ஹாலில் அமர்ந்தபடி சாக்ஸை பிரபாகர் அணிந்து கொண்டிருக்க அவரின் மகள் ரம்யா “பாட்டி பாய், பாய் ப்பா” என்றபடி கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள். கூல் வாட்டர் நறுமணம் அவரை கடந்து செல்ல அவளின் சுடிதார் லூசாகி இருப்பதை பிரபாகர் கவனித்தார். மனதில் மீண்டும் கவலை எட்டிப்பார்த்தது. வெளியே ஸ்கூட்டி ஸ்டார்ட் செய்யும் சத்தமும், வாட்ச்மேன் கேட்டை திறக்கும் சத்தமும் கேட்டது.
பிரபாகர் எல் அண்ட் டி கம்பெனியில் தென்னிந்திய பொறுப்பாளர். அவரது ஒரே மகள் ரம்யா. பிஈ கம்பியூட்டர் படித்துவிட்டு டிசிஎஸ் கம்பெனியில் வேலை பாக்கிறாள். அவளது பதினைந்தாவது வயதில் அம்மா இறந்துவிட, மறுமணம் செய்து கொள்ளாமல் பிரபாகர் அவளை வளர்த்து வந்தார். பிரபாகரின் அப்பா இறந்துவிட்டதால் சொந்த ஊரிலிருந்த தனது அம்மாவையும் வரவழைத்து தன்னுடனே தங்க வைத்திருந்தார் பிரபாகர்.
பிரபாகர் ஒரு தந்தையாக மட்டும் இருக்காமல், தாயாகவும், நண்பனாகவும் இருந்ததால் பிரபாகரரும், ரம்யாவும் ரொம்ப க்ளோஸ். ஆபிசில் நடக்கும் எல்லா விஷயங்களையும் இருவரும் பேசுவர். எல்லா விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி சொல்லக் கூடியவள் ரம்யா. ஆனால் சில மாதங்களாக அவள் சற்று விலகியிருப்பதை உணர முடிந்தது. எங்கேயாவது கிடக்கும் அவளது போன் இப்போதெல்லாம் பாதுகாக்கப் படுகிறது. போனிற்கு பாஸ்வேர்ட் போட்டிருக்கிறாள். இரவில் நீண்ட நேரம் போனில் இருக்கிறாள். சில சமயம் வண்ணத்துப்பூச்சி போல சுறுசுறுப்பாய் இருப்பவள், சில சமயம் பாட்டியிடம் எரிந்து விழுகிறாள். சரி அவளாக சொல்லட்டும் என்று இவர் காத்திருந்தார். அவளின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தாயில்லாத குறையை முதன்முறையாக பிரபாகரால் உணர முடிந்தது. ஒரு தந்தை எக்காலத்திலும் தாயாக முடியாது என்பதை உணர்ந்தபோது இவருக்கு வருத்தமாக இருந்தது.
சற்று குண்டான உடல்வாகு உடையவள் ரம்யா. இப்போது கவலையில் அவள் மெலிந்து இருந்ததால் போட்டிருந்த டிரஸ் லூஸாகி இருப்பது தெரிந்தது. அவள் அணிந்திருந்த வளையலும் லூசாக இருந்ததை கவனித்திருந்தார்.
“இந்தாப்பா டிபன் பாக்ஸ்” என்று அவரின் தாயார் தர, அதை வாங்கிக் கொண்டார். ரம்யாவின் ஒரு தங்க வளையலை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஆபீஸுக்கு கிளம்பினார்.
இரவு 7 மணிக்கு வீடு திரும்பியவர் கையில் இருந்த பொருட்களை டேபிள் மேல் வைத்து விட்டு உடை மாற்றிக்கொண்டு வந்தமர்ந்தார். சற்று நேரத்தில் வீட்டிற்குள் வந்த ரம்யா டேபிளில் இருந்த கவர்களை பார்த்துவிட்டு “என்னப்பா இது?” என்றாள்.
“திறந்து பார்” என்றார் பிரபாகர் அவளை பார்த்தபடி. ரம்யாவின் கண்கள் சிவந்திருக்க அழுதிருக்கிறாள் என்று தோன்றியது.
ரம்யா சோபாவில் அமர்ந்துகொண்டு பாலித்தீன் பேகை திறக்க உள்ளே 3 சுடிதாரும், ஒரு செட் தங்க வளையலும் இருந்தது. வளையல் கைக்கு சரியாக இருந்தது.
“என்னப்பா திடீர்னு?”
“கொஞ்ச நாளா பார்க்கிறேன். ரொம்ப எளச்சிட்டே வர. அதான் எஸ் சைஸ் சுடிதாரும், சின்ன சைஸ் வளையலும் வாங்கிட்டு வந்தேன்” என்றார் அவளின் கண்களை பார்த்தபடி.
“தேங்க்ஸ் பா” என்றவள் நிமிர்ந்து அவரின் கண்களை பார்த்தவுடன் தடுமாறினாள். முகம் சற்று சுருங்கிப் போக “ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்” என்றபடி உள்ளே போனாள்.
பிரபாகர் காத்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பின் வேகமாக வந்து அவரின் அருகில் அமர்ந்தவள் “நான் ஒருத்தர லவ் பண்றேன் பா” என்றாள் கீழே குனிந்தபடி.
பிரபாகர் அமைதியாக “சரி இப்ப அதுல என்ன பிரச்சனை?” என்றதும் ரம்யா சற்று அதிர்ந்தாள்.
“நீங்க வருத்தப்படுவீங்கன்னு தான் சொல்லலை”
“பெற்றோர் பொதுவா பையன் நல்லவனாக இருக்கணும்னு தான் கவலைப்படுகிறோம். அரேஞ்ச்டு மேரேஜ் என்றால் பத்து இடங்களில் விசாரித்துட்டு முடிவெடுப்போம். ஆனா நீங்க அப்படி இல்ல. பையன் இனிக்க பேசுவதை வைத்து முடிவுக்கு வர்றீங்க. சரி பையன பத்தி சொல்லு” என்றார்.
“அவர் பெயர் சூர்யா. என்னோட ஆபீஸ்ல சீனியர். டீசன்டான ஃபேமிலி. இரண்டு வருஷமாக ஒரே ப்ராஜெக்டில் இருக்கோம். அவரை ஆறுமாதம் யூஎஸ் போக சொல்றாங்க. அதன் பின்னர் தேவைப்பட்டா கன்டினியூ பண்ணிக்கலாம். என்னை விட்டுட்டு போக அவருக்கு மனசில்ல. ஆனால் நல்ல சான்ஸ். அதான் ஒரு மாதமாக குழப்பம். துணிஞ்சி போக சொல்லவும் முடியல. என்னைய விட்டுட்டு யூஎஸ் போறத நெனச்சும் வருத்தமா இருக்கு” என்றவளின் கண்களின் நீர் சுரந்தது.
‘இவளை விட்டு போக அவனுக்கு மனதில்லை’ என்பதை கேட்க அவருக்கு ஆறுதலாக இருந்தது. கேரியரை விட பெண்ணை அதிக நேசிக்கிறான் என்பது தெரிந்தது. ரம்யாவின் போனுக்கு மெஸேஜ் வர ஸ்க்ரீன் ஒளிர்ந்து அடங்கியது.
“நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றாள் ரம்யா. அப்பாவின் முடிவுகள் ஒருபோதும் தவறாகாது என்று உணர்ந்தவள் அவள்
“நான் பையனைப் பார்த்து பேசினால்தான் சொல்ல முடியும்”
“ஓகே” என்றாள் ரம்யா உற்சாகமாக.
பிரபாகரின் அம்மா சோபாவில் அருகே அமர “சரி நீ போயி டிரஸ் மாத்திட்டு வா. சாப்பிடலாம்” என்று பேச்சை மாற்றினார் பிரபாகர்.
சற்று நேரத்தில் பெயருக்கு சாப்பிட்டுவிட்டு உள்ளேச் சென்று பெட்டில் படுத்துக்கொண்ட ரம்யாவுக்கு தனது காதலை தந்தையிடம் சொல்லிவிட்டது மனதிலிருந்த பாரம் குறைந்தது போலிருந்தது. ஆனால் மீண்டும் சூர்யாவை நினைக்கையில் மனது பாரமாகியது. அவனை பிரிந்து ஆறுமாதங்கள் எப்படி இருப்பது என்று நினைத்தாள். பலவாறு நினைத்து குழம்பியபடி இருக்க, தலையணை நனையத் தொடங்கியது.
அடுத்த நாள் சிகப்பும் வெள்ளையுமாக எக்ஸ்டீரியர் செய்யப்பட்டிருந்த காபிடேயின் எதிரே டிரைவர் காரை நிறுத்த, பிரபாகர் இறங்கி நடக்கும்போது அருகில் ஒரு சிகப்பு ஸ்விப்ட் கார் மட்டும் நின்றிருந்தது. பிரபாகர் உள்ளே நுழைய யாருமே இல்லாமல் காபிடே காலியாக இருக்க ரம்யாவும் சூர்யாவும் ஒரு மூலையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். “ஹாய்” என்றபடி சென்றவர் அவளருகில் அமர்ந்து கொண்டு “சாரி பார் தி லேட்” என்றபடி சூர்யாவிடம் கையை நீட்ட, அவரின் கண்கள் சூர்யாவை அளவெடுத்தன. சிவந்த சருமம் களையான முகம், வலது மணிக்கட்டில் சாமிக்கயிறு என்றிருந்தவனை பார்த்தவுடன் பிரபாகருக்கு பிடித்துப் போனது.
“எப்ப வந்தீங்க?” என்றார்.
“ஜஸ்ட் 5 மினிட்ஸ்” என்றான் தயக்கமான மெல்லிய குரலில்.
“வீட்டிற்கு முதல் பையனா” என்றார் அவன் தயக்கத்துடன் பேசுவதைப் பார்த்து.
“ஆமாம் என்றான்.
“ஒரு தங்கை மட்டும்தானா?”
அவளைப் பார்த்தபடி சூர்யா தலையசைத்தான்.
“அப்பா ஸ்டேட் பேங்கில் எந்த பிரான்ச்சில் வேலை செய்கிறார்?”
“கொளத்தூர்”
“ரெஹ்மான், கெல்லி தவிர தமிழில் யாரை பிடிக்கும்?”
“வாலி”
எப்படி இவ்வளவு விவரம் தெரியும் என்று இருவரும் மெல்லிதாக அதிர்ந்தபடி இருக்க
“வீட்டில் இன்னும் லவ் பற்றி சொல்லலை போல?”
“இல்லை சார்”
“எப்படிப்பா யாராவது விட்டு செக் பண்ண சொன்னீங்களா?” என்றாள் ரம்யா புருவங்களை சுருக்கியபடி.
“இல்லம்மா. உன் செலக்சனில் எனக்கு நம்பிக்கை இருக்கு”
“பின்ன எப்படி கரெக்ட்டா” நெர்வசாக சிரித்தான் சூர்யா.
“வெளியே காரில் பேங்க் ஸ்டிக்கர் பார்த்தேன். உன் கையின் கட்டைவிரலில் மட்டும் நெய்ல் பாலிஷ். சற்று தயக்கத்துடன் பேசுவது பஸ்ட் சைல்டு சின்ரோம்”
“ஏ ஆர் ரகுமான், ஷெல்லி பத்தி எப்படி சொன்னீங்க?” என்றாள் ரம்யா.
“உன் போனின் வால் பேப்பர், மற்றும் நீ ஷெல்லி புக்கை கையில் வைத்திருந்ததை பார்த்தேன். இப்போது பொருந்தி வருகிறது” என்றார் ரம்யாவிடம்.
“சரி. பெற்றோரிடம் சொல்வதில் என்ன தயக்கம்?” என்றார் அவனது பதிலை தெரிந்து கொள்ள.
“மெதுவா சொல்லிக்கலாம்னு” என்றான் சூர்யா.
“இப்ப ஆபிஸ்ல என்ன குழப்பம்?”
“எங்க ஆபீஸே என்னை யூ எஸ் அனுப்புறாங்க. புரமோசனோட. எல்லா விதத்திலும் நல்ல வாய்ப்பு. ஆனால் எனக்கு ரம்யாவை விட்டுட்டு போக மனசில்ல. காசுக்காகத் தான் போகணும். நாங்க ரெண்டும் பெரும் ஏற்கனவே நல்லாத்தான் சம்பாரிக்கிறோம். பேரண்ட்ஸையும் விட்டுட்டு போக மனசில்ல. அதான்”.
‘காசை அதிகம் விரும்பவில்லை. பெற்றோரிடம் பாசம் செலுத்துபவன் கண்டிப்பாக மனைவியை நன்றாக பார்த்துக்கொள்வான்’ என்று பிரபாகருக்கு தோன்றியது.
“நீங்க என்ன சொல்றீங்க?” என்றாள் ரம்யா போகவேண்டாம் என சொல்வார் என நினைத்தபடி.
“பேரண்ட்ஸையும், ரம்யாவையும் விடு. உன்னோட மனசு என்ன சொல்லுது?”
“எனக்கு போகத்தான் ஆசை சார்”
“என்னை அங்கிள்னே கூப்பிடு. அப்புறம் உனக்கு யூஎஸ் போக விருப்பமிருந்தா தென் போறது தான் சரியா இருக்கும். நாளைக்கு இந்த அடிமனத்தின் ஆசையே ஏமாற்றமா போயி, கோபமா மாறும். உன்னோட ஜுனியரே நாளைக்கு உன்னோட பாஸா வந்தா இன்னும் வருத்தம் அதிகமாகும். கேரியரையும், ஆசையையும் பேலன்ஸ் பண்ண கத்துக்கணும். எதையும் தியாகம் பண்ணாம.
யூஎஸ் போக கிடைத்துள்ள வாய்ப்பைப் பற்றி இதுவரை உன்னோட பேரண்ட்ஸ்ட்ட எப்படியும் சொல்லிருக்க மாட்ட. அதனால உன்னோட லவ்வை பத்தியும், யூஎஸ் வாய்ப்பை பற்றியும் சொல்லு. நிச்சயதார்த்தம் பண்ணிடலாம். அப்புறம் யூஎஸ் போ. லீவ் கெடச்சி நீ வரும்போது கல்யாணத்தை வச்சிக்கிலாம். அங்கு ரம்யாவும் வேலை தேடிட்டு ரெண்டு பேரும் வேலை செய்யுங்க. இந்த வயதில் தான் உலகத்தை சுத்தி பார்க்க முடியும். ஒரு அஞ்சு, ஆறு வருசம் கழிச்சி இந்தியா வந்துடுங்க. அதற்கப்புறம் இங்கயே செட்டில் ஆகி பேரண்ட்ஸோட இருக்கலாம். அதுவரை உலகை சுற்றிப்பாருங்க. அந்த அனுபவமும் உங்களுக்கு தேவை. நோ கன்பியூஷன் சிம்பிள்” என்றவரின் மனதில் அடுத்து ரம்யாவை எப்படி ஆறுதல் படுத்தவேண்டும் என்பது ஓடிக்கொண்டிருந்தது.
எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டார் என்று சூர்யாவும், ரம்யாவும் நினைத்தபடி இருக்க..
“என்ன காபி ஆர்டர் பண்ணுனீங்க? எனக்கு சாகோ லாவோ கேக்” என்றார் பிரபாகர்.