Ashoka the 2nd

கற்றது காதல் அளவு

யமஹா பைக்கை சர்வீசுக்கு கொடுத்துவிட்டு ஹெல்மெட்டுடன் வேகமாக நடந்தான் சித்தார்த். புருஷ லட்சணமாக கொளத்தூர் ஸ்டேட் பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜராய் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. உயரமும், சிகப்பு நிறமும் அவன் அம்மா கொடுத்த வரம். திடமான உடலும், களையான முகமும் அற்பாயுசில் போய்ச் சேர்ந்த அப்பாவைப்போல. பத்து நிமிடம் பேசினால் எவருடனும் உயிர் நண்பன் ஆகக்கூடிய வாயை உடையவன்.

“மார்க்கெட்டிங்கில் போயிருந்தா இந்நேரம் நீ அம்பானி ஆகியிருப்ப” என்பார் அவனுடைய பிராஞ்ச் மேனேஜர்.

“நான் பொறந்தப்ப எங்கப்பா சரஸ்வதி கோயிலுக்கு கூட்டிட்டு போயி என் நாக்கில் ‘அ’ எழுத்தை எழுத சொன்னாராம். அடுத்ததா வேற யாரும் இல்லாததால ஐயரு தமிழில் இருக்கும் 494 எழுத்தையும் எழுதிட்டாருனு அம்மா சொல்வாங்க”

“மொத்தம் 247 தானே?”

“நாக்கு நீளமா இருப்பதால் இம்போசிஷன் மாதிரி ரெண்டு தடவை எழுதிட்டாரோ என்னவோ” மேனேஜரும் மற்றவர்களும் சிரிப்பார்கள்.

மேனேஜர் என்ற நினைவு வந்ததும் இலவச இணைப்பாக பேங்க் பத்து மணிக்கு திறக்கும் என்பதும் ஞாபகம் வந்தது. அதென்னவோ  சித்தார்த்துக்கு காலையில் பத்து மணிக்கு டாண்னு  வேலைக்கு போவது கழுதைக் கொம்பாக இருந்தது. குதிரைக் கொம்போ, கழுதை கொம்போ! பெயரில் என்ன வித்தியாசம் என்று ஷேக்ஸ்பியரே சொல்லியிருக்கிறார்.

பஸ் நிறுத்தத்திலிருந்து கொளத்தூர் பஸ் புறப்படுவது தெரிய, அவசரமாய் ஓடிச் சென்று முன் வாசல் வழியாக வலது காலை எடுத்து வைத்து ஏறினான். யாரோ பார்க்கிறார்கள் என்று ஏழாம் அறிவு எச்சரிக்க, திரும்பினான்.

இடப்புறத்தில் இருவர் அமரும் சீட்டில் அப்போதைய ஐஸ்வர்யா ராயின் தங்கை போல ஒரு பெண்ணும், இப்போதைய அம்பிகாவின் அக்காவைப் போல ஒரு அக்காவும் இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது  தெரிந்தது.

“பஸ்ல ஹெல்மெட் போட்டுட்டு போக சொல்லி புதுசா ரூல் வந்துருச்சு போல” என்று அம்பிகா கூறியதற்கு தான் இருவரும் சிரித்தபடி இருந்தனர்.

“சும்மா இருங்க மேடம். அவர் பார்க்கிறார்” என்றாள் ஐஸ்வர்யா.

“ஆமாம். போஸ்டரை பார்க்கிற மாடு மாதிரி உன்னைத்தான் பார்க்கிறான்” என்றதும் கீழே குனிந்து கொண்டு இருவரும் சிரித்தனர்.

அவள் நிமிர்ந்து பார்க்க சித்தார்த் கணப்பொழுதில் காதலில் விழுந்தான். அதென்னவோ ஆண்களுக்கு மட்டும் கண்டதும் காதல், கண்ட கண்ட இடத்தில் எல்லாம் காதல் வந்து விடுகிறது. இன்ஸ்டன்ட் காபி போல. பெண்களுக்கோ அக்கினி மூலை, வாயு மூலை, காதல் மூலை பார்த்து, ஆற அமரத்தான் வருகிறது. பில்டர் காபி போல.

சித்தார்த்தின் மனதில் “இந்த உலகத்தில் யாருமே இவ்வளவு அழகான அழகைப் பார்த்திருக்க முடியாது” என்று சூர்யாவும், “நீ அழகுனு நினைக்கல, என்னைக் காதலிப்பனு நினைக்கல” என்று மாதவனும் டயலாக் பேச, இடையில் “சீட் காலியா இருக்கு. போயி உட்காருங்க” என்ற கண்டக்டரின் டயலாக் சி. கரடியாய் நுழைந்தது.

ஐஸ்வர்யாவுக்கு வலப்பக்கத்தில் மூவர் அமரும் சீட்டில் சென்றமர்ந்த சித்தார்த் சொர்க்க வாசல் திறக்க காத்திருக்கும் பக்தனைப் போல அவள் திரும்புவதற்காக காத்திருந்தான். இருபது பெர்சன்ட் இடத்தில் மெல்லிய கொடியாய் ஐஸ்வர்யா அமர்ந்திருக்க, மீதமிருந்த இடத்தை அம்பிகாக்கா ஆக்ரமித்திருந்தாள்.

சற்று நேரத்தில் எதேச்சையாய் திரும்புவது போல ஐஸ் திரும்பி அவனைப் பார்க்க, மனதுக்குள் ஜிவ்வென்று இருந்தது. உடலின் ஏழு சக்கரங்களும், எண்ணற்ற வாசல்களும் வெடித்து திறந்தன.

“கண்ணே உன் கண்கள்

என்ன மேட்டூர் டேமா !

பார்வையில் இவ்வளவு கரெண்ட்

உற்பத்தியாகிறது.

இல்லை

கட்ச் வளைகுடாவா!

இத்தனை நீளமாக

நெஞ்சில் பாய்கிறது” என எண்ணங்கள் அலையடித்த்தன.

“வாலாய் இருந்த என்னை

வாலி ஆக்கிவிட்டாய்.

முத்தாய் இருந்த என்னை

வைரமுத்து ஆக்கிவிட்டாய்’ என்று கவிதை பிரவாகமெடுக்க, ‘எடுறா அந்த நோட்டை’ என்றது மனது.

‘எங்கே இறங்குறாங்கனு தெரியலயே. ஒரு நடை கோயம்பேடு வரைக்கும் போயிட்டு வந்துரலாமா’ என்று நினைத்தான்.

லேட்டாக வரும் மாணவர்களை வரவேற்க கையில் பிரம்புடன் காத்திருக்கும் வாத்தியாரைப் போல, மேனேஜரின் முகம் மனதில் தோன்றி மிரட்டியது.

எப்போது டிக்கெட் வாங்கினான், எப்படி கீழிறங்கினான் என்பது எதுவும் தெரியாமல், குணா கமலைப்போல ‘பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க’ அவர்களைப் பின்தொடர்ந்தான். இரண்டு பெண்களும் கொளத்தூர் ஸ்டாப்பில் இறங்கியிருக்க, மெலிதான ஆச்சர்யத்துடன் பின்தொடர்ந்தான்.    

நிலத்தில் நடை பயிலும் இளந்தென்றலைப் போல மென்மையாக ஐஸ்வர்யா நடந்து போக, ‘பெண்கள் எப்படி இவ்வளவு மிருதுவாக நடக்கின்றனர்’ என்று எண்ணினான். பேங்க் இருக்கும் திசையிலேயே இருவரும் நடந்தனர். 

காட்டன் சேலையை ஐஸ் கனகச்சிதமாய் உடலில் நெய்திருக்க, மைசூர் சில்க்கை அம்பிகா மம்மியை பாடம் செய்வது போல உடலைச் சுற்றியிருந்தாள். இருவரையும் ஒன்றாக பார்க்கையில் யானையை அழைத்துச் செல்லும் யானைப்பாகனைப் போலிருந்தாள் ஐஸ். இவன் பின்தொடர்வதை இருவரும் உணர்ந்து விட்டதாய் தோன்றியது.    

      பேங்கிற்கு பக்கத்தில் இருந்த லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இருவரும் நுழைய, செக்யூரிடி வணக்கம் வைத்தான்.

‘இங்கு தான் வேலை செய்கிறார்களா’ என்றெண்ணிய சித்தார்த்துக்கு பழம் நழுவி ஜூஸரில் விழுந்த மாதிரி இருக்க, ‘எதுக்கும் பேங்கை எட்டி பார்த்துட்டு வந்துருவோம். மேனேஜர் வருத்தப்படுவார்’ என வேகமாக பேங்கிற்கு சென்றான்.

உள்ளே நுழைந்ததும் கண்ணாடி அறைக்குள் இருந்த மேனேஜர் பத்து என்கிற பத்மநாபனைப் பார்த்து சிறிய இளிப்புடன் வணக்கம் வைக்க, பத்து அவசரமாய் கையசைப்பது தெரிந்தது.

“இன்னைக்கு ஆஃபீஸுக்கு ஆடிட்டர் வர்றார். அவரை நீ தான் அட்டென்ட் பண்ணனும், சீக்கிரம் வான்னு நேத்தே சொன்னேன் இல்ல”

“சாரி சார். மிஸ்ஸு பஸ் ஆயிடுச்சு. ஐ மீன் பஸ்ஸு மிஸ் ஆயிடுச்சு”

“ராமஜெயம்னு ஒருத்தர் வந்திருக்கார். உன்   சீட்டிற்கு பக்கத்து கவுண்டரில் உட்கார வச்சிருக்கேன். ஓடு”

“நான் பாத்துக்கிறேன் சார். கவலைப்படாதீங்க” என்று சொல்லி விட்டு “ஏன் சார் இந்த பொண்ணுங்க மட்டும் எப்படி ஒரு எறும்பு கூட நசுங்காத மாதிரி தென்றலா நடந்து போறாங்க?” என்று கேட்டான்.

மஞ்சள் காமாலை வந்து மஞ்சளாய் இருப்பவனைப் பார்ப்பது போல அவனைப் பார்த்த பத்து “கல்யாணம் ஆனதும் புயலா நடப்பாங்க. அப்ப நிலநடுக்கம் கூட வரும். நீ போயி அவரைக் கவனி” என்று துரத்தினான்.

 சீட்டிற்கு சென்ற சித்தார்த் “சாரி பார் தி லேட் சார்” என்றான்.

“இட்ஸ் ஓகே. ரெஜிஸ்டர்ஸ் எல்லாம் ரெடியா?”

அவரைக் கண்டு கொள்ளாமல் “சேகர் சாருக்கு காபி கொடுத்தியா?” என்றான் ஆபீஸ் பையனிடம்.

“இல்ல சார்”

“பக்கத்துல ஐயர் கடை இருக்கு சார். அவரு கைக்கு ஒரு நாளு தங்கத்துல வளையல் போடலாம்னு இருக்கேன். அவ்வளவு நல்லா இருக்கும். நீங்க புரூவா, நெஸ்கபேவா?”

“பில்டர் காபி”

“சாருக்கு சுகர் கம்மியா போட்டு ஒரு காபி வாங்கிக்க சேகர். எனக்கு சுகர் அதிகமா”

“எனக்கு சுகர் கம்மியானு எப்படி கரெக்ட்டா சொன்னீங்க?”

“கொஞ்சம் வயசாயிருச்சே அதனால” என்று சிரித்தான்.

காபி வந்தபோது அதிக சர்க்கரை போட்ட டம்ளர் எதுவென்று கேட்டு ஆடிட்டர் எடுத்துக்கொண்டார்.

      “மொத்தம் நூற்று பதினெட்டு ரிஜிஸ்டர் இருக்கு. ஆன்லைன் ரிஜிஸ்டர் நாற்பத்தி ஆறு இருக்கு. ரெடியா எடுத்து வச்சிருக்கேன்.”

“என்பிஏ லிஸ்ட் வேணும்”

“கேஸுக்கு, கோல்டுக்கு தனித்தனியா எடுத்து வச்சிருக்கேன்”

“இன் ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ் லிஸ்ட்?”

“எக்செலில் பிரிண்ட் போட்டு வச்சிருக்கேன்”

சித்தார்த் வேலையில் கில்லி. ஏதாவது பிரச்னை இருந்தாலும் சமாளித்து விடுவான் என்பதால் தான் ஆடிட்டருடன் இருக்க சொல்லியிருந்தான் பத்து.

பம்பரமாய் சுற்றி அவர் கேட்பதையெல்லாம் பிரிண்ட் அவுட் போட்டு கொண்டு வந்தான் சித்தார்த். எள் என்றால் எள்ளுருண்டையாய் இருந்தான். சுவிஸ் பேங்கில் அகௌண்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் பெயரைக் கேட்டால் கூட கொண்டு வருவான் போலிருந்தது.  இரண்டு மணி நேரம் அவர் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான். அனைத்தும் பக்காவாக இருக்க ராமஜெயத்தின் முகத்தில் திருப்தி தெரிந்தது. 

பன்னெண்டு மணிக்கு காபியுடன் பஜ்ஜியை பிச்சி வாயில் எறியும் போது நெருங்கிய நண்பனாகியிருந்தான்.

“மத்தியானம் சாப்பாட்டுக்கு எருமை மாட்டு தயிர் வேண்டாம். உங்களுக்கு வயிற்று பிரச்னை இருக்கு. அதனால பசு மாட்டு தயிர் வாங்க சொல்லிருக்கேன்” என்றான்.

“சரி”

“அம்பத்தூர் கோட்டக்கல் வைத்திய சாலையோட மேனேஜர் நம்ம பிராஞ்ல தான் அகௌண்ட் வச்சிருக்கார். போன் பண்ணி லேகியம் கொண்டு வர சொல்லிருக்கேன்.  தினமும் இரவு சாப்பிட்டு படுங்க. காலைல பூவா கொட்டும்”

“அடடா என் வைஃப் எல்ஐசி பாலிசி கட்ட சொல்லிருந்தா. மறந்தே போச்சு. இன்று கடைசி நாள். பக்கத்துல ஏதாவது எல்ஐசி ஆபீஸ் இருக்கா சித்தார்த்?” என்றவர் கேட்டபோது தான் ஐஸ்வர்யாவின் ஞாபகம் வந்தது.

“பாலிசி நம்பரைச் சொல்லுங்க. பக்கத்து பில்டிங்கில் பிரான்ஞ்ச் இருக்கு. என் ஒன்னு விட்ட குளோஸ் பிரண்ட் இருக்கா. நானே கட்டிட்டு வர்றேன்” என்று பணத்தை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த எல்ஐசி ஆபீஸிற்கு சென்றான். அவன் கவனித்துக்கொண்ட விதத்தைப் பார்த்த போது ஆடிட்டருக்கே கண்ணில் நீர் வைத்துக்கொண்டது.

எல்ஐசி அலுவலகத்தில் நுழைந்ததும் கண்கள் சுற்றிலும் படபடப்புடன் ஸ்கேன் செய்தது. “ஆண்டவா, ஐஸ் இங்க வேலை செய்யணும். அப்படி செஞ்சா அவளோட அப்பாவுக்கு மொட்டை போடுறேன்’ என வேண்டியபடி தேடினான். பேங்கைப் போலில்லாமல் ஆளரவமின்றி அமைதியாய்  இருந்தது ஆபீஸ்.   

பணம் கட்டுமிடத்தில் அம்பிகா அமர்ந்திருக்க, அங்கே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை திரிஷா என்றது. ‘இந்த விஷயம் திரிஷாவுக்கு தெரிஞ்சா அந்தம்மா மான நஷ்ட வழக்கு போடும்’ என நினைத்தான்.

      இவனைக் கண்டதும் அம்பிகா எனும் திரிஷா அதிர, அதைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்த துண்டு சீட்டில் ஸ்ரீராமஜெயம் எனத் துவங்கி பழக்க தோஷத்தில் மூன்று முறை எழுதினான்.  அதற்கடுத்து  பாலிசி நம்பரை எழுதி பணத்தைக் கொடுத்தான்.       

சீட்டைப் பார்த்தவள் “பாலிசிக்காரர் பேரு எழுதுங்க” என்றாள்.

“ராமஜெயம்தான். ஒரு மரியாதைக்கு ஸ்ரீ போட்டேன்”

அவனை ஒரு மாதிரி பார்த்த திரிஷா பணம் கட்டிய ரசீதைப் பிரிண்ட் எடுத்து கொடுத்தாள்.

“பக்கத்துல இருக்க பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்கேன். பாலிசி பற்றி டீடைல்ஸ் வேணும்”

மேனேஜர் என்றதும் கண்களில் ஒரு மரியாதைத் தோன்ற, “அவங்களை கேளுங்க. என்று தொலைவில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவைக் காட்டினாள்.

ஐஸ் அமர்ந்திருந்த விதம் மதுரை மீனாட்சியே  எல்ஐசி கிளையில் அமர்ந்து வேலை செய்வது போலிருந்தது. ஐஸ்வர்யாவின் பெயர் பலகை சஹானா என்றது.

கவிதையின் தலைப்பைப் போல் இந்த காட்டன் கவிதைக்கு பொருத்தமான பெயர் என்றெண்ணியவாறு மீண்டும் பார்த்தவிழி பார்த்தபடி நெருங்கினான். கம்ப்யூட்டர் திரையிலிருந்து கண்களை விலக்கியவள் இவனைக் கண்டதும் அதிர்ந்தாள்.

“வணக்கம். பக்கத்துல இருக்கிற பேங்க்ல” என பல்லவியை பாடி முடித்ததும்,

“உட்காருங்க” என்றாள்.

“காலையில் ஹெல்மெட்டோட பஸ்ல வந்தேனே. ஞாபகம் இருக்குங்களா”

      சஹானாவிற்கு மீண்டும் அடக்க முடியாமல் சிரிப்பு வர ரோஸ் நிற உதடுகளைப் பிரித்து வெண்ணிறப் பற்கள் பளிச்சிட மின்னல் கீற்றாய் சிரித்தாள்.

‘அப்பா இந்த சிரிப்புல கரெண்ட் எடுத்தா சென்னைக்கு ரெண்டு நாள் இலவச மின்சாரம் வழங்கலாம்’ என்று நினைத்தான்.

“உப்பு போட்டு மட்டுமில்லாம புளி போட்டும் பல்லு விளக்குவீங்களா?”

“உங்களுக்கு புளி வேணுமா? பாலிசி வேணுமா?” என்றாள்  புன்னகையுடன்.

“இப்போதைக்கு பாலிசிய பத்தி சொல்லுங்க”

பத்து நிமிடம் அவள் பீமா, ராமா என்று பெயர்களுடன் பாலிசி விவரங்களைக் கூற,

“எல்லா பேரும் ஆனந்த், ஜீவன்னு இருக்கே. சஹானா மாதிரி அழகான தமிழ் பெயர்கள் வைக்க மாட்டாங்களா?” சஹானா தமிழா! மன்னிச்சுக்குங்க தொல்காப்பியரே என்றது மனது.

“நீங்க ஆபீஸ் கட்டியதும் அப்படி பெயர் வையுங்க. எந்த பாலிசி வேணும்?”

“ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் என தனித்தனியா இருக்கு. ஒரே பாலிசி எல்லாத்துக்கும் சேர்த்து இல்லையா. ஒரே கல்லை போடுற மாதிரி?”

“கஸ்டமர்ஸ் தேவைக்கேற்ப பாலிசி எடுத்துக்கலாம்”

“ஓ! தனித்தனி கல்லு”

சிறிய புன்முறுவலுடன் “இப்ப நீங்க என்ன பாலிசி வச்சிருக்கீங்க?” என்றாள்.

“என்கிட்ட பாலிசியே இல்லை”

“இல்லையா!”

“அதுக்கு ஏன் கொரோனோ ஊசி போடலையாங்கிற மாதிரி ஷாக் ஆவுறீங்க?”

“சரி எந்த பாலிசி வேணும்?”

“பிராஸ்பெக்டஸ் தாங்க. விசாரிச்சிட்டு நாளைக்கு வந்து சொல்லிடுறேன்”

கடைசியில் அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டிய சஹானா “நாளைக்கு அவரைப் பாருங்க. அவரு ஹெல்ப் பண்ணுவார்”

“அவரு எப்ப வெளிய போவார்?”

      “ஏன்?”

“அதுக்குள்ள வரணுமில்ல?” என்றான் சிரிப்புடன்

அடுத்த நாள் சரியாக அவரில்லாத போது நுழைந்தான்.  அதற்கு அடுத்த நாளும். அடுத்த சில நாட்களில் “எல்ஐசி பார்ம் எங்கிருக்கு?” என யாரும் கேட்டால் எடுத்து தருமளவு அங்கிருந்த எல்லோருடனும் நட்பானான். அவனது பேங்கிலிருந்து மொபைல் டிராப்ட், மொபைல் கேஷ் என அனைத்தையும் மேகி நூடுல்ஸ் போல மூணு நிமிடத்தில் டெலிவரி செய்தான். சிலருக்கு பேங்கில் அக்கௌன்ட் ஓபன் செய்து தந்தான். அவனுடைய பேங்கில் இருந்த அனைவருக்கும் பாலிசி பணம் கட்டும் ஏஜென்ட் ஆனான். திரிஷாவுக்கு தம்பி போல ஆனான்.

அந்த மாதத்தில் சஹானாவுக்காக இரண்டு பாலிசி எடுக்க, “இன்னொரு பாலிசி எடுத்துக்குங்க” என்றாள்.

“எல்லா முட்டையையும் ஒரே கூடையில் வைக்க கூடாதுனு திருவள்ளுவரே சொல்லிருக்கார்”

“முட்டைக் கடைக்காரர் மாதிரி பேசாதீங்க. இங்கிலீஸ் இடியம் அது”

அடுத்த முறை பைக்கை சர்வீஸ் விடும் போது சித்தார்த்தும், சஹானாவும் நல்ல பிரண்ட்ஸ் ஆகியிருந்தனர். மூன்றாம் முறை சர்வீஸ் விடுவதற்குள் காதலிக்க துவங்கியிருந்தனர். ஸ்ரீராமஜெயம் எழுதி காதலித்த முதல் ஆள் சித்தார்த்.

சித்தார்த்தின் ஆடைகள் ஸ்டைலிஷாக மாறத்துவங்கின. ஆண்களை ஆண்களுக்கே அறிமுகப்படுத்துவது காதல். சிலருக்கு கடனையும்.

இருவரும் காதலிக்க துவங்கியதும் “அடிக்கடி எங்க ஆபீசுக்கு வராதே” என்று சஹானா ஆர்டர் போட, அதன் பின்னர் போன் மூலம் பேசிக் கொண்டனர். சேட் பாக்சில் காதல் மெசேஜுகள்  சென்னைத் தெருவில் செல்லும் வெள்ளமாய்  பெருக்கெடுத்து ஓடின. காதலிப்பதன் இலக்கணமாக பீச், மூவி, மால் போன்ற இடங்களுக்கு சென்று காதல் பயிரை மும்மாரி மழை பொழிந்து வளர்த்தனர்.  கொரோனாவுக்கு மாஸ்க் போடுவது வசதியாய் போக முகமூடி கொள்ளைக்காரர்களைப் போல் சுற்றித்திரிந்தனர். ஐந்தாறு மாதங்கள் ரம்மியமாய் கழிந்தன. முப்பது நாளில் காதலிப்பது எப்படி என்று புத்தகம் எழுதத் துவங்கியிருந்தான்.

ஒருநாள் வடபழனி முருகன் கோவிலில் அமர்ந்திருக்கும் போது “எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டார்” என்று துவங்கினாள் சஹானா.

“போச்சுரா. இப்ப தான் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்ருக்கோம்னு சொல்ல வேண்டியது தானே சரவணன் கிட்ட”

“அஞ்சாறு மாப்பிள்ளைகள் ரெடியா இருக்குன்னு சொன்னார்”

“ஏன் உன்னை பாஞ்சாலி மாதிரி அஞ்சு பேருக்கு கட்டி தரப் போறாரா?”

“சும்மா கடிக்காத. இன்னைக்கு ஒருத்தர் என்னைப் பார்க்க வர்றாராம்”

“நம்ம ரெண்டு பெரும் ஒரே சாதி தானே. நானும் வந்து பொண்ணு கேட்கட்டுமா?”

“அப்பவும் ஒத்துக்க மாட்டார். அவருக்கு காதல்னு சொன்னாலே பிடிக்காது”

“காதலுக்கு எதிர்ச் சொல் என்ன சரவணனா! எனக்கென்னமோ உங்கப்பா லவ் பண்ண எல்லா பொண்ணுங்களும் துரத்தி விட்ருப்பாங்கனு  நினைக்கிறேன். அந்த வயித்தெரிச்சல் மனுசனுக்கு”

“சீரியஸா பேசுப்பா”

“இன்னைக்கு மாப்பிள்ளையோட மூஞ்சி நித்தியானந்தா மாதிரி இருக்குனு சொல்லி தப்பிச்சிரு. அதுக்குள்ள ஏதாவது ஐடியா பண்ணுவோம். கதவைத் திறந்தா காத்து வரும். அதெல்லாம் சரி, ஏதாவது ஒன்னுன்னா எங்கூட வந்துருவ தானே”

“அப்படியெல்லாம் என் பேமிலியை விட்டு என்னால வரமுடியாதுப்பா. நீதான் அவங்களை கன்வின்ஸ் பண்ணனும்”

கடைசி நேரத்தில் ‘சாரி அண்ணா’ என்று சொல்லி விட்டு பறந்துடுவாளோ என்று நினைக்கையில் சித்தார்த்துக்கு முதல் முறையாக பகீரென்றது.

முதல் இரண்டு மாப்பிளைகளை படிப்பையும், வேலையையும் காரணம் காட்டி ரிஜெக்ட் செய்தாள். அதற்கே அம்மா திட்டிக் கொண்டிருப்பதாய் கூறினாள்.  கண்ணில்லாதவன் வந்தாலும் இவளைப் பிடித்து விடும் என்பதே பிரச்னையாய் இருக்க, என்ன செய்வது என்று தோன்றாமலிருந்தது.

நாட்கள் செல்ல செல்ல அவள் அம்மாவுக்கு சந்தேகம் வரத் தொடங்கியது. பெண்களிடம் ஏற்படும் மாற்றத்தை முதலில் கண்டுபிடிக்கும் சிஐடிகள் அம்மாத் தான்.

“என்ன பொழுதுனிக்கும் போனு? ஏன் லேட்?” என்று கேள்விகள் கேட்டது மட்டுமல்லாமல் சஹானாவின் அப்பாவிடம் சொல்ல, பிரச்னை முளை விடத் துவங்கியது. ஆபீஸ் டைமில் மட்டும் பார்ப்பதும், ச்சேட்டுவதும் தொடர்ந்தது.

அன்று காலையில் ஆபீசுக்கு லீவென்று மட்டும் மெசேஜ் அனுப்பியிருந்தாள். என்ன பிரச்னையெனத் தெரியாமல் டென்ஷனாய் இருந்தது. நசநசவென்று மழை பெய்து கொண்டிருக்க, பைக்கை விடுத்து ஓலாவில் பேங்கிற்கு சென்றான். மாலையில் சீக்கிரம் வேலை முடிய,

“என்னோட வா, உன்னை டிராப் பண்ணிடுறேன்” என்றார் பத்து.       

“எதுக்கு சார் வேஸ்ட்டா”

“ஓலாவோட பணத்தை எனக்கு தந்துரு. பார்ட் டைமா இப்படி சம்பாரிக்கிற ஐடியா ஒன்னு இருக்கு”  

தயக்கத்துடன் சென்று காரில் ஏறிக் கொண்டான்.

“அம்மா எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்க. என்னைப்பத்தி தான் கவலை”

“சரி பண்ணிடலாம்”

போகும் வழியில் வண்டியை திருப்பிய பத்து “என்னோட பிரண்டு வீட்டுக்கு வருவதாய் சொல்லியிருந்தேன். ஜஸ்ட் பாத்துட்டு போயிரலாமா?”

“சரி சார்”

இந்த ஏரியாவில் தான் சஹானாவின் வீடு எங்கோ இருந்தது. அவளின் அப்பாவுக்கு பயந்து கொண்டு தொகுதிக்கு வராத எம்எல்ஏ போல, அந்த ஏரியாவுக்குள் செல்லாமல் இருந்தான் சித்தார்த்.

வண்டியை ஓரமாய் பார்க் செய்து விட்டு பத்து முன்னே செல்ல, டல்லாக பின்தொடர்ந்தான்.

காலிங் பெல்லை அடித்ததும் வாசலுக்கு வந்த பத்துவின் நண்பர் “வாங்க வாங்க” என்று வரவேற்றார். தண்ணீர், பிஸ்கட், சமோசா என்று வரவேற்பு தடபுடலாய் இருக்க, இன்ட்ரஸ்ட், லோன் என்று இருவரும் பேசினர்.  இவர்கள் பேசுவதை அனிச்சையாய் முதுகெலும்பில் கவனித்தவாறு சிந்தனையில் தொலைந்திருந்தான் சித்தார்த்.

மரியாதைக்காக “நீங்க எங்க இருக்கீங்க” என்று சித்தார்த்திடம் அவர் கேட்க,  அவன் குடும்பம், அம்மா என்று பேச்சு வளர்ந்தது.

“இவ என் பொண்ணு” என்றவர் கூற, காபியுடன் வந்தவளைக் கண்டு சித்தார்த் அதிர்ந்தான். அதிர்ந்தாள்.

லிமிட்டான மேக்கப்புடன் வந்த சஹானா இருவருக்கும் காபி கொடுக்க, திக்பிரமையுடன் அவளைப் பார்த்தான் சித்தார்த்.

“எடுத்துக்குங்க காபி” என்றார் சரவணன்.

” நீயெப்படி இங்க” என்றவள் பார்க்க, ‘இவ எப்படி இங்க’ என்றிவன் பார்த்தான்.

“சோபாவில் உட்காருமா” என்றார் சரவணன்.

குனிந்த தலையுடன் அவள் அமர, சித்தார்த் நிமிர்ந்தான்.

‘இவங்க வீடா’ என்று விழித்துக் கொண்ட சித்தார்த்தின் மூளையும், வாயும் சுறுசுறுப்படைந்தது. ‘எப்படியாவது நல்ல பேர் வாங்கிருடா கைப்புள்ள” என்றது மூளை.

“வீட்டோட பெயின்டிங் அழகா இருக்கு சார்” என்று முதல் பாலை அடித்து ஆடத்துவங்கினான்.

மருந்துக்கு கூட சித்தார்த் சஹானாவின் பக்கம் திரும்பாமல் பேச, சரவணனுக்கு அவனை ரொம்ப பிடித்து போனது. நேரம் போவது தெரியாமல் சுவராஸ்யமாய் பேசிக்கொண்டிருந்தனர்.

ஒருவழியாய் அனைவரிடமும் பிரியா விடை பெற்று வெளியில் வந்து காரிலேறுகையில்  “பேங்க் கஸ்டமரா சார் இவரு?’ என்றான் சித்தார்த். 

“ஆமாம். இரண்டு வருட பழக்கம். அவரோட பொண்ணுக்கு மாப்பிள்ளை வேணும். நல்ல மாப்பிள்ளையா இருந்தா சொல்லுங்க என்றார். நேத்து நம்ம பேங்குக்கு வந்தப்ப உன்னைக் காட்டினேன். வீட்டைப் பிரிந்து ஆபீசுக்கே டைமுக்கு வராத நல்ல பையன்னு சொன்னேன்.  உன்னோட குடும்பத்தைப் பற்றி விசாரிச்சிட்டு போட்டோ வாங்கிட்டு போனார். இன்னைக்கு காலைல போன் செஞ்சு என்னோட ஒய்புக்கும் ஓகே. உன்னை கூட்டிட்டு வர முடியுமான்னு கேட்டார். பையனிடம் எதுவும் சொல்லாம கூட்டிட்டு வரேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா அப்புறம் சொல்லிக்கிறேன்னு சொன்னேன். பெத்தவங்களுக்கு பூரண திருப்தியாம். பொண்ணுக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் தான். உன்னை பொண்ணுக்கு புடிச்சிருக்குமா?”

“தெரியலையே சார்”

“உனக்கு பெண்ணைப் புடிச்சிருக்கா?”

“சுமாரா இருக்காங்க சார்”

      “அப்ப புடிக்கலைனு சொல்லிறட்டுமா?”

“இல்ல வேண்டாம் சார். அந்த பெண்ணோட மனசு கஷ்டப்படும்”

“எப்படியோ. நீங்க லவ் பண்றது அவருக்கு தெரியறதுக்கு முன்னாடி கல்யாணத்தை முடிச்சிரலாம்” என்றான் பத்து.

அதிர்ச்சியடைந்த சித்தார்த் பத்துவைப் பார்க்க, சில நொடிகளுக்கு பின்னர் இருவரும் சிரிக்கத் துவங்கினர். சித்தார்த்தின் போன் அடிக்க “ஐஸ்” என்றது திரை.

*********