வருடம் 2080 அல்லது 2081க இருக்க வேண்டும். என்னவாயிருந்தால் என்ன. நாளை காலை விஞ்ஞானி ரான் உயிரோடிருக்கமாட்டார். விஞ்ஞானியா இல்ல அறிவியலாரா? எது சரியான தமிழ் பதம்? யாருக்கென்ன. ரானுக்கு இன்றே கடைசி தினம்.
2052ல் தொடங்கி பூமியில் நிலவிய அதீத வெப்பத்தால், பனி மலைகள் உருகின. கடல் மட்டம் உயர்ந்து, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளால் உலகின் பெரும்பாலான நாடுகள் மூழ்கிய பின் எஞ்சியிருந்தவர்கள் தீவு போன்ற இந்த நிலப்பரப்பில் தங்கத்தொடங்கி பல வருடங்கள் ஆகி விட்டன. இது போன்ற இன்னும் சில இடங்களில் மக்கள் இருக்கலாம் என நம்பிக்கை. சின்ன காலனியாக மக்கள் இருக்கும் இந்த இடத்தின் பெயர் “மெடூசா”.
தீவில் மொத்தம் 300 பேர்கள். ஆண்கள் 164 பேர். மீதம் பெண்கள். இந்த விகிதாச்சாரம் அடிக்கடி கூடும், குறையும். முடிந்தவரை அதிகமாகாமல் பார்த்துக்கொள்வதே பெரிய பிரச்னையாய் இருந்தது. ஒரு இயற்கையான தீவாக இல்லாமல் நீரில் மூழ்காத உயர்ந்த நிலமாக இருந்ததால் ஒரு தீவுக்கான தாவரங்கள் இல்லை. அதனால் உணவுப்பொருட்களை உருவாக்குவது முக்கிய பிரச்சனையாய் இருந்தது.
மக்கள் இந்த தீவில் தஞ்சமடைந்த போது வந்த முதல்வர்களில் ரானும் ஒருவர். வசதிகள் குறைந்த அந்த தீவில் மறுபடியும் வாட்ச், சோலார் பேனல், மின்சாரம், கம்ப்யூட்டர் போன்ற பழைய பூமியில் இருந்த பல பொருட்களை மீண்டும் திரும்ப கொண்டு வந்தவர் ரான். பல இடர்பாடுகளை சந்தித்து தீவை இன்றைய நாகரீக நிலைக்கு உயர்த்தியவர்களுள் ரான் முதல்மையானவர்.
ரான் அந்த இயந்திரத்தின் கடைசிக்கட்ட சரிபார்ப்புகள் செய்து கொண்டிருந்தார். அவருடன் நின்று கொண்டிருந்த இளைஞனின் பெயர் மான்டி. அவரது துடிப்பான அசிஸ்டன்ட். 25 வயது இளைஞன். இந்த தீவில் பிறந்தவன். மற்றொரு விஞ்ஞானி. மான்டியை போல மேலும் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரானினால் விஞ்ஞானம் பயிற்றுவிக்கப் பட்டு வந்தனர். அவர்களுள் மான்டியே வயதில் பெரியவன். கம்ப்யூட்டர் மென்பொருள், கோடிங் எழுதுவதில் நிபுணன்.
இன்றைய தினத்தில் இந்த மெஷின்தான் ரானின் உயிரை காப்பாற்றப்போகிறது. ரானுக்கு மான்டியை நினைக்கும்போது தான் சற்று வருத்தமாக இருந்தது. இவருக்காக உயிரை, உடலை விடப்போகிறவன். அவனுக்கு தெரியாமலேயே.
60 வயதானவர்கள் அந்த தீவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். இது அந்த தீவின் எழுதப்பட்ட விதி. இந்த விதியை உருவாக்கியவர்களில் ரானும் ஒருவர். உணவு, உடை மற்றும் நீருக்கு தினமும் போராடிக் கொண்டிருந்ததால் இந்த விதி இயற்றப்பட்டது. ஒரு கட்டுமரம், சில நாள் உணவு மற்றும் நீருடன் வலுக்கட்டாயமாக அந்த தீவிலிருந்து அனுப்பிவைக்கப் படுவார்கள். வெளியே போக மறுத்தால் நீரில் அமுக்கி கொல்லப்படுவார்கள். சற்று மோசமான நிகழ்வே என்றாலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் தன்னிறைவு அடையும் வரை வேறு வழியும் இல்லாதிருந்தது. அப்படி வெளியே செல்பவர்கள் வேறு ஏதும் தீவை அடைந்தால், அந்த தீவு மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் இது உதவும் என்பதால் ஆரம்பத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மான்டிக்கு ரானைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது. பொதுவாக 60 வயதில் வெளியேற்றப்பட இருப்பவர்கள் அழுதுபுரண்டதை தான் பார்த்திருக்கிறான். “முடிவு நாள்” எனப்படும் வெளியேற்றும் நாள் வரும் முன்னரே கடலில் தனியே போனால் என்னாகுமோ என்ற பயத்திலும், தீவை விட்டு போகும் கவலையிலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் உண்டு. தீவில் இருந்து சென்ற பின் எங்கெங்கோ சுற்றி, இறந்த பின் அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் படகுடன் இந்த தீவிலேயே கரை ஒதுங்கிய பரிதாபங்களும் உண்டு. ஆனால் ரானோ சற்றும் கவலையின்றி கடைசிநாள் வரை வேலை செய்து கொண்டிருக்கிறார்.
ரானை தீவை விட்டு அனுப்புவதற்கு விலக்கு கோரி மான்டி “தீவின் முதல்வர்கள்” எனப்படும் விதி அமைப்பவர்களுடன் பல முறை போராடியிருந்தான். தீவின் முதல்வர்கள் எனப்படுவது மொத்தம் 20 பேர்களைக் கொண்ட அமைப்பு. ஏதாவது ஒரு தளத்தில் சிறந்து விளங்குபவர்கள் முதல்வராக தேர்வு செய்யப் பட்டிருந்தனர். இதிலிருந்து ஒருவர் வெளியேறினால் மீதமுள்ள பத்தொன்பது பேர் ஒரு நபரை தேர்வு செய்வர். தீவு உருவான போது முதலில் துவங்கப்பட்ட முதல்வர்கள் அமைப்பில் இப்போது ரானைத் தவிர மேலும் நான்கு உறுப்பினர்களே பழைய முதல்வர்கள். மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். அவ்வாறு அனுப்ப பட்டவர்களுள் மருத்துவர்கள், பொறியாளர்கள், பயிர்களை உருவாக்கத் தெரிந்த விவசாயிகள் போன்ற மனிதன் உயிர் வாழ இன்றியமையாதவர்கள் இருந்து வந்தனர். அவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் தீவை விட்டு விலகும் முன் அவர்களின் அறிவை, அனுபவத்தை அடுத்தவருக்கு படிப்பித்து விட்டு போக வேண்டும். விலக்கு கோரக் கூடாது என்பது முதன்மை விதிகளில் ஒன்று. தீவை விட்டு வெளியேற்றப்பட்ட ஒவ்வொருவரும் முக்கியமானவராகவே இருந்து வந்திருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் யாருக்கும் விலக்கு தரப்படவில்லை. எனவே ரானுக்கும் விலக்கு மறுக்கப்பட்டது.
ஆனால் மான்டி ரானின் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தவன். சிறுவயதிலிருந்தே ரானிடம் பயிற்சி பெற்றவன். அவரை பிரிவது அவனுக்கு மிகுந்த வேதனையை தந்தது. இப்போது அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையை மாற்ற
“என்ன செய்யும் இந்த தலை கவசங்கள் புரொபஸர்” என்றான்.
“அந்த வோல்டஜை சற்று அதிகப் படுத்து ” என்றார் ரான் .
வோல்டேஜை சரி செய்த மான்டியிடம்
“அறிவு என்பது என்ன” என்றார் ரான்.
“புத்திசாலித்தனம்”.
“வேறு ஏதாவது ?”
“நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது. மேலும் அதை பயன்படுத்தி முடிவுகளை எடுப்பது”
“சரி, எனது மூளையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும், ஒரு பிரதி எடுத்து உன் மூளையில் பதித்தால் என்ன ஆகும்?
“வாவ்! அருமையாக இருக்கும். நானும் உங்களை போல் புது விஷயங்களை கண்டு பிடிக்க முடியும். ஆனால் எப்படி சாத்தியம்”.
“அதற்குதான் இந்த கருவி. நீ சொன்ன அனைத்தும் மூளையின் மேற்பரப்பில் உள்ள சுருக்கங்களில் பதிந்து உள்ளது. கம்ப்யூட்டரில் ஒரு இடத்தில் உள்ள டேட்டாவை பிரதி எடுத்து மற்றொரு இடத்தில் சேமிப்பது போல. என் மூளையில் உள்ள அனைத்து விஷயங்களும் உன் மூளைக்கு வந்து விடும்.”
“அருமை புரொபஸர். ஆனால் இது வேலை செய்யுமா?”
“செய்யும். இல்லை என்றாலும் ஏதும் பாதிப்பு இல்லை. எனக்கு பின்னர் நீ தொடர்ந்து முயற்சி செய்.
ஆனால் ரானுக்கு மட்டும் தான் தெரியும். இந்த தலைக்கவசம் இருவரின் மூளையில் உள்ள நினைவுகளை பிரதி எடுத்துக் கொள்ளும். பின்னர் இருவரின் மூளையில் உள்ள நினைவுகளை முற்றிலும் அழித்துவிட்டு, மற்றவரின் நினைவுகளை பதித்துவிடும். எனவே இருவரும் கண் விழிக்கும்போது ரானின் உடலில் மான்டியின் நினைவுகளும், மான்டியின் உடலில் ரானின் நினைவுகளும் இருக்கும். இதன் மூலம் ரானுக்கு அதே அறிவுடன், நினைவுகளுடன் புதிய உடல் கிடைக்கும். அவரும் அழிய மாட்டார். மான்டி ரானின் உடலுடன் தீவை விட்டு வெளியேற்றப்பட, மான்டியின் உடலில் அனைத்து நினைவுகளுடன் ரான் உயிர் வாழ்வார். ரானுக்கு இது கஷ்டமானதாக இருந்தாலும், அவருக்கு 60 வயது நெருங்க தொடங்கும்போதே பயம் வந்து விட்டது. தனியாக நீரில் சென்று இறப்பதை தவிர்க்கவே இந்த செயலை செய்யத் துணிந்தார்.
இந்த கண்டுபிடிப்பு நவீன கூடு விட்டு கூடு பாயும் வித்தை. இனி ரான் அழிவே இல்லாத பரமாத்மா. அடுத்த வேலை உடனடியாக வயதில் குறைந்த சிறுவனை புதிய அசிஸ்டென்ட்டாக சேர்த்துக்கொள்வதே! அடுத்து மாறப் போகும் புதிய உடலுக்காக!
அப்போது முதல்வர்கள் ரானை பார்க்க வருவதாக ஒருவர் வந்து சொன்னவுடன் ரானும், மான்டியும் எழுந்து வெளியே வந்தார்கள். தீவை விட்டு “முடிவு நாளில்” மனிதர்களை அனுப்பும் முதல் நாள் இரவு முதல்வர்கள் அனைவரும் வந்து அனுப்பப் படுபவருடன் இரவு உணவு சாப்பிடுவது அந்த தீவின் நடைமுறை.
காலையில் கடலுக்கு அனுப்பி வைக்கும்போது தீவை விட்டு செல்பவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் வீரர்கள் மட்டுமே வருவார்கள். இரவு அழுது ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கம் தெரியாமலேயே அடுத்த நாள் அனுப்பி வைத்ததும் உண்டு. முதல்வர்களின் பின்னால் பலர் சிறந்த உணவு வகைகளை எடுத்து வந்தனர். ரான் அமைதியாக அனைவரையும் வரவேற்க, அவரின் அமைதியான நடவடிக்கையைப் பார்த்து முதல்வர்களுக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அனைவரும் இரவு உணவு சாப்பிட அமர்ந்ததும் ரான் பேசலானார்.
“இந்த தீவிற்கு மேலும் பல திட்டங்களை உருவாக்க எண்ணினேன். ஆனால் காலம் போதவில்லை. என்னால் முடிந்தவரை செயலாற்றி உள்ளேன். கடல் நீரின் அளவு முன்பு இருந்ததை விட ஏதோ ஒரு காரணத்தினால் குறைந்துள்ளது. அதனால் தீவினுடைய நிலப்பரப்பு நாம் வந்த காலத்தில் இருந்ததை விட இருமடங்கு ஆகியுள்ளது. நாம் உணவு தயாரிக்க முறையிலும் பெருமளவு முன்னேறி உள்ளோம். எனவே நீங்கள் தீவின் மக்கள் தொகை எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளலாம். இதை நான் முன்பே கூறியிருந்தால் நீங்கள் இந்த தீவில் என் வாழ்நாளை அதிகரித்துக் கொள்வதற்காக கூறுவதாக நினைப்பீர்கள் என்பதால் இப்போது சொல்கின்றேன். மூன்று மாதங்களுக்கு முன்னால் ஏற்பட்ட தொத்து வியாதி போல் மீண்டும் எதுவும் வந்தால் தீவில் உள்ள அனைவரும் அழிந்து போக வாய்ப்புண்டு. எனவே எண்ணிக்கையை அதிகரியுங்கள். சோலார் பேனல்களை பயன்பாடுகளை அதிகரியுங்கள். மின்சக்தி தயாரிக்க நம்மிடம் வேறு எதுவும் மாற்றுவழி இல்லை. எனவே இதை விட முடியாது” என்று பேசிக்கொண்டே செல்ல மான்டி மனம் தாளாமல் எழுந்து வெளியே வந்தான்.
முதல்வர்களில் பெரும்பாலோர் பேசிவிட்டு சென்ற பிறகும் ரானுடன் முதன் முதலில் அந்த தீவுக்கு குடியேறியவர்கள் நால்வர் பழைய நினைவுகளை பேசிக்கொண்டிருந்தனர்.
“ஒரு பத்து நாட்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்” என்றார் ஒருவர்.
“சோலார் பவரில் இயக்கக் கூடிய எஞ்சின் ஒன்றை படகில் பொருத்தி எடுத்துச் செல்ல அனுமதி வாங்கியுள்ளேன்” என்றார் ரான்.
“வேறு ஏதும் நிலப்பரப்பு அருகில் இருக்குமா?”
“குறைந்த அதிர்வெண் அலைகளை அனுப்பி இதுவரை நாம் தேடித்தான் வந்துள்ளோம். இந்த அலைகள் 10 கிலோ மீட்டர் வரையே கேட்கும். அந்த எல்லையை தாண்டி கண்டிப்பாக நிலப்பரப்புகள் இருக்கும். அவை எங்கு இருக்கிறது எனத் தெரியாமல் அதனை தேடுவது கடினம். மிகக் குறைந்த அதிர்வெண்கள் அதிக தூரம் பயணிக்க கூடியவை. ஆனால் அதற்கான தொழில்நுட்பங்கள் நம்மிடம் இல்லை”.
சற்று நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக விடைபெற்று கொள்ள, ரான் எழுந்து தனது பயிற்சிக் கூடத்திற்கு வந்தார். அங்கு மான்டி இல்லாததால் அவனை அழைக்க யாரையாவது அனுப்பலாம் என நினைத்து வெளியே வந்தபோது மான்டி தளர்ந்த நடையுடன் அங்கு வந்தான். ரானால் அவனின் மன நிலையை புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் “வா வேலை இருக்கிறது” என்று சொல்லி விட்டு ரான் உள்ளே செல்ல, மான்டி அவரை பின்தொடர்ந்தான்.
இரவு மணி பத்தானது. ரானும், மான்டியும் அவரவர் சேரில் அமர்ந்து தலைக்கவசத்தை அணிந்து கொண்டனர்.
“டென்ஷனா இருக்கா” என்றார் ரான்.
“ஆமாம்”.
“ஒண்ணும் பயப்பட வேண்டியதில்லை”.
பெரிய, நீளமான வயர்கள் இருவரையும் நடுவேயிருந்த கம்ப்யூட்டருடன் இணைந்திருந்தன.
“எவ்வளவு நேரம் ஆகும் இதற்கு?
“சில மணிகள். நாம் காலையில் எழும்போது முடிந்துவிடும்”
காலையில் சீக்கிரம் எழுந்து கம்ப்யூட்டரில் மெமரி ட்ரான்ஸ்பர் முழுவதும் முடிந்ததா என சரி பார்க்க வேண்டும். எதுவும் பிரச்னை எனில் அவரவர் மூளையின் அசல் பதிவை திரும்ப பதிவேற்றிக் கொள்ளலாம் என ரான் நினைத்தார். எப்படியும் காலையில் புதிய உடலுடன் இருப்போம். வயதான உடலில் இருக்கும் மான்டியை மயக்க மருந்து கொடுத்து காவலர்களுடன் அனுப்பி வைத்தால் வேலை முடிந்தது.
காலையில் ரான் தூக்கம் கலைந்து மெதுவாக கண்களை திறந்தார். முந்தைய இரவின் நினைவுகள் திரும்ப சடக்கென்று எழுந்து தன் உடலை பார்த்தார். அவருடைய உடலே இருந்தது. கை, கால்கள் அனைத்தும் அவருடையதே. அதிர்ச்சியுடன் எழ முயற்சித்த போது, தன் உடல் மெல்ல அசைவதையும், தான் ஒரு சிறிய படகில் கிடத்தப்பட்டு இருக்க சுற்றிலும் தண்ணீர், உணவு, பழங்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தார் ரான். என்ன நடந்தது ஏன் தாம் மாறவில்லை, எப்படி படகில் வந்தோம் என்ற குழப்பத்துடன் சுற்றிலும் பார்க்க எங்கு நோக்கிலும் தண்ணீர்.
உடைந்து போய் படகில் அமர்ந்த ரான், பாக்கெட்டில் ஒரு லெட்டர் இருப்பதை பார்த்து வெளியே எடுத்தார்.
மான்டி எழுதியிருந்த கடிதம் அது. “புரொபஸர் ரானுக்கு, மான்டி. முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் கூடு விட்டு கூடு பாயும் திட்டம் முற்றிலும் வெற்றி பெற்று விட்டது. உங்கள் மூளையின் பிரதியை கம்ப்யூட்டரில் சேமித்துள்ளேன். உங்களை போலவே என்னுடன் அதனால் சரளமாக பேச முடிகிறது. நீங்கள் செய்ய இருந்த காரியத்தை நினைத்து மிக வேதனைப் படுகிறது அல்லது வேதனைப் படுகிறீர்கள். மொத்தத்தில் நீங்கள் கம்ப்யூட்டரின் உள்ளே இருப்பது போன்று அல்லது பக்கத்துக்கு அறையிலிருந்து என்னுடன் கம்ப்யூட்டரில் பேசுவது போலத் தான் உள்ளது. இனி கம்ப்யூட்டரிலிருந்தே என்னை வழி நடத்துவீர்கள் என நினைக்கிறேன்.
உங்கள் மேல் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருந்தேன். நீங்கள் முதல்வர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது உங்களை பிரியும் வேதனை தாளாமல் எழுந்து உங்கள் லேபுக்கு வந்தேன். உங்கள் மெஷினையும், கம்ப்யூட்டரில் எழுதப்பட்டிருந்த புரோகிராமை படித்தபோது நீங்கள் என்ன செய்ய இருந்தீர்கள் என்பதை அறிந்து அதிர்ந்து போய்விட்டேன். காவலர்களின் தலைவன் பாரியிடமும், முதல்வர்களிடமும் உங்களுக்கு பதிலாக நான் தீவை விட்டு செல்லத் தயார் எனக் கூட மன்றாடியவன் நான். எனக்கு ஒரு தந்தையைப் போல், குருவைப் போல் இருந்த உங்களின் இந்த துரோகம் என்னை பெரிதும் ஏமாற்றமடைய வைத்து விட்டது.
“காலையில் கண் விழித்தால் உங்களால் எங்களை பிரிய மனமிருக்காது” என்று நீங்கள் மயக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாகவும் அந்த நிலையிலேயே படகில் அனுப்பி வைக்குமாறு நீங்கள் கேட்டுக்கொண்டதாக காவலர் தலைவன் பாரியிடம் கூறினேன். அவரும் பெருந்தன்மையுடன் அனுப்பி வைத்தனர். ஒரு மாதத்திற்கு உங்களுக்கு தேவையான உணவு மாத்திரைகளும், சோலார் எஞ்சின் பொருத்தப்பட்ட படகும், நீரை சுத்திகரிக்கும் ஒரு மெஷினையும் படகில் வைத்துள்ளேன். படகிலேயே அபயக்குரல் எழுப்பும் ரேடியோ, மீன் பிடிக்கும் தூண்டில், ஒரு சோலார் அடுப்பு, மழைக் கோட், போர்வை என அனைத்தும் வைத்துள்ளேன். வேறு ஏதும் நிலப்பரப்பை கண்டு பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் சந்திப்போம். உங்கள் மகன் மான்டி.
ரான் உடைந்து போய் அழ ஆரம்பித்தார்.