கடவுளின் டைரிக் குறிப்பு…
காதலில் விழுவது எப்படி…
Crash course to crash in love…
சொந்தக்காரர்கள் பிள்ளைகளை காலேஜில் சேர்க்க கூட்டம் கூட்டமாய் வீட்டுக்கு படையெடுக்கும் இந்நேரத்தில் சம்மர் ஊட்டியைப் போல வீடு நெரிசல் படுகிறது. வடக்கில் செல்லும் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டாய் வீடு முழுதும் இரவில் படுத்து உருளுகிறோம். சிலருக்கு RAC. சேரில் உட்கார்ந்தபடி…
நேற்றிரவு தெற்கில் தலை வைத்து தூங்கியெழுந்ததும் காதலை பற்றி எழுத தோன்றியது. இளைஞர்களுக்கு மேய்ப்பனாக அவர்களை கரைசேர்க்கும் கடமை எனக்கு இருப்பதாய் பட்டது. நீ என்ன 1000 காதல் செய்த அபூர்வ சிகாமணியா என கேட்கலாம். எனக்கு கோழி போல முட்டை போட தெரியாவிட்டாலும் ஆம்லெட்டின் சுவையை விமர்சனம் செய்ய தெரியும். 1000 ஆம்லெட் சாப்பிட்டவன். கோழியையும்…
OK Theroy class starts now.
இந்த தலைப்பை படித்ததும் கங்கையில் குளிப்பது எப்படி என்பது போன்ற புனித உணர்வு தலைதூக்கினால் நீங்கள் யூத். தொடர்ந்து படியுங்கள்.
சாக்கடையில் விழுவது எப்படி என்ற உணர்வு தோன்றினால் நீங்கள் பூமர் அங்கிள்/ஆன்டி. தப்பிச்சு எப்படியாவது ஓடிருங்க!
முதலில் காதல் என்றால் என்ன?
இளம்பிராயத்தில் உணர்வு திரள்களில் ஜனிக்கும் கொழுப்பு கட்டி. கேன்சராக மாறுவதற்குள் வெட்டி எறிஞ்சிட்டு பொளப்ப பாத்தா உருப்படலாம்.
இதை வேறு விதமாய் பார்த்தால்…
காதல் என்பது கடற்கரையில் நின்று கால் நனைப்பதைப் போன்றது. வேண்டாம்னா நகர்ந்துடலாம். கல்யாணம் என்பது சொந்தக்காரங்க போட்டுல கூட்டிட்டு போயி நடுக்கடலில் இறக்கி விடுவது. சாகரத்த கடக்க சாகணும்.
காதலில் பெண்கள் தேடுவது….
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்தலையில் விடல்னு சொல்றதற்கெல்லாம் மண்டையாட்டும் தஞ்சாவூர் பொம்மையை. கூஜாவை. எடுபிடியை. தியாகியை. சாதுவை. அம்பியை. பொய்யனை, புரட்டனை.
காதலில் ஆண்கள் தேடுவது….
பெரிய மனதை…
காதலுக்கு முதல் தகுதி என்ன?
அழகு, அறிவு, பணம் என்பவர்கள் ஓரமா போயி விளையாடுங்க. அதெல்லாம் காதல் நோய்க்கு தேவையற்றது.
காதலுக்கு தேவையான முத்தான தகுதிகள் மூன்று. அதில் முதல் முத்து… வாய். அது நல்ல வாயோ….! நாரத வாயோ..!!
காக்கா எலுமிச்சை பழத்தை தூக்கிட்டு போவதை போலிருக்கும் காதலர்களை பார்த்திருப்பீர்கள். எப்பவும் அப்படித்தான் இருக்கும் என்பது வாத்ஸாயனரின் முதல் விதி. அந்த காதலில் ஜெயிக்க கா..கா.. வென கரைஞ்சிட்டே இருக்கணும்……
“கண்ணே நீ எனக்கு பாய் கடை பிரியாணி போல, இருட்டு கடை அல்வா போல… இப்படி உருட்டிக்கிட்டே இருக்கனும்..”
சுமாரான பையன் சூப்பர் பொண்ணை/ சூப்பர் பேக்ரவுண்டு உள்ள பெண்ணை தேடி மணம் முடிப்பதே உலகின் நியதி. சூப்பர் பையன் சுமார் பிகரிடம் விழுவது மானிடராய் பிறப்பினும் அரிது. பையர்கள் அவ்வளவு மடையர்கள் இல்லை.
இரண்டாவது முத்து…. தைரியம்.
காதலை சொல்ல தைரியமில்லாமல் காத்து கிடக்கும் இதயம் பட முரளிகளை எனக்கு தெரியும். யோகிபாபு போல மண்டையிருந்தாலும் அவரைப்போல அசால்ட் ஆறுமுகமா டீல் செய்ய கத்துக்கணும்.
Now Practical Class. லேடீஸ் காலேஜ் முன்னால் ஒத்த ரோசாவுடன் நிற்கும் யோகியை கற்பனை செய்து கொள்ளுங்கள்…
“ஹாய் பேபி உன்னை…. என்னோட மனசுல…. பிஜேபி மாரி பத்து வருசமா உக்கார வச்சிருக்கேன். அதுல தாமரையை நீதான் மலர வைக்கணும்”
“ஹிந்தி தெரியாது போடா”
“ஏய் …இருடி … நான் தமிழுலதான பேசறேன்… கண்ட்ரி புரூட்… ஓகே நெக்ஸ்ட்”
“கண்ணே….”
“என்ன உட்ருண்ணே”
“மூஞ்சை பாரு.. தர்மாஸ்பத்திரியில பேபி திருடுற மாரி .. போடி ஒனக்கெல்லாம் கொறட்டை விடுறவன்தான் புருஷனா கிடைப்பான் … அடுத்து… “
“ஏய் பேபி ஐலவ் யூ… உன்னைத் தவிர என் மஞ்சா சோத்துல வேற யாருக்கும் எடமில்லை. அதுல குழம்பு ஊத்த நீ வர்ரியா?
“என்ன வெள்ளாட்டு சித்தப்பா இது”
“எதூ! சித்தப்பாவா… ஒளவைக்கு ஆயா மாதிரி இருந்துட்டு எவ்வளவு கொழுப்பு.
இரண்டு பெண்கள் ஜோடியா வர்ராங்க..
“எச்சூஸ் மீ டியர் லேடீஸ்……”
“சில்லறை இல்லப்பா…”
“போங்கடி…. பெரிய கார்டஷியான் சிஸ்டர்சுனு நெனப்பு. நிமித்திட்டு போறாலுக மூஞ்சை.. காதலுக்கு மரியாதை தெரியாத காலேஜ். அம்புட்டும் அட்டு பீசு. ஆனா காதல் பிசாசா இருக்கு. அடுத்ததுக்கு போவோம்..”
மொத்தத்துல தூண்டில் போடாம வலை போட்டு தேடணும்.. மீனு சிக்கலைன்னாலும் தவளையாவது சிக்கும்.. இப்படி பேச ஒன்றரை டன் தைரியம் வேணும்.
நம்ம லிஸ்டில் அடுத்து இடம் பிடிக்கும் முத்தான முத்து……… ஸ்டைல்..
அதுக்கு முதல் தேவை ஒரு கூலர்ஸ். கண்ணுல பொறை எடுத்த பாட்டி போடுற மாதிரி போடக்கூடாது. ஒரு ஸ்டைலான கண்ணாடி கால் மூஞ்ச மறைச்சி சுமார் மூஞ்சி குமாரையும் அழகாக்கிரும். அப்படியே முடிஞ்சவங்க தாடி வளருங்க. பிஞ்சி மூஞ்சி உள்ளவங்க விட்ருங்க.
கல்யாணத்துலயே திருவள்ளுவர் மாதிரி தாடி வளர்ப்பது இப்ப நாகரீகம். அதை family planning முக்கோணமா வெட்டணும். கண்ணாடியும், தாடியும் சேர்ந்துட்டா அங்க மூஞ்சே இருக்காது. கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் ஷேவ் செஞ்சா ஷேவிங் பண்ணிய ராஜேந்தரை பார்க்கிற மாதிரி அடையாளம் தெரியாது.
“ப்ப்ப்பாபா…. யாருங்க நீங்க!”
“உன் புருசன்மா”
கையை வாயில் வச்சி வீல்ன்னு கத்திட்டு வீழ்ந்துருங்க…
Next Dressing..
கொரியன் ஹீரோங்க போடுற அதே ட்ரஸ்சை எப்படியாவது வாங்கிருங்க. தெலுகு பாலைய்யா மாதிரி வாங்கிராதீங்க. அப்புறம் அந்த பொண்ணு பயந்து காதலு எழவாயிரும்.
சோளக்கொல்லை பொம்மை மாதிரி இருந்தாலும் மாடர்னா இருக்கணும். தோள் தெரிய டாப்ஸ் போடுற பொண்ணை இம்ப்ரெஸ்ச சட்டையின் இரண்டு பட்டனை கழட்டிட்டு நடங்க. சேலை கட்டும் பெண்ணை கட்ட வேட்டி கட்டுங்க. கிழிஞ்ச ஜீன்ஸ் பொண்ணை நாயா தொரத்த கிழிஞ்ச ஜீன்ஸையே போடுங்க.
மாவுக்கேற்ப இட்லியோ தோசையோ ஊத்தறது முக்கியம்.
அப்புறம் விடாமுயற்சி…
முயற்சில பெயிலானாலும் விடாது கருப்பூன்னு சுத்தி வந்தா காதல் வசப்பட்டு கல்யாணம் கைகூடி இந்த நாள் மட்டும் இல்லாம எல்லா நாளும் நாசமா போயிரும்..
மூணு முத்துவை தாண்டி போயிருச்சுனு மேட்டரை புரிஞ்சிக்காம விரல் விட்டு எண்ணிட்டு இருந்த 90ஸ் கிட்ஸ் தொடர்ந்து எண்ணுங்க.
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள், வேர்கள், ஆணிகள் கிடையாது.