Ashoka the 2nd

கோடாரி விதிகள்

கோடாரி விதிகள்

முகநூலுக்கான கோடாரி விதிகள்.

முகநூலில் கண்விழித்து, வாய்கொப்பளித்து, டீ ஆத்துபவரா நீங்கள். உங்களுக்காக சில…

முகநூலில் பக்கம் என்பது ஒருவருடைய உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் குழுமியிருக்கும் இடம். சுருக்கமாக அவர் வீட்டு ஹாலைப் போன்றது.

உங்கள் ஹாலில் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் போட்டுக் கொண்டு திரியுங்கள். பெர்முடாசோ அல்லது சட்டை போடாமல் உடல் முழுவதும் புசுபுசுவென்ற முடியுடனோ. ஆனால் அடுத்தவர் ஹாலுக்குள் பதிவிட போகும்போது முழுக்கை, டை, ஷூவுடன் செல்வது ஆகச் சிறந்தது.

நேரில் பார்த்தால் எவ்வளவு இடைவெளியுடன் உரையாடுகிறோமோ அதையே முகநூலிலும் கையாளுங்கள். மற்றவர்கள் பேசுகிறார்கள் என்பதற்காக ‘ஹாய் மச்சான்’ என ஆரம்பித்து அவரை மனைவியுடன் மாட்டி விட்டு கும்மி அடிக்காதீர்கள்.

மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு காமெடி செய்கிறேன், கருத்தை விதைக்கிறேன் என நினைத்துக் கொண்டு எல்லை தாண்டாதீர்கள். கோடு கோடாத்தான் இருக்கணும்.

தங்கக் கோடாரி விதி : எதிர்மறை கருத்துக்கள் ஒருபோதும் வேண்டாம். அவர் ஹாலில் அவர் பஜ்ஜி நல்லா இருக்குன்னு சொன்னா உடனே நீங்கள் உள்ளே ஓடி வாயுப் பிரச்சினை வரும் என்று கதற வேண்டாம். அவர் வயிறு. அவருடைய கருத்து. உங்களுடைய அறிவை அங்கே காட்டவேண்டிய அவசியமில்லை. பஜ்ஜியை ரசிக்கும் நான்கு வாயு பகவான்கள் அவருக்கு கமெண்ட் போட்டு அருளுவர்.

அடுத்தவர் எழுதியதில் குறை காண்பது எளிது. வேண்டுமெனில் நீங்களும் தினமும் யோசித்து கருத்து யானப் பாலை வழங்குங்கள். யான, யானப் பால்.

வெள்ளிக் கோடாரி விதி : அறிவுரைகள் வேண்டவே வேண்டாம். உங்கள் பதி/ பத்தினியுடன் எல்லாவற்றிலும் ஒத்த கருத்துக்கள் உங்களுக்கு இருக்கிறதா? இல்லை அல்லவா. உங்களுக்கு ‘தாயைக் காத்த தனயன்’ படம் பிடிக்குமெனில் அவங்களுக்கு ‘தலையணை மந்திரம்’ பிடிக்கும் (vice versa). அப்படி ஓருயிர், ஈறுடலுக்குள்ளேயே வித்தியாசங்கள் இருக்கும்போது, நீங்கள் அவர் பக்கத்தில் நுழைந்து உலகிலேயே சிறந்த படம் ‘சின்ன வீடு’ என்று பதிவிடாதீர்கள்.
அனைத்து கருத்துகளுக்கும் எதிர் கருத்து உண்டு. உலகில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து என்று உங்களிடம் உள்ளதா? உலகின் மிகச்சிறந்த உணவு சிக்கன் பிரியாணி என்ற உண்மையைக் கூட ஏற்றுக் கொள்ளாத உலகமிது. ஐஸ் நீரில் மிதக்கும் என்று சொன்னால் கூட ‘இத சொல்ல வந்துட்டியா’ னு கருத்திடுபவர்கள் உண்டு.

பிளாட்டினக் கோடாரி விதி : முகநூலில் அறிவுரை மூலம் எவரையும் திருத்த முடியாது. சமூக பக்கங்கள் அனைத்தும் டைம் பாசுக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். மதம், சாதி, கட்சி, தெய்வம் என்று முழங்குபவர்களிடம் கம்பு சுற்றாதீர்கள்.
அடுத்தவரை டேக் செய்து எல்லோர் தட்டிலும் இட்லி பரிமாறுவதை விடுங்கள். அவருக்கு தேவையானதை அவர் எடுத்துக் கொள்வார். சொர்ணா வைரசை ஒழிக்க அரசு தன்னார்வலர் குழுவிற்கு உங்கள் பெயரையும் நான் கொடுத்தால் ஒத்துக் கொள்வீர்களா?

முகநூலில் நுழையும்போதே ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கையில் கிளௌஸ் மாட்டிக்கொண்டு நுழையாதீர்கள். ஒருவரின் கருத்து பிடிக்கவில்லையா? Unfriend ஆப்சனை பேஸ்புக் பகவான் மார்க் ஆன்டனி அருளியிருக்கிறார். அதை விடுத்து மற்றவர்களை தூய்மையாக்கப் போகிறேன் என்று ஞான உபதேசம் செய்ய கிளம்பாதீர்கள். உங்கள் கருத்து அக்மார்க் முத்திரை இடப்பட்ட சரியான கருத்தாக இல்லாமலும் இருக்கலாம்.

பதிவுகளைப் பார்க்காமல் மொய் வைத்து மொய் வாங்கும் உலகம் பேஸ்புக். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல காட்பாதர்கள் புழங்குமிடம். எனவே லைக் வேண்டுமெனில் லைக் போடுங்கள். கமெண்ட் வேண்டுமெனில் கமெண்ட் போட்டு மகிழ்ந்திருங்கள்.

ஆனால் எதிர் மறையோ, அறிவுரையோ வேண்டாம்.இதை யாரும் கடைப் பிடிக்க மாட்டீர்கள் என்று தெரிந்தாலும், இவை எனக்கு தோன்றிய மூன்று கோடாரிகள். பிளாட்டினக் கோடாரியல்ல. மார்க் ஆன்டனியல்ல, ஈறுடல் அல்ல என்று தொடங்குபவர்கள் தங்கக் கோடாரியை கையில் எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *