IMS எனும் இந்தியன் மெட்ரோலோஜிக்கல் சொசைட்டியின் சென்னை அலுவலகம். அந்த தனியார் நிறுவனத்தின் வினோதமான மேகத்தைக் கடத்தும் புரொஜெக்ட்டைப்பற்றி அறிவிப்பதற்காக அனைத்து ஊடகங்களின் நிருபர்களையும் வரவழைத்திருந்தனர்.
சீலிங்கின் பக்கெட் ஏசியிலிருந்து வெளியேறிய சில் காற்று குளிர்ச்சியாய் சத்தமிட்டது. நிருபர்கள் தமக்குள் பேசி சிரித்து கொண்டனர். அறையின் ஒவ்வொரு அங்குலமும் பணத்தால் இழைக்கப்பட்டிருந்தது. கண்ணாடிக் கதவை நுனிவிரலால் தள்ளி உள்நுழைந்த மாடர்ன் மங்கை வெள்ளாவி வச்சு வெளுத்ததுபோல் வெண்ணிறமாய் இருந்தாள். செபோராவின் உபயத்தில் முகமும் திறந்தவெளி தோள்களும் ஆயில் பெயிண்டிங்காய் மினுமினுத்தன. தலைக்கேசத்தில் ஆங்காங்கே தங்க கலரில் முடிகள் பிளீச்சிட, அடர் சிகப்பு நிற மிடியை தொடை வரை இழுத்து, உயரமான ஹீல்ஸில் டக் டக்கென வந்தவளை கண்டவுடன் சில நிருபர்கள் பதட்டத்தில் எழுந்து நின்றனர். அவளை தொடர்ந்து தவழ்ந்து வந்த சுகந்தமான வெர்ஸாச்சே பர்ப்யூமின் மணம் அறையை நிறைத்தது.
அவள் கையை நீட்டி புரொஜெக்ட்டைப் பற்றிய சிற்றேடை கொடுக்க அனைவரும் பவ்யமாக குனிந்து பிரசாதம் வாங்குவது போல் வாங்கினார்கள். “உங்களை எம்டி பதினோரு மணிக்கு சந்திப்பார்” என்று குயில் குரலில் சொல்லிவிட்டு செல்ல,
தந்தி டிவி டேனி “நீங்க” என்றான்.
சின்ன புன்முறுவலுடன் “நான் அவரோட அசிஸ்டென்ட்” என்று சொல்லி விட்டு செல்ல, பார்வைகள் அவள் மறையும் வரை ஹட்ச் நாயாக பின்தொடர்ந்தன. சிலர் மீண்டும் மூச்சு விட்டனர். சிலர் பொறாமையுடன் டேனியை பார்த்தனர்.
“இப்படி மயில் மாதிரி பொண்ணு ஒண்ணு கூட இருந்தா மேகத்தை என்ன, நான் சூரியனையே கடத்துவேன்” என்றான் டேனி. எல்லோரும் சிரித்தனர்.
சரியாக பதினோரு மணிக்கு யூனிபார்ம்டு செக்யூரிட்டி கதவைத் திறக்க கைத்தடிபோல ஒல்லியாக இருந்த வயதானவர் உள்ளே நுழைந்தார். அதற்கடுத்து ராகேஷ் இரண்டு அழகான பெண் மயில்கள் சூழ நடந்து வந்தார். நிருபர்களின் கண்கள் மயில்களிடமிருந்து பிரிய பெரும் சிரமப்பட்டன. ராகேஷ் அந்த நிறுவனத்தின் தலைவர். ஐஐடி கரக்பூரில் மெட்ரோலோஜி படித்து முடித்து மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றவர். பத்து வருடங்களுக்கு பின்னர் இந்தியாவுக்கு திரும்பி இந்த நிறுவனத்தை தோற்றுவித்தார். அவருடன் கண்ணாடி அணிந்திருந்த ஒல்லி மனிதர் நரசிம்மன். ராகேசின் பர்சனல் அசிஸ்டென்ட். கம்பெனியை தொடங்கியதிலிருந்து உடனிருப்பவர். பெண்களை பற்றி பின்னே நேரமிருந்தால்.
மேகத்தை கடத்தப்போகும் புரொஜெக்ட்டின் பெருமூளை இந்த ராகேஷ் . கோதுமை கலர் சருமம். டை அடித்து மறைத்த நரை. கண்களில் ரேபேன் கண்ணாடி. கச்சிதமாக அளவெடுக்கப்பட்டு தைக்கப்பட்ட சூட். முகத்தில் தெனாவெட்டும், அதிகாரமும் தெறித்தன. இருக்கையில் அமர்ந்து கண்ணாடியை கழற்றி…
“தேங்க்யூ ஆல் பார் கம்மிங் அட் எ ஷார்ட் நோட்டீஸ்” என்று ஆங்கிலத்தில் துவங்கி தமிழுக்கு தாவினார். “நியூஸ் பேப்பரில் ஏற்கனவே இந்த நிறுவனத்தோட புராஜெக்ட்டைப்பத்தி படிச்சிருப்பீங்க. உங்க கையிலிருக்க சிற்றேட்டில் விரிவாக எழுதியிருக்கோம். இனி உங்க கேள்விய கேட்கலாம்”
குங்குமம் ரிப்போர்ட்டர் மங்கலகரமாய் பிள்ளையார் சுழியிட்டார். “மேகத்தை கடத்தும் திட்டத்தைப்பத்தி சுருக்கமாக சொல்ல முடியுமா?”
“தண்ணீர் இந்த நாட்டோட சாபம். ஒரு மாநிலம் மழை வெள்ளத்தால் அழிஞ்சா பக்கத்து மாநிலம் தண்ணீர் இல்லாம வறட்சியால அழியுது. நதிகளை இணைக்க பேச்சுவார்த்தை பல வருசமா நடக்குது. 1800லயே பிரிட்டிஷர்ஸ் நதிகளை இணைக்க திட்டம் போட்டாங்க. ஆனால் பல காரணத்தால நிறைவேத்த முடியல. இன்னைய தேதியில இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பல லட்சம் கோடி செலவாகும்”. திட்டத்தின் இமாலய செலவு அனைவரின் மனதிலும் பதிய சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார் ராகேஷ்.
“என்னுடைய திட்டமானது முற்றிலும் புதுமையானது. பல நாடுகளில் இன்னும் பேச்சளவிலேயே உள்ளது. இந்த திட்டத்தின்படி அதிகமாக மழைபொழியும் இடத்திலுள்ள மேகங்களை குறைவாக மழை பொழியும் இடத்திற்கு நகர்த்திப்போய் அந்த இடத்தில் மழை பொழிய வைப்பதே. சுருக்கமாக சொல்வதென்றால் மேகத்தை நகர்த்திச் செல்வது”.
அறையில் சின்ன சலசலப்பு ஏற்பட ராகேஷ் காத்திருந்தார்.
“இது எப்படி சாத்தியம் சார்” சன் டிவி நிருபர்.
“விமானத்தில் மேலே பறக்கும் பொழுது மேகங்கள் சின்ன சின்ன தீவு கூட்டங்களாக, வெண்பஞ்சு பொதிகளாக வானில் மிதப்பதை பார்த்து இருப்பீர்கள். பொதுவாக இந்த மேகங்களை காற்று ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளிக்கொண்டு செல்கிறது. உதாரணத்திற்கு தமிழ் நாட்டில் குளிர் காலத்தில் சூல் கொண்ட மேகங்கள் தென்மேற்கு பருவக்காற்றால் நகர்த்தப்பட்டு தெற்கிலிருந்து உள்ளே நுழைந்து நவம்பர் மாதத்தில் மழை பொழிகிறது என்று நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த இயல்பான தென்மேற்கு காற்றைப் போல செயற்கையான ஆனால் அதே தன்மையுடைய காற்றை நாம் மேகங்கள் மேல் செலுத்தினால் என்ன ஆகும்”?
“மேகங்கள் நகரும்” தினத்தந்தி நிருபர்.
“எக்சேக்ட்லி. அதே தன்மையுடைய செயற்கை காற்றை உருவாக்கவே இவ்வளவு நாட்களாக நாங்கள் ஆராய்ந்து வந்தோம். இந்த முயற்சிக்காக அமெரிக்காவிலிருந்து நாற்பது பிரத்யேக F35B ரக விமானங்களை வாங்கியுள்ளோம். அவற்றை எங்கள் தேவைக்கேட்ப அமெரிக்க மற்றும் HAL பெங்களூர் விஞ்ஞானிகளின் உதவியுடன் இங்கேயே மாற்றி வடிவமைத்திருக்கிறோம். இந்த விமானங்களின் மூலம் செயற்கையான காற்றை ட்ரோபோஸ்பியரில் உருவாக்கி மேகங்களை நகர்த்த முடியும். இதன்படி ஒரு இடத்தில் தேவைக்கு அதிகமாக மழை பெய்யும் பொழுது, மழை மேகங்களை நாம் விரும்பும் திசையில் நகர்த்தி தேவைப்படும் இடத்தில் மழை பொழிய வைக்கலாம். இந்த முயற்சியில் இந்திய மெட்ரோலோஜிக்கல் டிபார்ட்மென்ட் மற்றும் WMO எனப்படும் வேர்ல்ட் மெட்ரோலோஜிக்கல் ஆர்கனைசேசன் விஞ்ஞானிகளும் பங்கேற்று உள்ளனர்.
மீண்டும் சிறு சலசலப்பு ஏற்பட, ராகேஷ் காத்திருந்தார். சலசலப்பு அடங்கியபின் “என்ன சார் மேகத்தை கடத்தி மழை பொழிய வைக்கிறதா” டிவி18 நிருபர் கேட்க சிலர் சிரித்தனர்.
“பத்து வருடத்திற்கு முன் கையடக்க கருவியில் அமெரிக்காவுக்கு பேசலாம் என்று யாராவது சொல்லி இருந்தால் அவனை பைத்தியக்காரன்னு சொல்லி இருப்போம். ஜெட்டை முதுகில் பொருத்திக்கொண்டு ஒரு மனிதன் பறக்க முடியும் என்று சொல்லியிருந்தால் சிரிச்சிருப்பீங்க. இப்ப பிரென்ச்காரர் பிரெங்கி ஜப்படா 35 கிலோமீட்டர் இங்கிலிஷ் கால்வாயை இருபது நிமிடத்தில் கடந்திருக்கிறார்”.
“முதன்முதலாக செயற்கையான மழையை 1990களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெய்ய வைக்க செய்த முயற்சிகளின் போதும் இது போலவே நிருபர்களும், மக்களும் சிரித்தனர். ஆனால் சில்வர் அயோடைடு தூவி மழை பெய்ய வைக்க முடியும் என்று நிரூபணம் ஆனது. இன்று உலகில் பல இடங்களில் செயற்கை மழை பல காரணங்களுக்காக பெய்ய வைக்கப்படுகிறது”.
“மழையை மனிதன் செயற்கையாக உருவாக்கும் வல்லமையை பெற்றபின் இது அடுத்த கட்டம். மனிதன் இறைவன் ஆகும் தருணம். இந்த அறிவை வறண்ட பகுதிகளுக்கு மழையை பெய்விக்க மட்டுமல்லாமல் ஓரிடத்தில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுத்தலாம்”.
“இந்த முயற்சி வெற்றி பெற்றால் புயல்கள் உருவாகி காற்றின் வேகத்தால் நகர்ந்து நகரங்களுக்குள் வரும்போது மழை தேவையென்றால் நகரத்திற்குள் அனுமதிக்கலாம். இல்லையெனில் எதிர் காற்றை உருவாக்கி கடலுக்குள் திருப்பி விடலாம். தேவையற்ற சேதங்கள் இருக்காது”.
“மேலும் இந்த முயற்சி வெற்றி பெற்றால், நதிநீர் இணைப்பு தேவைப்படாது. இப்போது பிரதமர் இதற்காக ஒதுக்கியுள்ள 5.5 லட்சம் கோடிகளை வேறு இந்தியாவின் நல்ல முயற்சிகளுக்கு பயன் படுத்தலாம். மேலும் நதி நீர் இணைப்புக்காக பல இடங்களில் செயற்கை ஆறுகளை உருவாக்குவதால் ஏற்படும் சுற்றுப்புற சூழ்நிலை சீர்கேடுகளை தவிர்க்கலாம். இந்த முயற்சியின் பலன்களை யோசித்துப் பாருங்கள்”.
“இந்த புரொஜெக்ட்டின் முதல் சோதனை முயற்சியாக இப்போது பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்கிறது. போதுமான அளவு மழை நீர் பெங்களூரில் சேர்ந்து விட்டது. ஆனாலும் இடைவிடாது மழை பொழிந்து சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கிமுனோலிம்பஸ் வகை மேகங்களை இன்று மதியம் தமிழகத்தில் எங்களது F35B ஏரோபிளான்கள் மூலம் நகர வைக்கும் முயற்சியை மேற்கொள்ள போகிறோம். நீங்களே சொல்லுங்கள். தமிழகத்தில் உங்களுக்கு எங்கு மழை வேண்டும் என்று கிண்டலாகக் கேட்டார். அனைவரும் சீரியசாக யோசித்திருக்க
“காஞ்சிபுரத்தை சுற்றி மழை பெய்ய வையுங்கள்” என்றார் கேப்டன் டிவி.
“ஏன் காஞ்சிபுரம்? என்ன காரணம்?”
“இன்றோடு காஞ்சிபுரத்தில் அத்திவரதரின் 48 நாட்கள் தரிசனம் முடிந்தது. பெருமாளை குளத்தில் வைக்கும்போது பரவலாக மழை பெய்யும் என்பது ஐதீகம். ஆனால் இப்போது என்னிடம் போனில் பேசிய எங்கள் டிவி நிருபர் அங்கு வெயில் சுட்டெரிக்கிறது என்றும் அனல் காற்று வீசுகிறது என்றும் அங்கு மழை வர சற்றும் வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். பக்தர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் உள்ளதாக தெரிவித்தார்”.
“அப்படியா! கவலைப்படாதீர்கள். உங்கள் பெருமாளை நாங்கள் காப்பாற்றுகிறோம். கடவுளும் மனிதனின் அறிவுக்கு முன் மண்டியிடும் காலம் நெருங்குகிறது”.
“எவ்வாறு மழையை காஞ்சிபுரத்தின் மேல் பெய்ய வைப்பீர்கள்?” கலைஞர் டிவி.
“இன்று மதியம் ஒரு மணிக்கு எங்களது F35B ஏரோபிளான்கள் செயற்கையான காற்றின் மூலம் பெங்களூரிலிருந்து மேகங்களை காஞ்சிபுரத்தை நோக்கி நகர்த்திவரும். காஞ்சிபுரத்தை அடைந்ததும் மேகங்களுக்குள் சில்வர் அயோடைடை விதைத்து மழை பெய்ய வைப்போம். வேறு ஏதும் கேள்விகள்”?
எல்லோரும் அமைதியாக இருக்க “நிருபர்களுக்கு ரெப்ரஸ்மென்ட்ஸ் அரேஞ்ச் பண்ண ப்பட்டுள்ளது. முடித்துவிட்டு ஆடிட்டோரியதிற்கு ஒரு மணிக்கு வந்தீர்கள் எனில் நிகழ்ச்சியை லைவ்வாக பார்க்கலாம். தேங்க்யூ ஜென்டில்மென் ” என் சொல்லிவிட்டு மெதுவாக எழுந்த ராகேஷ் மற்ற அசிஸ்டெண்டுகளுடன் கண்ணாடிக்கதவை திறந்துகொண்டு வெளியேறினார்.
“இது சாத்தியமானு தெரியலையே” என்றார் ஒரு நிருபர்.
“அவரு சொல்ற லாஜிக் கரெக்டா தான் இருக்கு” மற்றொருவர்.
“எப்படியும் சாயங்காலம் தெரிஞ்சிடும். ஆனா இது நடந்துச்சின்னா சூப்பரா இருக்கும்.” என்றார் இன்னொருவர்.
கண்ட்ரோல் ரூமுக்கு அனைவரும் நுழைந்தவுடன் ஒருவர் நரசிம்மனிடம் ஒரு பேக்ஸ் மெசேஜை குடுக்க “ஸ்டேட் கவர்மென்ட் மற்றும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கிளியரன்ஸ் வந்துடிச்சி சார்” என ராகேஷிடம் நரசிம்மன் சொன்னார்.
“நரசிம்மன் டார்கெட் இடம் காஞ்சிபுரம் என எல்லா அரசு பொறுப்பு அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லிடுங்க. அந்த ரூட்டில் உள்ள அனைத்து விமானப்படை தளங்கள், விமான கண்ட்ரோல்டவர்களுக்கும் தகவல் அனுப்பிடுங்க”.
“எல்லாருக்கும் சொல்லியாச்சி சார். இப்ப டார்கெட் காஞ்சிபுரம்னு சொன்னா போதும்”.
“ஓகே. ஒசூரிலுள்ள ரோகித்துக்கு போன் போடுங்க” என்றார் ராகேஷ். ரோகித் “டீம் கிளவுட்” எனப்பட்ட 40 விமானங்களின் குரூப்புக்கு பொறுப்பு அதிகாரி. ரோகித் இணைப்பில் வந்தவுடன்
” ஹாய் ரோகித் கவர்ன்மெண்ட் கிளியரன்ஸ் கிடைச்சிடுச்சி. மதியம் 1 மணிக்கு டேக் ஆப் செய்யுங்கள். காஞ்சிபுரம் தான் நமக்கு டார்கெட்”.
“ஓகே சார்”.
“ரொம்ப வேகமா மேகத்தை நகர்த்த வேண்டாம். மணிக்கு 30 மைல் வேகம் போதும். தேவைப்பட்டா குறைச்சிடுங்க. மேகம் கலையக்கூடாது. எவ்வளவு நேரம் ஆகும்?”.
“பெங்களூர் டு காஞ்சிபுரம் 140 மைல்ஸ் சார். 5 டு 6 மணி நேரம் போதும்னு நினைக்கிறேன்”.
“ஓகே மறுபடியும் கூப்பிடறேன். டீமை ரெடி பண்ணிக்குங்க.” என்று லைனை கட் செய்த ராகேஷ் .
“நரசிம்மன் இன்றைய நிகழ்வை பார்க்க வந்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள், டெல்லி மற்றும் தமிழக எம்பிகளுக்கும் தகவல் சொல்லிடுங்க”.
“ஓகே சார்”.
கண்ட்ரோல் ரூமின் இன்சார்ஜ் ரேஷ்மியிடம் திரும்பிய ராகேஷ் “பெங்களூர் கிளைமேட் எப்படி இருக்கு?”
“இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் சார்”.
“ஓகே மானிட்டர் பண்ணிட்டே இருங்க. 12.45 க்கு வர்றேன்”.
ஓசூர் விமானப்படை தளத்தில் இருந்த ரோகித் வேகமாக அவர்களின் கான்பரன்ஸ் ரூமிற்கு வந்தான். ஈகிள்ஸ் எனப்படும் அனைத்து பைலட்டுகளும் அங்கு அமர்ந்திருந்தனர்.
“ஹாய் ஈகிள்ஸ் நமக்கு உத்தரவு வந்து விட்டது. நமது டார்கெட் காஞ்சிபுரம். நான் முன்பே கூறியது போல பத்து பேர் இங்கேயே காத்திருக்க, மதியம் ஒரு மணிக்கு 30 விமானங்களை மட்டும் டேக் ஆப் செய்கிறோம். பெங்களூரில் மறுபுறம் சென்று அடைந்தவுடன் விமானங்களை ட்ரிபிள் பார்மேஷனில் அமைக்கிறோம். ஏற்கனவே உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நம்பர்களின் படி முதல் பத்து ஈகிள்ஸ் மேலடுக்கிலும், இரண்டாவது பத்து ஈகிள்ஸ் நடு அடுக்கிலும், மூன்றாவது பத்து பேர் கீழ் அடுக்கிலும் விமானங்களை நிலை நிறுத்துகிறோம். பின்னர் நான் உத்தரவு தரும்போது காற்றை உருவாக்கி மேகத்தை நகர்த்தலாம். எனி கொஸ்டின்ஸ்?”
“ஸ்பீடு என்ன சார்?”
“முதலில் மணிக்கு 30 மைல்ஸ் வேகத்தில் காற்றின் வேகத்தை அமையுங்கள். பின்னர் எதுவும் மாறுதல் தேவை எனில் நான் சொல்கிறேன்”.
“ஓகே, கேரி ஆன் நௌ. அசெம்பில் அட் 12.30” என்றதும் அனைவரும் கலைந்தனர்.
மதியம் 12.50 க்கு சென்னையின் கண்ட்ரோல் ரூமில் அனைவரும் வந்து சேர, இதற்கென வடிவமைக்கப் பட்டிருந்த ஆடிட்டோரியத்தில் அனைத்து விஐபிகளும் உட்கார்ந்திருந்தனர். எதிரேயிருந்த பல டிவி திரைகளில் பெங்களூரிலிருந்து லைவ் வீடியோ காட்சிகள் வந்து கொண்டிருந்தன. சரியாக ஒரு மணிக்கு ஆன்லைனில் வந்த ரோகித் “புறப்படுகிறோம் சார்” என சொல்ல “ஆல் தி பெஸ்ட் ” என்றார் ராகேஷ்.
சரியாக 1 மணிக்கு ரோகித்தின் தலைமையிலான ஈகிள்ஸ் ஏரோபிளான்கள் ஒவ்வொன்றாக ரன்வேயிலிருந்து மேலெழ தொடங்கியது. ஏரோபிளானின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த ஜிபிஎஸ் கேமரா மூலம் காட்சிகள் சென்னையிலிருந்த ஆடிட்டோரியத்திற்கு அனுப்ப பட்டுக் கொண்டிருந்தது. ஏகமாக மழை பெய்யும் பெங்களூரை தவிர்ப்பதற்காக சுற்றுப் பாதையில் விமானங்கள் பெங்களூரின் மறுபுறத்தை சரியாக ஐந்தே நிமிடத்தில் 70 கிலோமீட்டரை கடந்து வந்து சேர்ந்தன. ராட்சச கரும்புகை படலம் போன்று மேகங்கள் பெங்களூரை சூழ்ந்து இருப்பது சென்னை ஆடிட்டோரியத்தின் பல திரைகளில் தெரிந்தது. மேகங்களின் மறுபக்கத்தை அடைந்த ஏரோபிளான்கள் மூன்று அடுக்குகளாக விண்ணில் பிரிந்தவாறு மெதுவாக முன்னோக்கி நகர்ந்தன. .
ரோகித்தின் முன்னாலிருந்த பேனலில் விமானங்கள் அனைத்தும் பச்சை புள்ளிகளாக தெரிய, விமானங்கள் ஒவ்வொன்றும் மெதுவாக நகர்ந்து மூவடுக்கிலான அமைப்பை அடைந்தன.
“நாங்கள் ரெடி சார்” என்றான் ரோகித்.
“ஓகே ஸ்டார்ட். நான் லைனிலேயே காத்திருக்கிறேன்” என ராகேஷ் சொன்னார்.
ரோகித் ஈகிள்ஸ்க்கான உத்தரவை வழங்கியதும் அனைத்து விமானங்களின் பக்கங்களிலிருந்தும் நீளமான இறக்கைகளைப் போன்று அமைக்கப்பட்டிருந்த அமைப்புகள் வெளியே வந்தன. ரோகித் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பிக்க, அனைத்து விமானங்களிலும் இருந்தும் மணிக்கு 30 மைல் வேகத்தில் காற்று வெளிப்படத் துவங்கியது. ஒத்திசைவான காற்றின் வேகத்தில் மேகங்கள் நகரத் தொடங்கின. மேகங்கள் நகர்வது லைவ் வீடியோவில் தெரிய ரோகித் “சார் நம் முயற்சி பலிக்கிறது. மேகங்கள் நகர்கின்றன” என்றான். ராகேஷ், அங்கிருந்த விஐபிகள் மற்றும் அனைவரும் கைதட்டி சந்தோச கூச்சலிட்டனர்.
மேகங்கள் மெதுவாக நகரத் துவங்க, ரோகித் “ஈகிள்ஸ் பிளேன்களை 50 அடி முன்னோக்கி நகர்த்துங்கள்” என்று உத்தரவிட, பிளேன்கள் மெதுவாக முன்னோக்கி நகர்ந்தன. இப்போது மேகங்கள் நகர்ந்தபோது பக்கங்களில் இருந்த மேகங்கள் சுழன்று வந்து அந்த இடத்தை நிரப்ப, மேகங்கள் ஒரே இடத்தில் சுழலத் துவங்கின.
நடு அடுக்கின் மையத்தில் இருந்த ரோகித் இருபுறங்களிலுன் ஓரங்களில் இருந்த மேகங்கள் உள்ளே வந்து சுழற்சியை ஏற்படுத்துவதை கவனித்தான். உடனே மைக்கில் “காற்றின் வேகத்தை 20க்கு குறையுங்கள் ” என சொல்லிவிட்டு. விமானப் படை தளத்தில் இருந்த 10 விமானங்களின் பொறுப்பு அதிகாரி ரமேசை கூப்பிட்டு “ரமேஷ், பத்து விமானங்களையும் கொண்டு வா” என உத்தரவிட …
அடுத்து 7 நிமிடங்களில் ரமேஷின் பத்து விமானங்கள் ரோகித் இருக்கும் இடத்தை நெருங்க
” இருபுறமும் ஐந்து ஐந்து விமானங்களை கொண்டு செல்லுங்கள். மேலே மூன்று விமானங்களையும் சற்று கீழே இரண்டு விமானங்களையும் நிலை நிறுத்தி 30 மைல்ஸ் வேகத்தில் காற்றை செலுத்துங்கள்” என ரோகித் சொல்ல விமானங்கள் இரண்டு பிரிவாக பிரிந்து இருபுறங்களிலும் நிலை கொண்டன. அமைப்பின் இருபுறமும் வந்திருந்த ஐந்து விமானங்கள் வேகமான காற்றை செலுத்த மீண்டும் மேகக்கூட்டம் சற்று நகர்ந்தது.
சென்னை ஆடிட்டோரியத்தில் பார்த்துக் கொண்டிருந்த ராகேஷ் தீவிர யோசனையில் இருந்தார். அவர் எதிரே இருந்த மானிட்டரில் மேகம் நகரும் சாட்டிலைட் படம் தெரிந்து கொண்டிருந்தது. மேகங்கள் நகராவிட்டால் எப்படி செயல்படுவது என்று எல்லா சாத்தியக் கூறுகளையும் ஏற்கனவே விமானிகளுக்கு சொல்லப் பட்டிருந்தது.
ரேஷ்மி “சார் கிமுனோலிம்பஸ் மேகங்களின் அடர்வு குறைகிறது” என சொல்ல, ராகேஷ்” ரோகித் மேகங்களின் அடர்வு குறைகிறது. சில்லென்ற காற்றை உருவாக்குங்கள்” என்றார்.
ரோகித் “ஈகிள்ஸ், ஈரமான காற்றை உருவாக்குங்கள்” என சொல்ல அனைத்து விமானிகளும் காற்றை உருவாக்கும் புளோயரில் நீரை கலக்கும் மிக்சர் அமைப்பை திறந்து விட, விமானங்களில் இருந்து வெளிப்பட்ட ஈரமான காற்று இப்போது மேகத்தை நோக்கி சென்றது. மீண்டும் மேகங்கள் நகரத் துவங்க இந்த முறை இடியுடன் கூடிய மின்னல்கள் உருவாகின.
“ஈகிள்ஸ் காற்றின் வேகத்தை பதினைந்தாக குறையுங்கள். இரண்டு பக்கங்களிலும் உள்ள ஐந்து விமானங்கள் முப்பது மைல்ஸ் அளவிலேயே காற்றை செலுத்தட்டும்”.
இம்முறை மேகங்களிலிருந்து பெய்யும் மழையின் அளவு அதிகரித்தது. ரோகித் மேலும் காற்றின் வேகத்தை அதிகரித்தும் பார்த்தான். அதன் பின்னர் பலவித முயற்சிகளை செய்தும் மேகங்களை நகர்த்த முடியவில்லை.
அதன் பின்னர் ஒரு மணிநேரத்திற்கு பின்னர்
இந்தியன் மெட்ரோலோஜிக்கல் சொசைட்டியின் ஒரு அதிகாரி நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். நாங்கள் விமானம் மூலம் செயற்கையாக ஏற்படுத்திய காற்றின்போது, காற்றின் அல்லது வேறு ஏதும் காரணத்திலாலோ மேகத்தின் நீர் மூலக்கூறுகள் உடைந்து நீர்துளி ஆவியாகிறது. மழை பெய்யும் வேகத்தை கட்டுப்படுத்த முடிந்ததே தவிர மழை மேகங்களை குறிப்பிட்ட திசையில் நகர்த்த முடியவில்லை. மேகங்கள் அங்கேயே சுழன்று விடுகின்றன. மேலும் மேகங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பால் இடியுடன் கூடிய மின்னலும் உருவாகிறது. இயற்கையாக வீசும் காற்றில் எவ்வாறு இந்த நிகழ்வுகள் நடக்காமல் மேகங்கள் நகர்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேலும் தொடர்ந்து நடக்கும் என பேட்டி அளித்துக்கொண்டிருந்தார்.
கண்ட்ரோல் ரூமில் அமர்ந்திருந்த ராகேசை நெருங்கிய அசிஸ்டன்ட் நரசிம்மன் “சார் காஞ்சிபுரம் மற்றும் அதை சார்ந்த ஊர்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கிறதாம்” என்றார்.