Ashoka the 2nd

என் இசைப்பயணம்… 🎵

என் இசைப்பயணம்… 🎵

 என் இசைப்பயணம்… 🎵

எதையும் முன்கூட்டியே பிளான் பண்ணி செய்யும் முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாகிய நான், நிறைய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சேலத்திலிருந்து சென்னை வருவதற்கு KPN பஸ் சேவையை தேர்ந்தெடுத்து பஸ் டிக்கெட்டை ஒரு வாரம் முன்னரே பதிவு செய்திருந்தேன். செமி ஸ்லீப்பர், வோல்வோ ஏசி பஸ் மற்றும் ஜன்னல் இருக்கை. இரவு பயணத்திற்கு வேறென்ன வேண்டும்.

இரவு 11.00 மணிக்கு பஸ்ஸிலேறி சீட்டில் அமர்ந்த சிறிது நேரத்தில் எனது பக்கத்து இருக்கையில் மெல்லிய ஆசாமி ஒருவர் வந்தமர்ந்தார். எலும்பானவரை பார்த்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. பொதுவாக இரண்டு பேர் அமரும் இருக்கைக்கு நடுவிலிருக்கும் கை வைக்கும் கட்டைக்கு ஒரு பனிப்போர் நடக்கும். இனி ஆர்ம் ரெஸ்ட் என்னுடையதென நன்றாக ஜிம் பாடி மாதிரி நெஞ்சை விரித்து அமர்ந்துகொண்டேன். வண்டி மெதுவாக கிளம்பியது.

சற்றுநேரம் பயணித்து விட்டு சற்று கண்ணயர்ந்தேன். திடீரென்று ஒரு கிறீச்சிடும் ஒலி கேட்க, பஸ் ஆக்சிடன்ட் ஆகி விட்டதென்று பயந்து கண்களை விழித்தேன். அனைத்தும் ஒருகணம் அமைதியாய் இருக்க, மீண்டும் அந்த கர்ஜனை ஒலி எனக்கு அருகிலிருந்த அரை ஜாண் உடலிலிருந்து எழுந்தது. இவ்வளவு மெல்லிய தேகத்தில் எப்படி இவ்வளவு கர்ண கடூரமான குறட்டை ஒலியென்று அதிர்ந்து போனேன். எனக்கு வந்த கடுப்புக்கு ஓங்கி மூஞ்சிலேயே ஒரு குத்து விடலாமென தோன்றியது.

இத்தனூண்டு மூக்கை வச்சிக்கிட்டு எப்படி நாதஸ்வரம் ஊதுகிறார் என்று அதிச்சியுடன் நான் பார்க்க மீண்டும் அவர் ஒரு முறை ஊதினார். இதுவரைக்கும் நீண்ட மூக்கையுடைய யானைகள்தான் இப்படி பிளிறி பார்த்திருக்கிறேன். எப்படி இந்த பிரச்னையை சமாளிப்பதென நான் யோசித்திருக்க மற்றவர்கள் அனைவரும் எதுவும் நடக்காதது போல் உறங்கிக் கொண்டிருந்தனர். மீண்டுமொரு முறை அவர் துருப்பிடித்த டிராயரைத் திறந்து, மூடுவது போல ஒலியெழுப்பினார். நான் பஸ்ஸின் குலுக்கலில் குலுங்குவது போல அவரை வேண்டுமென்றே ஒருமுறை இடிக்க, குறட்டை நின்றது.

சற்று நிம்மதியாகி கண்களை மூடிக்கொண்டு தூங்க முயன்றேன். மீண்டும் சிறிது நேரத்தில் கப்பல் கிளம்பும் சைரன் ஒலி கேட்க, இந்த தடவை செம டென்சன் ஆனேன். அவர் விதவிதமாய் உறுமிக்கொண்டிருக்க,

பஸ்ஸின் மேலிருந்த பையை அவர்மேல் தள்ளிவிடலாமா என்று யோசித்தேன்.
அதற்கு பதிலாக நான் அவரை எழுப்பி “என்னங்க இவ்வளவு சத்தமா குறட்டை விடுறீங்க” என்று சொல்ல,
அவர் வெட்கத்துடன் “சாரி. என் மனைவியும் இதைத்தான் சொல்வாள்” என்றார்.
“எப்ப திருமணம் செஞ்சீங்க?”
“ஒரு மாதமாகுது”
‘அனேகமா சீக்கிரம் ஓடிப்போய்டுவாள் அல்லது விவாகரத்து கேட்பாள்’ என்று நினைத்துக்கொண்டேன்.
நான் அவரிடம் “அவங்க எப்படி சமாளிக்கிறாங்க?”
“அவள் வேற ரூமில் படுத்துக்குறா”
‘நானா இருந்தா பிளாட்பார்மில் படுத்தாலும் படுப்பேன். இந்தாளோட படுக்கமாட்டென’ என நினைத்தேன்.

மனிதர்கள் குறட்டை விட்டு பார்த்திருக்கேன். ஆனால் இது வேற லெவல். நகங்களால் சுவரை சொறியறது மாதிரி இல்லாட்டி கான்கிரீட் தரையில் எஃகு அலமாரியை இழுப்பது போல.

மீண்டும் தூங்க முயன்றோம். உண்மையில் நான் முயற்சித்தேன், அவர் தூங்கினார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அவர் ட்ரெயின் ஹாரனை அலறவிட, நான் திரும்பி அவரது வாயைப் பார்த்தேன். சப்மரைன் மாதிரி காற்றை இழுத்தவர், காற்றை வெளியேற்றியபோது அவரின் உதடுகள் நடுங்கின. மூன்று முறை கர்ஜித்தார், நாலாவது முறை உறுமினார். அவரின் இசைப் பிரவாகம் வழிந்தோட, பஸ்ஸில் அனைவரும் அமைதியாக உறங்கினர். ‘காது கேட்காதவர்கள்’ பஸ்ஸில் இருக்கிறானா என்று சந்தேகம் வந்தது.
திடீரேன முன்னிருக்கையில் இருந்தவர் வேறொரு சுதியில் குறட்டை விடத்தொடங்க, எனது இரவுப் பயணம் சிவராத்திரி ஆகி விட்டது புரிந்தது. என் காதை சுற்றி டர்பன் மாதிரி துணி கட்டி சர்தாராகிப் பார்த்தேன். பயனில்லை. தலை, மூஞ்சு, முகரையெல்லாம் எகிப்த் மம்மி மாதிரி துணி சுற்றி பார்த்தேன். வேஸ்ட். காதில் பஞ்சு வைத்து பார்த்தேன். பேசாம அவரோட மூக்கில் பஞ்சு வைச்சு பார்க்கலாமா என்று ஐடியா வந்தது. மறுபடியும் அவரை ஒருமுறை இடித்தேன். குறட்டை சிறிது நேரம் நின்றது. பின்னர் மீண்டும் அவர் புதிய உத்வேகத்துடன் குறட்டை விட தொடங்கினார்.
போனை எடுத்து “குறட்டை விடும் நபரிடமிருந்து தப்பி உயிர் வாழ்வது எப்படி?” என கூகிளில் தேடினேன்.

அது “குறட்டை விடும் கணவனிடமிருந்து தப்பி பிழைப்பது எப்படினு காட்ட, என் கணவரை(!) செகண்ட் பார்த்துக்கிட்டேன். என்னவா இருந்தா என்ன.

கூகிள் தந்த ஐடியாக்கள்..
(i) அவரை அசைக்கவும் – நான் பேசாம அவரை பஸ்ஸிலிருந்து அசைத்துத் தள்ளிடலாமான்னு பார்த்தேன்.
(ii) மூக்கில் கிளிப் போடவும் – நான் அவரின் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கலாமான்னு நினைத்தேன்.
(iii) அவரது தலையின் கீழ் பெரிய தலையணையைப் பயன்படுத்துங்கள் – நான் அவரோட மூஞ்சிமேல் தலையணையை வச்சி அழுத்தி பிடிக்க விரும்பினேன். குறட்டை நிற்கும்வரை அழுத்திப் பிடிக்கனும்.
(iv) அவரை சூடான குளியல் போட சொல்லுங்கள், அவரை புரிந்து கொள்ளுங்கள், படுக்கையை மாற்றுங்கள், தலையணையை மாற்றுங்கள் இப்படி பல வழிகளை கூகிள் சொல்லியது.
எனக்கென்னமோ கணவரை மாற்றுவது தான் சிறந்த வழின்னு தோணியது.

அதற்குள் மேலும் இரண்டு பயணிகள் வெவ்வேறு சுதி, சுருதியில் தொடங்க பஸ்ஸில் ஆர்கெஸ்ட்ரா தொடங்கியது. ஒரு பெண்ணும் அவர் பங்குக்கு குறட்டை விடத் தொடங்கினார். 33%னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டார்னு நினைக்கிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஒலியை எழுப்பினர். உலகத்திலிருக்கும் எல்லாருக்கும் கைரேகை மாதிரி குறட்டை ஒலியும் வெவ்வேறு போல. ஒருவர் மேலேறியபோது மற்றொருவர் கீழிறங்கினார். எனக்கு விலங்குகளுக்கு மத்தியில் மிருகக்காட்சிசாலையில் தூங்குவது போல் இருந்தது. என் பின்னாலிருந்த குண்டு மனிதர் காற்றை இழுத்து சத்தத்துடன் ஊதியபோது எனது தலைமுடி பறந்தது. பஸ்ஸின் எல்லா இடங்களிலுமிருந்தும் ஒலியும், ஒலியும் கேட்கத் தொடங்க, குறட்டையர்களுக்கான பஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணிட்டனானு எனக்கு சந்தேகம் வந்தது. ஒருவர் அரிசி போட்டு வாயிலேயே மாவு அரைத்தார். ஒருவர் விமானத்தை தரையிறங்கிக் கொண்டிருந்தார். ஒருத்தர் ரம்பத்துக்கு சாணை பிடித்துக்கொண்டிருந்தார். பஸ் குலுங்கினால் அனைவரும் நல்ல பிள்ளையாகி விட்டு, சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கச்சேரியை தொடங்கினர்.

நான் எழுந்து பஸ் டிரைவரிடம் சென்று “ஐயா இந்த கிளீனர் மாதிரி ஏதாவது வேலை செய்றதுனாக்கூட பரவாயில்ல. இங்கயே உட்காரட்டுமான்னு” கேட்க, அவர் பரிதாபப்பட்டு அவரின் உதவியாளருடன் உட்கார அனுமதித்தார்.

“எப்படிங்க இந்த சத்தத்தில தூங்குறது?” னு நான் கேட்க,

“இது பரவாயில்ல. போனவாரம் ஒரு ஆளு போட்ட கொரட்டைல நான் பஸ்டயர் வெடிச்சிடுச்சினு கீலெல்லாம் இறங்கி செக் பண்ணினேன்” என்றார்.

இந்த நாடும், நாட்டில் குறட்டை விடுபவர்களுக்கு நல்லா இருக்கட்டும் என நினைத்துக்கொண்டு நிம்மதியாக சாஞ்சி உட்கார்ந்துக்கிட்டேன்.
பஸ்ஸுக்குள் ஜுராசிக் பார்க்கிலிருந்து தப்பிய அனைத்து விலங்குகளும் ஒன்றையொன்று சாப்பிட முயன்று கொண்டிருக்க நான் அமைதியாகி மெதுவாக கண்களை மூடினேன்.

எனக்கு அருகிலிருந்த உதவியாளர் குறட்டை விடத் தொடங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *