பொதிகை மலைச்சாரலில் புதுப்பெண்ணின் நாணத்துடன் சுழித்தவாறு ஓடிக்கொண்டிருந்தது சிற்றாறு. மண்ணுக்கடியில் நீர் வேர்களைத் தேடிச் செல்ல, மரங்களில் பூக்களும், காய்களுமாய் வளம் கொஞ்சின. நீரின் சலசலப்பும், இலைகளின் முணுமுணுப்பும் காற்றின் மடியிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தன. வான் படுக்கையில் ஒட்டிக் கிடந்த நிலவும், கதிரவனும் விலகிச் செல்ல, இரவின் நிறம் குலைந்து கொண்டிருந்தது.
ஆற்றையொட்டி அமைந்திருந்த தவக்குடில்களின் எதிரிலிருந்த ஓமக்குண்டத்தின் எரிகட்டைகள் அணைந்திருந்தன. நிலத்தின் கணகணப்பில் மான்கள் குட்டியுடன் படுத்திருக்க, சில மயில்கள் கூரையில் குறுகி அமர்ந்திருந்தன.
படலை ஓசையின்றித் திறந்து வெளியே வந்த பரந்தாமனின் கையில் மாற்றுடையுடன் பூக்குடலை இருந்தது. முகத்தில் பேரமைதி ஒளியாய்ச் சுடர் விட, நெற்றியை அலங்கரித்த திருநீரின் கீற்றுகள் படுக்கையில் புரண்டதில் கலைந்திருந்தது.
“ஓம் நமோ பக்வதே சர்வேஷ்வராய!
ஷ்ரியஹ் பதயே நமஹ” என்று உதடுகள் முணுமுணுத்தன. மற்ற சீடர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் படலைச் சாத்தி விட்டு ஆற்றை நோக்கி நடக்க துவங்கினான்.
இரவுப் பூச்சிகள் உறக்கம் கலைய விருப்பமில்லாமல் முனகலாய் இசையொலித்தன. உலகம் இசையாலானது. காற்று அதிகாலையில் நிலத்தைத் தழுவி பூபாளம் பாடுகிறது. இரவில் தாலாட்டாய் மாறி உயிர்களை உறங்க செய்கிறது. ஐம்பூதங்களும் ஒன்றையொன்று தழுவி ஓயாமல் பண் இசைக்கின்றன. அதைக் கேட்க ஐம்புலன்களும் உயிர்த்திருக்க வேண்டும். ஒவ்வொரு புலனின் எல்லையையும் கட்டவிழ்க்க வேண்டும். அகத்திய முனிவரிடம் இருபதாண்டுகள் அவன் பயின்றது அதைத்தான்.
புலன்களை மேம்படுத்துவது. மேம்படுத்தி பிரம்மத்தை நோக்கி திருப்புவது. இது அத்தனை எளிதல்ல. இருளை அறியும் ஒளியாய் ஒவ்வொன்றாய் அறிவது. அறிவது அவற்றை விலக்கவே. அனைத்து மாணவர்களுக்கும் முதல்வன் என்று அகத்தியர் அவனையே கூறியிருந்தார். இன்று தீட்சை பெறும் நாள். பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது. இரவு முழுதும் உறக்கம் வராமல் மனம் விழித்திருந்தது.
அதிகாலையில் நடப்பது பேரானந்தமாய் இருந்தது. இறையும் இயற்கையும் ஒன்றிணைந்து இருக்கும் நேரம். மரங்கள் அடர்ந்த இடத்திற்கு சென்று உடலெனும் மாயையின் பரிகாரங்களை முடித்து, குளித்து, உடை மாற்றினான். மனதின் ஒவ்வொரு அறையிலும் இறையருளை நிரப்பி மூச்சுக்காற்றில் அமைதியைக் கோர்த்து நாவில் திருமந்திரத்தை பூட்டினான். பனித்துளி துளிர்த்த மலர்களைப் பறித்து கூடையை நிரப்பினான். மலர்கள் மாசற்ற இயற்கையின் மென்னகையாய் உருவம் கொண்டிருந்தன. பழக்கப்பட்ட கால்கள் பர்ணசாலையை நோக்கி நடக்க மனம் பிரம்மத்தை நோக்கி நகர்ந்தது.
அமைதியை சுக்குநூறாக்குமாறு திடீரென பெண்களின் சிரிப்பொலி கேட்டது. கலகலவென்ற ஓசை வனமெங்கும் உருண்டோட இளமனதில் குறுகுறுப்பு ஏற்பட்டது. பருவத்தின் கண்கள் விழித்தன. விதியின் வழியில் கால்கள் திரும்பின. மெதுவாக நடந்து சென்று மரத்தில் மறைந்தவாறு சுனையை நோக்கினான். பெண்ணொருத்தி பாறையின் மறைவிலிருக்க, மற்றொருத்தி சுனை நடுவிலிருந்தாள். அவள் மேலாடை அவிழ்ந்து நீரில் மிதந்தது. பொன்னில் செதுக்கியது போன்றிருந்த மேனியைக் கண்டதும் உள்ளம் அதிர்ந்தது. உடல் நடுக்கமுற மூச்சுக் காற்று துண்டுகளாய் உடைந்தது. கண்கள் விரிய அவளையே பார்த்தான். மனதில் ஆசை கனன்றெழுந்தது. ஆயிரம் இதழ் தாமரை மொட்டாய் குவிந்திருந்த மனம் மோகமெனும் புயலில் சிதைய, இதழ்கள் காற்றில் பறந்தன. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் நீராடி மேலேற, மெதுவாக விலகினான். கால்கள் தடுமாற இலக்கின்றி நடந்தான். எண்ணங்களை உதறி சீராக்க முயன்றான். மனம் நொறுங்கிய பாறையாய் ஒட்ட மறுத்தது. மரத்தின் வேரில் அமர்ந்தான். துயரமும் திகைப்பும் மனதை வருத்தியது. உள்ளத்தின் ஒளி அணைந்ததை போலிருந்தது. கண்களை மூடினாலும் நினைவுகளின் மேற்பரப்பை கிழித்து அவள் உடலே வெளிவந்தது. உலகம் அவளின் உடலாயிருந்தது.
நினைவுகளை புறந்தள்ளி ஆற்றில் முங்கி முங்கி எழுந்தான். பஞ்சாட்சரத்தை ஓலமாகக் கத்தினான். அவனுடைய குரலே மாறியிருந்தது. ஆற்று நீர் உடல் அழுக்கை நீக்கினாலும் உள்ளத்தை தூய்மையாக்க முடியாமல் தோற்றது. பூக்குடலையை தேடி எடுத்துக்கொண்டு குடிலை நோக்கி நடந்தான். வலது கால் முழந்தாளில் ஏதோ குத்தியது போலிருக்க குனிந்து நோக்கினான். ராஜநாகம் ஒன்று அவனைத் தீண்டி விட்டு நெளிந்தபடி சென்றது. உள்ளம் வெறுத்திருக்க, பதட்டமின்றி நடந்து சென்று குருவின் குடிலுக்குள் நுழைந்தான்.
குடிலின் நடுவில் அமர்ந்திருந்த அகத்தியரின் அருகே பதப்படுத்தி, நறுக்கிய பனை ஓலைகள் கட்டு கட்டாய் வைக்கப்பட்டிருந்தன. எதிர்கால சந்ததியின் வாழ்வைக் கணித்து சோதிடம் எழுதிக் கொண்டிருந்த அகத்தியர் தலைநிமிர்ந்தார். ஒற்றைச் சுடராய் சுடர்ந்த மனம் வெடித்து காட்டுத்தீயாய் நாற்புறத்தையும் எரிப்பதை கண்டார்.
குருவை நெருங்கிய பரந்தாமன் நெடுஞ்சாண்கிடையாக அவரின் காலில் விழுந்தான். உடலில் நஞ்சின் நீலம் பரவத் துவங்கியிருந்தது.
“என்னை மன்னித்து விடுங்கள்”
“ஊழின் கைப்பாவைகள் நாம். பிரம்மத்தின் கடைசி படியில் தடுக்கி விட்டாய்”
“மீண்டும் எப்போது பிரம்மத்தை நோக்கி செல்வேன் என்று கூறுங்கள்”
“அடுத்தது இழிந்த பிறவி, முப்பதில் முடியும். அதனால் வாய்ப்பில்லை. அதற்கடுத்ததில் வாய்ப்பு கனியும்”
“வழிகாட்ட நீங்கள் வரவேண்டும் குருவே”
நீண்ட மூச்சை விடுத்த அகத்தியர் “அவசியம் வருவேன். ஆசையைத் துறந்தால் அமைதி கிட்டும்” என்றார்.
“நன்றி குருவே” என்று நிம்மதியுடன் கண்களை மூடினான் பரந்தாமன்.
கண் விழித்தபோது உடம்பு முழுதும் வலித்தது. ஆட்டோவிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் பரமன். நைட் சரக்கு அடித்து விட்டு வீட்டுக்கு வந்தவன் மனைவி பார்வதிக்கு பயந்து ஆட்டோவை வீடிருக்கும் தெருமுனையிலேயே நிறுத்தியிருந்தான். சட்டைப் பையில் துழாவி பீடியை எடுத்து பற்ற வைத்தான். இரவு எதுவும் சாப்பிடாததால் காலி வயிறு கத்தியது. பையில் நயா பைசா துட்டில்லை.
“சவாரி வருமா?”
பரமன் திரும்பி பார்க்க, பேண்ட் சட்டையில் ஒருவன் நின்றான்.
“எங்க நைனா போனும்?”
“சென்ட்ரலு”
“முன்னூறு ஆவும்”
“எரநூறு வாங்கிக்க”
“வழியல்லாம் தோண்டி போட்டு வச்சிருக்கானுங்க. சுத்திகினு போவுணும்”
“வியாசர்பாடி வழியா போலாம். நேத்து நைட் அப்புடி தான் வந்தேன். எருநூத்து அம்பது வாங்கிக்க”
ஐம்பதுக்கு பெட்ரோல் அடித்தால் கொஞ்சம் மிச்சமாகும். “குந்து நைனா” பீடியை வேகமாக வலித்து எறிந்தான்.
ஆட்டோவை சந்து சந்தாய் வளைத்து வேகமாக ஓட்டினான். சென்ட்ரலில் சவாரியை இறக்கி விட்டு வண்டியை திருப்பும் போது “ஏ பரமா” என்று சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் நமச்சிவாயம் நின்றான். அவனுடைய ஜிகிரி தோஸ்த்.
“இன்னா மச்சான்?”
“ஏப்பி பர்த்துடே”
‘அட உனுக்கு எப்புடி தெரியும்?”
“எலே! நேத்து ராவுல தண்ணியடிக்கும்போது சொன்னியே. இன்னிலருந்து முப்பது வயசுனு. மறந்து போச்சா?”
“ஆமாமுல்ல. நீயும் தான வந்த”
“அது செரி போ. இன்னிக்கி பார்ட்டி கீர்ட்டி இல்லையா?”
“கைல சுத்தமா துட்டு இல்ல. சவாரி முடிச்சிட்டு சாய்ங்காலம் ஆறு மணிக்கு வர்றேன். கொளுத்துவோம்”
“அட நம்ம ரங்கன் கிட்ட கடன் வாங்கிக்குவோம் வா”
“செரி வா”
இரண்டாயிரத்தை கடனாக வாங்கிக் கொண்டு இருவரும் டாஸ்மாக் பாருக்கு சென்றனர். ஒரு புல்லு, பத்து முட்டை, தண்ணி பாக்கெட் என ஜமா தொடங்கியது. மதியம் ஒரு மணிக்கு வெளியே வரும்போது இருவரும் போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தனர்.
“நூறு வைசு வாழுவடா நீயி”
“இன்னாத்துக்கு வாழுனும்? இன்னிக்கு செத்தா கூட சந்தோஷமா சாவேன். எப்ப செத்தாலும் எவன் சந்தோசமா சாவுறானோ அவந்தான் குட்த்து வச்சவன். இன்னா சொல்ற”
“கரீட்டு. ஊட்டுக்கு போயிருவியா. கொண்டாந்து உடுட்டா”
“நான் இன்னா மொத தாட்டியா குடிக்கிறன். போவியா”
“அக்கா மொத்த போவுது போ”
கட்டைவிரலை உயர்த்திய பரமன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய, கிரகிர்ரென்று மக்கர் பண்ணியது.
“சாவுகிராக்கி” என்று திட்டியபடி மீண்டும் சாவியை முறுக்க, பக்பக்கென்று ஸ்டார்ட் ஆனது. ஆட்டோவை ஓட்டத் துவங்கினான். வட்டிக்கு வாங்கிய பணத்தில் ஆயிரம் ரூபாய் பாக்கெட்டில் மிச்சமிருந்தது. அதை கொடுத்து விட்டால் பார்வதி கத்த மாட்டாள். ஆட்டோ குறுக்கு சந்திலிருந்து வெளிப்பட்டு மெயின் ரோட்டில் திரும்பியது. இருட்டில் தெரியும் அவளுடைய உடல் வளைவுகள் ஞாபகத்தில் வர, உடல் ஒருமாதிரி முறுக்கேறியது. ஆக்சிலேட்டரை திருகி இடப்புறம் வேகமாக திருப்ப, சடாரென்று வெளிப்பட்ட லாரியிலிருந்து விலக முயன்றான். பெருஞ்சத்தத்துடன் லாரியின் முன்புறம் ஆட்டோவில் மோத, மூஞ்சி நசுங்கிப் போன ஆட்டோ வானில் பறந்து மற்றொரு காரில் விழுந்தது. ட்ராபிக் ஸ்தம்பித்தது. அங்கிருந்தோர் பரமனை இழுத்து கிடத்தியபோது காது, மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகியது.
“ஆம்புலன்சுக்கு போன் பண்ணு, பூட்டாம்பா” என்ற குரல்கள் காதில் விழுந்தன. மெதுவாக கண்களை திறந்து கடைசியாக ஒரு முறை உலகத்தை பார்த்தான். காதில் வலி தெறிக்க, கண்களை மூடினான்.
வலது காதில் தோடு போல் அணிந்திருந்த சிலிக்கான் சிப்பிலிருந்து கிர்ரென்று விட்டு விட்டு சத்தம் கேட்க பரம்ஸ் கண்விழித்தான். “காலை வணக்கம். மணி ஏழு” என்று ரூமிலிருந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பெண் சிலுசிலுப்பான குரலில் அறிவிக்க எழுந்து அமர்ந்தான்.
சோம்பலுடன் கண்களை திறந்து “நிகழ்ச்சி நிரல்?” என்று கேட்டதும்,
“காலை ஒன்பது மணிக்கு லிங்கநாதன் கோயில். மதியம் அலுவலகம். மாலை ஆறு மணிக்கு அரசு மருத்துவமனை” என்ற பெண்குரல் சற்று கரகரவென்றது. வாய்ஸ் சிந்தஸைசரை பார்க்க வேண்டும்.
வலது காலை பெட்டிலிருந்து கீழே வைக்கையில் பாம்பு கொத்தியது போல முழங்கால் கடுகடுத்தது. இதுபோல் அடிக்கடி திடீர் திடீரென்று முழங்காலில் வலிக்கும். டாக்டர்களிடம் பல முறை சென்றும் பயனில்லை. அனைத்து ரிபோர்ட்டுகளும் சரியாக இருக்க, அவர்களுக்கும் ஏனென்று விளங்கவில்லை. காலிலிருந்து ஏதோ ஏறுவது போல சற்று நேரம் வலித்தது.
மெதுவாக எழுந்து உடலின் தேவைகளை நிறைவேற்றி, சில்லென்ற வீசிய காற்றில் குளித்து வெளியே வந்தான். உடை மாற்றும் போதே காதிலிருந்த சிப் அதிர்ந்து “நமச்சிவாயம், போன்” என்று ஸ்பீக்கரில் ஒலித்தது.
“சொல்லுங்க பாஸ்”
“பரம்ஸ், லிங்கநாதன் டெம்பிளில் கஷ்டப்பட்டு பெர்மிஷன் வாங்கிருக்கேன். ஒன்பது மணிக்கு ஷார்ப்பா வந்துரு. குருஜிய பார்க்க இன்று கடைசி நாள். வேறு கிரகத்துக்கு போக இருக்கார்”
“பாஸ் மறுபடியும் கேட்கிறேன். எனக்கு விருப்பமே இல்ல. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்”
“நோ வே மேன். கண்டிப்பா நீயும் வர்ற. குருஜிய பார்த்தவங்களுக்கு நிறைய சேஞ்சஸ் நடந்துருக்கு. நம்முடைய பழைய பிறப்புகளைத் புரட்டி பார்த்து வாழ்வுக் கோட்டை நேர் பாதைக்கு திருப்பும் சக்தி உள்ளவராம். கண்டிப்பா வா”
நமச்சிவாயம் அவனுடைய பாஸ். அகத்தியர் என்ற சித்தர் கோயிலுக்கு வந்திருக்கிறார். முக்காலமும் உணர்ந்தவர். போய் பார்த்து வரலாமென ஒரு வாரமாக சொல்லிக் கொண்டு இருந்தார். அவனுக்கு இவற்றிலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லை. அவருடைய நச்சரிப்பிலிருந்து தப்பிக்க அப்போதைக்கு பார்க்கலாம் என சொல்லி வைத்தான். அவர் அனுமதி கோரி மெயில் அனுப்ப, உடனடியாக அனுமதி கிடைத்தது.
“பிக் சர்ப்ரைஸ் மேன். யாருக்கும் இப்படி சான்ஸ் கிடைக்காது. உன்னோட ராசி”
“ஓகே பாஸ். ட்ரை பண்றேன்”
“ட்ரை பண்ணாத. கண்டிப்பா வா. இவரை பார்ப்பதெல்லாம் பூர்வ ஜென்ம பலன். இவர் அனுமதி தந்த பின்னர் நாம போயி பார்க்கலைன்னா மறுபடியும் அனுமதி தரமாட்டாரு”
காலையில் பிறப்பெடுத்த இளவெயில் நிலத்தில் நடைபயின்று கொண்டிருந்தது. ஆபீசில் நிறைய வேலையிருக்கையில் இது தேவையா என நினைத்தான். பேசாமல் ஆபீசுக்கு போய் விடலாமா. குழப்பத்துடன் செட்டிற்கு சென்று முன்னால் ஒருவர் பின்னால் ஒருவர் மட்டும் அமரும் மினி காரை எடுத்தான். ஸ்டார்ட் செய்து மெதுவாக நகர்த்தினான். எதிர்புற வீட்டில் குழந்தைகள் விளையாடுவது தெரிந்தது. இடப்பக்கம் திரும்பினால் ஆபீஸ் போகலாம். வலப்பக்கம் திருப்பினால் கோயிலுக்கு போகலாம். இடமா, வலமா என்று தீர்மானிக்க முடியாமல் இருந்தது.
“எக்ஸ்கியூஸ் மீ கொஞ்சம் லிப்ட் தர முடியுமா” என்ற தேன் குரல் கேட்க, திரும்பி பார்த்தான். சுனையில் குளித்து எழுந்தது போல மலர்ச்சியுடன் ஒரு பெண். ஜீரோ வாட்ஸ் விளக்கில் தெரிவது போல உடலின் வளைவுகள் ஆடையினூடே தெரிந்தன.
“எஸ் அப்கோர்ஸ். சிட்டவுன்” என்றதும் ஓசையில்லாமல் கதவைத் திறந்து பின்னால் அமர்ந்தாள்.
“எந்த பக்கம் போகணும்?”
அவள் கையை உயர்த்தி திசையைக் காட்டினாள். வண்டி புறப்பட்டது.
************