திய பொறுப்பாளர். அவரது ஒரே மகள் ரம்யா. பிஈ கம்பியூட்டர் படித்துவிட்டு டிசிஎஸ் கம்பெனியில் வேலை பாக்கிறாள். அவளது பதினைந்தாவது வயதில் அம்மா இறந்துவிட, மறுமணம் செய்து கொள்ளாமல் பிரபாகர் அவளை வளர்த்து வந்தார். பிரபாகரின் அப்பா இறந்துவிட்டதால் சொந்த ஊரிலிருந்த தனது அம்மாவையும் வரவழைத்து தன்னுடனே தங்க வைத்திருந்தார் பிரபாகர். பிரபாகர் ஒரு தந்தையாக மட்டும் இருக்காமல், தாயாகவும், நண்பனாகவும் இருந்ததால் பிரபாகரரும், ரம்யாவும் ரொம்ப க்ளோஸ். ஆபிசில் நடக்கும் எல்லா விஷயங்களையும் இருவரும் பேசுவர். எல்லா விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி சொல்லக் கூடியவள் ரம்யா. ஆனால் சில மாதங்களாக அவள் சற்று விலகியிருப்பதை உணர முடிந்தது. எங்கேயாவது கிடக்கும் அவளது போன் இப்போதெல்லாம் பாதுகாக்கப் படுகிறது. போனிற்கு பாஸ்வேர்ட் போட்டிருக்கிறாள். இரவில் நீண்ட நேரம் போனில் இருக்கிறாள். சில சமயம் வண்ணத்துப்பூச்சி போல சுறுசுறுப்பாய் இருப்பவள், சில சமயம் பாட்டியிடம் எரிந்து விழுகிறாள். சரி அவளாக சொல்லட்டும் என்று இவர் காத்திருந்தார். அவளின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தாயில்லாத குறையை முதன்முறையாக பிரபாகரால் உணர முடிந்தது. ஒரு தந்தை எக்காலத்திலும் தாயாக முடியாது என்பதை உணர்ந்தபோது இவருக்கு வருத்தமாக இருந்தது. சற்று குண்டான உடல்வாகு உடையவள் ரம்யா. இப்போது கவலையில் அவள் மெலிந்து இருந்ததால் போட்டிருந்த டிரஸ் லூஸாகி இருப்பது தெரிந்தது. அவள் அணிந்திருந்த வளையலும் லூசாக இருந்ததை கவனித்திருந்தார். “இந்தாப்பா டிபன் பாக்ஸ்” என்று அவரின் தாயார் தர, அதை வாங்கிக் கொண்டார். ரம்யாவின் ஒரு தங்க வளையலை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஆபீஸுக்கு கிளம்பினார். இரவு 7 மணிக்கு வீடு திரும்பியவர் கையில் இருந்த பொருட்களை டேபிள் மேல் வைத்து விட்டு உடை மாற்றிக்கொண்டு வந்தமர்ந்தார். சற்று நேரத்தில் வீட்டிற்குள் வந்த ரம்யா டேபிளில் இருந்த கவர்களை பார்த்துவிட்டு “என்னப்பா இது?” என்றாள். “திறந்து பார்” என்றார் பிரபாகர் அவளை பார்த்தபடி. ரம்யாவின் கண்கள் சிவந்திருக்க அழுதிருக்கிறாள் என்று தோன்றியது. ரம்யா சோபாவில் அமர்ந்துகொண்டு பாலித்தீன் பேகை திறக்க உள்ளே 3 சுடிதாரும், ஒரு செட் தங்க வளையலும் இருந்தது. வளையல் கைக்கு சரியாக இருந்தது. “என்னப்பா திடீர்னு?” “கொஞ்ச நாளா பார்க்கிறேன். ரொம்ப எளச்சிட்டே வர. அதான் எஸ் சைஸ் சுடிதாரும், சின்ன சைஸ் வளையலும் வாங்கிட்டு வந்தேன்” என்றார் அவளின் கண்களை பார்த்தபடி. “தேங்க்ஸ் பா” என்றவள் நிமிர்ந்து அவரின் கண்களை பார்த்தவுடன் தடுமாறினாள். முகம் சற்று சுருங்கிப் போக “ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்” என்றபடி உள்ளே போனாள். பிரபாகர் காத்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பின் வேகமாக வந்து அவரின் அருகில் அமர்ந்தவள் “நான் ஒருத்தர லவ் பண்றேன் பா” என்றாள் கீழே குனிந்தபடி. பிரபாகர் அமைதியாக “சரி இப்ப அதுல என்ன பிரச்சனை?” என்றதும் ரம்யா சற்று அதிர்ந்தாள். “நீங்க வருத்தப்படுவீங்கன்னு தான் சொல்லலை” “பெற்றோர் பொதுவா பையன் நல்லவனாக இருக்கணும்னு தான் கவலைப்படுகிறோம். அரேஞ்ச்டு மேரேஜ் என்றால் பத்து இடங்களில் விசாரித்துட்டு முடிவெடுப்போம். ஆனா நீங்க அப்படி இல்ல. பையன் இனிக்க பேசுவதை வைத்து முடிவுக்கு வர்றீங்க. சரி பையன பத்தி சொல்லு” என்றார். “அவர் பெயர் சூர்யா. என்னோட ஆபீஸ்ல சீனியர். டீசன்டான ஃபேமிலி. இரண்டு வருஷமாக ஒரே ப்ராஜெக்டில் இருக்கோம். அவரை ஆறுமாதம் யூஎஸ் போக சொல்றாங்க. அதன் பின்னர் தேவைப்பட்டா கன்டினியூ பண்ணிக்கலாம். என்னை விட்டுட்டு போக அவருக்கு மனசில்ல. ஆனால் நல்ல சான்ஸ். அதான் ஒரு மாதமாக குழப்பம். துணிஞ்சி போக சொல்லவும் முடியல. என்னைய விட்டுட்டு யூஎஸ் போறத நெனச்சும் வருத்தமா இருக்கு” என்றவளின் கண்களின் நீர் சுரந்தது. ‘இவளை விட்டு போக அவனுக்கு மனதில்லை’ என்பதை கேட்க அவருக்கு ஆறுதலாக இருந்தது. கேரியரை விட பெண்ணை அதிக நேசிக்கிறான் என்பது தெரிந்தது. ரம்யாவின் போனுக்கு மெஸேஜ் வர ஸ்க்ரீன் ஒளிர்ந்து அடங்கியது. “நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றாள் ரம்யா. அப்பாவின் முடிவுகள் ஒருபோதும் தவறாகாது என்று உணர்ந்தவள் அவள் “நான் பையனைப் பார்த்து பேசினால்தான் சொல்ல முடியும்”“ஓகே” என்றாள் ரம்யா உற்சாகமாக. பிரபாகரின் அம்மா சோபாவில் அருகே அமர “சரி நீ போயி டிரஸ் மாத்திட்டு வா. சாப்பிடலாம்” என்று பேச்சை மாற்றினார் பிரபாகர். சற்று நேரத்தில் பெயருக்கு சாப்பிட்டுவிட்டு உள்ளேச் சென்று பெட்டில் படுத்துக்கொண்ட ரம்யாவுக்கு தனது காதலை தந்தையிடம் சொல்லிவிட்டது மனதிலிருந்த பாரம் குறைந்தது போலிருந்தது. ஆனால் மீண்டும் சூர்யாவை நினைக்கையில் மனது பாரமாகியது. அவனை பிரிந்து ஆறுமாதங்கள் எப்படி இருப்பது என்று நினைத்தாள். பலவாறு நினைத்து குழம்பியபடி இருக்க, தலையணை நனையத் தொடங்கியது. அடுத்த நாள் சிகப்பும் வெள்ளையுமாக எக்ஸ்டீரியர் செய்யப்பட்டிருந்த காபிடேயின் எதிரே டிரைவர் காரை நிறுத்த, பிரபாகர் இறங்கி நடக்கும்போது அருகில் ஒரு சிகப்பு ஸ்விப்ட் கார் மட்டும் நின்றிருந்தது. பிரபாகர் உள்ளே நுழைய யாருமே இல்லாமல் காபிடே காலியாக இருக்க ரம்யாவும் சூர்யாவும் ஒரு மூலையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். “ஹாய்” என்றபடி சென்றவர் அவளருகில் அமர்ந்து கொண்டு “சாரி பார் தி லேட்” என்றபடி சூர்யாவிடம் கையை நீட்ட, அவரின் கண்கள் சூர்யாவை அளவெடுத்தன. சிவந்த சருமம் களையான முகம், வலது மணிக்கட்டில் சாமிக்கயிறு என்றிருந்தவனை பார்த்தவுடன் பிரபாகருக்கு பிடித்துப் போனது. “எப்ப வந்தீங்க?” என்றார்.“ஜஸ்ட் 5 மினிட்ஸ்” என்றான் தயக்கமான மெல்லிய குரலில். “வீட்டிற்கு முதல் பையனா” என்றார் அவன் தயக்கத்துடன் பேசுவதைப் பார்த்து.“ஆமாம் என்றான். “ஒரு தங்கை மட்டும்தானா?”அவளைப் பார்த்தபடி சூர்யா தலையசைத்தான். “அப்பா ஸ்டேட் பேங்கில் எந்த பிரான்ச்சில் வேலை செய்கிறார்?”“கொளத்தூர்” “ரெஹ்மான், கெல்லி தவிர தமிழில் யாரை பிடிக்கும்?”“வாலி” எப்படி இவ்வளவு விவரம் தெரியும் என்று இருவரும் மெல்லிதாக அதிர்ந்தபடி இருக்க “வீட்டில் இன்னும் லவ் பற்றி சொல்லலை போல?”“இல்லை சார்” “எப்படிப்பா யாராவது விட்டு செக் பண்ண சொன்னீங்களா?” என்றாள் ரம்யா புருவங்களை சுருக்கியபடி.“இல்லம்மா. உன் செலக்சனில் எனக்கு நம்பிக்கை இருக்கு” “பின்ன எப்படி கரெக்ட்டா” நெர்வசாக சிரித்தான் சூர்யா.“வெளியே காரில் பேங்க் ஸ்டிக்கர் பார்த்தேன். உன் கையின் கட்டைவிரலில் மட்டும் நெய்ல் பாலிஷ். சற்று தயக்கத்துடன் பேசுவது பஸ்ட் சைல்டு சின்ரோம்” “ஏ ஆர் ரகுமான், ஷெல்லி பத்தி எப்படி சொன்னீங்க?” என்றாள் ரம்யா.“உன் போனின் வால் பேப்பர், மற்றும் நீ ஷெல்லி புக்கை கையில் வைத்திருந்ததை பார்த்தேன். இப்போது பொருந்தி வருகிறது” என்றார் ரம்யாவிடம். “சரி. பெற்றோரிடம் சொல்வதில் என்ன தயக்கம்?” என்றார் அவனது பதிலை தெரிந்து கொள்ள.“மெதுவா சொல்லிக்கலாம்னு” என்றான் சூர்யா. “இப்ப ஆபிஸ்ல என்ன குழப்பம்?”“எங்க ஆபீஸே என்னை யூ எஸ் அனுப்புறாங்க. புரமோசனோட. எல்லா விதத்திலும் நல்ல வாய்ப்பு. ஆனால் எனக்கு ரம்யாவை விட்டுட்டு போக மனசில்ல. காசுக்காகத் தான் போகணும். நாங்க ரெண்டும் பெரும் ஏற்கனவே நல்லாத்தான் சம்பாரிக்கிறோம். பேரண்ட்ஸையும் விட்டுட்டு போக மனசில்ல. அதான்”. ‘காசை அதிகம் விரும்பவில்லை. பெற்றோரிடம் பாசம் செலுத்துபவன் கண்டிப்பாக மனைவியை நன்றாக பார்த்துக்கொள்வான்’ என்று பிரபாகருக்கு தோன்றியது. “நீங்க என்ன சொல்றீங்க?” என்றாள் ரம்யா போகவேண்டாம் என சொல்வார் என நினைத்தபடி. “பேரண்ட்ஸையும், ரம்யாவையும் விடு. உன்னோட மனசு என்ன சொல்லுது?”“எனக்கு போகத்தான் ஆசை சார்” “என்னை அங்கிள்னே கூப்பிடு. அப்புறம் உனக்கு யூஎஸ் போக விருப்பமிருந்தா தென் போறது தான் சரியா இருக்கும். நாளைக்கு இந்த அடிமனத்தின் ஆசையே ஏமாற்றமா போயி, கோபமா மாறும். உன்னோட ஜுனியரே நாளைக்கு உன்னோட பாஸா வந்தா இன்னும் வருத்தம் அதிகமாகும். கேரியரையும், ஆசையையும் பேலன்ஸ் பண்ண கத்துக்கணும். எதையும் தியாகம் பண்ணாம. யூஎஸ் போக கிடைத்துள்ள வாய்ப்பைப் பற்றி இதுவரை உன்னோட பேரண்ட்ஸ்ட்ட எப்படியும் சொல்லிருக்க மாட்ட. அதனால உன்னோட லவ்வை பத்தியும், யூஎஸ் வாய்ப்பை பற்றியும் சொல்லு. நிச்சயதார்த்தம் பண்ணிடலாம். அப்புறம் யூஎஸ் போ. லீவ் கெடச்சி நீ வரும்போது கல்யாணத்தை வச்சிக்கிலாம். அங்கு ரம்யாவும் வேலை தேடிட்டு ரெண்டு பேரும் வேலை செய்யுங்க. இந்த வயதில் தான் உலகத்தை சுத்தி பார்க்க முடியும். ஒரு அஞ்சு, ஆறு வருசம் கழிச்சி இந்தியா வந்துடுங்க. அதற்கப்புறம் இங்கயே செட்டில் ஆகி பேரண்ட்ஸோட இருக்கலாம். அதுவரை உலகை சுற்றிப்பாருங்க. அந்த அனுபவமும் உங்களுக்கு தேவை. நோ கன்பியூஷன் சிம்பிள்” என்றவரின் மனதில் அடுத்து ரம்யாவை எப்படி ஆறுதல் படுத்தவேண்டும் என்பது ஓடிக்கொண்டிருந்தது. எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டார் என்று சூர்யாவும், ரம்யாவும் நினைத்தபடி இருக்க.. “என்ன காபி ஆர்டர் பண்ணுனீங்க? எனக்கு சாகோ லாவோ கேக்” என்றார் பிரபாகர்.

Read More

பதினாறும் பெற்று

“ஒரு குழந்தை பெத்தா நாம பெற்றோர். ரெண்டு பெத்தா நாம ரெப்ஃரீன்னு ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு. இவங்கப்பா பதினாறு பெத்தவரு” என்று பத்து கூறியதும், “சும்மா கதை விடாதீங்க” என்று சிரித்தாள் அஞ்சு. “அட அவங்களுக்கு உண்மையாவே 16 புள்ளைங்கம்மா. 7 பொண்ணு. 9 ஆணு. அதுல மூணு பையனுங்க அவங்கப்பா ஜெராக்ஸ். நாலு பெண்ணுங்க அம்மா ஜெராக்ஸ்” அஞ்சுவின் வட்டமான மாம்பழ முகத்தில் சிரிப்பு மாறாமலிருக்க “இந்தியா வளரும் நாடா மாறாம கட்டையாவே இருக்க காரணமே உங்க குடும்பம் தான்னு நாங்க அவனைக் ஸ்கூல்ல கிண்டல் பண்ணுவோம்” என்றான். அஞ்சுவின் சிரிப்பு மெலிந்திருந்த பத்துவின் பப்பாளி முகத்திலும் தொற்றிக் கொண்டது. அஞ்சு என்கிற அஞ்சலிக்கும், பத்மநாபன் என்கிற பத்துவிற்கு திருமணமாகி நாலைந்து நாட்கள் ஆகியிருக்க, பத்துவுடைய நண்பன் பரந்தாமனின் வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். பத்துவும், பரந்தாமனும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாய்ப் படித்தவர்கள். பரந்தாமன் யூபிஎஸ்சி எக்ஸாம் பாஸ் செய்து இன்கம்டாக்ஸில் அதிகாரியாகி விஜயவாடாவில் இருந்தான். ஒரு வாரத்தில் நடக்க இருந்த அண்ணனின் திருமணத்திற்கென லீவில் வந்திருந்தான். “யாராவது பதினாறு புள்ளை பெத்துக்குவாங்களா? சும்மா சொல்லாதீங்க” என்றாள் அஞ்சு. புதிய உணர்வுகளின் கலவையால் முகம் பளபளக்க, கழுத்தில் மஞ்சள் கயிறு மினுமினுத்தது. “அந்த காலத்தில் சகஜம் தானே. கடைசியா  பிறந்த இவனோட போதும்னுதான் இவன் பேரையே போதும் பரந்தாமன்னு அவங்கப்பா வச்சார்னா பாத்துக்கயேன்” “அதுக்கப்புறம் பிள்ள பொறக்கலையா?” “முயற்சி பண்ணிருந்தா ஒருவேளை பொறந்திருக்கலாம். அதுக்குள்ள மொத பையனுக்கு நிச்சயம் ஆயிட்டதால பிள்ளை பெக்கற மெஷினை ஆப் பண்ணிட்டாங்க” “அழிச்சி அழிச்சி படம் வரைஞ்சா நல்லா வர்ற மாதிரி, திருப்பித் திருப்பி புள்ளை பெத்தா அறிவா வரும்னு நெனச்சாரோ என்னவோ” “பெருமாள் அந்த மாமிக்கு பிள்ளை வரத்தை வாரி குடுக்கிறார்னு எல்லாரும் அப்ப பேசிக்குவாங்களாம்” “ஆமாம். மொட்டை மாடிலயே உட்காந்து கிட்டு வாரி குடுத்திருக்காரு!” “வர்றேன்மா, வர்றேன் அத்தை” என்று விடை பெற்று பைக்கை நோக்கி நடந்தனர். “ஏறு…. பார்க்கலாம்” என்ற பத்து யமகாவின் இருபுறத்திலும் காலை உறுதியாக ஊன்றி விறைத்து நின்றான். சற்று பருமனாயிருந்த அஞ்சு பில்லியனில் அமர்ந்து அவன் இடுப்பை வளைத்துப் பிடித்தாள். முதன் முதலாய் வெயிட் ஏற்றிய பைக் அமுங்கி ஆடியது. “மொதல்ல உடம்பை ஏத்துங்க. இல்லாட்டி நான் ஏத்திருவேன்” “வேணாம் தாயி. நானே முயற்சி பண்றேன்” பைக் மூச்சைப் பிடித்துக் கொண்டு முன்னேறியது. டிராபிக்கினூடே பத்து  திறமையாக பைக்கை செலுத்தினான். ரேடியோவில் “முக்காலும் காலும் ஒன்னு. இனி ஒன்னோட நானும் ஒன்னு” என விஜயகாந்த் பாடிக் கொண்டிருந்தார்.  டெஸ்ட் டியூப் ஆஸ்பத்திரி ஒன்றை தாண்டுகையில்… “அந்த காலத்துல பிள்ளை வரம் வேணுங்கிறவங்க மாமிக்கிட்ட வந்து ஏதாவது வாங்கி சாப்பிடுவாங்களாம். உடனே பிள்ளை தங்குமாம்!” “பெருமாளு அவங்க வீட்டை பிராஞ்ச் ஆபீஸா யூஸ் பண்ணுனாரா?” “அட அரச மரத்தை சுத்தறது மாதிரி ஒரு நம்பிக்கை” “எப்படியோ! மாமா மாமிய விடாம சுத்திருக்காருனு மட்டும் நல்லா தெரியுது” என்று அஞ்சு சிரித்தாள்.  பரந்தாமனின் வீடு நான்கு தெருக்கள் தள்ளி இருக்க, இருபது நிமிடங்களில் வந்து சேர்ந்தனர். “அவங்க தாத்தா வாங்கிப் போட்ட இடம். ரியல் எஸ்டேட்காரன் கையில கெடச்சா 10 வீடு கட்டிருவான். ஆனால் அதை விட அதிக ஆளுங்க இந்த ஒரு வீட்ல இருக்காங்க” “ஒரு தடவை குழந்தை பெத்துக்கறதையே மறுபிறப்புனு சொல்வாங்க. மாமி சும்மா செத்துச் செத்து வெள்ளாடிருக்கு…” 16X10 என கணக்கிட்டு அஞ்சு, “அடேயப்பா! வாழ்க்கையில 13 வருஷம் புள்ளத்தாச்சியாவே இருந்துருக்காங்க. அவங்கப்பா என்ன வேலை செஞ்சார்?” என்றாள்.   “புள்ளை பெக்க உதவறதோட ஜோசியமும் பார்த்தார். அப்பெல்லாம் அவரு ரொம்ப பேமஸ். கார்ல வந்து பார்ப்பாங்க. பெரிய்ய வீடு அவங்களோடது” வீடு சீமை ஓடுகள் வேயப்பட்டு உண்மையாகவே பழமை மாறாமல் நீளமாய் இருந்தது. வீட்டின் முன்புறத்தில் திண்ணையும், காலியிடமும் பெரிதாய் இருந்தன.  பொதுக்கூட்டத்திற்கு பந்தல் போடுவது போல சிலர் ஷாமியானா கட்டிக் கொண்டிருந்தனர். சிலபல கார்களும், பைக்குகளும் நின்றன. வாசலிலேயே “வா பத்து, வாம்மா” என்று வரவேற்ற பரந்தாமனின் அண்ணன் பாலகணேஷ் “டேய் பத்து வந்துருக்கான்” என்று ஒலிபரப்பி விட்டு உள்ளே சென்று மறைந்தான். “வாடா” என வெளியே வந்த பரந்தாமன் அவர்களை     வீட்டினுள் அழைத்து சென்றான். சிட்அவுட்டில் இடப்பட்டிருந்த டேபிளும், சேர்களும் ஜோசிய கட்டங்களைப் போலிருந்தன. மரச்சட்டமிட்ட கண்ணாடி அலமாரியில் புத்தகங்கள் நிறைந்திருந்தன. தங்க நிறத் தாளில் குங்குமத்தில் நட்சத்திரம் வரைந்து பிரேமிட்டு மாட்டியிருந்தனர். அடுத்திருந்த ஹால் டபுள்ஸ் ஷட்டில் ஆடலாம் போல பெரிதாய் இருந்தது. ஒருபுறத்தில் சோனி டீவி பெட்டி உட்கார்ந்திருக்க, பெயிண்டில் வரையப்பட்ட தாயக்கரம், கோலங்கள் நிறமிழந்திருந்தன. பெருமாள்களும்,  சீதாக்களும், சுவற்றிலிருந்து வாழ்த்தினர். இரண்டு கயிற்றுக் கட்டில்களில் மண்டோதரன், குண்டோதரி சைஸ்களில் உருண்டு திரண்ட பெரியவர்கள் அமர்ந்திருந்தனர். ஆண்களின் நெற்றியிலும், கைகளிலும் திருநீற்றுப் பட்டைகள் மின்னின. பெண்களின் நுனி முடித்த  ஈரத்தலையில் நாலைந்து மல்லிகை மொக்குகள் பூத்திருந்தன.  “என் பிரண்ட் பத்து” என்றதும் “வா” என்று சினேகமாய் தலையசைத்தனர்.   “வாங்க” என்று சோடாபுட்டி முகத்துடன் ஒருவன் ரூமிலிருந்து வெளியே வர “இவன் தான் மாப்பிள்ளை. சட்டையே போடாததால இவன் போட்ருப்பது என்னோட சட்டையில்ல” என்று பரந்தாமன் அசந்தர்ப்பமாக ஜோக்கடிக்க, அஞ்சு பெயருக்கு சிரித்து கைகுவித்து வணங்க, “எப்படி இருக்க பாலா?” என்றான் பத்து. “பைன். உக்காரு” “கல்யாணக் களைய கண்ணாடி மறைக்குது. லென்ஸ் போடு” “வாடா” என ட்ரே ஒன்றில் ஸ்வீட், மிக்ஸரை எடுத்து வந்தாள் ஒரு மடிசார். ஒம்போது கெஜப் புடவையை வலப்புற பல்லுவுடன் பாந்தமாகக் கட்டியிருந்தாள். “அய்யராத்துல பத்து சதவீதம் பேரோட பெயர் பாலு, பத்து சதவீதம் பெயர் கமலான்னு இருக்கும். இவள் கமலா, பதினஞ்சாவது. எங்களுக்கு ஒரு வருஷம் சீனியர். அதுக்கே என்னா பந்தா காட்டுவா தெரியுமா ”  “நீங்க மட்டும் கொறச்சலாடா?  எடுத்துக்கப்பா”  லட்டுவை எடுத்து கடித்த பத்து “சூப்பரா இருக்கு” என்றபடி மென்றான். “நம்பாத. இவன் எந்த வீட்டுக்கு போனாலும் அங்க குடுக்குறத பாராட்டுறதையே ஒரு கொள்கையா வச்சிருக்கான்”  “உண்மையிலேயே நல்லாருக்கு. நீங்களே செஞ்சதா?” என்று கேட்டாள் அஞ்சு. “காப்பி பொடிலேருந்து, மசாலாப் பொடி வரை இங்கிருக்கும் எல்லாமே நாங்களா செய்யறது தான். மூக்குப்பொடியை தவிர” காப்பி கேனிலிருந்து இரண்டு கப்புக்களை நிரப்பி எடுத்து வந்த கமலா ” எடுத்துக்க” என்றாள். “இத்தனை பேரோட பொறந்து வளர்ந்தது ஜாலியா இருந்துருக்கும் இல்ல?” என்றாள் அஞ்சு. “நீங்க வேற. ரெண்டு, மூணு புள்ளைங்கள்ல கடசியா பொறந்தாலே கஷ்டம். இதுல நான் பதினாறில் கடசி. எல்லாரோட பழைய ஜட்டி, பனியன், சட்டையெல்லாம் எனக்கு தான் வந்து சேரும். எனக்குனு புதுசா எடுத்தது பூணூல் மட்டும் தான்” “முதல் குழந்தையைத் தான் வெல்வெட் கிளவ்ஸ்ல தாங்குவாங்க. பத்து, பதினஞ்செல்லாம் பெத்தா வேலக்காரங்க தான் வளப்பாங்க. இந்த பாலா பால்காரர் வளர்த்தவன் தான்” “இவ்வளவு பேரையும் வளர்த்து ஆளாக்கறது ரொம்ப கஷ்டமாச்சே” என்று அஞ்சு சீரியசாய் சொல்ல, “பெத்தது தான் எங்கம்மா. நாங்கெல்லாம் சுயம்புவா வளர்ந்தோம்” “ஆனாலும் எங்கம்மாவுக்கு வேலை அதிகம் தான். பரிணாம வளர்ச்சி உண்மைனா இந்நேரம் எங்கம்மாவுக்கு பத்து கையி மொளச்சிருக்கணும். எங்கப்பாவுக்கு பெரிய பட்டக்ஸ்” “குழந்தைங்க எப்பவும் அடுத்தவங்க வீட்ல இருந்தால் தான் அழகு. நம்ம வீட்டில் இருந்தால் அது போர்க்களம். நைட்டெல்லாம் சங்கூதிக்கிட்டே கெடக்கும். எங்க வீடு எப்பவும் சந்தைக்கடை மாதிரி தானிருக்கும்” “அதுவும் ஞாயிற்றுக்கிழமைன்னா எல்லா கிளாஸுக்கும் பிடி பீரியட் விட்ட கிரௌண்ட் மாதிரி இருக்கும்” கேட்கும்போதே மலைப்பாய் இருந்தது இருவருக்கும். காபி குடித்து முடிக்கையில், தலை முழுதும் நரைத்து மெல்லிய உடலுடன் பரந்தாமனின் அம்மா வந்தார். முன்பு பார்த்ததை விட உயரம் குறைந்ததாய் பத்துவிற்கு தோன்றியது. ‘குழந்தை பெத்து பெத்தே குட்டை ஆயிட்டாங்களா’ என அதிசயித்தான். “இத்தனூண்டு உடம்புல இருந்து இத்தனை புள்ளைங்க எப்படி. முட்டை போட்டு குஞ்சு பொரிச்சாங்களா?” என்று அஞ்சு வியந்தாள். “வா பத்தூ…..  இதான் மாட்டுப்பொண்ணா” “ஆமாம். கொம்பில்லாத மாட்டுப்பொண்ணு” “தங்க விக்ரகம் மாதிரி களையா இருக்காடா” என்று அஞ்சுவை நெட்டி முறித்தாள்.  “எங்க பத்துவை நல்லா பாத்துக்கோடிம்மா” “அவன் குழந்தை பாரு. ஒழுங்கா பாத்துக்க….. நீ இவளை ஒழுங்கா பாத்துக்கடா. டௌரி கேஸ் போட்ருவோம்” “கல்யாணமே இப்ப தான் ஆயிருக்கு. அதுக்குள்ள டைவர்ஸ் ஐடியாவா!  இவ லாயர் அஞ்சு. வாதாடி பேமஸ் ஆகாம எல்லாருக்கும் டைவர்ஸ் வாங்கி குடுத்தே பேமஸ் ஆகப் பார்க்கிறா. போன வாரம் எங்கப்பா அம்மாவை திட்டும்போது ஒரு கையெழுத்து போடும்மா. டைவர்ஸ் வாங்கித் தரேங்கிறா” என்று பரந்தாமன் சிரித்தான். “டைவர்ஸ் வாங்கிட்டு அம்மா எங்க போவாங்க?” என்று பத்து கேட்க, “ஆத்துக்கு நடுல வெள்ளை கோடு போட்டு சொத்துல பாதிய வாங்கிருவேனாக்கும்” ‘இந்த வயசுல வாங்கிட்டு என்ன பண்ண?” “தனியா இருக்க போரடிச்சா மறுபடியும் ரெண்டு பேரும் லிவிங் டுகதரா இருக்கட்டும். அதான் இப்ப பேஷன்” எல்லோரும் சிரிக்க “உன் புருஷன் எப்படி உன்னோட காலம் தள்ளுறாரு?” என்றான் பத்து. “இதைச் சொல்லித்தான் மெரட்டி வச்சிருக்கேன்.  வாப்பா எங்க தாஜ்மகாலை சுத்தி காட்டுறேன்” என்று கமலா அழைக்க, அஞ்சு தயக்கத்துடன் பத்துவைப் பார்த்தாள். பத்து போய்ட்டு வா என்பது போல தலையசைக்க அவளுடன் சென்றாள். ஸ்டேடியத்தில் கட்லெட் விற்பது போல ஒருவன் குண்டானில் வடைகளை எடுத்து சென்றான். “சொந்தக்காரங்க அதுக்குள்ள வர ஆரம்பிச்சிட்டாங்களா?” “எங்க குடும்பத்துக்கு தான்ப்பா இது!”  என்று கமலா சிரிக்க, அஞ்சு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.  “இவ்வளவு பெரிய சீரியல் குடும்பமான்னு உனக்கு ஆச்சரியமா இருக்குமே!” “இல்ல அப்படியெல்லாம் இல்ல” கமலா குறுகிய காரிடாரில் நடந்து செல்ல, அஞ்சு பின் தொடர்ந்தாள்.  ஹாஸ்டல் போல ரூம்கள் தனித்தனியாய் இருந்தன.  பூஜை ரூமே ஹால் போன்று இருந்தது. ஒரு மாமா தலை முடியை கையால் கோதி சிக்கெடுத்துக் கொண்டிருந்தார். “பொய் சொல்லாத. ரொம்ப பெருசுப்பா எங்க பேமிலி. வலது பக்கம்

Read More
கொரோனா திருவிளையாடல்….

கொரோனா திருவிளையாடல்….

கொரானா வைரஸுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் பல நாட்கள் வாய்தா வாங்கிய கொரோனா குழம்பிப் போய் நீதிமன்றத்திற்கு பதிலாக பட்டிமன்றத்தில் ஆஜராகி பராசக்தி டயலாக்கை சைனீசில் பேசியதன் தமிழ் டப்பிங். ***** நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை கண்டிருக்கிறது. புதுமையான வைரஸ்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரமுமல்ல. வழக்காடும் நான் புதுமையான வைரசுமல்ல. வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாக தென்படும் ஒரு வைரஸ்தான் நான். மக்களை தாக்கினேன் உயிர்களை பறித்தேன் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. நிச்சயமாக இல்லை. மக்களை தாக்கினேன். மக்கள் வேண்டாம் என்றல்ல. மியூசிக்கலியில் மாமாக்களும் ஆண்டிகளும் போடும் குத்தாட்டத்தை தாங்கமுடியாமல். உயிர்களை பறித்தேன். இவர்களை தின்பதற்கு அல்ல. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் இவர்கள் தின்னுத்தீர்க்கும் உயிர்களை காப்பாற்ற. உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக. சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்துள்ளது. தீர்ப்பு எழுதும்முன் கேளுங்கள் என் கதையை. சைனாவில் பிறந்தேன் நான். என் நாட்டில் தவளைகளும், பாம்புகளும் நெளிந்தன. ஒரு அறிவிலிருந்து ஆறறிவு வரை அத்தனையையும் சாப்பிட்டார்கள் அறிவில்லாமல். பக்கத்து வீட்டுக்கு போனால் பல்லியையும், எதுத்த வீட்டிற்கு போனால் எலியையும் ஸ்னாக்சாக கொண்டுச் சென்றார்கள். எல்லா நாடுகளுக்கும் ஓடினேன். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கும் ஓடிவந்தேன். கட்டிப்பிடித்து முத்தா கொடுக்கும் வெளிநாட்டினரையே தள்ளி நின்று கைகூப்பி வணங்க செய்தவன் நான். உலக போலீஸான அமெரிக்கனையே டாய்லெட் பேப்பருக்கு சண்டையிட்டு தண்ணீரில் கழுவச் செய்தவன் நான். ஆனால் இங்கு என்னை நிம்மதியாக வாழ விட்டார்களா கயவர்கள். கல்யாணி எல்லாம் கல்யாணி கலப்பட பீரை தூக்கிக்கொண்டு அலைந்தார்கள். அவர்களுக்கு ஊறுகாய் தந்திருக்க வேண்டும். கலப்படமில்லா நல்ல சரக்கை கொடுத்திருக்க வேண்டும். செய்தார்களா. பதினாலு நாட்கள் வீட்டில் இருந்திருந்தால் விலகியிருப்பேன். செய்தார்களா. மீன் வாங்க முண்டியடித்தார்கள். மட்டன் வாங்க கட்டிப் பிரண்டார்கள். தனித்திரு விழித்திரு என்று சொன்னால் ‘திரு’ வுக்குதான் அது. நாங்க திருமதி என்று வெளியே சுத்தினார்கள் கொண்டையர்கள். ஒடுங்கி போன மண்டையனை கொரோனா மண்டையன் என்றார்கள். கோமியத்தை குடித்து என்னை மூழ்கடிக்க பார்த்தார்கள். எனக்கு மஞ்சள் பூசி வேப்பிலை அடித்து பேய் ஓட்டினார்கள். இஞ்சி டீ குடித்துவிட்டு குரங்காக சிரித்தார்கள். சப்பாத்தியிலிருந்து கேக் வரை என் உருவத்தை நகையாடினார்கள். அம்மை போட்ட மூஞ்சி போல் என் படத்தை அசிங்கமாக வரைந்தார்கள். கொரோனா என்ற அழகான பெயரை குரானா, சொர்ணா, குருமா பர்மா என்று கேவலப் படுத்தினார்கள். பிறந்த குழந்தைக்கு கொரோனா குமார் என்று பெயர் வைத்தார்கள். ஓடினேன் ஓடினேன். வாழ்வின் எல்லைக்கே ஓடினேன். ஒலியும், ஒளியும் காட்டி என்னை திரும்ப வரவழைத்தனர். அரசு சொன்னதைக் கேட்காதது யார் குற்றம்? லுங்கியை போட்டுவிட்டு கேரம் போர்டுடன் ஓடியது யார் குற்றம்? பைக்கில் ட்ரிபிள்ஸில் உலகை வலம் வருவது யார் குற்றம்? சிகப்பு, ஆரஞ்சு, பச்சை பெயிண்ட் அடித்த மண்டையர்களின் நாட்டுக்கு பெயின்ட் அடித்தேன். நாய்க் கறண்டியதுபோல் அரைமண்டையை சேவ் செய்துவிட்டு தாடையில் சடை போட்டு திரிந்தவர்களின் மண்டையில் முடிவளர்த்தேன். உன்மூஞ்சில பீச்சாங்கையை வைக்க என்று பிரித்து பேசியவர்களின் சோத்தாங்கையையும் மூஞ்சியில் வைக்க முடியாமல் செய்தேன். ஹெல்மெட் போட்டு பந்தா பண்ணிய ஆண்களின் தலையில் துண்டு கட்டி வெளக்குமாறை தூக்கச் செய்தேன். மிக்ஸி, கிரைண்டரை பயன்படுத்தாமல் பெட்மாஸ் லைட் போல் மாறிய பெண்களை குத்துவிளக்காக மாற்றினேன். படிப்பு, படிப்பு என்று குமுறிய மாணவர்களை பத்து மணிவரை குப்புறடிச்சி தூங்கச் செய்தேன். ஆண்களின் போலி முகத்தையும், பெண்களின் உண்மை முகத்தையும் உலகிற்கு காட்டினேன். வெயிலில் அலைந்து கருகியிருந்த கருவாயன்களை வெள்ளையாக்கினேன். கிச்சன்களில் கீழடியில் தோன்றிய உப்புமாவைத் தவிர மற்ற உணவுகளையும் மீட்டெடுத்தேன். உலகில் அவசியமேது, அலங்காரமெது என்று புரிய வைத்தேன். நிலவில் ஆயா வடை சுடுவதை தெளிவாக தெரியுமளவு பூமியை மாசிலிருந்து காத்தேன். டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீஸ்காரர்கள் இந்த மூவரும் வராமல் இருந்திருந்தால் உலகத்தை மாற்றியிருப்பேன். மனிதர்களை மைனாரிட்டி ஆக்கியிருப்பேன். அன்பை கடவுளாக்கி, மனிதத்தை மதமாக்கி இருப்பேன். மனிதன் மாறாதவரை கொரோனோக்களும், கர்மாக்களும் திரும்ப வரும். இதுதான் எங்கள் வாழ்க்கையேட்டின் தத்துவம், பாடம். கொரோனா நல்லதா கெட்டதா என்று கன்ப்யூஸ் ஆன நடுவர் துல்கர் சல்மான் பாப்பையா எதிர்கட்சிக்காரரான மொரட்டு தமிழரிடம் அவரின் வாதத்தை தாக்கல் செய்யச் சொன்னதாக கேள்வி.

Read More