Ashoka the 2nd

பதினாறும் பெற்று

“ஒரு குழந்தை பெத்தா நாம பெற்றோர். ரெண்டு பெத்தா நாம ரெப்ஃரீன்னு ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு. இவங்கப்பா பதினாறு பெத்தவரு” என்று பத்து கூறியதும்,

“சும்மா கதை விடாதீங்க” என்று சிரித்தாள் அஞ்சு.

“அட அவங்களுக்கு உண்மையாவே 16 புள்ளைங்கம்மா. 7 பொண்ணு. 9 ஆணு. அதுல மூணு பையனுங்க அவங்கப்பா ஜெராக்ஸ். நாலு பெண்ணுங்க அம்மா ஜெராக்ஸ்”

அஞ்சுவின் வட்டமான மாம்பழ முகத்தில் சிரிப்பு மாறாமலிருக்க “இந்தியா வளரும் நாடா மாறாம கட்டையாவே இருக்க காரணமே உங்க குடும்பம் தான்னு நாங்க அவனைக் ஸ்கூல்ல கிண்டல் பண்ணுவோம்” என்றான். அஞ்சுவின் சிரிப்பு மெலிந்திருந்த பத்துவின் பப்பாளி முகத்திலும் தொற்றிக் கொண்டது.

அஞ்சு என்கிற அஞ்சலிக்கும், பத்மநாபன் என்கிற பத்துவிற்கு திருமணமாகி நாலைந்து நாட்கள் ஆகியிருக்க, பத்துவுடைய நண்பன் பரந்தாமனின் வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். பத்துவும், பரந்தாமனும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாய்ப் படித்தவர்கள். பரந்தாமன் யூபிஎஸ்சி எக்ஸாம் பாஸ் செய்து இன்கம்டாக்ஸில் அதிகாரியாகி விஜயவாடாவில் இருந்தான். ஒரு வாரத்தில் நடக்க இருந்த அண்ணனின் திருமணத்திற்கென லீவில் வந்திருந்தான்.

“யாராவது பதினாறு புள்ளை பெத்துக்குவாங்களா? சும்மா சொல்லாதீங்க” என்றாள் அஞ்சு. புதிய உணர்வுகளின் கலவையால் முகம் பளபளக்க, கழுத்தில் மஞ்சள் கயிறு மினுமினுத்தது.

“அந்த காலத்தில் சகஜம் தானே. கடைசியா  பிறந்த இவனோட போதும்னுதான் இவன் பேரையே போதும் பரந்தாமன்னு அவங்கப்பா வச்சார்னா பாத்துக்கயேன்”

“அதுக்கப்புறம் பிள்ள பொறக்கலையா?”

“முயற்சி பண்ணிருந்தா ஒருவேளை பொறந்திருக்கலாம். அதுக்குள்ள மொத பையனுக்கு நிச்சயம் ஆயிட்டதால பிள்ளை பெக்கற மெஷினை ஆப் பண்ணிட்டாங்க”

“அழிச்சி அழிச்சி படம் வரைஞ்சா நல்லா வர்ற மாதிரி, திருப்பித் திருப்பி புள்ளை பெத்தா அறிவா வரும்னு நெனச்சாரோ என்னவோ”

“பெருமாள் அந்த மாமிக்கு பிள்ளை வரத்தை வாரி குடுக்கிறார்னு எல்லாரும் அப்ப பேசிக்குவாங்களாம்”

“ஆமாம். மொட்டை மாடிலயே உட்காந்து கிட்டு வாரி குடுத்திருக்காரு!”

“வர்றேன்மா, வர்றேன் அத்தை” என்று விடை பெற்று பைக்கை நோக்கி நடந்தனர்.

“ஏறு…. பார்க்கலாம்” என்ற பத்து யமகாவின் இருபுறத்திலும் காலை உறுதியாக ஊன்றி விறைத்து நின்றான். சற்று பருமனாயிருந்த அஞ்சு பில்லியனில் அமர்ந்து அவன் இடுப்பை வளைத்துப் பிடித்தாள். முதன் முதலாய் வெயிட் ஏற்றிய பைக் அமுங்கி ஆடியது.

“மொதல்ல உடம்பை ஏத்துங்க. இல்லாட்டி நான் ஏத்திருவேன்”

“வேணாம் தாயி. நானே முயற்சி பண்றேன்”

பைக் மூச்சைப் பிடித்துக் கொண்டு முன்னேறியது. டிராபிக்கினூடே பத்து  திறமையாக பைக்கை செலுத்தினான். ரேடியோவில் “முக்காலும் காலும் ஒன்னு. இனி ஒன்னோட நானும் ஒன்னு” என விஜயகாந்த் பாடிக் கொண்டிருந்தார்.  டெஸ்ட் டியூப் ஆஸ்பத்திரி ஒன்றை தாண்டுகையில்…

“அந்த காலத்துல பிள்ளை வரம் வேணுங்கிறவங்க மாமிக்கிட்ட வந்து ஏதாவது வாங்கி சாப்பிடுவாங்களாம். உடனே பிள்ளை தங்குமாம்!”

“பெருமாளு அவங்க வீட்டை பிராஞ்ச் ஆபீஸா யூஸ் பண்ணுனாரா?”

“அட அரச மரத்தை சுத்தறது மாதிரி ஒரு நம்பிக்கை”

“எப்படியோ! மாமா மாமிய விடாம சுத்திருக்காருனு மட்டும் நல்லா தெரியுது” என்று அஞ்சு சிரித்தாள்.  பரந்தாமனின் வீடு நான்கு தெருக்கள் தள்ளி இருக்க, இருபது நிமிடங்களில் வந்து சேர்ந்தனர்.

“அவங்க தாத்தா வாங்கிப் போட்ட இடம். ரியல் எஸ்டேட்காரன் கையில கெடச்சா 10 வீடு கட்டிருவான். ஆனால் அதை விட அதிக ஆளுங்க இந்த ஒரு வீட்ல இருக்காங்க”

“ஒரு தடவை குழந்தை பெத்துக்கறதையே மறுபிறப்புனு சொல்வாங்க. மாமி சும்மா செத்துச் செத்து வெள்ளாடிருக்கு…” 16X10 என கணக்கிட்டு அஞ்சு, “அடேயப்பா! வாழ்க்கையில 13 வருஷம் புள்ளத்தாச்சியாவே இருந்துருக்காங்க. அவங்கப்பா என்ன வேலை செஞ்சார்?” என்றாள்.  

“புள்ளை பெக்க உதவறதோட ஜோசியமும் பார்த்தார். அப்பெல்லாம் அவரு ரொம்ப பேமஸ். கார்ல வந்து பார்ப்பாங்க. பெரிய்ய வீடு அவங்களோடது”

வீடு சீமை ஓடுகள் வேயப்பட்டு உண்மையாகவே பழமை மாறாமல் நீளமாய் இருந்தது. வீட்டின் முன்புறத்தில் திண்ணையும், காலியிடமும் பெரிதாய் இருந்தன.  பொதுக்கூட்டத்திற்கு பந்தல் போடுவது போல சிலர் ஷாமியானா கட்டிக் கொண்டிருந்தனர். சிலபல கார்களும், பைக்குகளும் நின்றன.

வாசலிலேயே “வா பத்து, வாம்மா” என்று வரவேற்ற பரந்தாமனின் அண்ணன் பாலகணேஷ் “டேய் பத்து வந்துருக்கான்” என்று ஒலிபரப்பி விட்டு உள்ளே சென்று மறைந்தான்.

“வாடா” என வெளியே வந்த பரந்தாமன் அவர்களை     வீட்டினுள் அழைத்து சென்றான். சிட்அவுட்டில் இடப்பட்டிருந்த டேபிளும், சேர்களும் ஜோசிய கட்டங்களைப் போலிருந்தன. மரச்சட்டமிட்ட கண்ணாடி அலமாரியில் புத்தகங்கள் நிறைந்திருந்தன. தங்க நிறத் தாளில் குங்குமத்தில் நட்சத்திரம் வரைந்து பிரேமிட்டு மாட்டியிருந்தனர்.

அடுத்திருந்த ஹால் டபுள்ஸ் ஷட்டில் ஆடலாம் போல பெரிதாய் இருந்தது. ஒருபுறத்தில் சோனி டீவி பெட்டி உட்கார்ந்திருக்க, பெயிண்டில் வரையப்பட்ட தாயக்கரம், கோலங்கள் நிறமிழந்திருந்தன. பெருமாள்களும்,  சீதாக்களும், சுவற்றிலிருந்து வாழ்த்தினர்.

இரண்டு கயிற்றுக் கட்டில்களில் மண்டோதரன், குண்டோதரி சைஸ்களில் உருண்டு திரண்ட பெரியவர்கள் அமர்ந்திருந்தனர். ஆண்களின் நெற்றியிலும், கைகளிலும் திருநீற்றுப் பட்டைகள் மின்னின. பெண்களின் நுனி முடித்த  ஈரத்தலையில் நாலைந்து மல்லிகை மொக்குகள் பூத்திருந்தன.  “என் பிரண்ட் பத்து” என்றதும் “வா” என்று சினேகமாய் தலையசைத்தனர்.  

“வாங்க” என்று சோடாபுட்டி முகத்துடன் ஒருவன் ரூமிலிருந்து வெளியே வர “இவன் தான் மாப்பிள்ளை. சட்டையே போடாததால இவன் போட்ருப்பது என்னோட சட்டையில்ல” என்று பரந்தாமன் அசந்தர்ப்பமாக ஜோக்கடிக்க, அஞ்சு பெயருக்கு சிரித்து கைகுவித்து வணங்க,

“எப்படி இருக்க பாலா?” என்றான் பத்து.

“பைன். உக்காரு”

“கல்யாணக் களைய கண்ணாடி மறைக்குது. லென்ஸ் போடு”

“வாடா” என ட்ரே ஒன்றில் ஸ்வீட், மிக்ஸரை எடுத்து வந்தாள் ஒரு மடிசார். ஒம்போது கெஜப் புடவையை வலப்புற பல்லுவுடன் பாந்தமாகக் கட்டியிருந்தாள்.

“அய்யராத்துல பத்து சதவீதம் பேரோட பெயர் பாலு, பத்து சதவீதம் பெயர் கமலான்னு இருக்கும். இவள் கமலா, பதினஞ்சாவது. எங்களுக்கு ஒரு வருஷம் சீனியர். அதுக்கே என்னா பந்தா காட்டுவா தெரியுமா ” 

“நீங்க மட்டும் கொறச்சலாடா?  எடுத்துக்கப்பா” 

லட்டுவை எடுத்து கடித்த பத்து “சூப்பரா இருக்கு” என்றபடி மென்றான்.

“நம்பாத. இவன் எந்த வீட்டுக்கு போனாலும் அங்க குடுக்குறத பாராட்டுறதையே ஒரு கொள்கையா வச்சிருக்கான்”

 “உண்மையிலேயே நல்லாருக்கு. நீங்களே செஞ்சதா?” என்று கேட்டாள் அஞ்சு.

“காப்பி பொடிலேருந்து, மசாலாப் பொடி வரை இங்கிருக்கும் எல்லாமே நாங்களா செய்யறது தான். மூக்குப்பொடியை தவிர”

காப்பி கேனிலிருந்து இரண்டு கப்புக்களை நிரப்பி எடுத்து வந்த கமலா ” எடுத்துக்க” என்றாள்.

“இத்தனை பேரோட பொறந்து வளர்ந்தது ஜாலியா இருந்துருக்கும் இல்ல?” என்றாள் அஞ்சு.

“நீங்க வேற. ரெண்டு, மூணு புள்ளைங்கள்ல கடசியா பொறந்தாலே கஷ்டம். இதுல நான் பதினாறில் கடசி. எல்லாரோட பழைய ஜட்டி, பனியன், சட்டையெல்லாம் எனக்கு தான் வந்து சேரும். எனக்குனு புதுசா எடுத்தது பூணூல் மட்டும் தான்”

“முதல் குழந்தையைத் தான் வெல்வெட் கிளவ்ஸ்ல தாங்குவாங்க. பத்து, பதினஞ்செல்லாம் பெத்தா வேலக்காரங்க தான் வளப்பாங்க. இந்த பாலா பால்காரர் வளர்த்தவன் தான்”

“இவ்வளவு பேரையும் வளர்த்து ஆளாக்கறது ரொம்ப கஷ்டமாச்சே” என்று அஞ்சு சீரியசாய் சொல்ல,

“பெத்தது தான் எங்கம்மா. நாங்கெல்லாம் சுயம்புவா வளர்ந்தோம்”

“ஆனாலும் எங்கம்மாவுக்கு வேலை அதிகம் தான். பரிணாம வளர்ச்சி உண்மைனா இந்நேரம் எங்கம்மாவுக்கு பத்து கையி மொளச்சிருக்கணும். எங்கப்பாவுக்கு பெரிய பட்டக்ஸ்”

“குழந்தைங்க எப்பவும் அடுத்தவங்க வீட்ல இருந்தால் தான் அழகு. நம்ம வீட்டில் இருந்தால் அது போர்க்களம். நைட்டெல்லாம் சங்கூதிக்கிட்டே கெடக்கும். எங்க வீடு எப்பவும் சந்தைக்கடை மாதிரி தானிருக்கும்”

“அதுவும் ஞாயிற்றுக்கிழமைன்னா எல்லா கிளாஸுக்கும் பிடி பீரியட் விட்ட கிரௌண்ட் மாதிரி இருக்கும்”

கேட்கும்போதே மலைப்பாய் இருந்தது இருவருக்கும். காபி குடித்து முடிக்கையில், தலை முழுதும் நரைத்து மெல்லிய உடலுடன் பரந்தாமனின் அம்மா வந்தார். முன்பு பார்த்ததை விட உயரம் குறைந்ததாய் பத்துவிற்கு தோன்றியது. ‘குழந்தை பெத்து பெத்தே குட்டை ஆயிட்டாங்களா’ என அதிசயித்தான்.

“இத்தனூண்டு உடம்புல இருந்து இத்தனை புள்ளைங்க எப்படி. முட்டை போட்டு குஞ்சு பொரிச்சாங்களா?” என்று அஞ்சு வியந்தாள்.

“வா பத்தூ…..  இதான் மாட்டுப்பொண்ணா”

“ஆமாம். கொம்பில்லாத மாட்டுப்பொண்ணு”

“தங்க விக்ரகம் மாதிரி களையா இருக்காடா” என்று அஞ்சுவை நெட்டி முறித்தாள்.  “எங்க பத்துவை நல்லா பாத்துக்கோடிம்மா”

“அவன் குழந்தை பாரு. ஒழுங்கா பாத்துக்க….. நீ இவளை ஒழுங்கா பாத்துக்கடா. டௌரி கேஸ் போட்ருவோம்”

“கல்யாணமே இப்ப தான் ஆயிருக்கு. அதுக்குள்ள டைவர்ஸ் ஐடியாவா!  இவ லாயர் அஞ்சு. வாதாடி பேமஸ் ஆகாம எல்லாருக்கும் டைவர்ஸ் வாங்கி குடுத்தே பேமஸ் ஆகப் பார்க்கிறா. போன வாரம் எங்கப்பா அம்மாவை திட்டும்போது ஒரு கையெழுத்து போடும்மா. டைவர்ஸ் வாங்கித் தரேங்கிறா” என்று பரந்தாமன் சிரித்தான்.

“டைவர்ஸ் வாங்கிட்டு அம்மா எங்க போவாங்க?” என்று பத்து கேட்க,

“ஆத்துக்கு நடுல வெள்ளை கோடு போட்டு சொத்துல பாதிய வாங்கிருவேனாக்கும்”

‘இந்த வயசுல வாங்கிட்டு என்ன பண்ண?”

“தனியா இருக்க போரடிச்சா மறுபடியும் ரெண்டு பேரும் லிவிங் டுகதரா இருக்கட்டும். அதான் இப்ப பேஷன்”

எல்லோரும் சிரிக்க “உன் புருஷன் எப்படி உன்னோட காலம் தள்ளுறாரு?” என்றான் பத்து.

“இதைச் சொல்லித்தான் மெரட்டி வச்சிருக்கேன்.  வாப்பா எங்க தாஜ்மகாலை சுத்தி காட்டுறேன்” என்று கமலா அழைக்க, அஞ்சு தயக்கத்துடன் பத்துவைப் பார்த்தாள்.

பத்து போய்ட்டு வா என்பது போல தலையசைக்க அவளுடன் சென்றாள். ஸ்டேடியத்தில் கட்லெட் விற்பது போல ஒருவன் குண்டானில் வடைகளை எடுத்து சென்றான்.

“சொந்தக்காரங்க அதுக்குள்ள வர ஆரம்பிச்சிட்டாங்களா?”

“எங்க குடும்பத்துக்கு தான்ப்பா இது!”  என்று கமலா சிரிக்க, அஞ்சு நாக்கைக் கடித்துக் கொண்டாள். 

“இவ்வளவு பெரிய சீரியல் குடும்பமான்னு உனக்கு ஆச்சரியமா இருக்குமே!”

“இல்ல அப்படியெல்லாம் இல்ல”

கமலா குறுகிய காரிடாரில் நடந்து செல்ல, அஞ்சு பின் தொடர்ந்தாள்.  ஹாஸ்டல் போல ரூம்கள் தனித்தனியாய் இருந்தன.  பூஜை ரூமே ஹால் போன்று இருந்தது. ஒரு மாமா தலை முடியை கையால் கோதி சிக்கெடுத்துக் கொண்டிருந்தார்.

“பொய் சொல்லாத. ரொம்ப பெருசுப்பா எங்க பேமிலி. வலது பக்கம் பூரா பெட்ரூம்ஸ், இடப்பக்கம்  பாத்ரூம்ஸ். தனித்தனியா தான் இருக்கும். அப்பாவுக்கு ரொம்ப சாமி பக்தி. எந்த ராவணனாவது சீதையை மறுபடி தூக்கிட்டா படை வேணுமேன்னு வரிசையா எங்களை பெத்துட்டார். தசரதன் மாதிரி. பட் வீட்டுல ஒரு பங்ஷன்னா வீடு களை கட்டிடும். திரும்பி போகவே மனசு வராது”

“வீடுன்னா என்ன மனுஷாள் தானே”

வீட்டின் புழக்கடை காம்பௌண்டுடன் பெரிதாக இருந்தது. துளசி மாடத்தைச் சுற்றிலும் சாணியில் மெழுகி கோலம் போட்டிருந்தனர். சின்ன கிணற்றின் இடப்புறத்திலும் துணி துவைக்கும் கற்கள் இருந்தன.  வண்ணான் தொட்டி போல இரண்டு தொட்டிகளில் நீர் நிறைந்திருந்தது. நாலைந்து கம்பிகளில் பேண்ட், ஜாக்கெட், லங்கோடுகள் வரிசையாய் தொங்கின. 

“ஜாக்கெட்டுங்க மாறாம இருக்க என்ன பண்ணுவீங்க”

“யாருதுனு பாக்க மாட்டோம்!”

அஞ்சுவுக்கு மயக்கம் வரும் போலிருக்க, பின் பக்கம் மாடு கத்தும் சத்தம் கேட்டது.

“மாடு கூட வச்சிருக்கீங்களா?”

“மாட்டுக்காரர் இருக்கார். நாங்க வாங்குற பாலோட அளவைப் பார்த்துட்டு எங்க வீட்டுக்கு பின்னாடியே குடி வந்துட்டார். ஒரு மாட்டுல இருந்து நாலு மாடு வரைக்கும் முன்னேறிட்டார். இப்ப  பாலை எப்படி எக்ஸ்போர்ட் பண்றதுனு கேட்குறாரு”

“எல்லாரும் இந்த வீட்லயே இருக்கீங்களா?”

“மூணு அண்ணா சென்னை. ரெண்டு அக்கா கோவை. ரெண்டு பேரு பெங்களூர். முக்கிய பங்ஷன்னா வந்து குமிஞ்சிடுவோம்”

“என்ன வேலை பாக்கறாங்க எல்லாரும்?”

“பேங்க், ஐடி, கோ ஆபரேட்டிவ் இப்படி ஒரு கவர்ன்மென்டே நடத்தறோம். ஹஸ்பண்ட், ஒய்ப்ன்னு எல்லாரும் வேலைல இருக்கோம். உனக்கு ஒரு வேலை ஆகணும்னா அதுக்கு தேவையான ஆட்கள் எங்க வீட்லயே இருக்கா” என்று சிரித்தாள்.

“பத்து சம்சாரமா இது? காபி குடுத்தியா?” என்றவாறு ஒருத்தி ஸ்மைலுடன் நகர்ந்தாள். வாண்டுகள் போனுடன் ஓடின. 

“இவ பன்னெண்டாவது. பேரு பிருந்தா…. ஏய் பத்து ஒயிப்டி”

“வாவ்! அழகா புடிச்சிருக்கான்.  வாம்மா! இன்விடேஷன் வச்சான். பையனுக்கு பைனல் எக்ஸாம். வரமுடியாம போச்சு”

“பரவால்ல”

“அஞ்சு நிமிஷம். நான் அவன்ட்ட வந்து பேசுறேன். காப்பி குடுத்தியாடி?”

“மைக்ல சொன்னனே கேட்கலையா ஒனக்கு. காப்பி குடுத்துட்டேன்”

“கொழுப்புடி ஒனக்கு”

எங்கோ குழந்தை அழும் சத்தம் கேட்டது. அஞ்சு ஆச்சரியத்துடன்  கமலாவைப் பார்க்க, “பயப்படாத. இது  பேரன், பேத்திகள் சத்தம். ஆறிலிருந்து அறுபது வரை எல்லா வயசுலயும் இங்க உருப்படி இருக்கு” என்றாள்.

கிச்சனில் ஒலிம்பிக் ஜோதி போல நாலைந்து அடுப்புகள் எரிந்து கொண்டிருக்க பெண்கள் சமைத்து கொண்டிருந்தனர்.  “வீட்டு சாப்பாட்டையே பந்தியா விடற பரம்பரை நாங்க. எல்லாரும் திரும்புங்கோ. இது பத்து ஒயிப். காப்பி குடுத்துட்டேன்”

“வாம்மா. ஹாய்…”என்ற குரல்களுடன் கைகாட்டினர்.  

“தாத்தா காபி கேக்கறார்” என்ற சத்தம் வர அதைத் தொடர்ந்து “வத்சூ எங்க? கேன்ல காபி தீந்துடுத்து” என்ற சத்தமும் வந்தது.

“எங்க உடம்புல பாதி ரத்தமும், பாதி காப்பியும் ஓடுமோனு நீ சந்தேகப் பட்டா….. அது சரி தான். என்ன! சிக்கரி கொஞ்சம் தூக்கலா இருக்கும்”

“இவங்களோட பிள்ளைகள்?”

“இருக்கு. எல்லாம் சேர்த்தா ஒரு முப்பது, முப்பத்தஞ்சு தேறும். மூத்த கும்பலெல்லாம் மூணு, நாலுன்னு பெத்துண்டா. இப்ப  இருக்கறவா ஒன்னோட நிறுத்திண்டு நாயை வளக்கறா”

“இவன் ரங்கா. ஒம்போது…. நம்பரைச் சொன்னேன் மா . ஐடி பீல்டு”

அவள் தலையில் குட்டி “ஜெயில் கைதி நம்பரை சொல்ற மாதிரி சொல்லாதடி. வாங்க. காப்பி குடுத்தாளா?” ” என்றான்.

“ம்…”

“அடேய் காபிக்கு பொறந்தவன்களா. கெஸ்ட் வந்தா நான்  குடுக்க மாட்டேனா?”

“இவ ஒரு வேலையும் செய்ய மாட்டா. ஆனா எல்லாம் செய்யற மாதிரி சொல்லிண்டு இருப்பாளே”

அஞ்சு சிரிக்க, “இவருக்கு இந்த வீட்டு ஆணி வேருனு நெனப்பு. ஆனால் ஒரு ஆணியையும் கழட்ட மாட்டார்”

இடுப்பில் டிராயரும் கையில் திறந்த லேப்டாப்புடன் வந்த ஒருவன் “பைதான்லே இந்த கோட் வேலை செய்யல. என்னனு பாரேன்” என்றதும் அவன் விலகினான்.

“நம்பர் ஒன்னோட ரெண்டாவது பையன் இவன். வித்தியாசமான பேருனு சொல்லிட்டு சீனிவாசன்னு வச்சான்” என்று சிரித்தாள் கமலா.

‘இத்தனை பேரையும் ஞாபகம் வைக்க ஒரு வாரம் ஆகுமே. இவங்களோடது பேமிலி ட்ரீயா இல்ல பேமிலி ஃபாரஸ்ட்டா ?’ என்று அஞ்சு மலைத்தாள்.   

“வா மாடியைக் காட்டறேன்”

மரப்படிகளின் இருபுறத்திலும் கருமை படிந்து நடக்கும் பாதை மட்டும் மரத்தின் நிறத்தைச் சுமந்திருந்தது. இருவரின் எடைகளை தாங்க முடியாத படிகள் ஸ்லோகமாய் முனகின. வளைந்து மேலேறி மொட்டை மாடியை அடைந்தனர். தளமெங்கும் காரை உதிர்ந்து காக்கைகள் குட்டி குட்டியாய் வெண்ணிற பெயிண்ட் அடித்திருந்தன.  அதற்கு போட்டியாக சேலையில் வடகங்கள் காய்ந்தன. கேபிள் ஒயர்கள் மாடி விட்டு மாடி தாவின. இருபுறத்திலும் வீடுகள் மாடர்னாகி இருக்க, இவர்களின் வீடு மட்டும் பழமையின் மிச்சமாய் இருந்தது.

மோரில் ஊறிய மிளகாய், பல நிறங்களில் மசாலா பொடிகள் வெயில் காய்ந்தன. “இது எல்லாத்தையும் எங்கம்மாவே போட்ருவா. மத்தவங்க போட்டால் ருசி மாறிப் போயிடும்”

நேரம் போவது தெரியாமல் இருவரும் பேசிக் கொண்டிருக்க, மாடிக்கு ஓடி வந்த பெண் “பாட்டி லன்ச் ரெடின்னு சொல்லச் சொன்னா” என்று கூறி விட்டு ஓடினாள்.

“நாங்க கெளம்பறோம்”

முதல் தரம் வந்திருக்கீங்க. சாப்பிடாம எப்படி அனுப்புவோம். வா”

இருவரும் கீழிறங்கி வர, “லஞ்ச் ரெடி” என்று ஒருத்தி எல்லா ரூமிற்கும் கத்திக் கொண்டு ஓடினாள். நண்டு, சிண்டுகள் ஒரு விளையாட்டாய் களமிறங்கின. ஹாலை ஒதுக்கி, சிதறியிருந்த பொருட்களை அடுக்கி வைத்தனர். மடக்கு டேபிளை விரித்து, நான்கு மரச்சேர்களை போட்டனர். அனுமாரின் வால் போன்ற நீண்ட பாய்களை தரையில் இரண்டு வரிசைகளாக உருட்டி விரித்தனர். சில்வர் தட்டுகளை வரிசையாக வைத்து அருகில் டம்ளர்களை வைத்தனர். ஆண்களும், பிள்ளைகளும் வரிசையாக அமர, சில சிறுவர்கள் பரிமாறினர்.

பூசை அறையிலிருந்து வந்த பரந்தாமனின் அப்பா நல்ல உயரமாய், சிகப்பாய் இருந்தார். வயது முதுகை இலேசாக வளைத்திருந்தது. முகம் வாடியிருந்தாலும் கண்கள் தீர்க்கமாய் நோக்கின.

“வா பத்து”

அஞ்சுவின் அறிமுகப் படலம் முடிந்ததும் பத்துவின் பெற்றோரைக் குறித்து விசாரித்து விட்டு “டேபிளில் இலை போடுங்கோ. சாப்பிடலாம்” என்றார்.

“வேணாம். நாங்க கீழயே உட்காந்துக்கிறோம்”

தலை வாழை இலையை முழுசாய் விரித்த வத்சலா “ரெண்டு பெரும் ஒரே இலையில் சாப்பிடுங்கோ” என்றாள்.

மல்லிப் பூ போல சாதமும், குழம்பும் கூட பட்சணங்களும் படையெடுத்தன. பருப்பும், நெய்யும் கரைபுரண்டு ஓடின.  சாப்பிட அடம் பிடித்து சிறுவர்கள் ஓட, சில பெண்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்து  சோறூட்டினர்.

ஒருத்தி “ஒழுங்கா சாப்பிடலன்னா பத்து மாமாவோட பேங்க் லாக்கரில் வச்சி பூட்டிருவேன் உன்னை” என்று பயமுறுத்தினாள்.

“நல்லா சாப்பிடு பத்து. அவளுக்கு மேட்ச்சா நீயும் இருக்க வேணாமோ?”

“எங்க வீட்ல டெய்லியும் சாப்பிட்டா உனக்கு உடம்பு போடுதோ இல்லையோ தொந்திக்கும், குடுமிக்கும் நான் காரெண்டி”

“அவங்களை நிம்மதியா சாப்பிட விடுங்கடி”

எல்லா பெண்களும் கிண்டல் செய்தவாறு சுற்றி வர அஞ்சுவுக்கு திருவிழா அன்னதானத்தில்  சாப்பிடுவது போலிருந்தது.

சாப்பிட்டதும் வெற்றிலைத் தட்டு சுற்றி வந்தது.  “அஞ்சு நீயும் பத்துவுக்கு தாம்பூலம் மடிச்சு குடு. பத்துவுக்கு உன்னை எவ்வளவு புடிக்கிதுனு செவக்குறதை வச்சி கண்டு பிடிக்கலாம்” என்று குரல் வர..

“எனக்கு வெத்தலையே வேணாம்” என்று பத்து ஜகா வாங்கினான்.

தரை சுத்தம் செய்யப்பட்டதும் பெண்கள் அமர்ந்தனர்.  “அஞ்சு வா. எப்படி பரிமாறுறேன்னு பார்க்கலாம்” என்று மீண்டும் ஒருத்தி ஆரம்பித்தாள். “அவ தண்ணியை எடுத்துட்டு வரப்போறா. அதுல தான் பிரச்னை இல்லை” என்று மற்றவள் எடுத்து குடுக்க நேரம் கலகலப்பாய் நகர்ந்தது.  மீண்டும் அமுதும், தேனும் அலைபாய்ந்தது.

அனைவரும் சாப்பிட்டதும் பத்து புறப்பட, “இருங்க. டீ குடிச்சிட்டு போவீங்க” என்றாள் அனு.

“நீங்க எப்ப தான் சாப்பிடுவதை நிப்பாட்டுவீங்க?” என்றான் பத்து.

“பாத்ரூம் போகும்போது” என்றான் மூர்த்தி.

அனைவரிடமும் விடை பெற்று புறப்படுகையில் “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றான் பத்து. பரந்தாமனின் அம்மா ஒரு தாம்பாளத்தில் ரவிக்கை துணி, பூ, குங்குமம், ஸ்டிக்கர் பொட்டு சகிதமாய் வந்து பெருமாள் அப்பாவுடன் நின்றாள். அஞ்சுவும் பத்துவும் காலில் விழுந்து வணங்கினர்.

“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று பரந்தாமனின் அப்பா வாழ்த்த,

 இருவரும் அதிர, “அய்யோ வேண்டாம்” என்று அலறினான் பத்து.

**********