தேவதை உலா..
மழை பெய்து நின்ற பிறகும் மரங்கள் தூறும் ஒரு மண்வாசனை நாளில் உன் வீட்டருகே நின்றிருந்தேன். மெல்லியதாய் வீசிய குளிர் காற்றுக்கு உடல் சிலிர்த்துப்போக அருகிலிருந்த கடையில் தேநீர் வாங்கிக் கொண்டு உனக்காக காத்திருந்தேன். கையில் வாங்கிய கோப்பை உதட்டை நெருங்குவதற்குள் ஆறியிருந்தது.
வானத்தின் ஒரு துளி பூவுலகில் சிந்தியது போல நீலநிறச் சேலையில் ஒரு கையில் குடையையும், மறுகையில் பேக்கையும் அணைத்துக்கொண்டு என்னை நோக்கி மிதந்து வந்தாய். மல்லிகைப்பூ சூடிவந்த ரோஜாவாய். கண்ணில் தோன்றிய உன் பிம்பம் நெஞ்சில் சுடரையேற்றி உடலின் வெப்பத்தைக் கூட்டியது. கையிலிருந்த கோப்பை மீண்டும் சூடாகியது. தேநீரின் ஆவி யும் பறந்தது.
தொலைவிலேயே என்னை அடையாளம் கண்டுகொண்ட உன் உதடுகளில் தோன்றிய புன்னகைக் கீற்று எனது உள்ளத்தில் வானவில்லை ஏற்படுத்த, உடலில் உற்சாகம் கொப்புளித்து சிறகுகள் படபடத்தன. பிரபஞ்ச வெளியில் தேவதையை தரிசித்தவனைப் போல் மயங்கி நின்றேன்.
தர்பூஸ் கவிதைகள் பார்ட் 2…
என்னடா வென்று
புருவத்தை சுருக்கி
முகத்தை உயர்த்தி
விரல்களை மலராய் குவித்து
நீ சிரிக்கும் போதெல்லாம்
பேச நினைத்ததின்
முதல் வரி
தொலைந்து போகிறது
தமிழ் தரை தட்டுகிறது.
நீ தினமும்
செல்லும் தெருக்களில்
பகைமை மறைந்து
அன்பு மலர்கிறதாம்.
தீவிரவாதத்தை ஒழித்து
மிதவாதத்தை பரப்பும்
மன்மதவாதி நீ.
எப்போதாவது தோன்றும்
வானவில்லைக் காட்டி
பெருமை அடித்து
கிடந்தது வானம்.
பூமிவில்லாய்
நீ தோன்றும்வரை.
உனது வேண்டுதல்களை
நிறைவேற்ற
கடவுள்கள்
வரிசையில் நிற்கிறார்கள்.
உன்னையே வேண்டிப்பெற
நான் கடைசியில்.
வரம் தருகிறேன்
சொர்க்கம் போகிறாயா
என்றார் கடவுள்
இவளுடன் போகிறேன்
என்றேன் நான்.
நீயில்லாமல் சொர்க்கமேது?
நீயிருந்தால் நரகமேது?
நீ சூடிய மலர்கள்
முக்தி அடைந்தன.
நீ வாங்காமல் விட்ட மலர்கள்
மறுஜென்மம் வேண்டி நிற்கின்றன.
திராட்சை பெண்ணே
நீ தினமும் தலைகுளிக்கும்
தண்ணீரெல்லாம்
ஆற்றில் கலந்திருந்தால்
பொன் விளைந்திருக்கும்.
கடலில் கலந்திருந்தால்
கடல்நீர் அத்தனையும்
ஒயினாகியிருக்கும்.
நேர்த்தியாய் உடுத்திய
காட்டன் புடவையில்
நெடுநேரமாய்
அமர்ந்திருக்கிறாய்
சுயம்புவாய் தோன்றிய
அம்மனென்று
கோவில் கட்ட நினைக்கின்றனர்..
All reactions:
46Anuradha Prasanna, Lasyaa and 44 others