கிரகங்கள் நேர்க்கோட்டில் அமைய, வால் நட்சத்திரங்கள் வரிசையில் நிற்க எனது பிறந்த நாள் என்ற உன்னத நிகழ்வு நேற்று மீண்டும் நிகழ்ந்தது. காலையில் கண் விழித்தபோது “பையன் பொறந்திருக்கான்”னு யாரும் கத்தவில்லை. டாக்டர் என் காலை பிடித்து தலைகீழாய் தூக்கவில்லை. எந்த நர்ஸும் குளிப்பாட்ட வரவில்லை. அதனால் நானே குளிக்கச் சென்றேன்.
ரசிகர்களின் ஆரவாரம், கட் அவுட்கள், போஸ்டர்கள் ஏதுமில்லை. நான் பிறந்த வருடத்தில் பிராண்டன் லீ இறந்தார். ஒரு வயதானபோது நிக்சன் இறந்தார். இது தொடர, மத்தபடி மோசமான நிகழ்வுகள் ஏதுமில்லை.
பொதுவாக பிறந்தநாளில் நான் கேக் வெட்டுவதில்லை. எதற்காக கேக்கில் எச்சில் தெறிக்க மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை பிசைந்து அடுத்தவருக்கு தயிர் சாதமாய் தருவானேன். எதையாவது சாதித்த பின்னரே கேக்கை வெட்ட நினைப்பேன். இன்னும் காலம் இருக்கிறது. சிறுவயது தானே!
ஆனால் இப்பெல்லாம் கேக் எளிதாக கிடைத்து விடுகிறது. ஆனால் “இத்தனை மெழுகுவர்த்தி வேணும்னா ரெண்டு நாள் முன்னாடி சொல்லிடுங்க. பாக்டரில இருந்து வரவழைக்கணும்” என்று கடைக்காரர் கோபப்படுகிறார். எல்லா மெழுகுவர்த்திகளையும் கொளுத்தினால் கொரோனோவுக்கு விளக்கேத்தியது போல இந்தியா ஒளிருகிறது. ஊதி அணைக்காமல் பேன் போட்டு அணைக்க வேண்டியிருக்கிறது. அதற்குப்பின் வெளிப்படும் புகையில் ஏதோ வீடு தீப்பிடித்து விட்டதோ என்று பயந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி விடுகின்றனர்.
அதுவும் நேற்றைய பிறந்த நாளில் அண்ணாச்சி விளம்பரம் மாதிரி ‘பக்கத்து வீட்டில கொரோனா இருக்கு. எதிர்த்த வீட்டில் இருக்கு. உங்க வீட்டில் இருக்கானு’ அரசு கேட்டுட்டு முழு ஊரடங்கு செய்துவிட்டதால் அமைதியோ அமைதி.
நேற்றும் முதல் ஒரு மணி நேரம் பரபரப்பாய் போன்கள் தொடர, சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் போல சிங்க நடை போட்டேன். அதற்கப்புறம் ‘துணிய இன்னும் காயப் போடலையானு’ அசரீரி கேட்க புழக்கடைக்கு வந்தா எதிர்த்த வீட்டு பெரிய மீசைக்காரர் சேலையை நீவிநீவி காய வச்சிட்டிருந்தார். நான் அவரை வேடிக்கை பார்க்க, ஒரு ஆம்பளையோட மனசு ஆம்பளைக்கு புரிந்தது. அவரு அசடு வழிய அவரு போனதும் நான் காயப் போட்டேன்.
வயதில் ஒரு வருடம் கூடினால் நான் எப்போதும் வருத்தப்படுவதில்லை. அதை நண்பர்களின் வயதில் சேர்த்து விடுகிறேன். எனினும் நேரம் ஒதுக்கி முகநூலில் கவிதை எழுதியவர்களுக்கும், போஸ்ட் பதிவிட்டவர்களுக்கும், நிஜத்தை விட நிழலை அழகாய் பென்சிலில் வரைந்தருளிய இருவருக்கும், போன் செய்த கோடான கோடி அன்பர்களுக்கும் நன்றி கூறும் இதேவேளையில்,
சந்தடி சாக்கில் “அண்ணே” என்று வாழ்த்திட்டு அவர்களின் வயதை குறைத்துக் கொண்ட எதிர் கட்சிக்காரர்களுக்கு கண்டனத்தையும் பதிவிட்டு, இது திரும்ப வட்டியுடன் செலுத்தப்படும் என்று கூறிக்கொண்டு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.