கல்லூரி தென்றல்
நான் வான் நோக்கி நடக்க, நிலம் குனிந்து நடந்து வந்தாள் அவள். பட்டு உடலில் காட்டன் சேலை அணிந்த தேவதையாய், தேனூறிய கனியொன்று கால் முளைத்து நடப்பதாய் தோன்றியது. கண்கள் நான்கு உராய்ந்ததும் கரண்ட் கம்பிகள் மோதியது போல மனதுக்குள் பொறி பறந்தது. என் இதயத்துடிப்பு இசையாய் கேட்டது. காட்சிகள் வண்ணமயமாகின. அவள் காதல் உணர்வுகளின் ஆலயம். அழகுகளின் சரணாலயம்..எனது அத்தனை பாதைகளும் அவள் வகுப்பின் வழியே மாறியது. எனது திசைகள் அவளையே சென்றடைந்தன. அவள் விழிகளின் முற்றுகையில் வாழவும் வழியில்லாமல், மீளவும் வழியில்லாமல் போனது. உன் தோழியிடம் என்னைக்காட்டி சிரிக்கையில் காதலின் முதல் பூ பூத்தது.
தர்பூஸ் கவிதைகள் பார்ட் 5
அணுக்கள்தோறும் துளிர்த்த காதல்
அணுக்கத்தை வேண்டுகிறது.
நீ அருகிலில்லா பொழுதுகளில்
வாழ்வு துறவேற்கிறது
நீயும் நானுமான நாட்கள்
நிகழ்காலத்தை சார்ந்தவை
நீயும் நானுமற்ற நாட்கள்
இறந்த காலத்தை சார்ந்தவை
உன் விரல் நுனி தீண்டும் வரையில்
எதிர்காலமில்லா எந்திரம் நான்.
உன் விரலோடு விரல் கோர்க்கையில்
ஐம்புலனும் அலைபாய்கின்றன.
ஆத்மா தத்தளிக்கிறது
உலகையே காதலிக்க தோன்றுகிறது
காதல் படியளக்கும்
காதலர் தெய்வம் நீ
கோடானு கோடி
இதயங்களின் வேண்டுதலாய்
தெய்வங்கள் தோன்றின.
தெய்வங்களின் பிராத்தனையாய்
நீ வந்தாய்
நீ கையெழுத்திட்ட புத்தகங்கள்
காதலின் புனித நூலாக,
அடிக்கோடு இட்டவை
காதல் இலக்கணம் ஆகின.
வாழ்ந்த தெரு
என் புனித யாத்திரை தலமானது.
உனது பிறந்த நாள்
காதலர் தினமாக
மலர்ந்த நாள்
மலர்களின் தினமானது.
உனக்கு துணை வர
சூரியனும், சந்திரனும்
போட்டியிட்டன
என்னை தேர்ந்தெடுத்தாய் நீ!
சூரிய, சந்திரர்களை
கிரகணங்கள் பீடித்தது.
நடக்கையில் நாலடியார்
பேசுகையில் திருக்குரல்
உருவத்தில் சீவகசிந்தா மணி
கற்பித்தது கள வழி நாற்பது
தமிழ் தந்த காதல் மதம் நீ