அமுத விழிகள்…
திருமண நிகழ்வின் முதல்நாள் மணப்பெண்ணின் தோழிகளுடன் தட்டையேந்திக்கொண்டு அல்லிகள் புடைசூழ ஆம்பலாய் நடந்தாய். உனது முதல் பார்வையிலேயே என் மனம் தூண்டினில் மீன் போல சிக்கிக்கொண்டது. பார்வைகளின் ஸ்பரிசத்தில் காதல் மனதில் அடிக்கல் நாட்டியது. அடுத்த மின்னல் பார்வை மேகமனதை துளைத்துச் செல்ல நீரிடியை தாங்கி வந்த உன் பார்வையால் என் மனதில் காதல் ஊற்றெடுத்தது. அடுத்தடுத்த பார்வைகளின் கதகதப்பில் காதல் லாவாக்கள் உருவாகி பட்டாம்பூச்சிகளாய் இறகு முளைத்து சிறகடித்தது.
முதல் நாளிரவு தாவணியில் பிறை நிலவாய் பவனி வந்தவள் மறுநாள் காலையில் முழுமதியாய் சேலையில் உதிக்க நிலவிடம் தடுமாறிய மனது முழுமதியிடம் சரணாகதி அடைந்தது. மண்டபத்தில் நீ இங்குமங்கும் நடக்கும்போது பார்வைகளை கொய்து மனங்களை சிறை பிடித்துச் சென்றாய். ஆண்களின் பனிப்பார்வைகளையும், பெண்களின் வெப்பப் பார்வைகளையும் புடவைத் தலைப்பில் முடிந்து பொன்னிற இடையில் சொருகிக்கொண்டு, மன்னர்களை மண்டியிட வைத்த கிளியோபட்ராவாய் வலம்வந்தாய்.
தர்பூஸ் கவிதைகள் பார்ட் 3
கடைக்கண் கருணையில்
கவிஞர்களையும்
அரைக்கண் வீச்சில்
அறிஞர்களையும்
முழுப் பார்வையில்
அடிமைகளையும்
உருவாக்கும்
கடவுள் இவள்.
ஆண்கள் மட்டும்
பிரவேசிக்கும்
காதல்தேசத்தின்
கருமாரி இவள்.
பார்வையில் காத்தலையும்
அணைப்பினில் படைத்தலையும்
சிரிப்பினில் அழித்தலையும்
செய்யும் நீ
தேவதையா
இல்லை
தேவதைகளின் தேவதையா !
யாழினிதா குழலினிதா என்ற
வள்ளுவனின் ஆராய்ச்சி
உன் குரலே சிறந்ததென்று
முடிவுக்கு வந்திருக்கும்.
வட்டச்சூரியனை
சுழலும் நிலவுகளாய்
மருதாணி இட்ட
உன் கை பற்றி
நடக்கையில்
ஒலிம்பிக் ஜோதியை
ஏந்தும் வீரனாய்
மனம் எக்களிக்கிறது.
உன்னைப்பற்றி
எழுதிய
கவிதைத்தாளில்
இருந்து
அறையெங்கும்
நிரம்பி வழிகிறது
உன் பேரழகு.
என்னை என் வீட்டிலும்
உன்னை எதிர்வீட்டிலும்
படைத்து விட்டு
கடவுள் கவிதை வேண்டி
காத்திருக்கிறார்.
கண்ணைக் காட்டு
அவர் கடனைத்தீர்க்க
வேண்டும்.
கோவிலைப் பார்க்கும்போது
தானாய் குவியும் என் கரங்கள்
உன்னை பார்க்கும்போதும்
வணங்கி விடுகின்றன.
அருள்பாலித்து விட்டு போ.