சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் அறையில் உடலில் அணிந்திருந்த பாதுகாப்பு ஆடைகளை களைந்து விட்டு சானிடைசர் போட்டு கைகளை கழுவிக் கொண்டு முகத்தை அலம்ப கண்ணாடியில் பார்த்தபோது தான் மாஸ்க் இன்னும் கழட்டப்படாமல் இருந்ததை பார்த்தாள் ஆர்த்தி. மெதுவாக மாஸ்க்கை முகத்திலிருந்து உரித்தெடுக்க, சிவந்த முகம் கன்னிப் போயிருந்தது. மாஸ்க் மூக்கின் மேல் அழுந்திய இடம் சிவப்பு கோடிட்டிருந்தது. முகத்தை அலம்பிவிட்டு வெளியே வந்தாள். நைட் ஷிப்ட் எட்டு மணிக்கே முடிந்திருந்தாலும் வெளியில்வர காலை பத்து மணி ஆகியிருந்தது.
கோவிட் வைரஸ் உலகெங்கும் கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. ஸ்டான்லியின் அனைத்து டாக்டர்களுக்கும் விடுமுறை மறுக்கப்பட்டு இரவு டூட்டிக்கு பின்னர் தரப்படும் ஓய்வும் இல்லாமலிருந்தது. உடலின் ஒவ்வொரு அணுவும் ஓய்வு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ய, ஆர்த்தி தளர்வாக நடந்தாள்.
ரிஸப்ஷனருகே நின்றிருந்த சீப் டாக்டர் சங்கர் ஆர்த்தியிடம் “குட் மார்னிங் அண்ட் குட் நைட்” என்றார். ஆர்த்தி கையால் சல்யூட் வைத்துவிட்டு வெளியேறினாள். அடுத்த வருடம் ரிடையர்மெண்டை எதிர்நோக்கி இருந்தாலும் எந்நேரமும் ரவுண்ட்ஸில் இருப்பவர். தினமும் டாக்டர்களுக்கு மீட்டிங் வைத்து மோட்டிவேட் செய்பவர். “வெள்ளைக் கோட்டை அணிந்து விட்டால் டாக்டர் என்பவன் காக்கும் கடவுள். அழிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். காப்பதை நம்மால் மட்டுமே செய்ய முடியும். நம்மால் நூறு பேர் பிழைக்கலாம். ஆனால் ஒருவர் கூட இறக்க கூடாது. நமக்கு நூறை விட ஒன்று பெரியது” என்பவர்.
ஸ்கூட்டியை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு திரும்பியபோது ஒரு பெரியவரும், அவரது மகனும் நின்றனர். “ரொம்ப நன்றிம்மா” என்றார் பெரியவர் கூப்பிய கரங்களுடன். ஜனார்தனனும் அவரது மகனும் அவளது வார்டில் அனுமதிக்கப்பட்டு பத்து நாட்களாக சிகிச்சை பெற்று இன்று டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். இருவரின் பின்னால் அவர்களின் குடும்பத்தினர் நின்றுகொண்டிருக்க…
“இரவு பகலா நீ எங்களை இப்படி கவனிக்கலன்னா நாங்க ரெண்டு பேரும் உயிரோடு வெளியே வந்திருக்க மாட்டோம்” என்றார்.
“அப்படியெல்லாம் இல்லை. மறுபடி ஏதும் பிரச்னைன்னா நேரா வார்டுக்கு வந்துடுங்க”
“அப்பா உடல்நிலை ரொம்ப மோசமானப்ப விடிய விடிய உட்கார்ந்து மருந்துகளை குடுத்தீங்களே மறக்க முடியுமா என்னால” என்றான் மகன்.
“அது என் டூட்டி தானே. எல்லாம் கடவுள் கையில தானிருக்கு”
“எங்களை பொறுத்தவரை நீதாம்மா கடவுள்” என்றாள் பின்னாலிருந்த பெண்.
உள்ளத்தால் உருகி நின்றவர்களை ஒருவழியாக சமாளித்து அனுப்பிவிட்டு ஸ்கூட்டியை திருகியபோது ஆர்த்திக்கு தூக்கம் கலைந்து, உயிர்களை காப்பாற்றிய பரவச உணர்வு மனமெல்லாம் நிரம்பியிருந்தது. இதற்காகத்தான் இரவு பகலாக உழைக்கிறார்கள். இதுபோன்று சிலசமயங்களில் நடக்கும். கண்ணீருடன் கைகளை குவித்து நிற்பவர்களை பார்க்கும்போது மனம் நெகிழ்ந்து போகும். டாக்டரின் ஆன்மாவை நிறைக்கும் இந்த உணர்வே மென்மேலும் பணி செய்யத்தூண்டும்.
பிளாட்டில் வண்டியை நிறுத்தி விட்டு காலிங் பெல்லை அடிக்க கணவன் ஆகாஷ் கதவை திறந்தான். திறக்கும்போதே “மறுபடி எத்தனை மணிக்கு போகணும்” என்றான்.
“ஏழு மணிக்கு” என்றவாறு உள்ளே நுழைய அவர்களின் மகள் மேகனா ஓடிவந்தாள். “பக்கத்தில் வராத மேகி” என்று ஆர்த்தி சத்தமிட்டதை கேட்காமல் ஓடிவந்தவளை இடைமறித்து ஆகாஷ் தூக்கிக் கொண்டான்.
“இருடா அம்மா குளிச்சிட்டு வருவா”
மேகனா ஏழு வயது அழகு தேவதை. தோள் வரை புரளும் பாப் முடியுடன் பிராக்கில் திரியும் குட்டிப்பிசாசு. மேகி செல்ல பெயர். ஆர்த்தி குளித்துவிட்டு வந்தபோது குட்டி குட்டியாய் இட்லி போட்டு சட்னி, சாம்பாருடன் டைனிங் டேபிளில் ஆகாஷ் காத்திருந்தான். மேகி ஓடி வர ஆர்த்தி அவளை தூக்கிக்கொண்டாள். “டயர்டா இருக்கு நீங்க சாப்பிடுங்க. நான் தூங்குறேன்பா” என்றாள் ஆர்த்தி.
“ஏய் எங்க அப்பாவை அப்பானு சொல்லாதே” என்றாள் மேகி வெண்ணிற கண்களை உருட்டியபடி.
“சரிம்மா தாயி” என்றபடி ஆர்த்தி நிற்க
“நான் உன் தாயி இல்ல மேகி”
“மத்தியானம் எழுப்பலை. இப்ப சாப்பிட்டுட்டு போ”
இப்படித்தான் சொல்வான். ஆனால் ரெண்டு மணிக்கு மீண்டும் எழுப்புவான்.
“சரி. மதியானம் ரெண்டு மணிக்கு எழுப்பாத. அஞ்சு மணிக்கு எழுப்பு. ஒரேடியா சாப்பிட்டு கிளம்பறேன்”
“சரி”
“இப்படித்தான் சொல்ற. அப்புறம் ரெண்டு மணிக்கு எழுப்புவ”
“நாங்க ரெண்டு பேர் மட்டும் எப்படி தனியா சாப்பிடுறது? நீ லீவு போட்டுட்டு வீட்டில இருன்னாலும் கேட்கிறதில்லை” இருவருக்கும் இப்போதெல்லாம் இதில் தான் சண்டை வருகிறது. ‘கொரோனா உனக்கு வந்துட்டா என்ன பண்றது’ என்பது ஆகாசின் வாதம். ‘எல்லோரும் இப்படி சுயநலமா இருந்தா எப்படி’ என்பது ஆர்த்தியின் வாதம்.
ஆர்த்தி அமைதியாய் சாப்பிட “இன்னிக்கி டிபன் செய்ய நான் தான் ஸ்டவ் பற்ற வைத்தேன். டேஸ்ட்டா இருக்கா?” என்றாள் மேகி.
“அதான் சூப்பரா இருக்கு. இல்லாட்டி இவருக்கு இப்படி சமைக்க தெரியாதே”
“மதியம் உனக்கு என்ன வேணும்?” என்றான் ஆகாஷ்.
“எதுன்னாலும் சமைங்க. என்னை அஞ்சு மணிக்கு எழுப்புங்க”
ஆகாஷ் ஐடியில் இருந்ததால் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தான். அருமையாக சமைப்பவன். டிபனை வேகமாக முடித்துவிட்டு செல்போனை ஹாலில் வைத்தாள்.
“டாக்டர் சங்கர் போன் பண்ணினால் என்னன்னு கேளுங்க. வேற யாரும் போன் பண்ணினா நான் அமெரிக்கா போயிட்டேன் ஆறு மணிக்கு வந்துருவேன்னு சொல்லுங்க”
“அம்மாச்சி போன் பண்ணினா?”
“நான் நிலாவுக்கு போயிட்டேன். திரும்ப ஒரு வாரம் ஆவும்னு சொல்லுடி”
இவர்களின் வீடு பாரிஸ் கார்னரில் இருக்க ஆர்த்தியின் அம்மா வீடு கொளத்தூரில் இருந்தது. வாரம் ஒருமுறை ஆர்த்தியின் அப்பாவும், அம்மாவும் வந்து பார்த்துச் செல்வர்.
“அப்படியே சொல்லட்டுமா”
“அப்படியே சொல்லுடி நாரதி”
“சரி நாராயணா”
திரைச்சீலைகளை மறைத்து முழுதும் இருட்டாக்கிவிட்டு ஆர்த்தி தூங்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் எழுப்பினான்.
“அஞ்சு மணி ஆயிடுச்சு எழுந்திரி”
நேரம் போனதே தெரியலையே என நினைத்தபடி எழுந்து அவள் கடிகாரத்தைப் பார்க்க அஞ்சு பத்து என காட்டியது.
“சாப்டுட்டு குளிக்கப் போ”
“குளிச்சு ரெடி ஆகிட்டு சாப்பிடுறேன்”
“ஏற்கனவே மதியானம் சாப்பிடலை. கிளம்பும்போது ஜூஸ் போட்டு வைக்கிறேன். இப்ப சாப்பிடு”
“மூஞ்ச கழுவிட்டு வர்ரேன்” என்றபடி எழுந்தவள் அருகில் சிரித்தபடி நிற்கும் மேகிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பாத்ரூம் போய்வந்தாள்.
ஒரு தட்டில் மூன்று கிண்ணங்கள் வைத்து சாம்பார் சாதம், தயிர் சாதம், பொரியலை ஸ்பூனுடன் தனித்தனியாக வைத்திருந்தான்.
சாப்பிடும்போது “நீ ஸ்டவ்வ பத்த வச்சியாடி”
“இல்ல ஏன்?”
“சாப்பாடு டேஸ்டா இல்ல. அதான் கேட்டேன். ஏண்டி சிரிக்கறே”
“ஒன்னுமில்ல. சாப்பிடு சொல்றேன்”
“சொல்றியா?” என்னப்பா பண்ணுனீங்க? எதையாவது உடைச்சுட்டிங்களா” என்று தட்டை சிங்கிள் போட்டுட்டு வீட்டை சுற்றி வந்தாள்.
“அஞ்சு மணிதாம்மா உண்மையா” என்று மேகி சொல்ல, ஹாலில் இருந்த கடிகாரம் இரண்டு முப்பதைக் காட்டியது.
“அரே சைத்தான் கி பச்சே” என்றபடி ஆர்த்தி ஓடிவர மேகி சிரித்தபடி ஆகாஷிடம் ஓடினாள். ஆகாஷ் மேகியை தூக்கிக்கொண்டு பெட்ரூமுக்கு ஓட இருவரையும் ஆர்த்தி துரத்தினாள். மூவரும் பெட்டில் படுத்து உருண்டனர்.
“எல்லாம் இவ ஐடியாதான் என்ன சொல்லாத” என்றான் ஆகாஷ்.
ஆர்த்தி மேகியை கட்டி பிடித்து அவளுடம்பில் கிச்சு கிச்சு செய்ய சத்தமாக சிரித்தாள் மேகி. அவள் பார்க்காதபோது ஆகாசிற்கு ஒரு முத்தமிட்டாள். ‘மறுபடி தூங்கலாம்’ என்று நினைப்பே பேரானந்தமாய் இருந்தது.
“நானும் அம்மா கூட தூங்குறேன்” என்று மேகி ஆர்த்தியை கட்டிப்பிடித்தபடி படுத்திருக்க “அம்மாவ தொந்தரவு பண்ணாம தூங்கு” என்றபடி கதவை சாத்தி விட்டு போனான் ஆகாஷ்.
சரியாக ஏழு மணிக்கு ஆர்த்தி புறப்பட்டதும் “அப்பாவை பத்திரமா பாத்துக்கடி” என்று சொல்லியபடி டாடா காட்டிவிட்டு புறப்பட்டாள்.
அடுத்த இரண்டாம் நாள் மேகிக்கு கொரானா வந்தது. ஆர்த்திக்கும், ஆகாசுக்கும் கொரோனா இல்லாமலிருக்க மேகிக்கு மட்டும் எப்படி வந்தது என தெரியாமலிருந்தது. மேகியை தனது வார்டிலேயே வைத்து பார்த்துக் கொண்டாள் ஆர்த்தி. இரவு பகலாக அவளுடனே அவளுடனேயே இருந்தாள்.
பிளாட்டுக்கு போகும்போதெல்லாம் ஆகாஷ் “உன்னால்தான் கொரோனா வந்தது. லீவு போட்டுட்டு இருக்க சொன்னா கேட்டியா” என்று கத்திக் கொண்டிருக்க நாலைந்து நாட்கள் நரகமாய் இருந்தது ஆர்த்திக்கு. கொரானாவிற்கென தனிப்பட்ட மருந்தேதும் இல்லாததால் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டவும் மருந்துகளை தந்து கொண்டிருந்தாள். ஆறாவது நாள் இரவு மேகி அமைதியாக இறந்துபோனாள்.
ஆர்த்தியின் உலகம் இருண்டு போக, மேகி இறக்க காரணம் தான் தானோ என்ற எண்ணம் மனதை கிழித்தெறிந்தது. மேகியின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கக்கூட முடியாமல் போன கோபத்தில் ஆகாஷ் கண்டபடி திட்டிவிட்டு “இனி உன்னுடன் வாழ முடியாது. டைவர்ஸ் வாங்கிக்கலாம்” என்று சொல்லிவிட்டு போய்விட ஆர்த்தி உறைந்து போனாள். கணப்பொழுதில் வாழ்வின் சகலமும் பிடுங்கி எறியப்பட்டது.
அதிர்ச்சியின் உச்சத்தில் அழக்கூட முடியாமலிருக்க ஆர்த்தியின் பெற்றோர் அவளை அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர். ஆர்த்திக்கு அவளின் மனமே எதிரியாய் நின்றது. நினைவுகள் வாழ்வை நரகமாக்கியது. நினைவுகளிலிருந்து விலகி நிற்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.
ஒரு வாரத்தில் ஆகாஷிடமிருந்து டைவர்ஸ் நோட்டீஸ் வந்தது. ஆர்த்திக்கு அழுகை வரவில்லை. சீப் டாக்டர் சங்கர் “நீ லீவுல இரு” என்று சொல்லிவிட்டார். அம்மா வீட்டிலும் ஆர்த்தி பிரமை பிடித்தது போலவே அமர்ந்திருந்தாள். ஆர்த்தியின் அப்பா ஆகாசிடம் பேச முயன்று கொண்டிருந்தார். போனை சுவிட்ச் ஆப் பண்ணி இருந்தான் ஆகாஷ். அன்று காலை ஆர்த்திக்கு புது நம்பரில் இருந்து போன் வர அம்மா பேசிவிட்டு ஆர்த்தியிடம் கொடுத்தாள்.
“நான் ஜனார்த்தனன் பேசறேன்மா. மனசே கலங்கிப் போச்சி. இப்பதான் நடந்ததை கேள்விப்பட்டேன். ஊரில் இருப்பவங்களோட உயிரை காப்பாத்துற தெய்வம் நீ. கலங்கக் கூடாது. மனுஷங்க மனசு ஒடிஞ்சா அந்த குடும்பம் பாதிக்கும். உன்னை மாதிரி டாக்டர்ஸ் மனசு உடைஞ்சா மனிதகுலமே பாதிச்சிடும். அந்த கடவுளுக்கு உயிர்தான் வேணும்னா நான் கொடுத்து உன் மகளை காப்பாத்தி இருப்பேன்” என்று அவர் சொல்லிக்கொண்டே போக ஆர்த்தி ஒரு முடிவுக்கு வந்தாள். அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டாள்.
முப்பரிமாண உலகம் அவளுக்கு ஒரு பரிமாணமாய் சுருங்கிப்போனது. வீடும், ஆஸ்பத்திரியும் வாழ்க்கையாகப் போனது. சீப் டாக்டர் சங்கர் ஹாஸ்பிடலில் சைகாலஜிஸ்ட்டை அனுப்பி இவளுக்கு கவுன்சிலிங் செய்ய முயன்றார். நைட் டூட்டி போடாமல் பகலில் மட்டும் டூட்டி போட்டார். மதியம் உணவை அவளுடன் அமர்ந்து சாப்பிடத் துவங்கினார். அவளை தொடர்ந்து தேற்ற முயன்றார். கண்ணாடியாய் சிதறிப்போன மனம் ஒட்ட மறுத்தது. கண்ணாடியின் ஒவ்வொரு துண்டிலும் மேகி சிரித்தாள்.
அப்பா கெஞ்சிப் பார்த்தார். அம்மா அழுது பார்த்தாள். ஆர்த்திக்கு அழுகையே வரவில்லை. இறுகிப் போய் இருந்தாள். உடல் களைத்து, கன்னங்கள் ஒட்டி, இளைத்து ஆளே மாறிப்போனாள். பல நாட்களில் ஹாஸ்பிடல் பெட்டிலேயே டியூட்டி முடிந்து தூங்கிப் போவாள். சில நாட்கள் வாடகை காரில் வீடு வந்து சேர்வாள். சில நாட்கள் ஆர்த்தியின் அப்பா கூட்டிப் போவார். வாழ்க்கையின் வசந்தங்கள் உதிர்ந்து மொட்டை மரமாக மாறி போனாலும் நோயாளிகளுக்கு நிழல் தரும் மரமாகவே இருந்தாள்.
அன்று டூட்டி முடித்துவிட்டு ஆர்த்தி வெளியே வந்தபோது மழை தூறலிட்டிக் கொண்டிருந்தது. வாடகைக் கார் டிரைவர்கள் ஆஸ்பிடலுக்கு வெளியிலிருக்கும் பஸ்ஸ்டாப்பில் பிக்கப் செய்வார்கள் என்பதால் தூறலினூடே நடந்தாள்.
பஸ் ஸ்டாப்பில் இவளை எதிர்பார்த்து ஆகாஷ் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் ஆர்த்திக்கு குழப்பமாக இருந்தது. டைவர்ஸ் பேப்பர் கையெழுத்து போடாமலிருப்பது நினைவுக்கு வர, அவன் கையோடு கொண்டு வந்திருந்தால் கையெழுத்து போட்டு தந்துவிடலாம் என்றெண்ணியபடி அவனிடம் சென்று நின்றாள். தாடியும் மீசையுமென ஆளே மாறியிருந்தான்.
“சீப் டாக்டர் சங்கர் போன் பண்ணி ஆர்த்திக்கு கொரோனா வராதபோது மேகிக்கு வர வாய்ப்பில்லை. நானும், மேகியும் எங்கயாவது போனமான்னு கேட்டார். அதற்கப்புறம்தான் நாங்களிருவரும் ரெண்டோரு நாள் பார்க்கில் விளையாடியது ஞாபகம் வந்தது. ஒருவேளை அவளுக்கு கொரோனா என்னால் வந்திருக்கலாம். நான் ஒரு கோபக்கார முட்டாள். நாம பிரியணும்னு முடிவு செஞ்சா என்னை தூக்கியெறிவது நீயாத்தான் இருக்கணும். உன்னை வேண்டாம்னு சொல்ல எனக்கு எந்த அருகதையும் இல்ல. என்னை மன்னிச்சிடு” என்று அவன் சொன்னதும் அவனை நெருங்கி கட்டிக்கொண்டு முதல்முறையாக கதறத் தொடங்கினாள் ஆர்த்தி.
******