Ashoka the 2nd

பறம்பின் முதல் போர்

1.         மணக்காடு

தென்பொருப்பு மலையிலிருந்து புறப்பட எத்தனிக்கும் குதிரையின் தலையைப் போன்றிருந்தது குதிரைமலை. அதன் மடியில் காடுகளின் கருவறையாக இருந்த இடம் மணக்காடு.

உலகம் மணங்களால் ஆனது. அந்த மணத்தை அறுவடை செய்யப் பயின்ற நறவர்கள் வாழும் இடம் மணக்காடு.

பூவுலகின் அத்தனை மலர்ச்செடிகளையும் அடுக்கடுக்காக பயிரிட்டு மலையின் பசும் ஏடுகளைப் புரட்டி வண்ணங்களை வாரி இறைத்திருந்தனர். தொலைவிலிருந்து பார்க்கையில் ஒருக்களித்துப் படுத்திருக்கும் மலையரசி கூந்தலில் பலவண்ண  மலர் சூடியது போலிருக்குமிடம். மொய்க்கும் வண்டுகளின்  இசையொலி தூங்கா பூங்கிராமம்.

கிராமத்தைச் சுற்றிலும் மலர்களைப் பயிரிட்டு, அறுவடை செய்து, பதப்படுத்தி நறுமணத்  திரவியங்களை உருவாக்குபவர்கள் நறவர்கள். மலர்களை வெயிலில் உலர்த்தி, பொடியாக்கி, நீரில் கொதிக்க வைத்து அதன் நீராவியை இறுக்கியும், மலர்களை எண்ணெயுடன் சேர்த்து கொதிநிலைக்கு உயர்த்திப் பின் குளிர வைத்தும் பரிமளங்களை வடித்தெடுக்கும் ஆதிக்குடியினர்.

மலர்களின் நாற்றத்தையும், அதிகாலையின் மணத்தையும், மழையின் வாசத்தையும், மகிழ்வின் ரகசியத்தையும், மனிதர்களின் உணர்வுகளையும் குப்பிகளில் சிறைபிடிக்க கற்றவர்கள். நாசிகளின் மூலம் சிந்தையை பணியச் செய்பவர்கள். ஒரு புலனின் வழியே ஐம்புலன்களையும் ஆண்டவர்கள். உலகின் நறுமணங்கள் அவர்களிடம் கைகட்டி ஏவல் செய்தன.

ஒவ்வொரு மலரின் தனித்துவமான மணத்தை திரவியமாய் பிரிப்பது மட்டுமின்றி, ஒரு சில மலர்களைக் கதம்பமாகச் சேர்த்து புதிய வகை பரிமளங்களை உருவாக்குபவர்கள். ஆறறிவு உயிர்களை மட்டுமின்றி ஐந்தறிவு உயிர்களையும் மயக்கத் தெரிந்த வித்தகர்கள். நாகசம்பங்கி திரவியத்தின் இருதுளிகளை மரக்கிளையில் விட்டு வைத்தால் அதன் மணத்தில் கிறங்கி தேனீக்கள் அங்கேயே கூடு கட்டும்.

          இவ்வாறு காய்ச்சும் நறுமணத் தைலங்களை மண் குடுவையிலும், மூங்கில் குழாய்களிலும், கண்ணாடி குப்பியிலும் சேமித்து வைத்தனர்.

நறவப் பெண்கள் உடலில் பூசிக் கொள்ளும் மணமிக்க திரவம் மற்ற குடியினரையும் சுண்டி இழுக்க, தேனையும், தேறலையும் பண்டமாற்றாகத் தந்து நறுமணத் தைலங்களை வாங்கிச் சென்றனர். பாடினிகளும், விரலியர்களும் தேடி வந்து பெற்றுச் சென்றனர்.  நறுமணத்தின் மயக்கத்தில் மனம் கிறங்கினர்.

நறவர்களின் பரிமளம் அரசவைக்குள்ளும், நகரங்களுக்குள்ளும் அடியெடுத்து வைக்க அரசவையின் ஆடை ஒப்பனை பொருட்களில் நறவர்கள் தயாரித்தனுப்பிய பரிமள வகைகள் முக்கியப்  பொருளாயின.

வணிகம் இவர்களின் வாசலில் யாசித்து நின்றது. வணிகத்தின் பொருட்டு மூவேந்தர்களின் அவைக்கு வந்த அயல் நாட்டு  விருந்தினர்களுக்கு பெருமதிப்பு மிக்க பரிசாக அவை வழங்கப்பட, அவற்றின் சிறப்பு கப்பலேறி பயணப்பட்டு யவன நாடுகளையும் அடைந்தது. நறுமணத் தைலங்கள் யவன நாடுகளுக்கும் ஏற்றுமதியாகத் துவங்கின. நாசியில் நுழைந்து மனதை ஈர்க்கும் இந்த பரிமளங்களின் வாசத்தில் அவர்கள் மயங்கினர்.

தேவை அதிகரிக்கவே நறவர்கள் மற்ற தொழில்களை விடுத்து மணக்கும் தைலங்களை முழுமூச்சாய் செய்யத் துவங்கினர்.    வளங்கள் வரிசை கட்டி நின்றன.

கழுகின் அலகினைப் போன்று மலையிலிருந்து நீட்டிய பெரும் பாறையில் நரந்தம்புல் வேயப்பட்ட நாற்பதற்கும் மேற்பட்ட குடில்களும் சில குகைகளும் இருக்க, குடில்களின் வாசலில் கோங்கு, சண்பகம், குளவி, மரோடம், காயா, தில்லை, வகுளம், பன்னீர்ப்பூ, வழை மலர்கள் பரவலாய் வெயில் சருகென உலர்ந்திருந்தன.

கழுகுப் பாறையில் குலதெய்வமான மணக்காட்டு அம்மனுக்கு கிராமத்தினர் பூசை நடத்திக்கொண்டிருக்க, அனைவரது முகங்களிலும் துயரம் சூல்கொண்டிருந்தது. குலத்தலைவன் தாழையன் வெறித்த விழிகளுடன் பார்த்திருக்க, குலமூதாய் அம்மனுக்கு படையலிட்டு கொண்டிருந்தாள்.

வாழை இலையில் மூங்கிலரிசி, பொங்கல், சாமை உருண்டைகளுடன், கனிகளும், மலர்களும் குவிந்திருக்க மணம் தரும்  இலைகள்  புகைந்து கொண்டிருந்தன.  

செல்லுமிடத்தில் இடரின்றிப் பாதுகாக்க மூதாய் சொல்லெடுத்து இறைஞ்சினாள். விசும்பலுடன் ஒலித்த குரலில் உயிரின் ஒலியொன்று நொறுங்கிக் கிடந்தது.  விழிமலர்களில் சுரந்த திரவம் மணமிழந்து இருந்தது. அனைவரது முகங்களிலும் கண்ணீர் வடிய, நினைவுகளின் மடல்களில் குருதி வழிந்தது. தீவர்த்தியைக் காட்டி பூசையை முடிக்கையில் பெண்கள் குலவையிட்டனர். காற்று தளிர்க் கைகளை விரித்து ஆறுதலாய் அனைவரையும் தொட்டுச் சென்றது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் வசித்த இடத்தைப் பிரிந்து செல்ல முடிவெடுத்த பின்னர் அவர்கள் நிகழ்த்தும் இறுதி பூசை அது.  வளத்தைக் கொண்டு வந்த வணிகம் இடரையும் கொண்டு வந்து சேர்த்திருந்தது.  ஆற்றலின் செருக்கொன்று பேருருவம் கொண்டு அடிபணியக் கேட்டு  மிரட்டியது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சேரநாட்டுத் தூதுவன் ஒருவன் மணக்காட்டிற்கு வந்திருந்தான். அவனை வரவேற்று தாழையன் குடிலுக்குள் அழைக்க….

நுழைவு வாயில் தாழ்ந்திருந்த குடிலை ஏளனத்துடன் பார்த்த தூதுவன் வாசலிலேயே நின்றான்.

“தாமதமாக வந்திருக்கிறாய். நறுமணத் தைலம் அனைத்தும் தீர்ந்து  விட்டது. மீண்டும் செய்து முடிக்க இன்னும் சில நாட்கள் ஆகும்” என்று தாழையன் பேச்சைத் துவங்க…

குரலில் இறுக்கத்துடன் “தைலத்திற்காக வரவில்லை”  என்றான் வீரன்.

தாழையனின் புருவம் நெறிய…….

“பின்?”

“சேரமான் கடுங்கோவிடமிருந்து தகவல் கொண்டு வந்துள்ளேன்”

“என்ன தகவல்?”

“இங்கிருந்து தேவையான பூவகைகளை சேகரிக்க மட்டும் சிலரை விட்டுவிட்டு மீதமுள்ள நறவர்கள் அனைவரையும் சேரநாட்டிற்கு வந்து தங்கிக்கொள்ளும்படி சேரமான் உத்தரவிட்டுள்ளார். அங்கு நீங்கள் பரிமளங்களை உருவாக்கத் அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறியுள்ளார்”

“எங்களுக்கு அழைப்பு விடுப்பதன் காரணம்?”

“நீங்கள் உருவாக்கும் பரிமளத்தை யவன மங்கையர் பெரிதும் விரும்புகின்றனர். பெரும் பொருள் தந்து அவற்றை வாங்க முன்வருகின்றனர். அவர்கள் கேட்குமளவு பரிமளத்தை சேரமானால் அளிக்க இயலவில்லை. அதனால் உங்களைக் கரூருக்கு அழைத்துச் சென்று சேரர்களுக்கும் திரவியங்கள் செய்வதைக் கற்றுத் தர முடிவெடுத்துள்ளார். நீங்கள் உருவாக்கும் பரிமளம் முழுவதையும் பெரும் பொருள் அளித்து பெற்றுக்கொள்வார். அதன் மூலம் சேரநாடு ஏற்றுமதியில் சோழ, பாண்டியர்களை விஞ்சும்”

“காலம் காலமாக கழுகுப்பாறையில் வாழும் பூர்வ குடி நாங்கள்.  பொன்மழை பொழியும் இடமும் எங்கள் மலைக்கு ஈடாகாது.  நாங்கள் இங்கிருந்தே பரிமளத்தை தருகிறோம் என்று கூறு”

“தைலம் உருவாக்கும் வித்தை சேரநாட்டிற்கு மட்டும் உரித்தான அறிவாக இருக்க வேண்டுமென வேந்தர் விழைகிறார். நீங்கள் தனித்திருந்தால் இவ்வறிவு இடம்பெயர வாய்ப்புள்ளது. இதன் வணிகம் சேரத்திற்கு மட்டுமே கிடைக்க வேண்டும்”

“எங்களின் பெண்கள் உருவாக்கும் வித்தை அது. அதன் நறுமணத்திற்கு இங்கிருக்கும் சூழலும் ஒரு காரணம். எங்களால் வர இயலாது”

“உங்களின் இசைவைப் பெறுவதற்காக வரவில்லை. இரண்டு நாட்களில் வரவேண்டுமென்று கூற வந்துள்ளேன். நீங்கள் வராவிட்டால் சேரத்தளபதி நாகநாடன் வீரர்களுடன் வந்து அழைத்துச் செல்வார் என்று கூற உத்தரவு”.  வீரனின் குரலில் ஆணவம் தெறித்தது.

தாழையன் அதிர்ந்து போனான். சேரத்தின் போர்களில் நாகநாடன் நிகழ்த்திய கொடூரங்களையும், வக்கிரங்களையும் நகரத்தார் கூற கேள்விப்பட்டிருந்தான். செவிகளை நடுங்கச் செய்து,  மனங்களை பதறச் செய்தவை அவை.

“உங்களுக்கு வேறு வழியில்லை. கடுங்கோ எண்ணுவதை நிறைவேற்றுபவர் நாகநாடன். உயிர்களைக் கொள்வதில் இறும்பூதுபவர். அவர் வந்தால் தைலம் தயாரிக்கும் விதத்தை அறிந்தவர்களை மட்டுமே அழைத்துச் செல்வார். மீதி ஆண்களும், சிறுவர்களும் பிழைத்திருப்பது இயலாத செயல்”

தாழையன் ஒலியிழந்து அமர்ந்திருக்க…

“நாளை மறுநாளின் மதியத்தில் தளபதி வருவார். அதற்குள் வந்து சேருங்கள்” என்ற சேரன் சிற்றூரின் மகிழ்வையும் இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

நறவர்கள் ஆயுதங்கள் கையாள்வதை அறியாதவர்கள். வேட்டைக்கு கூட வில்லினைத் தொடாதவர்கள். சிற்றூரைச் சுற்றிலும் காட்டுப் புதர்ச் செடிகளால் இயற்கை வேலி அமைத்து விலங்குகளின் அச்சமின்றி வாழ்பவர்கள்.        

சேரத்தளபதி நாகநாடனை எதிர்கொள்வது ஆயுதத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இயலாத செயல். நாகநாடன் பகைவரின் குருதியில் சிகை முடிப்பவன்.

தாழையன் இடிந்து போய் அமர்ந்திருக்க, நிகழ்ந்தது அனைத்தையும் குடிலினுள் இருந்து கேட்டிருந்த தாழையனின் துணையாள் பயினி மூத்த மகன் வேரலை அனுப்பி, குலத்தினர் அனைவரையும் உடனடியாக கழுகுப்பாறையிலிருந்த குலதெய்வத்திற்கு எதிரில் கூட செய்தாள்.

ஒரு நாழிகையில்  குலமுதியவர்கள் ஒருபுறமும், மூத்த பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க தாழையன் எதிரே நின்றான்.  அருகில் பயினி அமர்ந்திருக்க, அவள் மடியில் கன்னங்களில் குழி விழ மூன்று வயதாகும் இளைய மகன் சூரல் அமர்ந்திருந்தான். கையின் கட்டை விரல் வாயில் இருந்தது.  பயினி கையை  எடுத்து விட எழுந்து ஓடினான்.

 “சேரநாட்டிற்குச் செல்வதே உயிர் பிழைத்திருக்க ஒரே வழி”  முற்றிலும் இடிந்து போன மனநிலையில் ஒரு முதுமகன் துவங்கினான்.

“ஓரறிவு உயிராய் பிழைத்திருப்பதில் அர்த்தமில்லை. சேரனிடத்தில் அடிமையாய் வாழ்வதைவிட மரணத்தைத் தழுவலாம்” என்றான் தாழையன்.

 “எவரும் கண்டறியவியலா நிலத்திற்கு குடிபெயர்ந்து விடுவோம்”

“எல்லைத் தாண்டிச்செல்லும் விலங்குகளாய் ஆவோம்”

“விலங்கினை வேட்டையாடுவது போல நம்மை தேடி வந்து சிறைபிடிப்பான் சேரத்தளபதி. நாம் பாதுகாப்புடன் இருக்க ஒரு நாடு தேவை” என்றாள் பயினி.

வெவ்வேறு திசையில் அலைபாய்ந்த  முடிவுகள் ஒரு நாழிகைக்கு பின்னர் முடிவை நெருங்கியது. காலம் காலமாய் வலிமையை எதிர்கொள்கையில் எளியவர்கள் எடுக்கும் இறுதி முடிவே அது. மணக்காடை நீங்கிச் செல்வது.  

“சேரமானை எதிர்த்து நமக்கு எவரும் அடைக்கலம் தரமாட்டார்கள். சோழ, பாண்டியர்களைத் தவிர”

“மூவரையும் விட மனதாலும், வீரத்தாலும் உயர்ந்தவள் பறம்பின் தலைவி தானவி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றாள் ஒரு முதுமகள்.

“அவளும் நம்மைப்போல பழங்குடியின் தலைவி தானே. சேரப்பேரரசை  எதிர்த்து எப்படி நம்மைக் காக்க இயலும்?”

“வீரம் என்பது அளவில் இல்லை. உதவும் மனதில் இருப்பது. மனதளவில் வானமாய் பரந்தவள் தானவி. பறம்பில் நடந்த கூத்தில் அவர்களைக் கண்டிருக்கிறேன். உறுதியாக உதவுவாள்” என்றார் ஒரு குலமுதியவர்.

“குடியினரை அழைத்துக்கொண்டு அவ்வளவு தொலைவு  செல்லும் முன்னர் அவளைக் கண்டு அவளின் இசைவைப்  பெறுதல் அவசியம். ஆனால் பறம்பிற்கு எப்படி செல்வது?”

“பறம்பிற்கு நாம் செல்ல முடியாது. அவள் நினைத்தால் தான் பறம்பை அடைய முடியும்” என்றாள் முதுமகள்.

“வேறன்ன செய்வது?”

“பறம்பின் காடுகளுக்கும் கண் உண்டு. அதற்குள் நுழைந்து விட்டால்  பறம்பு வீரர்கள் வந்து அழைத்துச் செல்வார்கள்”

“யார் செல்வது?”

 “எனது மூத்த மகன் வேரல் நண்பன் ஒருவனுடன் உடனடியாக புறப்பட்டு செல்லட்டும்.  நமக்கு நேரமில்லை”

“எனில் இப்போதே புறப்படட்டும். நறவர்கள் உயிருள்ளவரை பறம்பிற்கு உயிர்கடன் கொண்டிருப்பர் என்று கூறட்டும்”

சற்று நேரத்தில் வேரல் நண்பன் ஒருவனுடன் பறம்பை நோக்கி புறப்பட்டான். திசையை மட்டும் பற்றுக்கோலாய் கொண்டு இருவரும் விசையாய் சென்றனர்.

மறுநாளின் இரவு துயருடன் இருள் போர்த்தியிருக்க நேரம் நீண்டு கொண்டேயிருந்தது. கிராமத்தின் நடுவிலிருந்த சிறிய இடத்தில் விறகுகளும், நினைவுகளும் எரிந்து கொண்டிருக்க அனைவரும் சுற்றி அமர்ந்திருந்தனர். ஒன்றாக விளையாடிக் களைத்த குழந்தைகள் ஏதோ ஒரு குடிலில் உறங்கச் சென்றனர்.

நெருப்பின் வெளிச்சம் உடல்களை மெய்யாகவும், நிழலாகவும் பிரித்திருக்க, உடலும், உள்ளமும் தனித்திருந்தன. அன்றைய இரவே மணக்காட்டில் அவர்களுடைய இறுதி இரவு என்ற எண்ணம் அனைவரையும் சிதைத்தபடி இருந்தது.  

“பறம்பிற்கு சென்று திரும்ப வேரலுக்கு போதுமான காலமில்லை. மேலும் ஓரிருநாட்கள் ஆகலாம். நாளை மதியத்தில் சேரத்தளபதி வந்து விடுவான். எனவே நாமும் புறப்பட்டு பறம்பின் திசையில் செல்வோம். பறம்பு இசையாவிட்டால் நாம் யாரென்று அறியாதவர்களின் நிலம் தேடிச் செல்லலாம்” என்றான் தாழையன்.

அனைவரும் இசைந்தனர். தீயைச் சுற்றிலும் நினைவுகள் அமர்ந்திருக்க, உடலை சுமந்து கொண்டு உறங்கச் சென்றனர்.

காலையில் சொந்த இடத்தின் வேரினை நீங்கி இலக்கின்றி, மனமின்றி புறப்பட ஆயத்தமாகினர். புதைக்கவும் நமக்கென இனி மண் இல்லை என்ற நினைவு வதைத்தது.

உயிரைத் தொலைத்த முதியவர்கள் வெற்றுடலை சுமக்க, நினைவுகளை மட்டும் சேமித்துக் கொண்டு வாழ்க்கையை இழந்த குலமொன்று இடம் பெயர ஆயத்தமானது.

“குடிலிலிருந்து அவசியமானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தாழையன் கூற, நீண்ட கோலின் இருபுறங்களிலும் பொருட்களை துணியினால் முடிந்தனர். நறவ குலத்தின் செல்வமான மலர்செடிகளின் விதைகளை மட்டும் பயினி எடுத்துக் கொண்டாள்.

கதிரவனின் பொற்கதிர்கள் குதிரை மலையில் படர்ந்த போது  கழுகுப்பாறையை நோக்கி எண்ணற்ற சேரர்கள் செவ்வெறும்புகள் போல வேகமாக ஏறிக் கொண்டிருந்தனர். இடையில் வாளும், தோளில் வில்லும், முதுகில் அம்புகளும் அழிப்பதற்கு ஆயத்தமாயிருந்தன.

மணம் வீசும்.. 

*********

சில குறிப்புகள்

நாற்பதற்கும் மேற்பட்ட பழங்குடிகள் மூவேந்தர்களால் அழிக்கப்பட்டு பறம்பு மலையின் குலத்தலைவன் பாரியிடம் தஞ்சமடைந்தது வரலாறு. சில குலங்கள் அழிக்கப்பட்ட விதத்தை வேள்பாரி நாவலில் ஆசிரியர் திரு சு.வெங்கடேசன் அவர்கள் பேரழகுடன் விவரித்திருந்தார். அதைப் போன்று குலம் ஒன்று அழிக்கப்பட்ட விதத்தை கூறும் குறுகதை இது. 

தாழை, பயினி, சூரல், வேரல்    அனைத்தும் சங்க கால மலர்களின் பெயர்கள்.

2.      உயிர் பிழை

பறம்பு மலையை மெல்லிருளும் மென்குளிரும் சூழ்ந்திருக்க, குடில்களில் புகை வெளியேறிக் கொண்டிருந்தது. பறம்பின் குலத்தலைவி தானவியின் மாளிகையில் பறையின் இசை கொட்டடித்து திரிந்தபடி இருக்க,  தீப்பந்தங்கள் கண்விழித்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்தன. 

மாளிகையின் உள்ளே பாணர்களின் இசையில் மெய்மறந்து உயிர்உருகி அமர்ந்திருந்தாள் தானவி.  அவளின் இணையாக அருகில் அமர்ந்து கூத்தினை பார்த்துக் கொண்டிருந்தான் குலத்தலைவன் வேலேந்தல்.   அவனுக்கு அருகில் அதியல் குடித்தலைவன் வேளியனும்,  பாயல் குடித்தலைவன் வெண்பாவும் அமர்ந்திருந்தனர்.  இருவரும் வேலேந்தலின் உற்ற நண்பர்கள்.  ஐந்து வருடங்களுக்கு பின்னர் பறம்பில் நிகழும் கொற்றவைக் கூத்திற்காக வந்திருந்தனர்.  அனைவரின் முகங்களும் ஆம்பலாய் மலர்ந்திருக்க, இசை நீரலையாய் பரவிக் கொண்டிருந்தது.

இரு இளைஞர்கள் காவலர்களுடன் உள்ளே நுழைய,  அவர்களின் முகம் பதற்றத்தால் அலைபாய்வதைக் கவனித்த தானவி கையை உயர்த்த, பாணர்கள் கூத்தை முடித்துக் கொண்டனர்.

“நீங்கள் ஓய்வெடுங்கள். நாளை பார்க்கலாம்” என்று தானவி எழுந்து வணங்க பாணர்கள் இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு விலகினர்.

இளைஞர்களைப் பார்த்து  “ஏன் இந்த பதற்றம்? யார் நீங்கள்?”  என்றாள் தானவி.

“கழுகுப் பாறையிலிருந்து வருகிறேன். அங்கு வசிக்கும் நறவ குலத்தலைவனின் மூத்தமகன் நான். எங்கள் குடியினர் அனைவரையும் சேரநாட்டுடன் இணையுமாறு சேரமான் உத்தரவிட்டிருக்கிறார். நாங்கள் இணைய மறுத்தால் சேரதளபதி நாகமாடன் எங்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வான் என்று கூறி தகவல் அனுப்பியுள்ளார்”

மனங்களை மணங்களால் ஆள்பவர்கள் நறவர்கள் என்றறிந்திருந்த  தானவி  “உங்களை எதற்காக சேரநாட்டுடன் இணைக்க விரும்புகிறான் கடுங்கோ?”  என்றாள்.

“எங்களது நறுமணத் திரவியங்களை யவன தேசங்களுக்கு அனுப்பி பொருளீட்ட எண்ணுகிறார் சேரமான். சேரர்களுக்கு பரிமளங்களை உருவாக்குவதைக் கற்றுத்தர எங்களை அழைக்கிறார்”

மூவேந்தர்களும் சிற்றரசர்களைத் தாக்கி அழித்து பேரரசுகளாக உருவாகி வருவதையும்,  தங்களது வணிகத் திறனை மேம்படுத்த முயற்சிகள் செய்வதையும் தானவி அறிந்திருந்தாள்.  சமவெளியை மூன்றாய்ப் பிரித்துக் கொண்டவர்கள் முதன்முறையாக மலைத்தொடரில் காலடி எடுத்து வைக்கின்றனர். பேராசையின் நிழல் பழங்குடியினரைத் தாக்கி மலையேறுகிறது’ என்று நினைத்தாள்.

“எப்போது சேரத்தளபதி வருகிறான்?”

“நாளை மதியமென்று வீரன் கூறினான்”

“குதிரைமலை சேரநாட்டின் எல்லையில் இருப்பது. நம்மால் அவர்களை பாதுகாக்க இயலாது”  என்றான் வேலேந்தல்.

“எங்கள் குடியினர் மலையை நீங்கி பறம்பில் அடைக்கலம் அடைய விரும்புகின்றனர். சேரர்களை எதிர்த்து எங்களுக்கு பாதுகாப்பளிக்க பறம்பைத் தவிர வேறெவராலும் இயலாது.  உங்களின் இசைவை வேண்டி எங்களை அனுப்பியுள்ளனர்.  நறவர்களின் இறுதி சொட்டு குருதியும் பறம்பிற்கு உரியதாய் இருக்குமென்று மூத்தோர் உரைத்தனர்”

“இயற்கை எதிர்பார்த்து கொடையளிப்பதில்லை. பறம்பும் அது போலவே”  என்றான் வேலேந்தல்.

“பறம்புமலை அனைவருக்கும் நிழல் கொடுக்கும்” என்றாள் தானவி கணீரென்ற குரலில். முகத்தில் மகிழ்வுடன் வேரல் தலைகுனிந்து வணங்கினான்.

‘காடறியச் சென்ற தேக்கன் முதல் நாள் தானே திரும்பியிருக்கிறான்’  என்று வேலேந்தனின் மனம் சிந்திக்க, ‘கிழக்கு திசைக் காடுகளின் பாதுகாவலை உறுதிப்படுத்த சென்ற முடியன் நாளை இரவே திரும்புவான்’ என்று தானவி சிந்தித்திருக்க…

இருவரின் மன ஓட்டத்தையும் உணர்ந்த குரல் ஒன்று “நான் செல்கிறேன்” என்று ஒலித்தது.

அவையில் இருந்த அனைவரும் திரும்ப அவர்களின் மகள் ஆதிரை நின்றிருந்தாள்.  பருவத்தின் மாயை உடலெங்கும் பேரழகை நெய்திருக்க வில்லேந்தி அம்பெய்த தோள்களும், வாள் வீசிப் பயின்ற கைகளும்,  நிகழ்வைக் கண்டு சினமேறிய முகமும் இறுகி இருந்தன.

நேரத்தையும், தூரத்தையும் தாய் கணக்கிட,  தூரத்தையும் ஆபத்தையும் தந்தை கணக்கிட…

“வேண்டாம். நான் சென்று அழைத்து வருகிறேன்”  என்றான் வேலேந்தல்.

“பறம்பில் நாளை மறுநாள் கொற்றவைக் கூத்து நடைபெற உள்ளது. அதியல், பாயல் என்று நம்முடன் நட்பாயிருக்கும் குடியினர் வந்த வண்ணம் இருக்கின்றனர். நீங்கள் செல்ல வேண்டாம். அவர்களை அழைத்து வருவது மட்டும் தானே. நான் சென்று வருகிறேன்” என்றாள் ஆதிரை. 

“இருபது பேரை அழைத்துக் கொள். நாளை சூரிய உதயத்தில் கழுகுமலைப் பாறையை அடைந்தாகவேண்டும்”  என்றாள் தானவி.

வேலேந்தல்  கவலையுடன் அவளைப் பார்க்க ‘ஒன்றும் ஆகாது’  என்று அமைதிப்படுத்தியது தானவியின் கண்கள். மனமின்றி தலையசைத்த வேலேந்தலைப் பார்த்து கண்களால் சிரித்தாள் ஆதிரை. வீரத்தின் உச்சமெனினும் பேரிளம்பெண் ஆனாலும் மகள் எப்போதும் எந்தைக்கு பேதையே.

‘இளமை இடர்களைப் பொருட்படுத்துவதில்லை. பறம்பின் இளமை இடருக்கே இன்னல் விளைவிப்பதாய் உள்ளதென’ நினைத்தான் வேலேந்தல்.

வேரலை நோக்கித் திரும்பிய ஆதிரை  “நீ சென்று ஓய்வெடு.  நாங்கள் சென்று அழைத்து வருகிறோம்”  என்று கூற..

“நானும் வருகிறேன். எங்கள் மக்களைக் காணாமல் என்னால் கண்ணுறங்க இயலாது” என்றான் வேரல்.

“சென்று வருகிறோம்” என்று விடைபெற்று   நகர்ந்த ஆதிரை “ஒரு நாழிகையில் புறப்பட வேண்டும். அனைவரிடமும் கூறி விடு” என்று அருகிலிருந்த காவல் பெண்ணிடம் கூறி விட்டு மாளிகையினுள் சென்றாள்.      

சற்று நேரத்தில் ஒற்றைக் கண் தீப்பந்தங்கள் வழிகாட்ட பறம்பின் பத்து பெண்களும்,  பத்து ஆண்களும் ஆதிரையுடன்   புறப்பட்டனர்.  நடையுமில்லா,  ஓட்டமுமில்லா வேகத்தில் மலர்களில் மணம் கொய்து செல்லும் காற்றாய் விரைந்தனர்.  இடையில் வாளும்,  தோளில் வில்லும்,  முதுகில் அம்புகளும் காப்பதற்கு காத்திருந்தன.

************

சேர அரண்மனையில் சேரமான் கடுங்கோவின் எதிரில் தளபதி நாகநாடன் நின்றிருந்தான். நறவர்களுக்கு தகவல் சொல்ல தூதுவனை மணக்காட்டிற்கு அனுப்பும் போதே சேரத் தளபதியையும் அழைத்திருந்தான் கடுங்கோ.

“நறவர்கள் சேரநாட்டுடன் இணைவதற்கு இசையமாட்டார்கள். வீரர்களுடன் சென்று அவர்களைக் கொண்டு வா”

“கொண்டு வரவா, கொன்று வரவா?”

நறுமணத் திரவியங்களை உருவாக்கத் தெரிந்த இருபது பேர் தேவை”

உயிர் பறிக்கும் ஆயுதங்களாக உருவெடுத்தன சொற்கள். அவற்றின் மறைபொருளை உணர்ந்த நாகநாதன் தலையசைத்து விட்டு வெளியே வந்தான். உடனடியாக நறவர்களின் கிராமத்திற்கு அருகிலிருந்து அவர்களின் செயல்பாடுகளை ஒற்றறிய ஐந்து வீரர்களை அனுப்பி வைத்தான். மறுநாள் காலையில் இருநூறு வீரர்களுடன் புறப்பட்டிருந்தான்.

ஒற்றர்கள் மணக்காட்டின் அருகில் மறைந்தவாறு கவனித்தனர். முதல்நாள் எந்த மாற்றமுமின்றி சிற்றூர் இருக்க, மறுநாள் காலையில் நறவர்கள் உடமைகளை மரக்கொம்புகளில் முடிவதை பார்த்ததும் மண்டிலங்களால் கதிரவனின் ஒளியை பிரதிபலிக்கச் செய்து சமிக்ஞை காட்டினர்.

நறவர்களைக் கொள்வதற்கு குதிரைமலையை நோக்கி வீரர்களுடன் வந்துகொண்டிருந்த நாகநாடன்,  நறவர்கள் ஊரை விட்டு நீங்கிச் செல்வதை உணர்ந்தான்.  மதியத்தில் மலையேறும் முடிவை விடுத்து உடனடியாக மலையைச் சென்றடைந்து மேலேறுவதற்கு உத்தரவிட்டான். மணக்காட்டை சூழ்வதற்கு கழுகுப்பாறையின் இருபுறத்திலும் வீரர்கள் வெகுவேகமாக மேலேறிச் சென்றனர். 

முகத்தில் ஏளனத்துடன் நாகநாடன் மலைப் பாதையில் மெதுவாக நடந்தான்.

மலையில் ஏராளமாய் வளர்ந்திருந்த குறிஞ்சி, காந்தள், கொன்றை,  காயா மலர்களின் வண்ணங்கள் வரிவரியாய்த் தெரிய,  வானவில் நிலமிறங்கி வண்ணப் படுகையானது போல மலை பரந்திருந்தது.

கண்கொள்ளா காட்சியாக அழகு பூத்திருந்த மலை நாகநாடனை துளியும் ஈர்க்கவில்லை.

இரவுப்பூக்கள் பகலை விரும்புவதில்லை என்பது போல, எண்ணத்தில் இருள் கொண்டவனை இயற்கை ஈர்க்கவில்லை. அழிவு ஒன்றையே எண்ணத்தில் வைத்து மலையில் ஏறிக்கொண்டிருந்தான்.

 “வீரர்கள் மலையேறி வருகின்றனர்” என்று நறவன் ஒருவன் அலற,  நறவர்கள் அதிர்ந்தனர்.

‘மதியத்தில் வரவேண்டிய வீரர்கள் இப்போதே ஏன் வருகின்றனர். சிற்றூரை நீங்கிச் செல்வது எப்படித் தெரிந்தது’ என்று துணுக்குற்ற தாழையன்…

“சிலர் எதிர்த்து நில்லுங்கள். மற்றவர்கள் தென்புறக்காடுகளின் வழியாக பறம்பின் திசையில் முன்னேறுங்கள்”  என்று கத்தினான்.

பெரும் குழப்பமும் பதட்டமும் சூழ்ந்து கொள்ள, குடியினர் இங்குமங்கும் ஓடத் தொடங்கினர். குடில்கள் இருந்த சமவெளி சுத்தமாக்கப்பட்டு கோலங்கள் இடப்பட்டிருக்க, கிராமத்தின் தென்புறத்தில் காடுகள் வேலியுடன் அடர்ந்திருந்தன.  உடமைகளை எடுத்துக்கொண்டு ஆண்களும்,  பெண்களும் கண்ணில் அகப்பட்ட குழந்தைகளை வாரியணைத்து சுமந்தபடி வேலியினூடே நுழைந்து காடுகளுக்குள் ஓடத்துவங்கினர்.

பதற்றத்துடன் ஓடிவந்த பயினி “சூரலைக் காணவில்லை” என்றாள்.

“குழந்தைகளுடன் இருப்பான். தூக்கிக்கொண்டு வெளியேறு” என்றான் தாழையன்.

“குடியினரை அழைத்துச் செல். நாங்கள் மறித்து நிற்கிறோம்” என்றான் ஒருவன்.

“நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றான் மற்றொருவன்.

“தலைவன் என்பவன் குலத்தின் வேலி. அவனைக் கடந்தே குடிகளை அடைய இயலும்.  இன்னல்களை எதிர்கொள்ள முதலிலும், நலன்களைப் பெறுவதில் இறுதியிலும் இருக்க வேண்டும்” என்ற தாழையன்  “நீ செல்” என்றான் பயினியிடம்.

தாழையன் மரணத்தை எதிர்கொள்ளத் துணிந்து விட்டான்.  இனி அவனை மாற்ற முடியாது என்பதை உணர்ந்த பயினி நீரலைத் தேடி ஓடினாள்.

பொருட்களை முடிந்திருந்த கொம்புகளை உருவியெடுத்த நறவர்கள் சேரர்களை எதிர்கொள்ள மலைச்சரிவு மேலேறி சமவெளியை அடையுமிடத்திற்கு ஓடினர்.

“சூரல்…” என்றழைக்கும் பயினியின் குரல் கண்ணீருடன் திரிய,    மலைச்சரிவின் மேலேறி வந்த சேரவீரன் அம்பைப் பொருத்தி நாணை இழுத்து அம்பை விடுத்தான். சீறி வந்த முதல் அம்பு நறவர் குல முதியவனின் நெஞ்சில் பாய்ந்தது.

காடுகளில் வேடர்களாய் அலைந்த பழங்குடியினரே சேரர்கள்.  அவர்களின் முதல் ஆயுதம் வில்லும் அம்புமே.  குறிதவறாமல் அம்பெய்யும் வில்லவர்கள். நாட்டின் கொடியில் வில்லையும்,  அம்பையும் கொண்டவர்கள்.

மற்றொருவரின் அம்பு முதியவன் கழுத்தில் நுழைந்து வெளியேற,  குருதி பீய்ச்சியது.

வெறிகொண்ட நறவர்கள் கொம்பை வீசி இரண்டு வீரர்களை அடித்த வேகத்தில் சேரர்கள் மலையிலிருந்து உருண்டு சென்றனர்.  தனது வீரர்கள் உருண்டு வருவதைக் கண்ட நாகநாடன் வெறியுடன் சிரித்தான். உயிர்களை சிறிதளவும் அவன் பொருட்படுத்தியதில்லை. மலையிலிருந்து துண்டாக வெளியே நீட்டியிருந்த பாறையின் அமைப்பைக் கண்டு அதிசயித்தபடி மேலேறினான்.

குடிலொன்றில் நுழைந்த தாழையன் நான்கு மண் குடுவைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

கண்களில் கண்ணீருடன் ஓடி வந்த பயினி “சூரல்” என்று சொல்ல,

“முன்னே சென்றவர்கள் எவரேனும் அழைத்துச் சென்றிருக்க கூடும். தேட நேரமில்லை. குடிகளை அழைத்துச் செல்” என்ற தாழையன் குடுவைகளை தென்புறத்தின் வேலியில் எறிந்தான்.  சுழன்றெழும்பிய தாழம்பூவின் மணம் நாற்திசைகளிலும் பயணித்து காடுகளின் குரல்வளையை நெரித்தது.

கழுகுப்பாறையின் இருபுறங்களிலும் வீரர்கள் மேலேறி வர, “வா” என்று ஒருத்தி பயினியை இழுத்துக் கொண்டு காடுகளுக்குள் நுழைந்தாள்.  தாழையனை பிரிகையில் பயினி பார்த்த பார்வையில் காதலின் அத்தனைத் துயரமும் கடலாய் பரந்திருந்தது. 

அவர்களைத் துரத்திச் செல்ல முயன்ற சேரவீரர்களை நறவர்கள் அடித்து வீழ்த்தினர். முதிய ஆண்களும், பெண்களும் சிற்றூரின் நடுவில் நின்று சேரர்கள் முன்னேறுவதைத் தடுத்தனர். வீரர்கள் இடையிலிருந்த வாட்களை உருவ, உறுதியை ஆயுதமாய் தரித்து ஆயுதங்களை எதிர்த்து நின்றது ஒரு குலம்.

நறவர்கள் கூடாரங்களில் மறைந்தவாறு சேரர்களை அடித்து வீழ்த்த, சேரர்கள் அம்புகளை எய்து நறவர்களை வீழ்த்தினர்.  தொடர்ந்து மேலேறிய சேரர்கள் வாட்களுடன் பாய, நறவர்களின் ஓலங்கள் மலையெங்கும் எதிரொலித்தன. எண்ணங்களிலும் கள்ளமில்லா குடியொன்று   மூர்க்கமாக வேட்டையாடப்பட, நறுமணத் திரவியத்திற்காக காய்ந்திருந்த மலர்கள் குருதியில் நனைந்தன.

நாகநாடன் சமவெளியை அடைந்தபோது நறவர்கள் பலர் நிலத்தில் சரிந்து கிடந்தனர். சிலர் ஊர்ந்தபடி இருந்தனர்.   கிராமத்தின் நடுவிலிருந்த சமவெளியில் நறவர்கள் நின்றிருக்க அவர்களைச் சூழ்ந்து வாளேந்திய சேரர்கள் நின்றனர். வீழ்ந்து கிடந்த சேரர்களை எழுப்ப முயன்றனர் சிலர்.

இருகைகளையும் உயர்த்தி அசைத்த நாகநாடன்  “மண்டியிடுங்கள்”  என்றான்.

அனைவரும் தயங்க “நிற்பவர்களின் பின்னங்கால் நரம்புகளை வெட்டி எறியுங்கள்” என்று நாகநாடன் இரைய, குடியினர் ஒவ்வொருவராய் மண்டியிட்டனர்.

“பின்காடுகளின் வழியாக சிலர் தப்பிச் சென்றுள்ளனர்” என்றான் ஒருவன்.

வேறெந்த நாட்டிற்கோ அடைக்கலம் தேடிச் செல்கின்றனரா என்று நினைத்த நாகநாடன் “எங்கே செல்கின்றனர்?” என்று நறவர்களைக் கேட்டான்.

அனைவரும் அமைதியாயிருக்க, அச்சம் படிந்த முகங்களை ஒவ்வொன்றாய் பார்த்தான். சேரப் பேரரசரின் சொல்லுக்கு இசையாமல் வெளியேற முயன்ற அவர்களைக் காண்கையில் நாகநாடனின் உள்ளம் வெறுப்பை உமிழ்ந்தது. சேரத்தை எதிர்ப்பவர்கள் உயிர் பிழை உடையவர்கள் என்று நினைத்தான்.

“யார் உங்கள் குலத்தலைவன்?”

மீண்டும் அமைதியே பதிலாயிருக்க, நாகநாடன் தலையசைத்தான்.  வாளை வீசிய சேரவீரன் முதியவன் ஒருவனை வெட்டி எறிந்தான்.

எவரிடமிருந்தும் வார்த்தைகள் ஒலி கொள்ளாமலிருக்க ‘இறப்பிற்கு அஞ்சாதவர்கள் தகவலை வெளியிடமாட்டார்கள். ஆனால் அன்பின் பிடியில் பலகீனமானவன் தலைவனே’ என்றெண்ணி…

“எந்நிலையிலும் குடிகளின் உயிர்களைக் காப்பவனே குலத்தலைவன். தகவல் வெளியேறும் வரையில் ஒவ்வொருவராய் சிதைப்பேன்”  என்று கூறி தலைவனின் மனதைத் தாக்கினான்.

மணக்காட்டிற்கு ஒற்றனாய் தகவல் சொல்ல வந்த சேரவீரன் தலைவன் யாரென்று சொல்ல வாயெடுக்க,  நாகநாடன் கையை உயர்த்தித் தடுத்தான். உடைவதை பிஞ்சில் வளைப்பவன்.  வளையாததை நெருப்பிலிட்டு வளைப்பவன் சேரத்தளபதி.  மீண்டும் தலையசைக்க மற்றொரு வீரன் வாளை உயர்த்தினான்.

“எங்களை அழைத்துச் செல். நாங்கள் வர ஆயத்தமாயுள்ளோம்” என்று தாழையன் அவசரமாய் கூற, அவனை உற்று கவனித்தான் நாகநாடன்.

“உனது குடிகள் எங்கே செல்கின்றனர்?”

“திசைகளைத் துறந்து மனிதரில்லா நிலத்தைத் தேடிச் செல்கின்றனர்”

உண்மையை உரைக்கவில்லை என்பது தாழையனின் முகம் கூறியது. அருகிலிருந்த குடிலில் ஓசை கேட்க….

“குடிலுக்குள் இருப்பவர்களை இழுத்து வாருங்கள்”

அனைத்து குடில்களுக்கும் நுழைந்த சேரர்கள் சிறுவர்கள் சிலரை இழுத்து வந்து  “மண்டியிடுங்கள்”  என்றனர்.

குடிலொன்றில் உறங்கிக் கொண்டிருந்த சூரலை சேரனொருவன் இழுத்து வர, கண்விழித்த சூரல் மண்டியிட்டிருந்த தாழையனிடம் சென்று அவனைக் கட்டிக்கொண்டான்.

தொடர்ந்து மண்ணில் மண்டியிட்டு இருக்க இயலாமல் முதியவர்கள் சிலர் சாய்ந்தனர். சேரவீரன் அவர்களைப் பெருங்குரலெடுத்து அதட்ட சூரல் ஓசையுடன் அழத் துவங்கினான்.

சூரலின் கையைப் பற்றி நாகநாடன் இழுக்க, தாழையனின் கழுத்தை இறுக்கிக் கொண்டு விட மறுத்தான் சூரல்.

சூரலின் கையை முறுக்கிப் பிரித்த தளபதி அவனை இழுத்து செல்ல,  தாழையன் எழுந்து தடுக்க முயன்றான்.  இரண்டு வீரர்கள் கோலினால் அவன் முழங்காலில் அடிக்க, வலியுடன் சரிந்தான்.  சூரலின் கதறல் பேரோலமாய் ஒலிக்க அவனை இழுத்துக்கொண்டு மலைமுகட்டை நெருங்கினான் நாகநாடன்.  அங்கிருந்து பார்க்கையில் பெரும்பள்ளம் தெரிந்தது. வெண்மேகங்கள் மலர்களாய் மலர்ந்திருந்தது. மேலெழுந்த கதிரவனின் பொன்னொளி முழுவதும் படர்ந்து கண்களை கூசச்செய்ய, அலறலுடன் சிறு குரலொன்று மலைச்சரிவில் விழுந்தது.  தாழையன் கண்களை மூடிக்கொண்டான்.  நறவர்கள் அதிர்ச்சியுடன் ஓலமிட்டு கதறினர்.

கொடுவெறியுடன் எழுந்த நறவன் ஒருவன் தளபதியை நோக்கி ஓட, சீறி வந்த அம்பொன்று அவன் முதுகில் பாய்ந்தது.

தாழையனை நெருங்கிய நாகநாடன்  “எங்கே செல்கிறார்கள் அனைவரும்?”  என்று மீண்டும் கேட்டான்.

உடலின் அணுக்கள் கதற அனைவரும் தலைகுனிந்து மண்டியிட்டிருந்தனர்.

பெரியவர்களின் மனதை சிதைக்கவும், பணியச்செய்யவும் குழந்தைகள் உதவுவார்கள் என்றறிந்த நாகநாடன்,

“மற்றொரு சிறுவனை இழுத்து வா” என்றான்.

கண்கள் பார்வையை வெறுக்க, உடல் உயிரை வெறுக்க நிகழ்வதைக் காண பொறுக்காமல் திடீரென்று பாய்ந்தான் தாழையன். இதை எதிர்பார்த்து சுழன்று விலகிய நாகநாடன் வாளை வீச, தாழையனின் தலை உடலைப் பிரிந்து உருண்டோடி மலைமுகட்டிலிருந்து கீழே விழுந்தது.

சினத்திலும், துயரத்திலும் நறவர்கள் துடிதுடிக்க, காற்று விலகிச் சென்றது. சேரர்களை எதிர்க்கும் எண்ணங்கள் சிதைந்திருக்க, நறவர்கள் முற்றிலும் உடைந்திருந்தனர்.

அப்போது மனிதர்கள் இருப்பதைச் சற்றும் பொருட்படுத்தாமல் பாம்பு ஒன்று வேகமாக ஊர்ந்து செல்வதைக் கண்ட வீரர்கள் அதிசயித்தனர். சற்று தொலைவில் மற்றொரு பாம்பு செல்ல, அதனைத் தொடர்ந்து  பல பாம்புகள் வேகமாக நெளிந்து சென்றன.

பாம்புகள் எங்கே செல்கின்றன என்று ஆச்சரியத்துடன் அவைகளை பின்தொடந்த நாகநாடனும்,  வீரர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். கிராமத்தின் எல்லையிலிருந்த வேலிகளில் ஏராளமான பாம்புகள் கொடிகளாய் படர்ந்திருந்தன. சீற்றத்துடன் திரிந்த பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து முறுக்கியபடி இருக்க,  சில இடங்களில் பாம்புகள் குவியலாக உயர்ந்து நெளிந்து கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று தாக்கிய பாம்புகள் முறுக்கியபடி விழுந்தன. குன்று போல மேலேறி வழுக்கி விழுந்த பாம்புகளைக் கண்ட அனைவருக்கும் உடல் சிலிர்த்தது.

தாழம் பூவின் மணம் வீசுவதை உணர்ந்த நாகநாடன் தப்பிச் செல்லும் நறவர்களை பின்தொடராமல் இருக்க, தாழம்பூ தைலத்தை ஊற்றி பாம்புகளால் அரணமைத்து உள்ளனர் என்பதை புரிந்து அதிசயித்தான்.

“நெருப்பு கட்டைகளை உருவாக்கி பாம்புகளை விலக்குங்கள். தேவையெனில் நறவர்களின் மேல் தாவர எண்ணெயை ஊற்றி நடுவில் எறியுங்கள். உடனடியாக தப்பிச் செல்பவர்களை பின்தொடர வேண்டும்” என்று உத்தரவிட்டான்.

குடில்களுக்குள் ஓடிய வீரர்கள் எண்ணெயைக் கொண்டு வந்து ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்தனர். உடைந்து காய்ந்திருந்த  மரக்கிளைகளில் நெருப்பிட்டு வேலியின் மேல் எறிந்தனர்.  வெப்பத்தைத் தாங்க இயலாமல் பாம்புகள் மெதுவாக விலகிச் சென்றன.

“வேகமாக சென்று அனைவரையும் இழுத்து வாருங்கள்” என்று நாகநாடன் கூற, நறவர்கள் சென்ற பாதையில் சேரர்கள் ஓடத்துவங்கினர்.

நறவர்களை அழைத்து வர தாமதாகுமென்று எண்ணிய நாகநாடன் “அனைத்து சிறுவர்களையும் மலைமுகட்டிற்கு இழுத்து வாருங்கள்” என்றான்.

ஒளி தோன்றும்… 

**********

 சில குறிப்புகள்…

சங்க கால துறைமுகங்களில் வாசனைத் திரவியங்கள் அதிகளவில் பாண்டியத் துறைமுகத்திலிருந்து யவன தேசங்களுக்கு ஏற்றுமதி ஆகியள்ளன..

சங்க கால சேரமன்னர்களில் கடுங்கோ என்ற மன்னன் இருந்ததாக மட்டும் குறிப்புகள் உள்ளன.

3

ஆயுத சொல்

 தென்பொருப்பு மலைத்தொடரின் மேல்தளத்தினூடே உயர்ந்த மரங்களும், புதர்களும் மண்டிக்கிடக்க அனைத்து தாவரங்களும் கைகளைக் கோர்த்து அடர்ந்திருந்தன.  இரவா பகலா என்றறிய இயலாவண்ணம் கதிரவனின் ஒளியை மறைத்திருக்க, மெல்லிய ஈரம் காற்றில் படர்ந்திருந்தது.

சிறு கற்களின் மேலும் பாறைகள் மேலும் தாவிச் சென்று கொண்டிருந்தான் ஒரு வேடன். மான் இனத்திற்கு ஓடுவதற்காக படைக்கப்பட்ட கால்களைப் போன்ற நீண்ட உறுதியான கால்கள் தாவிச் செல்ல, நுனிப்பாதங்கள் மண்ணை மாறிமாறி முத்தமிட்டன.  நீண்ட தொலைவு பயணிக்கும் மலைமக்கள் வைத்திருக்கும் மரக்கொம்பொன்றை கையில் பற்றியிருந்தான். மிருகங்கள் தாக்கினால் பாதுகாத்துக் கொள்ள கொம்பின் மேல் பகுதி கூர்மையாக இருந்தது. முதுகில் சிறிய துணி முடிச்சு ஒன்று இருந்தது.

வேகமாக நடந்து கொண்டிருந்தாலும் கூர்மையான கண்கள் பாதையையும், பறவைகள் பறப்பதையும்  நோட்டமிட, செவிகள் மரங்களின் அசைவுகளை உள்வாங்க, நாசி காற்றின் தன்மையை முகர்ந்தபடி இருந்தது.  உணர்வுகளால் சுற்றுப்புறத்தை உணர்ந்தபடி சென்று கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் பின்புறத்திலிருந்து காலடி ஓசைகள் ஒலிக்க, ‘வருவது மனிதர்கள்’ என்று உணர்த்தியது சிந்தை.  கணப்பொழுதில் உடல் இறுக ‘விலங்குகள் துரத்துகிறதா’ என்ற கேள்வி எழும் போதே திரும்பியிருந்தான். திரும்பும் போதே கையில் சுழன்ற ஊன்றுகோல் ஆயுதமாய் உருவெடுத்திருந்தது.

காற்றின் ஈரம் காத்திருக்கும் மழையை உணர்த்துவது போல மூச்சொலியுடன் கலந்திருந்த விசும்பல் வருபவர்களின் துயரத்தை உணர்த்தியது. சில கணங்களுக்கு பின்னர் சிலர் ஓடி வருவது தெரிந்தது. துரத்துவதைக் கொன்றொழிக்க கொம்பை உயர்த்தினான்.

எண்ணிக்கையில் அதிகமானவர்கள் வருவதைக் கண்டு திடுக்கிட்டான். குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஆண்களும் பெண்களும் ஓடி வர, துரத்துவது விலங்குகள் அல்ல வேறு ஏதோ என்பதை உணர்ந்தான். உடுத்தியிருந்த உடைகள் பழங்குடியினர் என்று கூற, விலங்கிடம் மட்டும் பகையைக் கண்டிருந்த வேடன் என்னவாயிருக்குமென குழம்பினான்.

வேடனை நெருங்கிய ஒருவன்  “சேரர்கள் துரத்தி வருகின்றனர். தப்பித்து செல்” என்றபடி ஓட,  திகைத்த வேடன் அவனுடன் இணைந்து ஓடத்துவங்கினான்.

“ஏன் துரத்துகின்றனர்?”

“எங்களைக் கொல்வதற்கு?” என்ற பதிலைக் கேட்டதும் சிந்தை உறைய, ஓடுவதை நிறுத்தினான்.

‘மனிதர்கள் மனிதர்களைக் கொல்வதா’ என்று அதிர்ந்தான். நாடுகளில் நடக்கும் போர்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தான். நிலத்திற்காக நிகழும் இன்னல்களை அறிந்திருந்தான். ஆனால் சேரர்களுக்கு பழங்குடியினரிடம் என்ன வன்மம் இருக்க இயலும் என்று தோன்றியது.

“எங்களை விட்டு விலகிச் செல். உன்னையும் எங்களில் ஒருவன் என்றெண்ணி கொன்று விடுவர்” என்றாள் பயினி.

அவளுக்கு இணையாக ஓடிய வேடன் “எதனால் கொல்ல முயல்கின்றனர்?” என்றான்.

“நறுமணத் திரவியங்கள் உருவாக்கும் எங்களை சிறையெடுக்கவோ கொல்லவோ துரத்துகின்றனர்.  வணிகத்திற்காக.”  பயினி மூச்சிறைப்புடன் ஓடியவாறே கூற, வேடன் திகைத்தான்.

வணிகத்தின் துலாக்கோலில் பொருளை விட குறைந்ததாய் மனித உயிர் மாறிவிட்டதா என்ற திகைப்பு அவன் விழிகளில் தெறிந்தது.

பழகிய செவிகள் காற்றின் சிலிர்ப்பை உணர, வேடன் சுழன்று திரும்பினான். வேகமாக வந்த அம்பொன்று நறவன் ஒருவனின் முதுகில் பாய, அவன் வலியுடன் சரிந்தான்.

மரமொன்றின் மறைவிற்கு நறவனை வேடன் இழுத்து செல்ல  “போய் விடு” என்று இறைந்தபடி ஓடினாள் பயினி.

நறவனின் வாயில் குருதி வெளிப்பட, கண்கள் இருண்டு, தலை சாய்ந்தது. விலங்குகளை வீழ்த்த உருவாக்கப்பட்ட அம்புகள் மனிதனின் உடலில் பாய்ந்து குருதி பெருக்கை ஏற்படுத்துவது பேரதிர்ச்சியாய் இருக்க, ‘விலங்குகளைப் போல மனிதர்களை துரத்தி வேட்டையாடுவதா’ என்ற ஆவேசம் சுழன்றெழ வேடன் எழுந்தான்.  மரத்திலிருந்து புதருக்கும், புதரிலிருந்து பாறைக்கும் இடம் மாறியவன் வில்லையேந்தி ஓடி வந்த சேரனைக் கவனித்தான்.

சேரன் நெருங்கிய கணத்தில் வேடன் வெளிப்பட, அதிர்ந்த சேரன் வாளை உருவி தாக்கினான். உடலை நகர்த்தி கணப்பொழுதில் முன்னேறிய வேடன் சேரனின் மணிக்கட்டைப் பற்றி உட்புறமாக வளைத்து  முறிக்க, சேரன் அலறினான். வாளைப் பறித்த வேடன் அவனிடமிருந்து வில்லையும், அம்பறாத்தூணியையும் எடுத்துக் கொண்டான். வேடன் நகர, திடீரென்று பின்னிருந்து பாய்ந்து தாக்க முயன்றான் சேரன். சரேலென்று விலகிய வேடன் வாளை வீச, வாளின் நுனி சேரனின் கழுத்தை ஒட்டிச் சென்றது.

சேரன் அதிர்ந்து நிற்க, ‘வேட்டையாடப் படுபவனல்ல நான். வேட்டையாடுபவன்’  என்று கண்களால் எச்சரித்தான்.  தனது முதுகிலிருந்து துணியை இடைக்கச்சையாய் முடிந்து வாளை சொருகிக் கொண்ட வேடன் ஓடத்துவங்கினான்.

 களைத்திருந்த நறவர்களின் வேகம் குறைந்திருக்க அவர்களுடன் சென்று இணைந்து கொண்ட வேடன் “எங்கு செல்கிறீர்கள்?” என்றான்.

ஆயுதமில்லாமலிருந்த வேடனிடம் வாளும், வில்லும், அம்பும் இருப்பதைக் கண்ட பயினி நிகழ்ந்ததை உணர்ந்து கொண்டாள்.

“பறம்பைத் தேடிச் செல்கிறோம். திசையை மட்டுமே அறிவோம்”

“மரக்கொம்புகளில் முடிந்திருக்கும் உடமைகளை விட்டு விடுங்கள். குழந்தைகளை மாற்றிக் கொள்ளுங்கள். நேராக வட்டப்பாறையை சென்றடைவோம். அதன் பின்னர் இடப்புறத்தில் கீழிறங்கி நீரோடையை பின்தொடர்ந்து செல்ல வேண்டும்”

சிலர் உடமைகளை எறிந்து விட்டு வேகமெடுக்க, “நீ பறம்பை சேர்ந்தவனா?”  பயினியின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

“அல்ல. எனினும் ஓரளவு வழி தெரியும். காடுகளைக் கற்றவன் நான்”

வேடன் “வேகமாகச் செல்லுங்கள்” என்று கூறுகையில், மீண்டும் காற்றின் ஓசையை உணர்ந்து திரும்பினான். கூட்டத்தின் இறுதியில் வந்த பெண்ணொருத்தியின் முதுகில் பாய்ந்த அம்பு அவளை ஊடுருவி குழந்தையின் உடலை துளைத்து முன்புறத்தில் வந்திருக்க, அலறலுடன் இரு உடல்கள் மண்ணில் சரிந்தன.

முகத்தில் பதைப்பும், உடலெங்கும் சினமும் ஊற்றெடுக்க வேடன் கொந்தளிப்புடன் நின்றான். எண்ணற்ற சேரர்கள் தொலைவில் ஓடிவருவது தெரிந்தது.

“வா” என்று வேடனை அழைத்தான் நறவன் ஒருவன்.

“ஓடுவதெல்லாம் துரத்தப்படும். திருப்பி தாக்குவதே உயிர் பிழைக்கும் வழி”

“நம்மால் என்ன செய்ய இயலும்?”

“ஓடிய காலம் முடிந்தது. இது தாக்க வேண்டிய நேரம்”

“நாங்கள் ஆயுதம் பயிலாதவர்கள். அவர்கள் சேரத்தை ஆள்பவர்கள்”

“காட்டை ஆளும் வேடன் நான். செல்லுங்கள், காத்து நிற்கிறேன்” ஆயுதம் தரித்து  நின்றன சொற்கள்.

********

இரவு முழுதும் பறம்பினர் தொடர்ந்து பயணிக்க, வேரலும், அவன் நண்பனும் தடுமாறினர். அவர்களுக்காக இருமுறை ஓய்வெடுத்த பறம்பினர் அதிகாலையில் வேப்பங்காட்டை நெருங்கினர். முற்றிலும் தூக்கம் கலையாமல் கதிரவன் மேலெழுந்து கொண்டிருக்க…

“கழுகுப் பாறையை நாலைந்து நாழிகையில் சென்றடைந்து விடலாம். சேரர்கள் வரும் முன்னர் அவர்களை அழைத்து வந்து விடலாம்” என்றாள் ஒருத்தி.   

“நாகநாடனை எதிர்கொள்ளவே விரும்புகிறேன்” என்றாள் ஆதிரை. முகத்தில் துளிர்த்திருந்த வியர்வை அரும்புகள் முத்துகளாய் மின்ன, மேலுடல் விம்மித் தணிந்தது.

“ஏன்?”

“சேரத்தின் தளபதி அவன். உயிர்களைத் துன்புறுத்துவதில் இன்பம் துய்ப்பவன். அவனது பெயரே உள்ளத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது”

தொலைவில் சிலர் ஓடிவருவதைக் கண்ட ஆதிரை அதிர…

“எனது மக்கள்” என்று வேகமெடுத்து ஓடினான் வேரல். பறம்பினரும் வேகமாக சென்றனர்.

பயினியை நெருங்கியதும் “என்ன ஆயிற்று?” என்று பதறினான் வேரல்.

“நாகநாடன் விடியும் பொழுதிலேயே வீரர்களுடன் மலையேறி வந்தான். குடியினர் சிலர் அவர்களை எதிர்த்து நின்றனர். நாங்கள் பறம்பின் திசையில் வரத் துவங்கினோம். சேரவீரர்கள் எங்களை பின்தொடர்ந்து வருகின்றனர்” என்றாள் பயினி பின்னால் திரும்பி பார்த்தபடி. நறவர்கள் மூச்சிறைக்க வந்து சேர்ந்தபடி இருக்க..

சூரல் இல்லாததைக் கவனித்த வேரல் “தம்பி, தந்தையின் நிலை?”

“அவர்களை சிறைபிடித்திருப்பர்” என்றாள் பயினி. குடியை பாதுகாத்துச் செல்ல இறுகியிருந்தவளின் உறுதி சற்று தளர, முதன்முறையாக உள்ளத்தில் ஊற்றெடுத்த கண்ணீர் கண்களில் வெளியேறத் துவங்கியது.   கணப்பொழுது தலைவியெனும் மேகத்திரை விலகி தாயெனும் நிலவு வெளிப்பட்டது.

“எங்களில் சிலரைத் தாக்கி கொன்று விட்டனர்” என்றான் ஒருவன்.

“நாங்கள் உங்களை அழைத்துச் செல்ல வந்த பறம்பினர். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். நாங்கள் சென்று அழைத்து வருகிறோம்” என்றாள் ஆதிரை.

“சேரவீரர்கள் எண்ணிக்கையில் அதிகம்” என்று பதறினான் ஒருவன்.

காலம் குறைவு என்று உணர்ந்த ஆதிரை அருகில் இருந்தவளிடம் “நீ இவர்களை அழைத்துச் செல்.  நாங்கள் சென்று மற்றவர்களை மீட்டு வருகிறோம்” என்று         கூற…

“சரி” என்ற பறம்பினள் அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்லத் துவங்கினாள்.

“நானும் சென்று குடியினரை அழைத்து வருகிறேன்” என்ற வேரல் பயினியின் பதிலுக்கு காத்திராமல் பறம்பினரைப் பின்பற்றி ஓடத் துவங்கினான்.

உடலை பெரும் ஆவேசம் உலுக்க ஆதிரை மணக்காட்டை நோக்கி ஓடத்துவங்கினாள்.

**********

சேரர்களை நோக்கி முன்னேறிய வேடன் அம்புகளை சரமாக தொடுக்க சிலர் சரிந்தனர். ஒருவன் எதிர் நின்று தாக்குவதைக் கண்டு திகைத்த சேரர்கள் மரங்களின் பின்னால் மறைந்தனர். வேடன் வேகமாக இடப்புறத்தில் நகர்ந்தான்.  ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு என்று மறைந்து மறைந்து காட்டுடன் கலந்தான். மரங்களின் நிழல்களில் ஊடுருவினான்.

சேரர்களின் ஒருபுறத்தில் வெளிப்பட்டவன் மழைத்துளிகளாய் அம்புகளைப் பொழிய, மழைத்துளிகள் உடல்களை ஊடுருவி குருதியைப் பெய்தன. வலி ஒலியோடு துடித்து திரிய, கணம்கணமும் இடம் மாறினான். சேரர்களின் அம்புகள் காற்றில் பறந்து காட்டை சிதைக்க, வேடனின் அம்புகள் காட்டிற்கு குருதியாட்டை நிகழ்த்தியது. திசையெங்கும் அலறல்கள் முளைத்தபடி இருக்க,  வேடனின் வில்லாண்மையைக் கண்டு அச்சமுற்ற சேரர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிப்படாமலிருந்தனர்.

சேரர்கள் பதுங்கி விட்டதை உணர்ந்த வேடன், நேரத்தை வீணாக்க விரும்பாமல் மெதுவாக விலகினான். பறம்பின் திசையில் செல்ல முற்படுகையில் திடீரென்று மூவர் வாட்களுடன் பாய்ந்தனர்.

கூட்டத்தினரை விட்டு விலகி சுற்றி வந்துள்ளனர் என்பதைப் புரிந்து கொண்ட வேடன் காற்றுச்சுழலாய் நகர்ந்தான். வாள் மீண்டும் கைக்கு பயணித்திருந்தது. மூவரும் சுழன்று தாக்க, நுட்பத்துடன் விலகினான். உடலை வளைத்து மூன்றே வீச்சுகளில் மூவரையும் சரித்தான்.  வாளில் குருதி சொட்ட மீண்டும் ஓடத்துவங்கினான்.

வேங்கை மரமொன்றை தாவிக் கடக்கையில் ஓசையுடன் அம்புகள் வருவதை உணர்ந்தவன் துள்ளி விலகினான். இரண்டு அம்புகள் அவனை உரசிக்கொண்டு கடந்தன. அம்புகள் முன்னிருந்து வர பார்வையை கூர்தீட்டினான். நெஞ்சுக்கு இணையாக வாளை மேல்நோக்கி உயர்த்தி பிடித்தான். மரங்களின் பின்னிருந்து நான்கைந்து அம்புகள் வர வாளைச் சுழற்றி சிதறடித்தான்.  

அருகருகே நின்ற மரங்கள் கிளைகளைப் பரப்பி பந்தல் வேய்ந்திருக்க, மெல்லிய இருள் சூழ்ந்திருந்தது. இலைகள் அமைதியை சொட்டியபடி இருக்க, மரத்தின் பின்னிருந்து திடீரென பாய்ந்த ஆதிரை வாளை வேடனின் நெஞ்சில் பாய்ச்சினாள்.  

இருள் விலகும்.

**********

         4

காட்டின் மொழி

 கழுகுமலையை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த பறம்பினர் வாளில் குருதியுடன் ஓடி வந்த வேடனைக் கண்டதும் உள்ளம் கொதித்தனர். நறவர்களைக் கொல்ல துரத்தி வருபவன் என்றெண்ணினர். கண்களில் சினத்துடன் மரங்களுக்கு பின்னால் மறைந்தனர்.  அம்புகளை  நாணேற்றிக் காத்திருந்தனர். வேடன் நெருங்கிய கணத்தில் அம்புகளை எய்து தாக்குதலைத் துவங்கினர்.

  மரங்களினூடே முன்னேறிய ஆதிரை இமைப்பொழுதில் வேடன் விலகி அம்புகளைத் தவிர்த்ததையும் அடுத்து வந்த அம்புகளை வாளினால் தட்டியெறிந்ததையும் கண்டாள். நெஞ்சிற்கு  அருகே வாளை மேல்நோக்கி பிடித்து அம்புகளை எளிதில் தவிர்க்கும்  விதத்தைக்  கண்டு  அதிர்ந்தாள். சேரர்களுக்கு உதவும் பழங்குடியாக இருப்பானோ என்றெண்ணினாள்.

 மரத்தின் மறைவிலிருந்து பாய்ந்தவள் நெஞ்சருகே இருந்த கையைத் தாக்கி வாளை வீழ்த்த முயன்றாள். பார்வையின் விளிம்பில்  மரத்தின் பின்னிருந்து வாளின் நுனி வெளிப்படுவதை உணர்ந்த வேடன் சுழன்றான். ஆதிரையின் கையிலிருந்த வாளின் வீச்சு கால்வட்டமாய் சுழன்று நேர்கோடாய் முன்னேறியது.

                 மின்னலாய் விலகிய வேடன் இலகுவாக சமாளித்து நகர்ந்தான். வாளினுடைய வட்டத்தின் வீச்சும், ஆரமும்  அச்சைக் கொண்டு சுழல்வன.  வேடனின் வேகமோ விதிகளுக்கு அடங்காமல் சுழன்றது.  ஆதிரையின் வாள் வேடனின் நெஞ்சை உரசிச் செல்ல, ஆதிரையின் வேகத்தைக் கண்டு வேடன் அதிசயித்தான். வேடன் விலகியதைக் கண்டு ஆதிரை அதிர்ந்தாள்.

               மெதுவாக நகர்ந்த வேடன் ஆதிரையையும், அம்புகளையும் எதிர்நோக்கி நின்றான். ஒரு கண்ணால் முன்னிலையையும் மறுகண்ணால் படர்க்கையையும் அளந்தான்.

              அவனின் முகத்தில் அச்சம் துளிக்கூட இல்லாததையும் அனைவரையும் எதிர்கொள்ள ஆயத்தமாய் நிற்பதையும் கண்டு ஆதிரை வியந்தாள்.

               பழங்குடியினர் ஏன் தாக்குகின்றனர் என்று தோன்றினாலும்,  கரும்பைப் போன்று உயர்ந்தவள் கனலைப் போல சிவந்திருப்பதைக் கண்டு புன்முறுவல் செய்தான் வேடன். ஒரு காலை பின்னெடுத்து வைத்து நகர்ந்து அனைவரையும் ஒரே திசையில் வைத்துக் கொள்ள, அவனது நுட்பம் ஆதிரைக்கு விளங்கியது.

              மரங்களின் பின்னிருந்து பறம்பு வீரர்கள் வில்லுடன் வெளிப்பட்டனர். பலர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது முறையன்று என எண்ணிய  ஆதிரை  வானி மலரையொத்த  இதழ்களைக் குவித்து தொண்டையிலிருந்து ஒலியெழுப்பினாள். விற்கள் பணிந்தன.

             வேடனை நோக்கி பாய்ந்த ஆதிரை காற்றாய் சுழன்று தாக்க, காற்றுடன் இசைந்து எழும்பும் நீராய் வேடன் நகர்ந்தான். நீரும்  காற்றும் குழைந்து பேரலையாய் உடல்கள் சுழல, நாகங்களின் பின்னலாய் இரண்டு வாட்களும் ஒட்டி உறவாடின. ஆற்றலை மழையாய் பொழிந்து அவளை முடக்க முயன்றான். விரும்பும் திசையில் அவனைக் காற்றாய் வழிநடத்திச் சென்றாள். 

             ஒளியுமிழ்ந்த இருவரின் வாள்வீச்சுகளும்  சீற்றத்துடன் இருந்தன. ஒருவரை ஒருவர் கைப்பற்றி சுழன்றனர். உடல்களின் ஆற்றலில் வீழ்த்த முயன்றனர். உடல்கள் நெருங்கிச் சுழல்கையில்  ஒருவர் மற்றவரின் உடல் மணத்தை முகர்ந்தனர். முகங்கள் நெருங்குகையில் மயக்கும் கண்களும், மையிட்ட விழிகளும், அரும்பு  மீசையும், அரும்பென இதழ்களும் அருகருகே  சுழன்றன. காற்றும், நீரும் குழைந்து காற்றுக்குமிழ்கள் உருவாகின.

             வேடனின் வீச்சுகளை படிக்க முயன்றாள் ஆதிரை.  வலையில்  சிக்காத நீராய் இருந்தான் வேடன்.

           ஆதிரையின் வாளை ஆற்றலால் பறிக்க முயன்றான் வேடன். ஆற்றலுக்கு அடிபணியா அறமாய் சுழன்றாள் ஆதிரை.

           வேடன் தன்னைத் தாக்க முயற்சிக்கவில்லை. தடுத்தே போரிடுகிறான் என்பதை ஆதிரை உணர, மெல்லிய கைகளில் வெளிப்படும் பேராற்றலைக் கண்டு வேடன் அதிசயித்தான்.

             வேடனை அளந்த கண்கள் ஏதோ தவறென்று உறுத்தியது.  வாட்கள் தீப்பொறியை  உதிர்க்க உள்ளத்தின் ஆவேசம் மெதுவாக உதிர்ந்தது. வேடனின் மேலாடை விலகுகையில் அவனது தோளில் பச்சை குத்தப்பட்டிருந்த பஞ்சிதம் ஒளிர, ஆதிரை அதிர்ந்து விலகினாள்.

            “அதியல் குடியினனா நீ?” உடல்கள் மூச்சிரைக்க, உள்ளங்கள் அதியல் குடியைப் பற்றிய நினைவுகளை  இறைத்தன.

             “ஆம்”

              “சேரர்களுடன் இணைந்து எதற்காக நறவர்களைத்  தாக்குகிறாய்?”

              “நான் அவர்களைத் துரத்தவில்லை. காட்டில் பயணிக்கையில் சேரர்கள் நறவர்களைத் துரத்துவதைக் கண்டேன். அவர்களைத் தடுத்து நிறுத்த முயல்கிறேன்”

              ‘வேடன் உண்மையைக் கூறுகிறான்’ என்பதை ஆதிரை உணர்ந்தாள்.

               காடுகளின் அசைவை உணர்ந்த இருவரும் திரும்ப, சேரர்கள் வருவது தெரிந்தது. அனைவரும் விலகி மரங்களில் பின்னால் மறைந்தனர்.

               சேரர்களை அளவெடுத்து தாக்கும் விதத்தை முடிவெடுத்த ஆதிரையின் கண்கள் திரும்ப, வேடனும் அவளை நோக்கித் திரும்பினான். 

               ஒளியும், ஒலியுமின்றி பார்வையின் பரிமாற்றத்தில் சிந்தைகள் ஒன்று குவிந்தன. சேரர்களை வீழ்த்தும் வியூகம் ஒன்று பார்வையில் உயிர் கொண்டது. ஆதிரை கையை உயர்த்தி அசைக்க, பறம்பினர் இரண்டு பிரிவாய் பிரிந்தனர். சிலர் வேடனைப் பின் தொடர்ந்து வலப்புறம் நகர, சிலர் ஆதிரையைப் பின்தொடர்ந்து இடப்புறம் நகர்ந்தனர். ஆதிரையைத் தொடர்ந்து வேரல் சென்றான்.

              முற்றிலும் அறியா ஒருவன் தன்னை முற்றாக உணர்வதைக் கண்டு ஆதிரை அதிசயித்தாள்.

               உடலின் அணுக்கள் தோறும் பரவும் வெம்மையைப் போல ஆதிரை தன்னை ஆட்கொள்வதை வேடன் உணர்ந்தான்.    

               காற்றுவெளியில் பரவும் இசைக்கருவிகளின் இசையாய், மனவெளியில் ஒருவரை நோக்கி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

                சேரர்களின் இருபுறத்திலும்  காடுகளின் நிழலாய் பறம்பினர் படர்ந்தனர். குயிலின் கூவலை ஆதிரை எழுப்ப, இடப்புறத்தில் தாக்குதல் துவங்கியது.

                  மரங்களின் மறைவுகளிலிருந்து வெளிப்பட்ட பறம்பினர் இமைச்சிமிட்டலில் அம்புகளை விடுத்தனர். சேரர்களின் உடல்களில் அம்புகள் பாய, பதிலம்புகளை விடுத்தவாறு சேரர்கள் மரங்களின் வலப்புறத்தில் பதுங்கினர். 

                 சிலகணங்களில் வேடன் கையசைக்க வலதுபுறத்திலிருந்து தாக்குதல் துவங்கியது. பதறிய சேரர்கள் ஓடித்தப்ப முயன்றனர்.  ஆவேசம் கொண்டிருந்த பறம்பினரின் அம்புகள் மரணத்தைத் தாங்கிச் சென்ற வண்ணம் இருந்தன.

                பல நாழிகைகள் நுட்பத்துடன் தீட்டப்பட்ட வியூகத்தைப் போல தாக்குதல் ஒருமித்து நிகழ சில நொடிகளில் சேரர்கள் வீழ்ந்தனர்.

                சேரர்களை வீழ்த்திய  பறம்பினர் மீண்டும் ஒன்று சேர..

                “இது உனது போர் அல்ல. தேவையெனில் நீ விலகிச் செல்லலாம்” என்றாள் ஆதிரை. 

                 சொற்கள் ஒரு திசையைக் காட்ட, ஆதிரையின் முகம் எதிர் திசையைக்  காட்டியது. வேடனின் அணுக்கம் முதன்முதலாய் ஆதிரையினுள் பரவசத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆண், பெண்ணென்ற வேறுப்பாட்டை ஆதிரை உணர்ந்து கொண்டிருந்தாள்.   மனதால் மலரத் துவங்கி இருந்தாள். போ என்றன சொற்களின் ஒலி.  வா என்றது கண்களின் ஒளி.

               ‘தேவை எனில் விலகிச் செல்வது எப்படி! அணுகித்தானே வரவேண்டும்’ என்று நினைத்த வேடன்  “அறம் என்பது அகத்தின் குரல்.  நாடுகளின் அறங்கள் வேறுபடலாம். பழங்குடிகளின் அறம் காத்து இருத்தலே. நானும் வருகிறேன்”  என்றான்.

              ஆதிரையின் உள்ளம் மலர, முகம் மணம் வீசியது. அனைவரும் கழுகுமலையை நோக்கி செல்லத் துவங்கினர்.

              செல்லும் வழியில் வேடனால் கொல்லப்பட்டிருந்த சேரர்களின் உடல்களைக் கண்டு அதிர்ந்தனர். ஒருவன் நிகழ்த்திய வீரமா இது என்று வியந்தனர்.

               சிலர் அம்பினால் மரத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனர். சிலர் அம்பால் துளைக்கப்பட்டிருந்தனர். அம்புகள் எலும்புகளை ஊடுருவிச் சென்றிருப்பதைக் கண்ட பறம்பினர் வேடனின் வில்லாற்றலை உணர்ந்தனர்.

               சில நாழிகைகளில் கழுகுப் பாறையை தென்திசையிலிருந்து நெருங்கும்போதே மலர்களின் மணம் சிந்தையைப் பற்றி அழைத்துச் சென்றது. தொலைவிலிருந்து பார்க்கையில் பாறையொன்றின் மேல் ஒருவன் அமர்ந்திருப்பது  தெரிய, அவனெதிரே நறவர்கள் மண்டியிட்டு இருந்தனர். சிலர் நிலத்தில் விழுந்து கிடந்தனர். சேரர்கள் சிலர் மட்டும் காவலுக்கு நிற்பது தெரிந்தது. பாறையின் மேலிருப்பவனே நாகநாடனாய் இருப்பான் என்று ஆதிரை எண்ணினாள்.

               “ஒரு புறத்திலிருந்து தாக்கினால் சேரர்கள் குடில்களுக்கு பின்னால் மறைந்து விடுவர்.  மூன்று புறங்களிலும் சூழ்ந்த பின்னர் தாக்கி முன்னேறுவோம்” என்றாள் ஆதிரை.

                “மூன்று புறங்களில் சூழ இயலாது. வீரர்கள் குறைவாய் உள்ளனர்” என்றான் வேடன்.

                “பறம்பினர் இரண்டு புறங்களில் முன்னேறட்டும். நாமிருவரும் ஒருபுறத்திலிருந்து தாக்குதலைத் துவங்குவோம்” என்றாள் ஆதிரை.

                ‘நாமிருவர்’ என்ற சொல்லே மனதில் தேன்துளிகளைத் தடவிச்சென்றது. உள்ளத்தில் அப்பிய சுவை உடலெங்கும் இனித்தது. வேடன் இளமுறுவல் பூக்க தலையசைத்தான்.

                  மலையிலிருந்து வெட்டி எடுத்தது போல மணக்காடு தனித்திருக்க அதன் கிழக்கு திசையில் மேலேறி வடக்கில் நகர்ந்தனர். மலர்களைத் தடவிச்செல்லும் காற்றாய் நகர்ந்தனர். மணக்காட்டைச் சுற்றி நகருகையில் ஒவ்வொருவரும் சிறிய இடைவெளியில் பிறைவடிவில் நிலை கொண்டனர்.

                 காட்டினூடே பயணிக்கையில் மனதளவில் நெருங்கிய இருவரின் பார்வைகள் தழுவிக் கொள்ள உணர்வுகள் ஒளிபூசிக் கொண்டன.  எப்பிறவியின்  தொடர்ச்சியோ இவனென உள்ளம் தடுமாற, விதையுறைகளை முகிழ்ந்து வெளிப்படும் தாவர உயிர்களைப் போல, மன உறைகளை களைந்து காதல் உயிர்த்தது.

                  உக்கிரமான போர் சூழலில் காதலொன்று முளை விட்டது. காலவெளியைக் கடந்தது காதல்.  காதல் வெளியை உள்ளடக்கியது    மனங்கள். காதல்வெளி காலவெளியை விழுங்கிக் கொண்டிருந்தது. 

                 காதல் ஒளியில் கரைந்தவர்கள் காடுகளின் மொழியை கவனிக்கத் தவறினர். காடுகளின் மொழி என்பது பறவைகளின் கூச்சலைச் சொற்களாய் கொண்டது.  விலங்குகளின் அசைவில் வாக்கியம் அமைத்துக் கொள்வது. பறவைகள் அச்சத்துடன் கீச்சிடுவதை உணராமல் இருவரும் முன்னேறிச் செல்ல, பறம்பினர் பின்தொடர்ந்தனர்.

                  கணப்பொழுதில் சிந்தை விழித்துக்கொள்ள ஆதிரை நின்றாள்.  ஆதிரையை கவனித்தவாறு நகர்ந்து கொண்டிருந்த வேடனும் நின்றான். காடு பதுங்கி இருப்பதை உணர்ந்தான். வளையமாய் நகர்ந்து கொண்டிருந்தவர்களின் வெளிவளையமாய் மறைந்திருந்த சேரர்கள்  திடீரென வெளிப்பட்டு அம்புகளை எய்யத் துவங்கினர்.

                  மணக்காட்டு கிராமத்தின் சமவெளியில் நின்றவர்களும் மலையை நோக்கி அம்புகளை விடுக்க, பறம்பினர் இரு பிரிவுகளுக்கும் இடையில் சிக்கினர். பொறியில் சிக்கிய  பறம்பினர்களின்  மேல் வெறித்தனமான தாக்குதல் துவங்கியது.

 மனங்கள் மலரும்…

***********

5

வாள் மொழி

  வானமலையின் மேல் மேகங்கள் நீர் பூத்து அதிர்ந்து கொண்டிருக்க, இருபுறங்களிலும் பாய்ந்து வந்த அம்புகளிடம் பறம்பினர் சிக்கியிருந்தனர். சடசடவென்று பாய்ந்த அம்புகள் சிலரை வீழ்த்த, மற்றவர்கள் பாறைகளின் மறைவிற்கும், புதர்களின் பின்னாலும் பாய்ந்து மறைந்தனர்.

காற்றைத் துளையிட்டு அம்புகள் பறந்து கொண்டிருக்க, பாறையில் அமர்ந்திருந்த நாகநாடன் களிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். மணக்காட்டைக் கைப்பற்றியதும் நறவர்களை இழுத்து வர வீரர்களை அனுப்பி விட்டு, பாதுகாவலுக்காக மூன்று புறங்களிலும் வீரர்களை இருத்தியிருந்தான். 

தென்திசைக் காவலுக்கு அனுப்பியிருந்த வீரன் பதற்றத்துடன் ஓடி வந்து பழங்குடியினர் பலர் ஆயுதங்களுடன் தாக்க வருவதாக கூற, ‘நறவர்களின் தலைவன் சேரர்களை வீழ்த்த பழங்குடியினரின் உதவியை நாடியுள்ளான்’ என்றெண்ணினான் நாகநாடன்.

மணக்காட்டைச் சூழ்ந்து தாக்குதலைத் துவங்குவர் என்று யூகித்தவன் வேகமாக சேரர்களை  மலையின் மேலேற்றி  வெளிப்புற வளையத்தை வடிவமைத்தான். இரண்டு குடிகளையும் கொன்று புதைக்க காடுகளின் அசைவை உள்வாங்கியபடி அமர்ந்திருந்தான்.

 சேரத்தின் பொறியை உணர்ந்த ஆதிரை தாங்கி நிற்கும்படி ஒலியெழுப்பி விட்டு வேகமாய் மலையின் மேலேற, வேடன் பின்தொடர்ந்தான். 

மண்ணிலிருந்து வானேறும் மின்னல் கொடிகளாய் இருவரும் மேலேற, ஆதிரை வலப்புறத்தில் வெளிப்பட்ட வீரர்களை அம்பெய்து வீழ்த்தியபடி விரைந்தாள். இடப்புறத்திலிருந்த வீரர்களை துளைத்தபடி வேடன் மேலேறினான். ஆதிரை இடப்புறம் அம்பெய்கையில் வேடன் வலப்புறத்தின் பாதுகாப்பை உறுதி செய்தான். உடலசைவில் இருவரும் ஒத்திசைய, ஈருடல்களும், ஒன்றிணைந்த ஒற்றைச் சிந்தையும் பேருருவம் கொண்டு வதை செய்யத் துவங்கியிருந்தது. காற்றில் மிதக்கும் மாமலராய் ஆதிரை முன்செல்ல, தேன்குளிக்க செல்லும் வண்டாய் வேடன் பின்தொடர்ந்தான்.

நீர்தேக்கத்தில் இருந்து மதகுகளின் இருபுறத்திலும் பீறிட்டுக் கிளம்பும் நீரைப் போல, அம்புகளை எய்தபடி இருவரும்  முன்னேறினர். சிலகணங்களில் சேரவளையத்தை உடைத்து மேலேறியவர்கள் சேரர்களை சாய்த்தபடி வலப்புறத்தில் நகர்ந்தனர். இருவரின் நாண்களும் முழக்கங்களை எழுப்பி அம்புகளை உறும, அம்பு பாய்ந்த வீரர்களின் உடல்கள் மலைச்சரிவில் உருண்டு சென்றன. அம்புகள் தீர்ந்ததும் சேரர்களின் அம்பறாத்தூணியை எடுத்துக்கொண்டு கடுங்காற்றாய் முன்னேறினர். சேரஅம்புகள்  சேரர்களின் உயிர்களை கொய்தபடி திரிந்தன.

இருவரின் பேராண்மையைக் கண்டு வெகுண்ட பறம்பினரும் வெளிப்பட்டு அம்புகளை எய்தபடி மேலேறினர். சில கணங்களில் வெளி வளையமாய் இருந்த சேரர்களை முற்றிலுமாய் அழித்தனர். அழிவை விதைக்க வந்தவர்களின் உயிர்களை பறம்பினர் அறுவடைச் செய்ய, மலையின் மேலிருந்து சேரர்களின் உடல்கள் உருண்டு வந்து மணக்காட்டில்  விழுந்தன. மரங்களின் மறைவில் நிகழ்வதை அறிய இயலாமல் நாகநாடன் காத்திருந்தான்.

மலைச்சாரலை மீட்டெடுத்த பறம்பினர் சமவெளியை நோக்கி மலைச்சரிவாய் இறங்கத் துவங்கினர். பழங்குடியினர் வெளிப்பட்டு வருவதைக் கண்ட நாகநாடன் அதிர்ந்தான். எனினும் சற்றும் அசைவின்றி பாறையின் மேல்  அமர்ந்தபடி பாத்திருந்தான்.

சிற்றூரின் நடுவில் காவலுக்கு நின்ற சேரர்களை கண்ணசைவில் பிரித்துக் கொண்ட பறம்பினர் தாக்குதலைத் துவங்கினர். இரண்டு பிரிவுகளின் எண்ணிக்கையும் நிகர் ஆகியிருக்க, வஞ்சினத்தை சமன் செய்ய ஆதிரை முன்னேறினாள். குடில்களுக்கிடையே ஒளிந்தவாறு சேரர்கள் அம்பெய்ய, பறம்பினர் வாட்களை உருவிக்கொண்டு ஊடுருவினர்.

வீரர்களை வெட்டியெறிந்தவாறு வேடன் முன்னேற, சிலர் அவனைச் சூழ்ந்து கொள்ள முயன்றனர்.  கைகளின் நீட்சியாக சுழன்ற வாட்கள் கணப்பொழுதில் அனைவரையும் வெட்டியெறிந்தன.

தாழையனைத் தேடி வேரல் வேகமாக ஓடினான். நறவர்களினூடே இல்லாததைக் கண்டவன் ஈன்றவனின் உடல் தலையற்றுக் கிடைப்பதைக் கண்டு பதறிப் போனான். வெடிக்கும் மனதுடன் தாழையனின் உடலைக் கட்டிக் கொண்டு கதறினான்.

வேரலுடன் வந்த பழங்குடியினர் சேரர்களை வீழ்த்துவதைக் கண்ட நறவர்கள் வெகுண்டெழுந்தனர். ஆவேசம் கொளுந்து விட்டெரிய, சேரர்களைத் தாக்கத் துவங்கினர். தனது வீரர்கள் வீழ்த்தப்படுவதைக் கண்டு அதிர்ந்த நாகநாடன் கொதிப்புடன் எழுந்து வாளை உருவினான். வேரலையும்,  எழமுடியாமல் இருந்த முதியவர்களையும் வெட்டியெறிய  வேகமாக முன்னேறினான். 

நிலையை உள்வாங்கிய வேடன் வேரலைக் காப்பதற்கு  பதற்றத்துடன் ஓடினான். வேடனை இருவர் மறித்து நிற்க, இருவரையும் வேகமாக தாக்கத் துவங்கினான்.

வேரலை நெருங்கிய நாகநாடன் கண்களில் வெறியுடன் வாளை வீச, இடையில் புகுந்து தேக்கினாள் ஆதிரை. 

‘யாரிவள்’ என்று அதிர்ந்த நாகநாடன் ஆதிரை வாளைப் பற்றிய விதத்திலிருந்து அவளின் வாட்திறனை கணித்தான்.  வாளை உயர்த்தி தலையை சாய்த்து கொத்துவதற்கு ஆயத்தமாகும் பாம்பைப் போல நாகநாடன் நிற்க, கால்களை விரித்து எடையைப்  பிரித்து ஆதிரை ஆயத்தமானாள்.

சமவெளியில் இறங்கியதும் நாகநாடனை நோக்கியே ஆதிரையின் எண்ணங்கள் குவிந்திருந்தன. அழிவு சக்தியை பறம்பு ஒருபோதும் பொறுத்ததில்லை. சமவெளி மக்களை அழித்த அழிவின் உருவத்தை மலையேற விடக்கூடாது என்றெண்ணி இருளை நோக்கிச் செல்லும் ஒளியாய் அவனை நோக்கி சென்றாள்.

சடாரென்று பாம்பின் சீற்றத்தோடு நாகநாடன் வாளைப் பாய்ச்ச, நகுலத்தின் நுட்பத்துடன் ஆதிரை விலகினாள். இரையை சிதைக்கும் வேகத்துடன் நாகநாடனை சுழன்றபடி தாக்கினாள். ஆவேசம் உடலை உலுக்க, சேரத்தளபதி முழுவேகத்தில் ஆற்றலுடன் தாக்க, வாளை இரண்டு கையினாலும் பற்றி ஆற்றலை எதிர்கொண்டாள்.

வீரர்களை சரித்து விட்டு முன்னேறிய வேடன் ஆதிரை போரிடுவதைக் கவனித்தபடி நின்றான். தன்னிடம் போரிட்டதை விட வேகமும், நுட்பமும் அதிகரித்திருப்பதை உணர்ந்தான். அவளை கோபம் வழிநடத்துகிறதா அல்லது தன்னை முழு மனதுடன் தாக்கவில்லையா என்றெண்ணினான். அருகில் கிடந்த அம்பொன்றை இரண்டாக ஒடித்து எறியக்கூடிய கட்டாரியாய் மாற்றிக்கொண்டான்.

இருவரின் வீச்சுகளும் இணையாய் இருக்க, நாகநாடன் மேலும் உக்கிரத்துடன் தாக்கினான்.  பேராற்றலுடன் வெளிப்பட்ட வீச்சுகள் கொடி போலிருந்த ஆதிரையை அதிரச் செய்தன.

நாகநாடனின் ஆற்றல் சமரின் போக்கை மாற்றுவதை உணர்ந்த ஆதிரை வீச்சுகளை எதிர்த்து போர் புரியாமல் நுட்பத்துடன் விலக்கி போர் புரியத் துவங்கினாள்.  வீச்சை தேக்காமல் விலகியும், உராய்ந்து செல்லுமாறு விலக்கியும் போர்புரிந்தாள்.

வாள்வீச்சின் நுட்பத்தை ஆதிரை மாற்றியதைக் கண்ட வேடன் மென்புன்னகையுடன் தலையசைத்தான்.

 கணம் கணமும் ஆவேசம் பன்மடங்காக, இடமும் வலதுமாய் நகர்ந்த ஆதிரை உக்கிரத்துடன் தாக்க, நாகநாடன் தடுமாறினான். பாறையைச் சிதைக்கும் வேராய் அவனது வீச்சை ஊடுருவி நெருங்க முயன்றாள்.

ஆதிரையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத நாகநாடன் இடையிலிருந்த மற்றொரு வாளை உருவினான். இருதலை நாகமாய் இடைவிடாமல் இரண்டு வாட்களும் சீற, வாட்களின் வலைப்பின்னலில் ஆதிரையை மூட முயன்றான். நாகம் நகுலத்தை விழுங்க முயன்றது.

ஒற்றை வாளுடன் நாகநாடனைத் தாக்க இயலாத ஆதிரை வேகமாக தற்காத்து நகர, அவளை நோக்கி தனது வாளினை எறிந்தான் வேடன்.

வேடனின் வாளைப் பற்றிய ஆதிரை மீண்டும் தாக்குதலைத் துவங்கினாள். நகுலத்தின் சீற்றமும், வேகமும் அதிகரித்தது. வாளின் அலகுகள் தளபதியின் உடலைக் கீறிச்சென்றன. வாட்களின் கீறலில் குருதியும், சினமும் வழிய, நாகநாடன் உக்கிரத்தின் உச்சத்தை அடைந்தான்.

சேரர்களை வீழ்த்திய அனைவரும் வந்து சேர, ஆதிரையின் வீச்சுகள் தளபதியின் நுட்பத்தை ஊடுருவி ஆலமாய் உள்ளிறங்கிக் கொண்டிருந்தன. தளபதியின் இடக்கையில் ஆற்றலும், வேகமும் குறைவாயிருப்பதை உணர்ந்த ஆதிரை, தளபதி வலக்கையில் வாளைத்  தேக்கிய கணத்தில் இடப்புறம் நகர்ந்து முழு ஆற்றலுடன் வாளை வீச, தளபதி இடக்கையில் தேக்கினான். அவனது வாளை விசையுடன் கடந்து சென்ற வாள் முகத்தை சிதைத்தது. நாகநாடன் தடுமாற்றத்துடன் பின்னேற, ஒரே வீச்சில் அவன் தலையை இடப்புறக்காட்டை நோக்கி சரித்தாள்.

பறம்பினர் பேரொலியை எழுப்பினர். ஆதிரையின் நுட்பத்தை உணர்ந்து பதற்றம் தணிந்த வேடனின் முகத்தில் புன்னகை படர்ந்தது.

கானகத்தை சிதறடித்த பெருமழை நின்றது போலிருக்க, வேரலை நெருங்கிய நறவர்கள் நிகழ்ந்ததைக் கூறினர். ஈன்றவனையும், தம்பியையும் ஒருசேர இழந்த வேரலின் அழுகை மலர்ச் செடிகளை உலுக்கியது. தலைவனை இழந்த மணக்காட்டின் செடிமலர்கள்  இதழ்களை உதிர்த்தன.

அவனை எவ்வாறு ஆற்றுப்படுத்துவது என்றறியாமல் அனைவரும் இருக்க, அவனை நெருங்கிய வேடன் இறுக அணைத்துக் கொண்டான்.

“மற்றவருக்காக உயிர்களை விடுப்பவர்கள் தெய்வமாய் இருந்து வழிநடத்துவர். துயர் கொள்ளாதே” என்றான். விசும்பல் ஒலிகளை அன்பினால் கரைத்தான். 

ஒரு தலைவனுக்கு உரிய பண்புகளை வேடன் கொண்டிருப்பதைக் கண்டு ஆதிரை வியந்தாள். காலம் வலியுடன் துடிக்க, அனைத்து உடல்களையும்  மண்ணில் புதைத்த பறம்பினர் மணக்காட்டை நீங்கி பறம்பை நோக்கிச் செல்லத் துவங்கினர்.         

வேடனை நெருங்கிய ஆதிரை “உனது வாள்” என்றாள்.

“இது சேர வீரனின் வாள்.  ஆயுதங்களில் அடைக்கலம் தேடுபவனல்ல நான்”

“வேறெதற்கு அடைக்கலமாவாய்?”

“அன்பிற்கு  அடைக்கலம் ஆவேன். முற்றிலும் சரண் அடைவேன்”

ஆதிரையின் மென்கன்னங்களில் நாணம் செம்மை பூச, அவனைப் பிரியும் நேரம் வந்து விட்டதை உணர்ந்தாள்.

வாய் மொழியால் சொல்லாத வார்த்தைகளை வாள் மொழியில் உணர்ந்திருந்தாள் ஆதிரை.

வேல்விழியின் கணைகளில் தன்னைத்  தொலைத்திருந்தான் வேடன்.

மீண்டும் எப்படிக் காண்பதென்ற ஏக்கமும், பறம்பிற்கு இவனை எப்படி அழைப்பதென்ற எண்ணமும் சுழல, “எங்கே செல்கிறாய்?”  என்றாள்.

“பறம்பின் கொற்றவைக் கூத்திற்காக அழைத்திருந்தனர். கொற்றவையைக் கண்டு விட்டேன்” என்றான் வேடன் கண்களில் குறும்பு மிளிர.

துள்ளிய மனமும், யாரிவன் என்ற குழப்பமும் அலைபுரள…

“யார் நீ?” என்றாள்.

“அதியல் குடித்தலைவன் வேளியனின் மகன். அவர் முன்னமே சென்று விட்டார். நான் அதிகாலையில் புறப்பட்டேன்”

ஆதிரையின் உடலெங்கும் மகிழ்வு மலர்களாய்  பூத்துக்குலுங்க, அதை மறைக்க இயலாமல் தடுமாறினாள். பறம்பிற்கு வந்தவனைத் தாக்க நேர்ந்ததே என்ற எண்ணம் துயருற செய்தது.

“பறம்பிற்கு அழைத்து விட்டு தாக்கவும் செய்து விட்டோம்” என்றாள் வருத்தத்துடன்.

“அறியாமல் நிகழ்ந்த பிழை அது. அறிந்த பின்னரும் நெருங்கி சமரிடவே விழைகிறேன்”

சொற்களின் அர்த்தம் ஆதிரையின் உடலெங்கும் நாண விதைகளை விதைத்து வண்ணங்களை விளைவிக்க, முகத்தை திருப்பிக் கொண்டாள். 

சதிராடிய மனதை அடக்கியவள் “உனது பெயர்?” என்றாள்.

“வேள்பரிதி”

முற்றிலும் மலர்ந்தது.

*********

ஆதிரையும், வேள்பரிதியுமே பறம்பு குலத்தலைவன் பாரியின் தாய், தந்தையராய் இருந்து வழிநடத்தியது எனது செம்மாஞ்சேரல் போரைப் படித்தவர்களுக்கு தெரியும்.  அவர்களின் முதல் சந்திப்பை காட்டுவதற்கு இந்த கதையை பயன்படுத்திக் கொண்டேன்.

அடுத்து வீரத்தை வானமாய் கொண்டு,  காதல், நட்பு, வஞ்சம், பேராசை, பொறாமை, சினம், விவேகத்தை வானவில்லின் வண்ணங்களாக கொண்டு இரண்டு புத்தகங்களாக  வெளி வரப்போகும் சோழவேங்கை கரிகாலனில் சந்திப்போம்.   அனைவருக்கும் நன்றி.