“மரணத்தை எண்ணி கலக்கமாக இல்லையா?” என்று வினவினாள் அனி. அவள் கண்களை கண்ணீர் திரையிட்டது.
“வாழ்வதற்கே கலக்கம் இருக்கும். மரணிக்க என்ன பயம்?” என்று புன்னகைக்க முயன்றான் நியான்.
“உனது வாழ்வை அபகரித்த குற்றவுணர்வு எங்களை நிம்மதியா இறக்க விடாது” என்றான் அவனது தந்தை லியோ.
“இது நானாக எடுத்த முடிவு தானே அப்பா. ஆறு வருடத்திற்கு முன்னால் இதே கணத்தை நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம். உங்களுக்கு நினைவுள்ளதா?”
“தெளிவாக உள்ளது. நமது நகரத்து விதிகளை மாற்றிய நிகழ்வு”
“ப்ச்ச்”
“அது நடந்திருக்காவிட்டால் நீ முழுமையாக வாழ்ந்திருப்பாய்”
அவன் வயிற்றில் ஒளிர்ந்த எண்களை மென்மையாகத் தடவினாள் அனி. அடர் சிகப்பில் ஒளிர்ந்த 24 என்ற எண்கள் அவன் ஆயுள் இன்னும் 24 மணி நேரமே என்பதைக் காட்டின. அவளுடைய வயிற்றில் தெரிந்த 2:6:3:18 என்ற எண்கள் இரண்டு வருடம், ஆறு மாதம், மூன்று நாள், பதினெட்டு மணி ஆயுளை குறித்தன.
மானிடோ நகரத்தின் மக்கள் தொகை பத்தாயிரத்திற்குள் இருக்கும். நீர், உணவு, இருப்பிடம் என்ற அத்தியாவசியமான தேவைகள் குறைந்து போனதால் அங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் நாற்பது வருடங்கள் மட்டும் வாழலாம் என்று நகர விதியாளர்களால் வரையறுக்கப்பட்டு இருந்தது, குழந்தை பிறந்தவுடன் தொப்புளுக்கு கீழே மைக்ரோசிப்பைப் பதித்து விடுவார்கள். அந்த குழந்தையின் ஆயுளை அட்சர சுத்தமாக காட்டியவாறு அந்த மரண கடிகாரம் வாழ்வழியும். ஆயுள் முடிகையில் டிஎன்ஏவில் பதிந்திருக்கும் மரண விதைகள் உயிர் பெற்று உயிர் இயக்கங்களை முடக்கி விடும். வலியின்றி நொடியில் மரணம்.
ஆறு வருடங்களுக்கு முன்னர் நியானுக்கு 19 வயது இருக்கையில் நடந்த நிகழ்வு அது. நியானின் தந்தை லியோவின் ஆயுள் முடிய இரண்டு நாட்கள் மீதமிருந்தது. மூவரும் மிகுந்த துயரத்தில் இருந்தனர். அப்போது நியான் ஒரு முடிவுக்கு வந்தான். அவனுடைய வாழ்நாளில் ஏழு வருடங்களைத் தந்தைக்கும், ஏழு வருடங்களைத் தாய்க்கும் கொடுக்க விரும்புவதாகவும், அதை அனுமதிக்குமாறும் விதியாளர்களின் அறக் குழுமத்திற்கும், ஊடகங்களுக்கும் ஆடியோ, வீடியோ மெயில் அனுப்பினான். ஒரே நாளில் அவனுடைய மனு பிரபலம் அடைந்தது. அனியும், லியோவும் அவனைத் தடுக்க முயன்றனர். அவனுடைய ஆயுளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
“என்னைத் தடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று நியான் உறுதியாக கூறவும், அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.
நிலையின் அவசரம் கருதி நகரின் அறநிலையத்தில் மறுநாள் கூடிய அனைவரும் பெரும் ஆச்சரியத்தில் இருந்தனர். அவையானது முதன்முறையாக வித்தியாசமான மனுவைப் பெற்றிருந்தது. கொல்ல வேண்டாமென்று மனுக்கள் வந்திருக்கின்றன. மக்கள் இறப்பதற்கு முன்பு கலவரம் செய்திருக்கின்றனர். சிப்பைக் கழட்டியெறிய, மற்றவர்களை கொல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஆயுளைத் தருகிறேன் என்ற கோரிக்கை புதியது. முற்றிலும் புதியது.
அறநிலைய நடுவர்கள் முப்பதிலிருந்து முப்பத்து ஐந்து வயதிற்குள் இருக்க வேண்டுமென்ற விதியால் அவை மேடையில் அமர்ந்திருந்த ஐவரும் இளைஞர்களாக இருந்தனர். நியான் அவர்களுக்கெதிரே அமர்ந்திருந்தான்.
அவையின் வலப்புறத்தில் மக்கள் பிரதிநிதிகள் இருபது பேருடன் ரேமும், லியோவும் அமர்ந்திருந்தனர்.
இடப்புறத்தில் மனு சார்ந்த துறையினர் அமர்வது வழக்கமாதலால் நகர வளத்துறையினரும், காவல் துறை அதிகாரிகளும், மக்கள் நல நிபுணர்களும் அமர்ந்திருந்தனர். பின்புறத்தில் ஊடக நிபுணர்கள் நிறைந்திருந்தனர். நகரெங்கும் நியானின் முகமே திரைகளில் பளிச்சிட்டது. அவை எவ்வித ஓசையுமின்றி அமைதியாய் இருந்தது.
அவையிலிருந்தவர்கள் நெற்றிப்போட்டில் ஸ்க்ராம்பிளர் எனும் மெல்லிய சிப்பை ஒட்டி அத்துடன் அகல கண்ணாடி அணிந்திருந்தனர். கண்ணாடி பிரேமின் வலப்புறத்திலிருந்த பட்டனை ஆன் செய்து கொண்டனர்.
“நமது நகரின் விதிமுறைகளை நீ அறிவாய். அப்படியிருக்கையில் அதை மாற்றும்படி மனு அளித்தது ஏன்?” என்று எண்ணினார் மூத்த நடுவர். அவரது எண்ணங்கள் சொற்களாய் மாற்றப்பட்டு கண்ணாடியில் தோன்றியதும் ஆமோதித்து தலையசைத்தார். மறுகணம் வார்த்தைகள் ஒளிபரப்ப பட்டு அனைவரது கண்ணாடியிலும் தெரிந்தது. ஸ்க்ராம்பிளரை வாய்ஸ் மோடில் வைத்திருந்தவர்களின் காதுகளில் சன்னமாக ஒலித்தது.
நியான் இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்து நின்றான். “அனைவரையும் வணங்குகிறேன். நான் எனது ஆயுளை நீட்டிக்கும்படி கேட்கவில்லை. என்னுடைய வாழ்நாளை பெற்றோருக்கு பிரித்து அளிக்குமாறே வேண்டுகிறேன்.” நியான் தலையசைத்ததும் கண்ணாடியில் தோன்றிய எண்ணங்கள் ஒளி, ஒலியாய் பரவின.
“இது நமது விதிகளுக்கு புறம்பானது” என்றெண்ணினாள் இரண்டாவதாய் அமர்ந்திருந்தவள்.
“வாழ்வை மேம்படுத்த தானே விதிகள்?”
“இந்த விதிகள் நம்மை ஐம்பது ஆண்டுகளாக பாதுகாத்து, வழிநடத்தி வந்திருக்கின்றன”
“காலத்தின் மாறுதலுக்கேற்ப விதிகள் மாற வேண்டியது அவசியமல்லவா?”
“நீ நினைப்பதால் மட்டும் இந்த மாற்றம் நிறைவேறாது”
“அதனாலேயே அவையை நாடியிருக்கிறேன்” என்றெண்ணினான் நியான். எண்ணம் சூடேறியது.
“உனக்காக விதிகளை தளர்த்தினால் இதே போன்று பலர் மனுக்களுடன் வருவர்” என்றாள் அவள் மீண்டும்.
“உனக்கு சற்றாவது மூளை பணி செய்கிறதா? எல்லாரும் ஆயுளைக் கொடுக்க தயாராய் இருப்பார்களா?” என்று எண்ணினான் நியான் கோபத்துடன்.
வீட்டிலிருந்து புறப்படும்போதே நியானிடம் ஸ்க்ராம்பிளரை மரியாதை மோடுக்கு மாற்றும்படி அனி கூறியிருந்தாள்.
“எல்லோரும் தமது வாழ்நாளைப் பங்கிட்டு கொள்ள இசைவார்கள் என்று கூற முடியாதே மேடம்” என்று ஸ்க்ராம்பிளர் உரைமாற்றியது.
“இதற்கான காரணம் என்ன? அவர்கள் உன்னை வற்புறுத்தினார்களா?”
“இல்லை. எனது பெற்றோர் இல்லாத உலகை என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. அவர்களுடன் நான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் மரணிக்க வேண்டும்”
அவையின் நிகழ்வுகள் நகரம் முழுதும் லைவ் ரிலேயில் ஒளிபரப்பாக, மக்கள் எண்ணங்களிலேயே ஓட்டு போட துவங்கினர். நடுவர்களின் எதிரேயிருந்த ஸ்க்ரீனில் நியானுக்கு ஆதரவாய் அறுபது சதவீதத்தினரும், அவைக்கு ஆதரவாய் நாப்பது சதவீதத்தினரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.
நடுவர்களின் தலைவர் பட்டனை அழுத்தியதும் ஒலி சுவர் ஒன்று எழும்பி அவர்களின் உரையாடலை மற்றவர்கள் கேட்க முடியாமல் தடுத்தது.
“மக்கள் ஆதரவு அவனுக்கு அதிகமா உள்ளது. என்ன முடிவெடுப்பது?” என்று துவங்கினார் மூத்தவர்.
“அதை மறுத்தும் நாம் தீர்ப்பளிக்கலாம்”
“ஆனால் மக்களின் கருத்துகளை மதிப்பது அவசியம்”
“நியான் வெளிப்படுத்தும் பாசம் மக்களை மயக்குகிறது. அன்பு, பாசம் போன்ற காலாவதியான உணர்வுகள் நகரத்தை வழிநடத்த முடியாது. உறுதியான விதிகளே நமக்கு தேவை”
“இது தொடர்ந்தால் முதியவர்களின் எண்ணிக்கை கூடி விடும்”
“இதைக் குறித்து நேற்றிரவே நிபுணர்களுடன் பேசிவிட்டேன். அவர்களை நமக்கு ஆதரவா பேசுமாறு கேட்டிருக்கிறேன்”
மற்றவர்கள் தலையசைத்ததும் மூத்தவர் ஒலித்திரையை விலக்கினார். மக்கள் பிரதிநிகளை நோக்கி “உங்கள் கருத்து?” என்று கேள்வியெழுப்பினார்.
எண்ண அலைகள் வெள்ளமாய் ஓடி வர, சிஸ்டம் வல்லுநர்கள் ஒவ்வொரு கருத்தாய் திரைகளில் ஒளிரச் செய்தனர்.
“நியான் வேண்டுவது முற்றிலும் சரி. ஏற்புடையது”
“இறக்க வேண்டிய இருவர் உயிருடன் இருப்பதால் மக்கள் தொகை அதிகமாகும்”
“அவை சில வருடங்களில் சீராகி விடும். உட்கொள்ளும் உணவின் அளவு மாறாது”
“அனுமதிக்கலாம். பெரிய மாற்றமேதும் ஏற்படாது”
“அடுத்த ஏழு வருடங்களுக்கான பிறப்பு எண்ணிக்கை, திருமணம் செய்து கொள்ள அனுமதி வாங்கியிருப்பவர்கள், மரணங்களின் கணக்குகள் நம்மிடம் உள்ளன. அனுமதி தரலாம்.”
“எதிர்பாராத விபத்துகளால் நமது எண்ணிக்கை குறைந்தே உள்ளது”
“அவன் கோரிக்கையை ஏற்க வேண்டாம். அவனுக்கு கவுன்சலிங் கொடுங்கள்” என்ற அனி, லியோவின் எண்ணங்கள் அடிக்கோட்டுடன் ஒளிர, அனி அழுவது திரைகளில் தெரிந்தது.
அவைத்தலைவர் “உங்களுடைய கருத்துகள்?” என்று துறை நிபுணர்களிடம் கேட்டார்.
“உறுதியான சட்டங்களே நம்மை பாதுகாத்து வருகின்றன. அதிலிருந்து விலகுவது மற்றவர்களைப் பாதிக்கும்”
“முதியவர்களின் எண்ணிக்கைகள் கூடுவதால் வியாதிகள் அதிகரிக்கும்”
“பெற்றோர் தயவில் வாழுமாறு பிள்ளைகள் வளர்க்கப்படுவார்கள். ஆயுளை கொடுக்க சொல்லி மூளைச்சலவை செய்யப்படுவார்கள்”
“முதியவர்களை கவனிப்பதால் மற்றவர்களின் நேரம் செலவாகும்”
“சற்றும் ஏற்புடையதல்ல. முதியவர்களால் நமது உற்பத்தி குறையும். வளங்கள் சீரழியும். நகரம் பாதிக்கப்படும்”
மற்றவர்களுக்கு பாதிப்பு நிகழும் என்றதும் மக்களின் ஆதரவு ஐம்பது சதவீதத்திற்கும் கீழிறங்கியது.
‘மனிதன் தன்னை மீறியே மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிறான். அன்பு, பாசம் போன்ற உணர்வுகளை பயம் அழிக்க கூடியது’ என்று நினைத்தார் மூத்தவர்.
மூத்தவர் மீண்டும் நியானை நோக்கி கேள்வியெழுப்பினார். “உனது ஆயுளைப் பெறுவதற்கு உன்னுடைய பெற்றோர்களுக்கே விருப்பமில்லையே?”
“என் மேலிருக்கும் பாசத்தால் அவ்வாறு பேசுகிறார்கள். எனது ஆயுளை எப்படி செலவழிக்க வேண்டும் என்பது என்னைச் சேர்ந்தது”
“இவ்வாறு பிரித்தளிப்பதால் உனது ஆயுள் பெற்றோர்களின் ஆயுளை விட குறைந்து விடும். அவர்களுக்கு முன்பாக நீ இறக்க நேரிடும்”
“அது எனக்கு வரம்”
‘பெற்றோர் இருக்கையில் மகன் இறப்பது பெற்றோர்களுக்கு சாபம்’ என்று எண்ணினான் லியோ.
மக்களின் ஆதரவு ஐம்பது ஐம்பதென்று பிரிந்திருப்பதைக் கவனித்ததும் மூத்தவர் உத்வேகமடைந்தார். “உனது வேண்டுதல் உன்னதமானது எனினும் நமது நகரின் அடிப்படை விதிகளுக்கு புறம்பாயுள்ளது’ என்று துவங்கினார்.
தீர்ப்பின் தன்மையை முன்கூட்டியே கிரகித்த நியான் சேரில் அமர்ந்தான். இரண்டு முழங்காலுக்கும் கீழிருந்த சின்தடிக் கால்களை கழற்றியெறிந்ததும் கால்கள் மொன்னையாய் நீட்டின. அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
நியான் ஸ்க்ராம்பிளரை கழட்டிவிட்டு வாய் திறந்து ஆவேசமாய் பேசினான். “புதிய தாவர டிஎன்ஏக்களை உருவாக்கும் லேபில் நடந்த விபத்தில் ஆசிட் கொட்டி எனது இரண்டு கால்களும் கருகின. டாக்டர்களால் வெட்டி எடுக்கப்பட்டன. எனக்காக எனது தாய் வேலையை உதறிவிட்டு என்னைக் கவனித்துக் கொண்டாள். எனது சிகிச்சைக்கான பணத்தை வாரியிறைத்ததில் எனது குடும்பம் பொருளாதாரத்தில் முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பிற்கு வந்தது. இருப்பினும் எனது தந்தை என்னை விலக்கியதில்லை. பெற்றோர்களின் அன்பு விதிகளுக்கு உட்படாதது. என்னைக் கொண்டே அவர்களுடைய உலகம். அவர்களே எனது உலகம். அவர்களின்றி எனது வாழ்வு அர்த்தமற்றது. எனது ஆயுளை பிரித்து அளிக்க முடியாதென்றால் அவர்கள் மரணிக்கையில் நானும் உயிர் துறக்க அனுமதியுங்கள். விதிகள் வாழட்டும்”
அவையில் சலசலப்பு அதிகமாக மூத்தவர் மீண்டும் ஒலித்திரையை எழுப்பினார். மக்களின் ஆதரவு நியானுக்கு தொன்னூற்று மூன்று சதவீதமாய் உயர்ந்தது.
“இது வரையில் மக்கள் எந்த மனுவிற்கும் இவ்வளவு ஆதரவு அளித்ததில்லை. அவனது கோரிக்கையை ஏற்கும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறோம்.
“இப்போது மறுத்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்”
“நமக்கு வேறு வழியில்லை. ஏற்றுக் கொள்வோம்”
மற்றவர்கள் மௌனமாய் ஆமோதிக்க, திரை உயர்ந்தது. அவை பதற்றத்தில் இருந்தது. அனைவரையும் ஒருமுறை நோக்கிய மூத்தவர் நியானை கருணையுடன் நோக்கியவாறு எண்ணினார்.
“மறுமணம், குழந்தை இறந்தால் இரண்டாவது குழந்தை பேறு என புதிய விதிகளை நாம் தோற்றுவித்தே வந்துள்ளோம். மீண்டுமொரு முறை விதிகளை மாற்றுவது கட்டாயமாகியுள்ளது”.
மக்கள் தீர்ப்பைப் புரிந்து கொண்டு சடசடவென்று கைத்தட்ட துவங்கினர். “எனவே நியானின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. மரபுக்கூறு நிபுணர்கள் காலத்தை பிரித்தளிப்பர்” என உத்தரவிட்டார். நகரெங்கும் மக்கள் மகிழ்வில் கூச்சலிடுவது திரைகளில் தெரிந்தது. நிபுணர்கள் மூவரையும் அழைத்து சென்றனர். அடுத்த அரை மணி நேரத்தில் மூவரின் காலக்கடிகாரங்களும் மாறின.
நினைவுகள் மீண்டும் நிகழ்காலத்திற்கு திரும்பின. “நடுவர்கள் அன்று உனது வேண்டுதலை நிராகரித்திருக்க வேண்டும். இப்பொது நாங்கள் உனக்கு விடைகொடுக்குமாறு நேர்ந்து விட்டது” என்றாள் அனி.
“நீ இல்லாத வாழ்வில் சுவையென்ன இருக்க போகிறது” என்றான் லியோ.
“உங்களுக்கு மகனாய் பிறந்ததில் எனது பெரும்பேறு. மீண்டும் வாய்ப்பு அமைந்தாலும் நான் உங்களுக்கு மகனாய் பிறக்கவே விரும்புவேன்”
மூவரும் பேசிக் கொண்டும், அழுது கொண்டும், சிந்தனையில் தொலைந்தும் நேரத்தைக் கடத்தினர். மறுநாள் மாலையில் நியானை அழைத்து செல்ல அரசாங்க வான ஊர்தி வந்து சேர்ந்தது. நியான் சிறு கலக்கமின்றி பெற்றோருடன் நடந்து வந்தான். வான ஊர்தியில் பெற்றோரும் ஏறிக்கொள்ள, ஊர்தி வானில் வேகமெடுத்து மின்சார தகன மேடைக்கு பறந்தது.
மூவரும் ஊர்தியிலிருந்து இறங்கி தொலைவில் தெரிந்த சோலார் மாளிகையை நோக்கி நடந்தனர். ஆயுள் முடியும் சிலரும் அவர்களின் உறவினர்களும் அழுது கொண்டிருந்தனர். சில ஊர்திகள் வீட்டிலேயே காத்திருந்து மரணமடைந்தவர்களின் உடல்களை ஏற்றி வந்தன.
நியானும் பெற்றோரும் நுழைவாயிலுக்கு அருகிலிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். இன்னும் ஒரு மணி நேரம் என்று நியானின் கடிகாரம் காட்டியது. சிலர் நியானை அடையாளம் தெரிந்து கொண்டு ஆறுதல் கூறினர்.
நியானை பேட்டியெடுக்க வந்திருந்த ஊடகர் “உனது கோரிக்கையின்படி வாழ்வை முடித்து கொள்கிறாய். எப்படி உணர்கிறாய்?” என்றார்.
“மிக்க மகிழ்வாய்”
நியானின் முகம் நகரின் சில இடங்களில் ஒளிர்ந்தது. அவன் முகத்தில் சிறிய வருத்தமும் தொனிக்காததைக் கண்டு மக்கள் வியந்தனர்.
“உனக்கு பின்னர் வேறெவரும் ஆயுளை பகிர்ந்தளிக்க முன்வரவில்லை. நீ சபையில் கூறியது உண்மையாகி விட்டது”
“நமக்கானவர்களுக்காக உயிர் தருவது கொடுப்பினை. அது சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.” நியானைச் சுற்றிலும் மக்கள் கூடத்துவங்கினர்.
“மக்களுக்கு ஏதாவது கூற விரும்புகிறாயா?”
“நகரத்தை நிர்மாணிக்கையில் உருவாக்கிய விதிகளை நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம். நோய், விபத்துகளால் எண்ணற்ற எதிர்பாராத மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மக்கள் தொகை குறைந்தே இருக்கிறது. வளங்களைப் பன்மடங்கு பெருக்கியுள்ளோம். இக்காலத்திலும் நாற்பதாண்டுகள் என்று ஆயுளை முடிப்பது முறையற்றது. மரணத்தை எதிர்பார்த்து வாழ்வைக் கழிப்பது கொடுமையான ஒன்று. மக்கள் இயற்கையாக வாழ்ந்து மடிய சட்டங்களை மாற்ற வேண்டும். மக்கள் இதை முன்னெடுக்க வேண்டும். எனக்கு பின்னான மக்கள் உயிர் பயமின்றி வாழவேண்டும்”
“ஆனால் மக்கள் தொகை பெருகி விடுமே?”
“நாற்பது வயதில் உயிரைப் பறிப்பது கொலைக்கு ஈடானது. இது போன்ற சட்டங்களை மிருகங்களும் இயற்றுவதில்லை. இதற்கு மாற்றாய் பிறப்பைத் தடுக்க சட்டம் இயற்றலாம் ”
“சரியே” என்ற ஊடகன் சிந்தித்தான். நியானின் பேட்டி பல இடங்களில் ஒளிபரப்பாகி மேலும் மக்கள் பார்க்க துவங்கினர்.
“எங்கள் மூவருக்கும் வாழ்நாளை சமமாக பிரித்தளிக்குமாறு அளித்த மனுவை நிராகரித்து விட்டனர். இல்லையெனில் நாங்கள் ஒன்றாய் உயிரிழந்திருப்போம்” என்றான் லியோ.
“ஏன்?”
“ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீண்டும் அதே காரணத்திற்காக மனுவளிக்க கூடாதென அறக்குழுமம் மறுத்து விட்டது”
“நியான் கூறுவது முற்றிலும் உண்மை. ஆயுள் வரையறையை மாற்ற வேண்டும்” என்ற எண்ணங்கள் நகரெங்கும் எழத் துவங்கின.
“உனது எண்ணங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. விரைவில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்”.
“அதற்குள் இவனது ஆயுள் முடிந்து விடும்” என்றான் ஒருவன்.
“நம்மால் வேறென்ன செய்ய முடியும்”
சோலார் மாளிகையிலிருந்து வெளிப்பட்டவர் “நியான்” என்று அழைக்க,
“நான் புறப்படுகிறேன். விரைவில் விதி மாற எனது வாழ்த்துகள்” என்றவாறு நியான் எழுந்து நடந்தான். அனியும், லியோவும் பின்தொடர்ந்தனர்.
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ஊடகன் மனதில் மனுவை உருவாக்க துவங்கினான். “எனது வாழ்நாளில் ஒரு நாளை நியானுக்கு அளிக்க விரும்புகிறேன். அவன் வாழ்நாள் முடிய இருப்பதால் உடனடியாக அறக்குழுமத்தை முடிவெடுக்குமாறு வேண்டுகிறேன்” என்று வரைவு செய்தான். மக்களின் கண்ணாடியில் சொற்கள் பளிச்சிட்டின. அவசர மெயில் அறக்குழுமத்தின் பெட்டியைச் சென்றடைந்து, குழுமத்தின் கணினியில் சிகப்பு விளக்கு எரிந்தது.
“நானும் ஒரு நாளை அளிக்கிறேன்” என்றான் மற்றொருவன்.
“ஆயுள் விதியை மாற்ற வேண்டும். நானும் நியானுக்கு ஒரு நாளை அளிக்கிறேன்”. மனுக்கள் வெள்ளமாய் அறக்குழுமத்தில் நிறைய மூத்தவரின் அறைக்கு ஒருவன் ஓடினான்.
அனி, லியோவின் கைகளையும் பிடித்துக் கொண்டு நியான் பெட்டில் படுத்திருந்தான். அவனுக்கு அருகிலிருந்த மானிட்டரில் பத்து, ஒன்பது, எட்டு என்று குறைந்து கொண்டிருந்த நொடிகள் இரண்டை அடைந்ததும் திடீரென அணைந்து போக, மெஷினருகே நின்ற நிபுணன் விழித்தான். அங்கிருந்தவர்களின் கண்ணாடியில் சொற்கள் பளிச்சிட்டன.
“மனுக்களை அறக்குழுமம் ஏற்கிறது. நாளைக்காலை விசாரிப்பு. நியானின் ஆயுள் ஒரு நாள் நீட்டப்படுகிறது”
நியானின் கடிகாரம் உயிர்பெற்று மீண்டும் 24 மணி நேரத்தைக் காட்டியது.
“நியான்” என்ற அலறலுடன் அனி அவனைக் இறுக்கிக் கொண்டாள். இருவரையும் லியோ அணைத்துக் கொண்டான். மானிடோ நகரில் மறுநாள் சூரியன் உதிக்கையில் மக்களிடையே தெளிவு பிறந்திருந்தது. வாழ்வு விதிகளால் ஆளப்படுவதில்லை. விருப்பங்களால் ஆளப்படுவது என.
**********