ஆரியபவனா, ஆயுதபவனா என்று நினைக்குமளவு அந்த ஓட்டலின் வரவேற்பறையில் வேல், கம்பு, அரிவாளுடன் ஆறடி அய்யனார் சிலை காவலுக்கு நின்றது. உள்ளே நுழைந்ததும் வலப்புறத்தில் கேஷியர் டேபிளில் குபேரன் சிலை மல்லிகை பூ மாலையுடன் படியளக்க குங்குமம், சந்தனம், கற்கண்டு கிண்ணங்களுடன் பில் குத்தும் கம்பி உடல் நிரம்பியிருந்தது. ஓனரின் நெற்றியிலிருந்த விபூதியளவிற்கு சித்தனாதனே பூசியிருக்க மாட்டார். அருகில் கூல்ட்ரிங்க் பாட்டில்களுடன் பிரிட்ஜ் உடல் வியர்த்திருக்க, பில் போடும் கண்ணாடிக் கேபினில் பேப்பர் சுருள் சுழன்றது.
எதிர்புறத்தில் சில்வர் தடுக்குகளால் பிரிந்திருந்த பார்சல் கட்டித் தருமிடத்தில் காத்திருந்தவர்களின் முகங்கள் பளபளத்தன. வட்ட வட்டமாக இருந்த மாடர்ன் அடுப்பு துளைகள் சாம்பார், குருமாவை சுடுநீரில் புகைக்க, நடுவில் ஐந்து வரிசைகளில் டேபிள்கள், சேர்கள் ஓயாமல் நின்றன. சுவர்களில் பிரேக்பாஸ்ட் காம்போ, லஞ்ச் காம்போ, டின்னர் காம்போ, பங்சன் ஆர்டர்கள் எடுக்கப்படும் போன்ற ஸ்டிக்கர்கள் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்தன.
“ஒரு மசாலா தோசை”, “அஞ்சாவது டேபிளுக்கு பில்” என்ற சத்தத்துடன் சர்வர்கள் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருந்தனர். ஓட்டல் நடுவிலிருந்த வட்டமான தூணில் பரட்டைத் தலை பையன் ஆளுயர பாட்டிலில் சாய்ந்தவாறு செவன் அப் குடித்துக் கொண்டிருந்தான். அந்த தூணருகே ஆயிரமாண்டு காலமாய் தவம் செய்யும் துறவியாய் அசையாமல் நின்றார் அவர்.
அவனா, அவரா என்று தீர்மானிக்க நரைத்த தலை உதவியது. முதல் பார்வையில் அவர் நிற்பதை கவனித்து விட்டால் சற்று ஆச்சரியம் ஏற்படலாம். ஐந்தாவது படிக்கும் பையன் அளவே உயரம். மெல்லிய உடல். வட்ட முகம். கண்களில் அமைதி கருவிழியாய் ஒட்டியிருக்க அதில் ஒரு வசீகரமிருந்தது. வெளிர் நீல ஓட்டல் யூனிபார்ம் சாயம் போயிருந்தாலும் சுத்தமாய் துவைத்து அணிந்திருந்தார். பணியாளர்கள் இங்குமங்கும் சத்தத்துடன் சென்று கொண்டிருக்க புயலின் நடுவில் உறைந்திருக்கும் அமைதித் துளியென நின்றவரைப் பார்க்கையில் பாவப்பட்ட உலகின் கடைசிப் பிரதிநிதி எனத் தோன்றியது. அவரைப் பார்த்தவாறு நான் அமர்ந்திருந்தேன். ஓட்டலை மூடும் அறிகுறியாக ஷட்டர்களை இறக்கிக் கொண்டிருந்தனர். எனக்கு அவசரமே இல்லை. நிதானமாக தோசையை மென்றேன்.
சென்னையில் வேலை கிடைத்து வந்ததும் அங்குமிங்கும் அலைந்து விட்டு கடைசியாக சத்யா லாட்ஜில் செட்டிலானேன். அதற்கு எதிர்த்தாற் போலிருந்தது இந்த ஓட்டல். மெஸ்ஸில் உணவு சரியில்லாத நாட்களில் இங்கு சாப்பிட வருவது வழக்கம். முதல் சில நாட்கள் அவரை நான் பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்த வேண்டிய ஆளுமில்லை அவர். உலகில் எவருமே கண்டு கொள்ளாத காற்றைப் போன்றவர். ஆனால் எங்குமிருந்தார். ஒரு டேபிளில் சாப்பிட்டு முடித்ததும் வேகமாக சென்று இலை எடுத்து, டேபிளை துடைத்து விட்டு மீண்டும் தூணுக்கருகே வந்து நின்று கொள்வார். கஸ்டமர்கள் அதிகமில்லாத நண்பகல் வேளைகளில் ஓட்டல் முழுவதையும் கழுவி, துடைப்பார்.
அவரை நான் கவனிக்க துவங்கியதன் முதல் காரணம் அவர் வேலை செய்த விதம். சுத்தமான துணியை நீட்டாக மடித்து கவனமாக துடைப்பார். உலகிலேயே அற்புதமான வேலையை செய்வது போல ரசித்து செய்வார். அடிக்கடி வேறொரு புதிய துணியை மாற்றிக் கொள்வார்.
மற்றொரு முறை எனக்கு எதிரே முதுகைக் காட்டி அமர்ந்திருந்தவர் ஆங்கில நாளிதழை விரித்து படித்துக் கொண்டிருக்க தூணோடு நின்றவரின் கண்கள் பேப்பரை வேகமாக படிப்பது போல இங்குமங்கும் அலைவதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். வெறுமனே வேடிக்கை பார்க்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
அதன் பின்னர் ஓட்டலுக்கு வரும்போதெல்லாம் ஏதோவொரு ஈர்ப்பினால் வித்தியாசமான ஜந்து ஒன்றைக் கவனிப்பது போல தொடர்ந்து கவனிக்க தொடங்கினேன். எனது மாடியிலிருந்து பார்க்கும்போது ஓட்டலுக்கு பின்னால் இரவில் அவர் பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பது தெரியும். அதிகாலையில் ஓட்டலுக்கு வெளியே பெருக்கி கொண்டிருப்பார். வீட்டுக்கு செல்வாரா என்பது கூட சந்தேகமாக இருந்தது. அவருடன் யாராவது பேசி நான் பார்த்ததில்லை. அவரை யாரும் சட்டை செய்ததுமில்லை. அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் டேபிளை சுத்தம் செய்வதை என்னவோ சமூகத்தை சுத்தப்படுத்துவது போல கண்ணும் கருத்துமாய் செய்வார்.
ஒரு முறை சேரில் அமர்ந்த போது டேபிளை துடைக்க வந்தவரிடம் “உங்க பேரு?” என கேட்டேன்.
ஸ்விட்சை அழுத்தியதும் சிரிக்கும் பொம்மையைப் போல ஒரு எலெக்ட்ரிக் புன்னகையை உதிர்த்து விட்டு தூணுடன் ஐக்கியமானார். ஊமையெனத் தெரிந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதனால்தான் இவ்வளவு வேலை வாங்குகிறார்கள் என்பது புரிந்ததும் பரிதாபமாய் இருந்தது. டிப்ஸ் கொடுத்தால் வாங்கிக் கொண்டு புன்னகைப்பார். எப்போதும் ஷேவிங் செய்து பளபளப்பாய் இருக்கும் முகத்தில் வெள்ளைப் பற்கள் சிக்கனமாய் தெரியும்.
“யோவ் அஞ்சாவது நம்பர் டேபிளை தொடச்சூடு, பிளேட் இல்ல பாரு” என்று சர்வர்கள் சத்தமிட்டால் மின்னலாய் சென்று வேலையை முடித்து விட்டு வந்து நின்று கொள்வார்.
மற்றொரு முறை சர்வரிடம் “யாரு அவரு?” என்று விசாரித்தேன்.
“அந்தாளு இந்த ஓட்டல்லயே பத்து, பாஞ்சு வருசமா இருக்கானாம். யாரு என்னனு தெரியாது”
“வீடு எங்க இருக்கு?”
“ஓட்டலுக்கு பின்னாடி இருக்க ஸ்டோர்ல தங்கிக்குவான். எங்கியும் போவ மாட்டான். நைட் வாட்ச்மேன், வேலையாளு, கூட்ட, புடிக்க எல்லாம் அவன் தான்”
“பேரு?”
“ராஜமுத்து”
ஒற்றை மண் துகளில் உருவாகி பாதியில் நின்று விட்ட பிழையான முத்து என நினைத்திருக்கிறேன். வேறொரு முறை ஓட்டல் ஓனரிடம் பில்லுக்கு பணம் கொடுக்கையில் “அவருக்கு சொந்தமெல்லாம் யாருமில்லையா?” என்று கேட்டேன்.
“அவன் எங்கப்பா காலத்துல இருந்து இருக்கான். நம்பிக்கையான ஆளுன்னு சொல்வாரு. அதே மாதிரி ஒரு பொய் பொரட்டு கெடையாது. லீவு கேட்க மாட்டான். மெஷின் மாதிரி வேலை செஞ்சிட்டு கிடப்பான்”
“சம்பளம்?”
என்னை ஒரு மாதிரியாக பார்த்தவர் “அவனோட அக்கௌண்ட்ல போட்ருவோம். என்ன செய்வான்னு தெரியாது. கேட்டா சிரிப்பான்” என்று கூறி விட்டு பேப்பரில் எதையோ அவசரமாய் கிறுக்க துவங்க, மேற்கொண்டு ஏதும் பேச விரும்பவில்லை என்பது புரிந்தது.
அதன் பின்னர் ஓட்டலுக்கு சென்றால் அவரைப் பார்ப்பதையும், அவருக்கு தனியாக டிப்ஸ் கொடுப்பதையும் வழக்கமாய் வைத்து கொண்டேன். ஓட்டலுக்கு நிறைய பேர் வந்து சென்றாலும் சில நாட்களில் அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டது தெரிந்தது. டிப்ஸ் தந்தாலும், தராவிட்டாலும் ஒரு புன்னகை மட்டுமே.
போன மாதம் ஞாயிற்று கிழமையன்று இயற்கையின் காவலர்கள் என்ற தன்னார்வகுழு நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கூல் ஒன்றில் மரங்களை நட்டு விட்டு பைக்கில் திரும்பி வந்தேன். இரவு பதினோரு மணியிருக்கும். பெட்ரோல் பங்கைத் தாண்டி பெட்டிக்கடையருகே செல்லும்போது கடைக்காரருடன் ராஜமுத்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கவனித்தேன். உடலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத மிடுக்கான குரல். அவரைத் தாண்டியதும் ஊமை போல் நடித்து ஏமாற்றுகிறான் என்பது திடீரென்று உரைக்க, கடுப்புடன் திரும்பிப் பார்த்தேன். என்னை கவனிக்காமல் ராஜமுத்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
ஏமாற்றப்பட்ட உணர்ச்சியும், கோபமும் மனதை கொதிக்கச் செய்ய வெறுப்புடன் அறைக்கு வந்தேன். படுக்கையில் விழுந்தாலும் தூக்கம் வராமல் படுத்தியது. உலகில் ஏமாற்றுவதும், ஏமாறுவதும் புதிய விசயமில்லை. இளகிய மனமே முட்டாளாவதற்கான முதல் தகுதியாய் இருக்கிறது. எனது உதவும் குணத்தை பயன்படுத்திக் கொண்டது அவனுடைய தவறு என தேற்றிக் கொண்டு தூங்கினேன்.
மறுநாள் ஆபீசுக்கு லேட்டாக சென்று வேலைகளை செய்யும் போதும் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. மாலையில் திரும்பி வரும் போது நேராக பெட்டிக்கடைக்கு சென்று பைக்கை நிறுத்தினேன். மனதின் பொருமல்களுக்கு சில தகவல்கள் தேவையாய் இருந்தது. அடிக்கடி வார இதழ்களும், பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்குவதால் கடைக்காரர் ஓரளவு பழக்கம். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு,
“அந்த ஓட்டல்ல குள்ளமா இருப்பாரே…. ராஜமுத்துனு… உங்களுக்கு தெரியுமா?” என துவங்கினேன்.
“தெரியுமாவா. அவனும் நானும் அந்த கால கிளாஸ்மேட்ஸ் தம்பீ”
“ஏன் ஊமை மாதிரி நடிக்கிறார்?”
“நடிக்கிறானா?” அவர் முகத்தில் சற்றும் கோபம் தெரிந்தது. “யாருட்டயும் அதிகம் பேசமாட்டான். அவ்ளதானே. ஊமைன்னு உங்க கிட்ட சொன்னானா?”
திடீரென உரைத்தது. யாருமே சொல்லவில்லை. நானாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. எவ்வளவு எளிதாக நமது எண்ணங்களுடனும், மற்றவர்களைக் குறித்த மதிப்பீடுகளுடன் வாழ்ந்து விடுகிறோம். இவரிடம் கேட்டிருக்காவிட்டால் ராஜமுத்து ஒரு பிராடு என்று முடிவு செய்திருப்பேன். அது மட்டுமில்லாமல் அவரைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பைக் கொட்டியிருப்பேன்.
“இல்ல. ஏன் ஓட்டல்லயே தங்கியிருக்காரு? குடும்பம் இல்லையா?”
“அவனுக்கா!” பெரிய நகைச்சுவையை கேட்டது போல அனுபவித்து சிரித்தார். எனது குழப்பத்தை ரசிப்பது கண்கூடாய் தெரிந்தது. “சக்தி ஸ்டோர் தெரியுமா?”
இதே மெயின் ரோட்டில் ஏழெட்டு கடைகள் தாண்டி சக்தி ஸ்டோர் இருந்தது. பெரிய மளிகைக்கடை. எல்லா நேரத்திலும் கும்பலாய் இருக்கும்.
“ஆமாம்”
“அதுக்கடுத்து இருக்க பெரிய வீட்டை பாத்திருக்கீங்களா. சிக்னல்ல இருந்து பார்த்தா தெரியுமே?”
பைக்கில் செல்லும்போது பார்த்திருக்கிறேன். மெயின் ரோட்டிற்கு அருகே காம்பவுண்டுடன் பெரிய கேட்டும், சதுரமான கருங்கற்களால் பாவப்பட்ட நீண்ட பாதையும் தெரியும். பாதையின் இருபுறத்திலும் அழகுக்காக உயரமான மரங்களை வளர்த்திருப்பார்கள். தொலைவில் தெரிந்த வீட்டின் முன்னால் கார்கள் எப்போதும் நிற்கும். ‘மெயின் எடத்துல இவ்வளவு காலி இடத்தோடு வீடா!’ என வியந்ததுண்டு.
“பாத்திருக்கேன்”
“அந்த வீட்டு ஓனர் இவன்” என்றவரின் முகத்தில் புதிருக்கான விடையை அவிழ்த்த மேஜிசியனின் மகிழ்ச்சி தெரிய,
‘எது’ என்று சற்று அதிர்ந்து விட்டு “உண்மைய சொல்லுங்க” என்று சிரித்தேன்.
இம்முறை அவரின் முகம் சீரியசாக “அட உண்மையிலுமே அந்த வீட்டு ஓனரோட கடைசி பையன். இவனுக்கு முன்னாடி மூணு அண்ணனுங்க, ஒரு அக்கா. கட்டை வெரலாட்டம் இவன் அஞ்சாவது. சரியா வளராம சின்ன பையனாட்டமே இருப்பான். இவனுக்கு கல்யாணம் பண்ண யாருமே பொண்ணு குடுக்கல. வெளியூர்லருந்து ஒரு ஏழைப் பெண்ணைக் கட்டி வச்சாங்க”
“சிகரெட்” என்று ஒருவர் கேட்க, அவருக்கு சிகரெட்டும், மீதி சில்லறைக்கு பாக்கும் தந்து விட்டு திரும்பினார். ராஜமுத்துவின் கதையை சொல்வதில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம் என தோன்றியது.
“எங்க உட்டேன். ஹான்… அவங்க அப்பா செத்ததும் ஏகப்பட்ட சொத்துப் பிரச்சனை. சண்டை போட்டா தானே இப்பெல்லாம் நியாயம் கிடைக்கும். இவன் ஏமாளி. பாசக்காரன். அம்மா பேர்ல இருந்த அஞ்சு ஏக்கர் நெலத்த மட்டும் எழுதி குடுத்துட்டு தொரத்தி உட்டுட்டாங்க”
“இவரோட குடும்பம்?”
“அந்த பொண்ணு இவன் கூட சண்டை பண்ணிட்டு சொந்த ஊருக்கே போயிருச்சு. நாலஞ்சி தடவ போயி கூப்பிட்டுப் பார்த்தான். வரல. என்ன சொல்லித் திட்டுச்சோ தெரியல. சுத்தமா விட்டுட்டான். விதி”
“அவங்க வீட்ல கூட புத்தி சொல்லலியா?”
“அதெல்லாம் தெரியல. கேட்டாலும் சொல்ல மாட்டான். சிரிப்பான். இவனுக்கு ஒரு பையன் கூட பொறந்தான். என்னாச்சோ”
“இவரோட நெலத்துல வீடு கட்டிட்டு நிம்மதியா இருக்கலாமே?”
“அந்த மவராசி போவும் போது அதையும் எழுதி வாங்கிட்டு போயிட்டா. பையனாவது நல்லா இருக்கட்டும்னு எழுதி குடுத்துட்டான்”
“இவரோட சம்பளம்?”
“மாசாமாசம் அந்த பொம்பள பேருக்கு அனுப்பிட்டு இருக்கான். இவனுக்குனு எதையும் சேர்த்து வச்சிக்கிறதில்ல”
“எப்ப விட்டுட்டு போனாங்க?”
“அது இருக்கும் இருபது வருசம்”
சிகரெட் விரலை சுட கீழே எறிந்தேன். மனம் பாரமாய் இருந்தது. போலாமென நகரும்போது “அவரோட ஒய்ப் எந்த ஊரு?” என்றேன்.
“ஈரோட்ல சென்னிமலை” என்றதும் திடுக்கென்றது.
“தெருவோட பேரு, அட்ரஸ் ஏதாவது தெரியுமா?”
“பொண்ணழைக்க நானும் போயிருந்தேன். கோயில் பக்கத்துல இருக்கும் அவங்க வீடு” என்று விலாவாரியாக கூறினார்.
நாலைந்து நாட்களுக்கு முன்னால் ஊருக்கு சென்ற போது திடீரென ராஜமுத்துவின் நினைவு வர, அவர் மனைவியிருக்கும் தெருவிற்கு சென்று வரலாமென்று தோன்றியது. எனது ஊருக்கு பக்கத்தில் இருந்தது சென்னிமலை. சாயப்பட்டறைகள் அதிகமிருக்கும் சிறிய ஊர். நண்பனிடம் விவரத்தைக் கூறி,
“போயி பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்க,
“ஏண்டா உனக்கே அவரு பழக்கமில்லைனு சொல்ற. போயி என்னனு கேட்ப. இந்த வயசுல அவங்கள சேர்த்து வைக்கப் போறியா?” என்று சிரித்தான்.
புடலங்காயோட நுனியில் கல்லை கட்டி இயற்கையை மாற்றும் விவசாயி நான். மனிதர்களின் மனமும் அப்படித்தான். சரியான தூண்டுதல் இருந்தால் மாறக் கூடும் என்று நினைத்தவாறு “சும்மா போயி பேசி பார்ப்போமே. இத்தனை வருசத்துல மனசு மாறியிருக்கலாம். அவரை சேத்துக்கிட்டா கடசி காலத்தையாவது நிம்மதியா கழிப்பாரில்ல” என்றதும் சலித்துக்கொண்டான்.
“உனக்கு இதே வேலைடா. போன வருஷம் ஒரு வயசானவனை அவனோட மவனோட சேர்த்து வைக்க அலைஞ்ச. இந்த வருஷம் இதா?”
“சேத்து வச்சனா இல்லையா. எல்லாரும் அவங்கவங்க வேலைய பாத்துக்கிட்டு போனா என்ன பிரயோசனம். வா போலாம்” என்று இழுத்துக் கொண்டு புறப்பட்டேன். கோயில் பக்கத்தில் அந்த பெண்ணின் பெயர் சொன்னதுமே எளிதாக கண்டு பிடிக்க முடிந்தது. கடைக்காரர் கூறிய ஓட்டு வீடு மாடி வீடாயிருந்தது. காம்பவுண்டின் இரண்டு புறங்களிலும் வெள்ளை, ரோஸ் கலரில் காகிதப்பூ மரங்கள் இருந்தன.
என்ன கேட்பது, என்ன பேசுவது என எதுவும் தோன்றாமல் மனிதத்தை மட்டும் நம்பி காலிங்பெல்லை அடித்தேன். கதவைத் திறந்த பெண்ணிற்கு நாப்பது வயதிருக்கலாம். குண்டாக இருந்தாள். முகத்தில் தெரிந்த அழகின் மிச்சம் சென்னைவாசிகள் சென்னிமலைக்கு வந்து மணம் முடித்ததன் காரணத்தைக் கூறியது.
அவள் கேள்வியுடன் பார்க்க..
“சென்னைலருந்து வர்றேன். ராஜமுத்துக்கு தெரிஞ்சவன்”
“செத்து போச்சா அது?”
மனதில் சுருக்கென்று வலித்தது. “இல்ல. நான் பக்கத்து ஊருனு தெரிஞ்சதும் பார்த்துட்டு வர சொன்னாரு”
“என்ன பாக்கணும்?”
உள்ளே வா என்று கூறாமல் வாசலை மறித்தவாறு அந்த பெண் பேச, எப்படி தொடர்வது என தடுமாற்றமாய் இருந்தது.
“நீங்க, பையனெல்லாம் நல்லா இருக்கீங்களானு கேட்டுட்டு வர சொன்னாரு”
“அந்தாளுக்குதான் வேலை வெட்டி இல்லன்னா உனக்கும் இல்லையா?”
“யாரும்மா?” என்ற வயதானவர் வெளியே செல்ல தயாராக சட்டை பட்டனை போட்டுக் கொண்டே வந்தார்.
“சென்னைல இருக்க உங்க மருமவன் ராஜமுத்தோட பிரண்டாம்”
வாசலுக்கு வந்த பெரியவர் அவர்களை பார்த்து விட்டு “உள்ள வாங்க” என்று சொல்ல,
“அதெல்லாம் வேணாம். ஊடு பூந்து திருடறதா சொல்றாங்க. ஏதாவது குடுத்து அனுப்புச்சா?” என்று கேட்டாள்.
“இல்ல. பாத்துட்டு வர சொன்னாரு”
பெரியவர் எங்களை உற்று பார்த்து விட்டு படிகளில் இறங்கி வெளியே சென்றார்.
“பாத்தாச்சில்ல. போங்க” என்றதும் அசிங்கமாக உணர்ந்தேன். என்னுடைய ஈகோ கோபமாக உருவெடுக்க சட்டென வார்த்தை தெறித்தது.
“புருஷனை விட்டுட்டு இப்படி வாழ்றது ஒரு வாழ்க்கையா?”
“அதுவே ஒரு அவலட்சணம். இதுல புருஷலட்சணமாம்” என்று அவள் கதவை அடித்து சாத்தி விட்டு செல்ல,
“ஆளையும் மூஞ்சையும் பாரு. மரியாதையா பேசக்கூட தெரியல. உனக்கு தேவை தாண்டா இதெல்லாம். போலாம் வா” என்றான் நண்பன்.
அவமானத்தில் மனம் குறுகிப் போக தலைகுனிந்தவாறு பேசினேன். “மரத்த விட இங்க நெறைய மனுசங்களுக்கே அரவணைப்பு தேவைப்படுதுரா. கருப்பு, வெள்ளை படம் மாதிரி ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்காரு. ஏதோ என்னால முடிஞ்சது. அந்த கஷ்டத்துக்கு முன்னாடி இந்த அசிங்கம் பெருசில்ல”
பைக்கில் ஏறும் போது அரச மரத்தடியில் நின்று அந்த பெரியவர் கைகாட்டுவது தெரிந்தது.
“பைக் எடுத்துட்டு வாடா” என்று சொல்லி விட்டு அவரிடம் சென்றேன்.
“நீங்க ராஜமுத்து பிரண்டா?”
“ஆமாம்”
“எப்படி இருக்காரு?”
“நல்லாருக்காரு”
“ஏதாவது சொல்லி அனுப்புனாரா?”
“நல்லா இருக்காங்களான்னு பாத்துட்டு வர சொன்னாரு. நீங்க?”
“அவளோட அப்பா. இவங்களுக்கு கல்யாணம் நடந்தப்ப சூதுவாது தெரியாத தங்கமான பையன் அவரு. உயரம் மட்டும் தான் இல்ல. எஸ்பிபி மாதிரி அம்சமா பாடுவாரு. பயங்கர புத்திசாலி. அப்பவே இங்கிலீஸ் நியூஸ் பாப்பாரு. இங்கிலீஸ்ல பேசுவாரு”
எனக்கு ஆச்சரியமாக இருக்க “அப்புறம் எப்படி சொத்தையெல்லாம் விட்டாரு?” என்றேன்.
“பாழாப்போன பாசம். அவங்க வீட்ல அஞ்சு நாய் இருந்தது. அதுல ஒரு நாயி செத்தப்ப அப்படி அழுதாரு. நாலஞ்சி நாளு சாப்பிடவே இல்ல. அவங்கம்மா திட்டி தான் சாப்பிட வச்சிது. அவரு நெனச்சிருந்தா அண்ணன், அக்கா அத்தனை பேரையும் கோர்ட்டுக்கு இழுத்துட்டு போயி கிழிச்சிருக்கலாம். போயித் தொலைங்க மனுசங்களா உங்களுக்கு தேவை பணம் தானேனு தூக்கி எறிஞ்சிட்டு வந்தவரு. உலகத்துல பலவீனமான மனுஷன் பாசம் வச்சிருக்கவன் தான்”
“உங்க பொண்ணு ஏன் விட்டுட்டு வந்தாங்க?’
அவர் முகம் துயரத்தில் சிறுத்தது. “பேராசை. நல்ல சோறு கெடச்சதும் நல்ல உடுப்பு வேணும். அது கிடைச்சதும் நல்லா அழகு பண்ணிக்கணும். அழகானதும் அந்த பையன் குட்டையா இருந்தது கண்ணுக்கு தெரிஞ்சிது. வேற நல்ல ஆளா புடிக்கணும்னு தோணிருச்சி”
“வேற ஆளா?” என்று அதிர்ந்தேன்.
“அவரை வேணாம்னுட்டு வந்து இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவன் பேச்சைக் கேட்டு சொத்தை எழுதி வாங்குனா. ஒரு வார்த்தை அவரு ஏன்னு கேட்கல. சொத்துக்காகத்தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டானு தெரிஞ்சி இருந்தாரு. ஆனாலும் தங்கமா தாங்குனாரு. அவரை உயிரோட கொன்னதுல இவளுக்கும், இவங்க அம்மாவுக்கும் பங்கு இருக்கு”
மனசு கனத்து போக “அவரோட பையன்?” என்றேன் சுரத்தில்லாமல்.
“அவன் அவ சொல்றதை அப்படியே கேட்கறவன். பெருசா எந்த விஷயமும் தெரியாது. இனிமேல் எத சொல்லி என்ன பிரயோஜனம்னு விட்டாச்சு”
இதற்கு மேல் இவரிடம் எதுக்காக பேசுகிறோம் என தெரியாமல் கடைசியாக “அவரு உங்க பொண்ணுக்கு மாசாமாசம் இன்னும் பணம் அனுப்புறாரு தெரியுமா?” என்றேன்.
குரலில் தென்பட்ட கோபத்தையும், கோபத்தில் இருந்த நியாயத்தையும் ஏற்கனவே உணர்ந்தது போல, “தெரியும். ரெண்டு நாளு லேட்டானாக் கூட திட்டிக்கிட்டு இருப்பா” என்றார் தலையை குனிந்தவாறு.
‘அவரை பிடிக்கல, அவரோட காசு மட்டும் புடிக்குதா. நாக்கை பிடுங்கிட்டு சாவுங்கடா’ என்று கத்த தோன்றியது. அதனால் எந்த பயனுமில்லை. மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமலிருக்க “நான் வர்றேன்” என்று புறப்பட்டேன்.
“அவரை நல்லா பாத்துக்குங்க தம்பி. உலகத்துல உங்களையெல்லாம் விட்டா வேற யாருமில்லை அவருக்கு”
‘அட போங்கய்யா’ என்ற எண்ணத்துடன் தலையாட்டி விட்டு பைக்கில் ஏறி உட்கார, வண்டி வேகமெடுத்தது.
“லூசாடா அந்தாளு. இவ ஒரு பொம்பளைன்னு எதுக்கு பணம் அனுப்பிட்டு இருக்கான்”
“தெர்லடா. இதையெல்லாம் அவர்ட்ட சொல்லுவோம்”
நேற்றிரவு புறப்பட்டு காலையில் சென்னை வந்து சேர்ந்தேன். ஓட்டல் நேரத்தில் அவரைப் பிடிக்க முடியாது. இரவு பத்து மணிக்கு மேல் கும்பல் குறைந்து கொஞ்சம் ஓய்வாக இருக்கும். அப்போது பேசியே தீரவேண்டுமென்ற முடிவுடன் ஆபீசிற்கு போய் வந்தேன். லேட்டாக சாப்பிட வந்தேன்.
“வேறேதும் வேணுமா சார்?” என்று சர்வர் கேட்க,
“காபி” என்று கூறி விட்டு அவரை மீண்டும் பார்த்தேன்.
எனது மனம் கொதிப்பதையோ, அவரிடம் பேசுவதற்காக காத்திருப்பதையோ அறியாமல் அவர் அமைதியாக இருந்தார்.
காபி குடித்து விட்டு பில்லுக்கு பணத்தை வைக்கும்போது தட்டை எடுப்பதற்கு அவர் அருகில் வர, “உங்க கிட்ட பேசணும்” என்றேன் தீர்மானமாக.
என்னை திடுக்கிட்டு பார்த்தவர் முகத்தில் தெரிந்த உறுதியை கண்டதும் “வெளிய வெயிட் பண்ணுங்க. அஞ்சு நிமிசத்துல வர்றேன்” என்றார். நாளெல்லாம் பேசாமல் சேர்த்து வைத்த ஓசைகள் முத்துகளாய் திரண்டது போலிருந்தது குரல்.
“சரி” என்று விட்டு வெளியே வந்தேன். சிகரெட்டை பத்த வைத்துக் கொண்டு காத்திருந்தேன். எப்படி பேசுவது என்பதை மனதில் ஒழுங்குபடுத்திக் கொண்டேன்.
அமைதியை உடைத்து சில விசயங்களை துவங்குவது கடினமான செயல். அதுவும் அவரிடமே அறிமுகமில்லாமல் இருக்க அவருடைய மனைவி பற்றி பேசுவதற்கு தயக்கமாய் இருந்தது. சில தயக்கங்களை உடைத்தால் தான் தீர்வு கிடைக்கும்.
நிலத்திற்கு பாரமில்லாமல் நடப்பது போல ஓசையின்றி ராஜமுத்து வந்தார். நிழலும் சுருங்கி கிடந்தது. சிகரெட்டை எறிந்து விட்டு அவர் முகத்தை பார்த்தேன். விளக்கு கம்பத்தின் வெளிச்சத்தில் முகத்தில் குழப்பம் தெரிந்தது. அருகில் வந்து அமைதியாக நிற்க…
“சென்னிமலைக்கு போயிருந்தேன்” என்றதும் திடுக்கிட்டார். கண்களில் திகைப்பு ஆர்வமாய் மாற நான் சொல்லப் போவதை உற்று கேட்க துவங்கினார்.
“உங்க குடும்பத்தை பார்த்தேன்”
“எதுக்கு?”
இம்முறை எனக்கு வியப்பாய் இருந்தது. தேவையில்லாமல் அதிக உரிமை எடுத்துக் கொண்டேனோ என்று சந்தேகம் எழுந்தது.
“கடைக்காரர் உங்கள பத்தி எல்லா விஷயமும் சொன்னாரு. நானும் சென்னிமலைதான். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமானு தோணுச்சு. அதான் பார்க்க போனேன்”
“எப்படி இருக்காங்க?”
‘நல்லா இருக்காங்க. உங்களை விசாரிச்சாங்கனு சொல்லலாமா’ என்று ஒருகணம் தோன்றியது. உண்மையை விட பொய் பெரும்பாலும் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருகிறது. அப்படி பொய் சொல்லி இவரை மகிழ்விப்பதா அல்லது உண்மையை சொல்லி திருத்துவதா என்ற கேள்வி எழுந்தது.
“நான் ராஜமுத்தோட பிரண்ட். எப்படி இருக்கீங்கன்னு விசாரிக்க வந்தேன்னு சொன்னேன். வீட்டுக்குள்ள கூட கூப்பிடல. ஏதாவது குடுத்து அனுப்புனாரானு கேட்டுட்டு அந்தாளுக்கு வேலை இல்லைனு சொல்லி அனுப்பிட்டாங்க.”
அவர் முகத்தைப் பார்த்தவாறு நடந்ததை அப்படியே கூறினேன். அவர் புன்னகைப்பதைப் பார்க்க அதிர்ச்சியாய் இருந்தது.
“என்ன… சிரிக்கிறீங்க”
“அவங்க அப்படித்தான்”
“உங்க மாமனார் தனியா வந்து உங்களுக்கு நடந்த கொடுமைகளை சொன்னாரு”
‘ஹ’ என்ற ஓசையுடன் அவர் மீண்டும் புன்னகைக்க எனக்குள் கோபம் ஊறியது. ஒரு மனிதன் பாசக்காரனாக இருக்கலாம். ஆனால் மடையனாக இருக்க கூடாது.
“அவங்க இன்னோரு கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரியுமா?” என்றேன் கோபத்துடன்.
தெரியும் என்பது போல அவர் தலையசைக்க, அதிர்ச்சியாகவும் வெறுப்பாயும் இருந்தது.
“தெரியுமா? தெரிஞ்சுமா பணம் அனுப்பிட்டு இருக்கீங்க?”
“ம்”
“ஏன்?”
“அவங்க என்னை கல்யாணம் பண்ணல. என்னோட பணத்தை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதனால என்னால முடிஞ்சளவு அவங்க தேவையை நிறைவேத்துறேன்”
“நீங்க அவங்களை தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க. அவங்க உங்களோட சேர்ந்து இருக்கலையே. உங்களை ஒரு பொருட்டா கூட மதிக்கலையே”
நீண்ட பெருமூச்சை விடுத்த ராஜமுத்து “பணத்த பெருசா நெனச்சி வாழ்றது அவங்க குணம். அன்பு காட்டுறது என்னோட குணம். அவங்க குணத்தை மாத்திக்க தயாரா இல்லாத போது நான் எதுக்கு மாத்திக்கணும்? எப்படி இருந்தாலும் என்னோட பணத்துல என் மனைவியும் பையனும் வாழ்றதே எனக்கு போதும். இந்த பணத்தை வச்சி நான் என்ன பண்ணப் போறேன். அவங்களுக்கு தேவை இருக்கு. பயன்படுத்தட்டும்”
சின்ன கைகளை அசைத்து அசைத்து அவர் பேச, எனக்கு திகைப்பாய் இருந்தது.
“உங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களுக்கு எப்படி ஹெல்ப் பண்றீங்க?”
“முதல்ல எங்க ஜோடியை பார்த்தீங்கனா தெரியும். நெட்டையும், குட்டையுமா அபத்தமான ஜோடி. ஒரு அருவருப்பான ஆள கட்டி வச்சது இந்த சமூகத்தோட குத்தம். அத மறைச்சிக்கிட்டு தினமும் சிரிச்சி சிரிச்சி பொய்யா வாழறது எவ்வளவு பெரிய நரகம். வெறுப்பு வரத் தானே செய்யும். ஒரே செவுத்துல ஒட்டிக்கிட்டு வாழ்ந்து சாவுற பல்லி நானு. என்னை பறவையோட சேர்த்து வச்சது தப்பு இல்லையா?”
“உங்க பையனுக்காகவாவது அனுசரிச்சு போயிருக்கலாமே?”
“அடுத்தவங்களோட நியாய தர்மத்தை நாம தீர்மானிக்க முடியாது. அதுவும் ஒரு பெண்ணோட வலிய ஒரு பெண்ணா இருந்தாத்தான் உணர முடியும். அவங்க நிம்மதிக்காக தனி வாழ்க்கையை அமைச்சதுக்கு அப்புறம் குறுக்கிட விரும்பல. எது எப்படி இருந்தாலும் அவன் என் பையன் தானே. அத யாராலும் மாத்த முடியாதில்லையா. அவங்க பாசமா இல்லாததால நானும் பாசமா இருக்க மாட்டேனு சொல்ல தோணுல. இன்னும் சொல்ல போனா அவங்ககிட்ட எனக்கு எதிர்பார்ப்பே இல்ல. பணத்தை நோக்கி ஓடி அதோடு பேராசை, போட்டி, பொறாமைனு பலதையும் சேத்துக்குறோம். நாளைக்குனு சேமிச்சு வைக்காத வாழ்க்கை என்னுது. எதை நோக்கி போறோமோ அதை அடையிறோம்”
ஒரு முனிவரைப் போல அவர் பேசிக்கொண்டிருக்க எனக்குள் பணம் மதிப்பிழந்து கொண்டிருந்தது. பணம், பதவி, ஸ்டேட்டஸ், பேமிலி இதற்கடுத்து கொஞ்சம் மனிதமென வாழ்ந்து கொண்டிருந்த நான் “நாளைக்கு உடம்பு சரியில்லாம போனா என்ன செய்வீங்க?” என கடைசி ஆயுதத்தை எறிந்தேன். சுயநலத்தை முதலில் வைத்துக் கொண்டு பொதுநலத்தை பின்னால் வைக்கும் என் போன்றோரின் கடைசி ஆயுதம்.
“அரசு மருத்துவமனை இருக்கு. போன தடவை போனப்ப உடலையும் தானம் பண்ணிட்டு வந்துட்டேன். பிரயோஜனமில்லாத இந்த உடலோட உறுப்புகள் வேறெதாவது சின்ன பையனுக்கு அவசிய தேவையாய் இருக்கலாம். அப்படி பயன்பட்டுதுன்னா நிம்மதியா கண்ணை மூடுவேன். மத்தவங்களுக்கு கூட ஆறடி வேணும். எனக்கு மூணடி போதும்”
வாழ்வை அன்பெனும் கோணத்தில் அவர் கற்றுக் கொடுக்க மனது வலித்தது. “உங்களுக்கு உண்மையாலுமே கஷ்டமா இல்லையா சார்?”
“ஒடம்பை ஒழுங்கா படைக்க தெரியாத ஆண்டவன் எங்களுக்கு மனசுனு ஒன்னு இல்லாமயாவது படைச்சிருக்கலாம். மிருகம் மாதிரி வாழ்ந்து செத்துட்டு போயிருப்போம். எனக்கு விவரம் தெரியாத வரைக்கும் வாழ்க்கை மகிழ்ச்சியா இருந்தது. விவரம் தெரிய ஆரம்பிச்சதும் வேதனையே வாழ்க்கை ஆயிருச்சி. நான் அந்த ஓட்டை உடைச்சி வெளிய வந்துட்டேன். என்னோட ஓட்டல்ல வேலை செய்யற எல்லாரும் எனக்கு குடும்பம் தான். உங்களை மாதிரி இருக்கவங்க தர்ற டிப்ஸெல்லாம் அவங்க கஷ்டத்தை போக்க உதவுது. கஷ்டம், மகிழ்ச்சியோட வரையறையை மாத்திக்கிட்டேன். வாழ்க்கை சந்தோசமாயிருச்சி”
வேறெதுவும் பேச முடியாமல் நான் ஊமையாக “நீங்க இவ்வளவு தூரம் எனக்காக சிரமப்பட்டத நெனச்சி சந்தோஷமா இருக்கு. ஆனா ஒரு உதவி செய்ய முடியுமா?”
“சொல்லுங்க”
“மறுபடியும் அவங்கள பாக்க போகாதீங்க….. தேங்க்யூ”
ஒரு எலெக்ட்ரிக் புன்னகையை வீசி விட்டு திரும்பி நடந்தார். மண் சேர்ந்து உருவாகிய முத்தல்ல அவர். மனம் இறுகி உருவாகிய வைரம் அவர் என்பதை உணர, வாழ்வைக் குறித்து நான் சேர்த்து வைத்த எண்ணங்கள் பொடிப்பொடியாய் நொறுங்கி கொண்டிருந்தது.
********