Ashoka the 2nd

Crash course to crash in love…

Crash course to crash in love…

கடவுளின் டைரிக் குறிப்பு… காதலில் விழுவது எப்படி… Crash course to crash in love… சொந்தக்காரர்கள் பிள்ளைகளை காலேஜில் சேர்க்க கூட்டம் கூட்டமாய் வீட்டுக்கு படையெடுக்கும் இந்நேரத்தில் சம்மர் ஊட்டியைப் போல வீடு நெரிசல் படுகிறது. வடக்கில் செல்லும் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டாய் வீடு முழுதும் இரவில் படுத்து உருளுகிறோம். சிலருக்கு RAC. சேரில் உட்கார்ந்தபடி… நேற்றிரவு தெற்கில் தலை வைத்து தூங்கியெழுந்ததும் காதலை பற்றி எழுத தோன்றியது. இளைஞர்களுக்கு மேய்ப்பனாக அவர்களை கரைசேர்க்கும் கடமை எனக்கு இருப்பதாய் பட்டது. நீ என்ன 1000 காதல் செய்த அபூர்வ சிகாமணியா என கேட்கலாம். எனக்கு கோழி போல முட்டை போட தெரியாவிட்டாலும் ஆம்லெட்டின் சுவையை விமர்சனம் செய்ய தெரியும். 1000 ஆம்லெட் சாப்பிட்டவன். கோழியையும்… OK Theroy class starts now. இந்த தலைப்பை படித்ததும் கங்கையில் குளிப்பது எப்படி என்பது போன்ற புனித உணர்வு தலைதூக்கினால் நீங்கள் யூத். தொடர்ந்து படியுங்கள். சாக்கடையில் விழுவது எப்படி என்ற உணர்வு தோன்றினால் நீங்கள் பூமர் அங்கிள்/ஆன்டி. தப்பிச்சு எப்படியாவது ஓடிருங்க! முதலில் காதல் என்றால் என்ன? இளம்பிராயத்தில் உணர்வு திரள்களில் ஜனிக்கும் கொழுப்பு கட்டி. கேன்சராக மாறுவதற்குள் வெட்டி எறிஞ்சிட்டு பொளப்ப பாத்தா உருப்படலாம். இதை வேறு விதமாய் பார்த்தால்… காதல் என்பது கடற்கரையில் நின்று கால் நனைப்பதைப் போன்றது. வேண்டாம்னா நகர்ந்துடலாம். கல்யாணம் என்பது சொந்தக்காரங்க போட்டுல கூட்டிட்டு போயி நடுக்கடலில் இறக்கி விடுவது. சாகரத்த கடக்க சாகணும். காதலில் பெண்கள் தேடுவது…. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்தலையில் விடல்னு சொல்றதற்கெல்லாம் மண்டையாட்டும் தஞ்சாவூர் பொம்மையை. கூஜாவை. எடுபிடியை. தியாகியை. சாதுவை. அம்பியை. பொய்யனை, புரட்டனை. காதலில் ஆண்கள் தேடுவது…. பெரிய மனதை… காதலுக்கு முதல் தகுதி என்ன? அழகு, அறிவு, பணம் என்பவர்கள் ஓரமா போயி விளையாடுங்க. அதெல்லாம் காதல் நோய்க்கு தேவையற்றது. காதலுக்கு தேவையான முத்தான தகுதிகள் மூன்று. அதில் முதல் முத்து… வாய். அது நல்ல வாயோ….! நாரத வாயோ..!! காக்கா எலுமிச்சை பழத்தை தூக்கிட்டு போவதை போலிருக்கும் காதலர்களை பார்த்திருப்பீர்கள். எப்பவும் அப்படித்தான் இருக்கும் என்பது வாத்ஸாயனரின் முதல் விதி. அந்த காதலில் ஜெயிக்க கா..கா.. வென கரைஞ்சிட்டே இருக்கணும்…… “கண்ணே நீ எனக்கு பாய் கடை பிரியாணி போல, இருட்டு கடை அல்வா போல… இப்படி உருட்டிக்கிட்டே இருக்கனும்..” சுமாரான பையன் சூப்பர் பொண்ணை/ சூப்பர் பேக்ரவுண்டு உள்ள பெண்ணை தேடி மணம் முடிப்பதே உலகின் நியதி. சூப்பர் பையன் சுமார் பிகரிடம் விழுவது மானிடராய் பிறப்பினும் அரிது. பையர்கள் அவ்வளவு மடையர்கள் இல்லை. இரண்டாவது முத்து…. தைரியம். காதலை சொல்ல தைரியமில்லாமல் காத்து கிடக்கும் இதயம் பட முரளிகளை எனக்கு தெரியும். யோகிபாபு போல மண்டையிருந்தாலும் அவரைப்போல அசால்ட் ஆறுமுகமா டீல் செய்ய கத்துக்கணும். Now Practical Class. லேடீஸ் காலேஜ் முன்னால் ஒத்த ரோசாவுடன் நிற்கும் யோகியை கற்பனை செய்து கொள்ளுங்கள்… “ஹாய் பேபி உன்னை…. என்னோட மனசுல…. பிஜேபி மாரி பத்து வருசமா உக்கார வச்சிருக்கேன். அதுல தாமரையை நீதான் மலர வைக்கணும்” “ஹிந்தி தெரியாது போடா” “ஏய் …இருடி … நான் தமிழுலதான பேசறேன்… கண்ட்ரி புரூட்… ஓகே நெக்ஸ்ட்” “கண்ணே….” “என்ன உட்ருண்ணே” “மூஞ்சை பாரு.. தர்மாஸ்பத்திரியில பேபி திருடுற மாரி .. போடி ஒனக்கெல்லாம் கொறட்டை விடுறவன்தான் புருஷனா கிடைப்பான் … அடுத்து… “ “ஏய் பேபி ஐலவ் யூ… உன்னைத் தவிர என் மஞ்சா சோத்துல வேற யாருக்கும் எடமில்லை. அதுல குழம்பு ஊத்த நீ வர்ரியா? “என்ன வெள்ளாட்டு சித்தப்பா இது” “எதூ! சித்தப்பாவா… ஒளவைக்கு ஆயா மாதிரி இருந்துட்டு எவ்வளவு கொழுப்பு. இரண்டு பெண்கள் ஜோடியா வர்ராங்க.. “எச்சூஸ் மீ டியர் லேடீஸ்……” “சில்லறை இல்லப்பா…” “போங்கடி…. பெரிய கார்டஷியான் சிஸ்டர்சுனு நெனப்பு. நிமித்திட்டு போறாலுக மூஞ்சை.. காதலுக்கு மரியாதை தெரியாத காலேஜ். அம்புட்டும் அட்டு பீசு. ஆனா காதல் பிசாசா இருக்கு. அடுத்ததுக்கு போவோம்..” மொத்தத்துல தூண்டில் போடாம வலை போட்டு தேடணும்.. மீனு சிக்கலைன்னாலும் தவளையாவது சிக்கும்.. இப்படி பேச ஒன்றரை டன் தைரியம் வேணும். நம்ம லிஸ்டில் அடுத்து இடம் பிடிக்கும் முத்தான முத்து……… ஸ்டைல்.. அதுக்கு முதல் தேவை ஒரு கூலர்ஸ். கண்ணுல பொறை எடுத்த பாட்டி போடுற மாதிரி போடக்கூடாது. ஒரு ஸ்டைலான கண்ணாடி கால் மூஞ்ச மறைச்சி சுமார் மூஞ்சி குமாரையும் அழகாக்கிரும். அப்படியே முடிஞ்சவங்க தாடி வளருங்க. பிஞ்சி மூஞ்சி உள்ளவங்க விட்ருங்க. கல்யாணத்துலயே திருவள்ளுவர் மாதிரி தாடி வளர்ப்பது இப்ப நாகரீகம். அதை family planning முக்கோணமா வெட்டணும். கண்ணாடியும், தாடியும் சேர்ந்துட்டா அங்க மூஞ்சே இருக்காது. கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் ஷேவ் செஞ்சா ஷேவிங் பண்ணிய ராஜேந்தரை பார்க்கிற மாதிரி அடையாளம் தெரியாது. “ப்ப்ப்பாபா…. யாருங்க நீங்க!” “உன் புருசன்மா” கையை வாயில் வச்சி வீல்ன்னு கத்திட்டு வீழ்ந்துருங்க… Next Dressing.. கொரியன் ஹீரோங்க போடுற அதே ட்ரஸ்சை எப்படியாவது வாங்கிருங்க. தெலுகு பாலைய்யா மாதிரி வாங்கிராதீங்க. அப்புறம் அந்த பொண்ணு பயந்து காதலு எழவாயிரும். சோளக்கொல்லை பொம்மை மாதிரி இருந்தாலும் மாடர்னா இருக்கணும். தோள் தெரிய டாப்ஸ் போடுற பொண்ணை இம்ப்ரெஸ்ச சட்டையின் இரண்டு பட்டனை கழட்டிட்டு நடங்க. சேலை கட்டும் பெண்ணை கட்ட வேட்டி கட்டுங்க. கிழிஞ்ச ஜீன்ஸ் பொண்ணை நாயா தொரத்த கிழிஞ்ச ஜீன்ஸையே போடுங்க. மாவுக்கேற்ப இட்லியோ தோசையோ ஊத்தறது முக்கியம். அப்புறம் விடாமுயற்சி… முயற்சில பெயிலானாலும் விடாது கருப்பூன்னு சுத்தி வந்தா காதல் வசப்பட்டு கல்யாணம் கைகூடி இந்த நாள் மட்டும் இல்லாம எல்லா நாளும் நாசமா போயிரும்.. மூணு முத்துவை தாண்டி போயிருச்சுனு மேட்டரை புரிஞ்சிக்காம விரல் விட்டு எண்ணிட்டு இருந்த 90ஸ் கிட்ஸ் தொடர்ந்து எண்ணுங்க. எங்களுக்கு வேறெங்கும் கிளைகள், வேர்கள், ஆணிகள் கிடையாது.

Read More
கொரோனா திருவிளையாடல்….

கொரோனா திருவிளையாடல்….

கொரானா வைரஸுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் பல நாட்கள் வாய்தா வாங்கிய கொரோனா குழம்பிப் போய் நீதிமன்றத்திற்கு பதிலாக பட்டிமன்றத்தில் ஆஜராகி பராசக்தி டயலாக்கை சைனீசில் பேசியதன் தமிழ் டப்பிங். ***** நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை கண்டிருக்கிறது. புதுமையான வைரஸ்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரமுமல்ல. வழக்காடும் நான் புதுமையான வைரசுமல்ல. வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாக தென்படும் ஒரு வைரஸ்தான் நான். மக்களை தாக்கினேன் உயிர்களை பறித்தேன் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. நிச்சயமாக இல்லை. மக்களை தாக்கினேன். மக்கள் வேண்டாம் என்றல்ல. மியூசிக்கலியில் மாமாக்களும் ஆண்டிகளும் போடும் குத்தாட்டத்தை தாங்கமுடியாமல். உயிர்களை பறித்தேன். இவர்களை தின்பதற்கு அல்ல. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் இவர்கள் தின்னுத்தீர்க்கும் உயிர்களை காப்பாற்ற. உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக. சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்துள்ளது. தீர்ப்பு எழுதும்முன் கேளுங்கள் என் கதையை. சைனாவில் பிறந்தேன் நான். என் நாட்டில் தவளைகளும், பாம்புகளும் நெளிந்தன. ஒரு அறிவிலிருந்து ஆறறிவு வரை அத்தனையையும் சாப்பிட்டார்கள் அறிவில்லாமல். பக்கத்து வீட்டுக்கு போனால் பல்லியையும், எதுத்த வீட்டிற்கு போனால் எலியையும் ஸ்னாக்சாக கொண்டுச் சென்றார்கள். எல்லா நாடுகளுக்கும் ஓடினேன். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கும் ஓடிவந்தேன். கட்டிப்பிடித்து முத்தா கொடுக்கும் வெளிநாட்டினரையே தள்ளி நின்று கைகூப்பி வணங்க செய்தவன் நான். உலக போலீஸான அமெரிக்கனையே டாய்லெட் பேப்பருக்கு சண்டையிட்டு தண்ணீரில் கழுவச் செய்தவன் நான். ஆனால் இங்கு என்னை நிம்மதியாக வாழ விட்டார்களா கயவர்கள். கல்யாணி எல்லாம் கல்யாணி கலப்பட பீரை தூக்கிக்கொண்டு அலைந்தார்கள். அவர்களுக்கு ஊறுகாய் தந்திருக்க வேண்டும். கலப்படமில்லா நல்ல சரக்கை கொடுத்திருக்க வேண்டும். செய்தார்களா. பதினாலு நாட்கள் வீட்டில் இருந்திருந்தால் விலகியிருப்பேன். செய்தார்களா. மீன் வாங்க முண்டியடித்தார்கள். மட்டன் வாங்க கட்டிப் பிரண்டார்கள். தனித்திரு விழித்திரு என்று சொன்னால் ‘திரு’ வுக்குதான் அது. நாங்க திருமதி என்று வெளியே சுத்தினார்கள் கொண்டையர்கள். ஒடுங்கி போன மண்டையனை கொரோனா மண்டையன் என்றார்கள். கோமியத்தை குடித்து என்னை மூழ்கடிக்க பார்த்தார்கள். எனக்கு மஞ்சள் பூசி வேப்பிலை அடித்து பேய் ஓட்டினார்கள். இஞ்சி டீ குடித்துவிட்டு குரங்காக சிரித்தார்கள். சப்பாத்தியிலிருந்து கேக் வரை என் உருவத்தை நகையாடினார்கள். அம்மை போட்ட மூஞ்சி போல் என் படத்தை அசிங்கமாக வரைந்தார்கள். கொரோனா என்ற அழகான பெயரை குரானா, சொர்ணா, குருமா பர்மா என்று கேவலப் படுத்தினார்கள். பிறந்த குழந்தைக்கு கொரோனா குமார் என்று பெயர் வைத்தார்கள். ஓடினேன் ஓடினேன். வாழ்வின் எல்லைக்கே ஓடினேன். ஒலியும், ஒளியும் காட்டி என்னை திரும்ப வரவழைத்தனர். அரசு சொன்னதைக் கேட்காதது யார் குற்றம்? லுங்கியை போட்டுவிட்டு கேரம் போர்டுடன் ஓடியது யார் குற்றம்? பைக்கில் ட்ரிபிள்ஸில் உலகை வலம் வருவது யார் குற்றம்? சிகப்பு, ஆரஞ்சு, பச்சை பெயிண்ட் அடித்த மண்டையர்களின் நாட்டுக்கு பெயின்ட் அடித்தேன். நாய்க் கறண்டியதுபோல் அரைமண்டையை சேவ் செய்துவிட்டு தாடையில் சடை போட்டு திரிந்தவர்களின் மண்டையில் முடிவளர்த்தேன். உன்மூஞ்சில பீச்சாங்கையை வைக்க என்று பிரித்து பேசியவர்களின் சோத்தாங்கையையும் மூஞ்சியில் வைக்க முடியாமல் செய்தேன். ஹெல்மெட் போட்டு பந்தா பண்ணிய ஆண்களின் தலையில் துண்டு கட்டி வெளக்குமாறை தூக்கச் செய்தேன். மிக்ஸி, கிரைண்டரை பயன்படுத்தாமல் பெட்மாஸ் லைட் போல் மாறிய பெண்களை குத்துவிளக்காக மாற்றினேன். படிப்பு, படிப்பு என்று குமுறிய மாணவர்களை பத்து மணிவரை குப்புறடிச்சி தூங்கச் செய்தேன். ஆண்களின் போலி முகத்தையும், பெண்களின் உண்மை முகத்தையும் உலகிற்கு காட்டினேன். வெயிலில் அலைந்து கருகியிருந்த கருவாயன்களை வெள்ளையாக்கினேன். கிச்சன்களில் கீழடியில் தோன்றிய உப்புமாவைத் தவிர மற்ற உணவுகளையும் மீட்டெடுத்தேன். உலகில் அவசியமேது, அலங்காரமெது என்று புரிய வைத்தேன். நிலவில் ஆயா வடை சுடுவதை தெளிவாக தெரியுமளவு பூமியை மாசிலிருந்து காத்தேன். டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீஸ்காரர்கள் இந்த மூவரும் வராமல் இருந்திருந்தால் உலகத்தை மாற்றியிருப்பேன். மனிதர்களை மைனாரிட்டி ஆக்கியிருப்பேன். அன்பை கடவுளாக்கி, மனிதத்தை மதமாக்கி இருப்பேன். மனிதன் மாறாதவரை கொரோனோக்களும், கர்மாக்களும் திரும்ப வரும். இதுதான் எங்கள் வாழ்க்கையேட்டின் தத்துவம், பாடம். கொரோனா நல்லதா கெட்டதா என்று கன்ப்யூஸ் ஆன நடுவர் துல்கர் சல்மான் பாப்பையா எதிர்கட்சிக்காரரான மொரட்டு தமிழரிடம் அவரின் வாதத்தை தாக்கல் செய்யச் சொன்னதாக கேள்வி.

Read More
தர்பூஸ் கவிதைகள் பார்ட் 5

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 5

கல்லூரி தென்றல் நான் வான் நோக்கி நடக்க, நிலம் குனிந்து நடந்து வந்தாள் அவள். பட்டு உடலில் காட்டன் சேலை அணிந்த தேவதையாய், தேனூறிய கனியொன்று கால் முளைத்து நடப்பதாய் தோன்றியது. கண்கள் நான்கு உராய்ந்ததும் கரண்ட் கம்பிகள் மோதியது போல மனதுக்குள் பொறி பறந்தது. என் இதயத்துடிப்பு இசையாய் கேட்டது. காட்சிகள் வண்ணமயமாகின. அவள் காதல் உணர்வுகளின் ஆலயம். அழகுகளின் சரணாலயம்..எனது அத்தனை பாதைகளும் அவள் வகுப்பின் வழியே மாறியது. எனது திசைகள் அவளையே சென்றடைந்தன. அவள் விழிகளின் முற்றுகையில் வாழவும் வழியில்லாமல், மீளவும் வழியில்லாமல் போனது. உன் தோழியிடம் என்னைக்காட்டி சிரிக்கையில் காதலின் முதல் பூ பூத்தது. தர்பூஸ் கவிதைகள் பார்ட் 5 அணுக்கள்தோறும் துளிர்த்த காதல்அணுக்கத்தை வேண்டுகிறது.நீ அருகிலில்லா பொழுதுகளில்வாழ்வு துறவேற்கிறது நீயும் நானுமான நாட்கள்நிகழ்காலத்தை சார்ந்தவைநீயும் நானுமற்ற நாட்கள்இறந்த காலத்தை சார்ந்தவைஉன் விரல் நுனி தீண்டும் வரையில்எதிர்காலமில்லா எந்திரம் நான். உன் விரலோடு விரல் கோர்க்கையில்ஐம்புலனும் அலைபாய்கின்றன.ஆத்மா தத்தளிக்கிறதுஉலகையே காதலிக்க தோன்றுகிறதுகாதல் படியளக்கும்காதலர் தெய்வம் நீ கோடானு கோடிஇதயங்களின் வேண்டுதலாய்தெய்வங்கள் தோன்றின.தெய்வங்களின் பிராத்தனையாய்நீ வந்தாய் நீ கையெழுத்திட்ட புத்தகங்கள்காதலின் புனித நூலாக,அடிக்கோடு இட்டவைகாதல் இலக்கணம் ஆகின.வாழ்ந்த தெருஎன் புனித யாத்திரை தலமானது.உனது பிறந்த நாள்காதலர் தினமாகமலர்ந்த நாள்மலர்களின் தினமானது. உனக்கு துணை வரசூரியனும், சந்திரனும்போட்டியிட்டனஎன்னை தேர்ந்தெடுத்தாய் நீ!சூரிய, சந்திரர்களைகிரகணங்கள் பீடித்தது. நடக்கையில் நாலடியார்பேசுகையில் திருக்குரல்உருவத்தில் சீவகசிந்தா மணிகற்பித்தது கள வழி நாற்பதுதமிழ் தந்த காதல் மதம் நீ

Read More
தர்பூஸ் கவிதைகள்  பார்ட் 3

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 3

அமுத விழிகள்… திருமண நிகழ்வின் முதல்நாள் மணப்பெண்ணின் தோழிகளுடன் தட்டையேந்திக்கொண்டு அல்லிகள் புடைசூழ ஆம்பலாய் நடந்தாய். உனது முதல் பார்வையிலேயே என் மனம் தூண்டினில் மீன் போல சிக்கிக்கொண்டது. பார்வைகளின் ஸ்பரிசத்தில் காதல் மனதில் அடிக்கல் நாட்டியது. அடுத்த மின்னல் பார்வை மேகமனதை துளைத்துச் செல்ல நீரிடியை தாங்கி வந்த உன் பார்வையால் என் மனதில் காதல் ஊற்றெடுத்தது. அடுத்தடுத்த பார்வைகளின் கதகதப்பில் காதல் லாவாக்கள் உருவாகி பட்டாம்பூச்சிகளாய் இறகு முளைத்து சிறகடித்தது. முதல் நாளிரவு தாவணியில் பிறை நிலவாய் பவனி வந்தவள் மறுநாள் காலையில் முழுமதியாய் சேலையில் உதிக்க நிலவிடம் தடுமாறிய மனது முழுமதியிடம் சரணாகதி அடைந்தது. மண்டபத்தில் நீ இங்குமங்கும் நடக்கும்போது பார்வைகளை கொய்து மனங்களை சிறை பிடித்துச் சென்றாய். ஆண்களின் பனிப்பார்வைகளையும், பெண்களின் வெப்பப் பார்வைகளையும் புடவைத் தலைப்பில் முடிந்து பொன்னிற இடையில் சொருகிக்கொண்டு, மன்னர்களை மண்டியிட வைத்த கிளியோபட்ராவாய் வலம்வந்தாய். தர்பூஸ் கவிதைகள் பார்ட் 3 கடைக்கண் கருணையில் கவிஞர்களையும் அரைக்கண் வீச்சில் அறிஞர்களையும் முழுப் பார்வையில் அடிமைகளையும் உருவாக்கும் கடவுள் இவள். ஆண்கள் மட்டும் பிரவேசிக்கும் காதல்தேசத்தின் கருமாரி இவள். பார்வையில் காத்தலையும் அணைப்பினில் படைத்தலையும் சிரிப்பினில் அழித்தலையும் செய்யும் நீ தேவதையா இல்லை தேவதைகளின் தேவதையா ! யாழினிதா குழலினிதா என்ற வள்ளுவனின் ஆராய்ச்சி உன் குரலே சிறந்ததென்று முடிவுக்கு வந்திருக்கும். வட்டச்சூரியனை சுழலும் நிலவுகளாய் மருதாணி இட்ட உன் கை பற்றி நடக்கையில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் வீரனாய் மனம் எக்களிக்கிறது. உன்னைப்பற்றி எழுதிய கவிதைத்தாளில் இருந்து அறையெங்கும் நிரம்பி வழிகிறது உன் பேரழகு. என்னை என் வீட்டிலும் உன்னை எதிர்வீட்டிலும் படைத்து விட்டு கடவுள் கவிதை வேண்டி காத்திருக்கிறார். கண்ணைக் காட்டு அவர் கடனைத்தீர்க்க வேண்டும். கோவிலைப் பார்க்கும்போது தானாய் குவியும் என் கரங்கள் உன்னை பார்க்கும்போதும் வணங்கி விடுகின்றன. அருள்பாலித்து விட்டு போ.

Read More
தர்பூஸ் கவிதைகள்-பார்ட்1

தர்பூஸ் கவிதைகள்-பார்ட்1

இந்த சிறுவனுக்கு தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை என்ற புத்தகத்தை நண்பர் ஒருவர் அறிமுகம் செய்தார். தபூ சங்கரின் பாணியில் சில வரிகள் எழுதத் தோன்றியது.. தர்பூஸ் கவிதைகள்… என் வாழ்நாட்கள் உனது பிறந்தநாளில்தான் துவங்குகின்றன. நீ பிறப்பதற்கு முன்பான நாட்கள் வாழாவெட்டி நாட்கள். நீ கடற்கரையில் நிற்கும்போது உன் கால்களைக் கழுவி கடல் முகம் கழுவிக் கொள்கிறது. காதல் உணர்வுமல்ல மதமுமல்ல. சுவாசம். நீ சுவாசித்த காற்றை தந்து என் சுவாசத்தை மீட்டியெடு. கடவுள் மனிதனை படைத்தான் மனிதன் காதலைப் படைத்தான் உன்னை கண்டதிலிருந்து கடவுள் மனிதனாக தவமிருக்கிறான். ஒளியற்ற என் வானில் நிலவாய் வந்தாய் நீ. இப்பொது நிலவில் மட்டும் வாழும் ஆர்ம்ஸ்ட்ராங்காய் நான். நீ மடிப்பு, மடிப்பாய் நீவி நீவி மறைத்தும் மறைக்காமல் உடுத்தும் சேலைகள் என்னை துவைத்துச் செல்கின்றன. நிலவில் முகம் காட்டுவதில்லையென நிலவு குறைபட்டுக் கொள்கிறது. சற்று உலாவி விட்டு வா. உன்னிடமும் ஒளிபெற்று வாழ்ந்துவிட்டு போகட்டும். நீ கைகளை குவித்து கண்களை மூடி தியானிக்கையில் உன் மனதில் வந்து போக அனைத்து கடவுள்களும் போட்டி போடுகின்றன. ஒரு கண்ணில் காதலைக் காட்டி மறுகண்ணில் கோவத்தைக் காட்டி கடந்து செல்கின்றாய் இரு கண்களிலும் காதலைத் ஏந்தி கசிந்துருகுகிறேன் வாழ விடு அல்லது வாழ்க்கை கொடு கூச்ச நாச்சம் கருதி சில சென்சார்ட் கவிதைகள்.. காற்றின் ஈரப்பதத்தை அறிய ஹைக்ரோமீட்டர். உனது இதழ்களின் ஈரப்பதத்தை அறிய என் இதழோமீட்டர் உன் பார்வை மின்னல் என் மனதை துளைத்துவிட்டு நகர்ந்தபோது எனக்குள் மழை பெய்தது . இப்போது அலை அடிக்கிறது. சீக்கிரம் வா. முத்துக் குளிப்பது போல முத்தம் குளிக்க வேண்டும். சில ரிஜெக்டட் வரிகள்.. காந்தி தேசம் கண்ணீர் தேசமாக மாறாமலிருப்பது சில காதல் வரிகளால் தான் உனது கண்ணீர்ப்பு விசையில் சுற்றி வருகிறேன் நிலவாக. எனது அமாவாசைகளை பௌர்ணமியாக்கி விட்டு போ. உனது பெயர் இடம்பெறா நிறங்கள் உனது முகம் இடம்பெறா ஓவியங்கள் உனது சிரிப்பு இடம்பெறா இசைகள் இவை அனைத்தும் உயிரில்லா உடல்கள். சக்கரத்தின் சுழற்சியில் தூரம் தெரிகிறது. உன் விழிகளின் சுழற்சியில் காதல் தெரிகிறது.

Read More
தர்பூஸ் கவிதைகள்-பார்ட்2

தர்பூஸ் கவிதைகள்-பார்ட்2

தேவதை உலா.. மழை பெய்து நின்ற பிறகும் மரங்கள் தூறும் ஒரு மண்வாசனை நாளில் உன் வீட்டருகே நின்றிருந்தேன். மெல்லியதாய் வீசிய குளிர் காற்றுக்கு உடல் சிலிர்த்துப்போக அருகிலிருந்த கடையில் தேநீர் வாங்கிக் கொண்டு உனக்காக காத்திருந்தேன். கையில் வாங்கிய கோப்பை உதட்டை நெருங்குவதற்குள் ஆறியிருந்தது. வானத்தின் ஒரு துளி பூவுலகில் சிந்தியது போல நீலநிறச் சேலையில் ஒரு கையில் குடையையும், மறுகையில் பேக்கையும் அணைத்துக்கொண்டு என்னை நோக்கி மிதந்து வந்தாய். மல்லிகைப்பூ சூடிவந்த ரோஜாவாய். கண்ணில் தோன்றிய உன் பிம்பம் நெஞ்சில் சுடரையேற்றி உடலின் வெப்பத்தைக் கூட்டியது. கையிலிருந்த கோப்பை மீண்டும் சூடாகியது. தேநீரின் ஆவி யும் பறந்தது. தொலைவிலேயே என்னை அடையாளம் கண்டுகொண்ட உன் உதடுகளில் தோன்றிய புன்னகைக் கீற்று எனது உள்ளத்தில் வானவில்லை ஏற்படுத்த, உடலில் உற்சாகம் கொப்புளித்து சிறகுகள் படபடத்தன. பிரபஞ்ச வெளியில் தேவதையை தரிசித்தவனைப் போல் மயங்கி நின்றேன். தர்பூஸ் கவிதைகள் பார்ட் 2… என்னடா வென்று புருவத்தை சுருக்கி முகத்தை உயர்த்தி விரல்களை மலராய் குவித்து நீ சிரிக்கும் போதெல்லாம் பேச நினைத்ததின் முதல் வரி தொலைந்து போகிறது தமிழ் தரை தட்டுகிறது. நீ தினமும் செல்லும் தெருக்களில் பகைமை மறைந்து அன்பு மலர்கிறதாம். தீவிரவாதத்தை ஒழித்து மிதவாதத்தை பரப்பும் மன்மதவாதி நீ. எப்போதாவது தோன்றும் வானவில்லைக் காட்டி பெருமை அடித்து கிடந்தது வானம். பூமிவில்லாய் நீ தோன்றும்வரை. உனது வேண்டுதல்களை நிறைவேற்ற கடவுள்கள் வரிசையில் நிற்கிறார்கள். உன்னையே வேண்டிப்பெற நான் கடைசியில். வரம் தருகிறேன் சொர்க்கம் போகிறாயா என்றார் கடவுள் இவளுடன் போகிறேன் என்றேன் நான். நீயில்லாமல் சொர்க்கமேது? நீயிருந்தால் நரகமேது? நீ சூடிய மலர்கள் முக்தி அடைந்தன. நீ வாங்காமல் விட்ட மலர்கள் மறுஜென்மம் வேண்டி நிற்கின்றன. திராட்சை பெண்ணே நீ தினமும் தலைகுளிக்கும் தண்ணீரெல்லாம் ஆற்றில் கலந்திருந்தால் பொன் விளைந்திருக்கும். கடலில் கலந்திருந்தால் கடல்நீர் அத்தனையும் ஒயினாகியிருக்கும். நேர்த்தியாய் உடுத்திய காட்டன் புடவையில் நெடுநேரமாய் அமர்ந்திருக்கிறாய் சுயம்புவாய் தோன்றிய அம்மனென்று கோவில் கட்ட நினைக்கின்றனர்.. All reactions: 46Anuradha Prasanna, Lasyaa and 44 others

Read More
தர்பூஸ் கவிதைகள் பார்ட் 4

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 4

 வேலன்டைன் டே ஸ்பெசல் … தர்பூஸ் கவிதைகள் பார்ட் 4 இளைஞரால் இளைஞர்களுக்காக இளைஞருடைய படையல்….. உன் வீட்டு சொர்க்க வாசல் திறக்கும் வரையில் நிறங்கள் கருப்பாய் உயிர்கள் மயங்கி இருளேறி இருக்கின்றன. வாசலில் கோலமேற்றி உலகை துவக்கி வைத்து போ. உன் காலடிச்சுவடுகளை தழுவி முத்தமிட அலைகள் முயல்கின்றன. தனக்கே உரிமையென்று கடற்கரை மறைத்துக் கொள்கிறது. மாத இதழ்கள் வார இதழ்கள் போலில்லா மன்மத இதழ்கள் உன்னுடையவை. இதழ் கொண்ட வரியெல்லாம் சொற்களை கொள்ளாமல் சொர்க்கத்தை கொண்டவை… உன் பெயரை தொடர்ந்து வர என் பெயர் தவமிருக்கிறது. இழுத்துச் சேர்த்துக் கொண்டு இதயத்தை வரமாய் கொடு. அன்பை முதலாய் இட்டு உயிரை விதையாய் இட்டு காதல் பயிர் செய்பவன் நான். கொள்முதல் செய்வாயா கொல் முதல் செய்வாயா.. உன்னுடன் பேசி தமிழைக் கற்றேன் பேசாத தருணங்களில் ஆங்கிலம் கற்றேன். கண்ணசைவில் கணிதம் பயின்றேன் சந்திப்புகள் எல்லாம் வரலாறு ஆகின உந்தன் மேனியே எனக்கு புவியியல் ஆனது . மொத்தத்தில் நீ எனது காதல் கல்லூரி. உன்னுடன் பேசிய நாட்கள் சுவர்க்கம் ஆகின. பேசாத நாட்கள் நரகமாகின. கண்டு, பேசமுடியா நாட்கள் திரிசங்கு நரகமாகின. நீ கட்டும் பட்டு சேலைக்காக புழுக்கள் உயிர்துறக்கும். பஞ்சுகள் சேலையாக பருத்திகள் மோட்சம் புகும். உன் தரிசனம் கிடைத்தால் உலகம் சுபிட்சம் பெரும். சாதல் இல்லா உலகம் காதலில் சாத்தியம் காதல் இல்லா உலகில் சாதலே சாஸ்வதம்..

Read More
கோடாரி விதிகள்

கோடாரி விதிகள்

முகநூலுக்கான கோடாரி விதிகள். முகநூலில் கண்விழித்து, வாய்கொப்பளித்து, டீ ஆத்துபவரா நீங்கள். உங்களுக்காக சில… முகநூலில் பக்கம் என்பது ஒருவருடைய உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் குழுமியிருக்கும் இடம். சுருக்கமாக அவர் வீட்டு ஹாலைப் போன்றது. உங்கள் ஹாலில் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் போட்டுக் கொண்டு திரியுங்கள். பெர்முடாசோ அல்லது சட்டை போடாமல் உடல் முழுவதும் புசுபுசுவென்ற முடியுடனோ. ஆனால் அடுத்தவர் ஹாலுக்குள் பதிவிட போகும்போது முழுக்கை, டை, ஷூவுடன் செல்வது ஆகச் சிறந்தது. நேரில் பார்த்தால் எவ்வளவு இடைவெளியுடன் உரையாடுகிறோமோ அதையே முகநூலிலும் கையாளுங்கள். மற்றவர்கள் பேசுகிறார்கள் என்பதற்காக ‘ஹாய் மச்சான்’ என ஆரம்பித்து அவரை மனைவியுடன் மாட்டி விட்டு கும்மி அடிக்காதீர்கள். மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு காமெடி செய்கிறேன், கருத்தை விதைக்கிறேன் என நினைத்துக் கொண்டு எல்லை தாண்டாதீர்கள். கோடு கோடாத்தான் இருக்கணும். தங்கக் கோடாரி விதி : எதிர்மறை கருத்துக்கள் ஒருபோதும் வேண்டாம். அவர் ஹாலில் அவர் பஜ்ஜி நல்லா இருக்குன்னு சொன்னா உடனே நீங்கள் உள்ளே ஓடி வாயுப் பிரச்சினை வரும் என்று கதற வேண்டாம். அவர் வயிறு. அவருடைய கருத்து. உங்களுடைய அறிவை அங்கே காட்டவேண்டிய அவசியமில்லை. பஜ்ஜியை ரசிக்கும் நான்கு வாயு பகவான்கள் அவருக்கு கமெண்ட் போட்டு அருளுவர். அடுத்தவர் எழுதியதில் குறை காண்பது எளிது. வேண்டுமெனில் நீங்களும் தினமும் யோசித்து கருத்து யானப் பாலை வழங்குங்கள். யான, யானப் பால். வெள்ளிக் கோடாரி விதி : அறிவுரைகள் வேண்டவே வேண்டாம். உங்கள் பதி/ பத்தினியுடன் எல்லாவற்றிலும் ஒத்த கருத்துக்கள் உங்களுக்கு இருக்கிறதா? இல்லை அல்லவா. உங்களுக்கு ‘தாயைக் காத்த தனயன்’ படம் பிடிக்குமெனில் அவங்களுக்கு ‘தலையணை மந்திரம்’ பிடிக்கும் (vice versa). அப்படி ஓருயிர், ஈறுடலுக்குள்ளேயே வித்தியாசங்கள் இருக்கும்போது, நீங்கள் அவர் பக்கத்தில் நுழைந்து உலகிலேயே சிறந்த படம் ‘சின்ன வீடு’ என்று பதிவிடாதீர்கள்.அனைத்து கருத்துகளுக்கும் எதிர் கருத்து உண்டு. உலகில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து என்று உங்களிடம் உள்ளதா? உலகின் மிகச்சிறந்த உணவு சிக்கன் பிரியாணி என்ற உண்மையைக் கூட ஏற்றுக் கொள்ளாத உலகமிது. ஐஸ் நீரில் மிதக்கும் என்று சொன்னால் கூட ‘இத சொல்ல வந்துட்டியா’ னு கருத்திடுபவர்கள் உண்டு. பிளாட்டினக் கோடாரி விதி : முகநூலில் அறிவுரை மூலம் எவரையும் திருத்த முடியாது. சமூக பக்கங்கள் அனைத்தும் டைம் பாசுக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். மதம், சாதி, கட்சி, தெய்வம் என்று முழங்குபவர்களிடம் கம்பு சுற்றாதீர்கள்.அடுத்தவரை டேக் செய்து எல்லோர் தட்டிலும் இட்லி பரிமாறுவதை விடுங்கள். அவருக்கு தேவையானதை அவர் எடுத்துக் கொள்வார். சொர்ணா வைரசை ஒழிக்க அரசு தன்னார்வலர் குழுவிற்கு உங்கள் பெயரையும் நான் கொடுத்தால் ஒத்துக் கொள்வீர்களா? முகநூலில் நுழையும்போதே ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கையில் கிளௌஸ் மாட்டிக்கொண்டு நுழையாதீர்கள். ஒருவரின் கருத்து பிடிக்கவில்லையா? Unfriend ஆப்சனை பேஸ்புக் பகவான் மார்க் ஆன்டனி அருளியிருக்கிறார். அதை விடுத்து மற்றவர்களை தூய்மையாக்கப் போகிறேன் என்று ஞான உபதேசம் செய்ய கிளம்பாதீர்கள். உங்கள் கருத்து அக்மார்க் முத்திரை இடப்பட்ட சரியான கருத்தாக இல்லாமலும் இருக்கலாம். பதிவுகளைப் பார்க்காமல் மொய் வைத்து மொய் வாங்கும் உலகம் பேஸ்புக். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல காட்பாதர்கள் புழங்குமிடம். எனவே லைக் வேண்டுமெனில் லைக் போடுங்கள். கமெண்ட் வேண்டுமெனில் கமெண்ட் போட்டு மகிழ்ந்திருங்கள். ஆனால் எதிர் மறையோ, அறிவுரையோ வேண்டாம்.இதை யாரும் கடைப் பிடிக்க மாட்டீர்கள் என்று தெரிந்தாலும், இவை எனக்கு தோன்றிய மூன்று கோடாரிகள். பிளாட்டினக் கோடாரியல்ல. மார்க் ஆன்டனியல்ல, ஈறுடல் அல்ல என்று தொடங்குபவர்கள் தங்கக் கோடாரியை கையில் எடுக்கவும்.

Read More
புத்தக தினம்…      –    2021

புத்தக தினம்… – 2021

புத்தக தினம்…மச்சினி தினம், மாமா தினம், கொரோனா தினம் என்று புதுசு புதுசா தினங்கள் வர, எல்லாரும் ஒரு அடிஷனல் பேப்பர் வாங்கி எழுதுமளவு படித்த புத்தகங்களை பதிவிட்டு எனது வரலாறை பதிவிட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி விட்டனர். இல்லையெனில் Tail on fire னு ஒரு சுயசரிதை எழுத உத்தேசித்திருந்தேன். இளமையில் அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலத்துடன் என வாசிப்புகளை துவங்கி சில காலம் மாயாஜால புத்தகங்களில் குடும்பம் நடத்தினேன். ஐந்தாவது படிக்கும்போதே இரண்டு லைப்ரரி கார்ட் வாங்கி புத்தகம் படிக்க துவங்கியது முதல் நிகழ்வு. பரஞ்சுடர் மந்திர தண்டத்தை ஏந்தி குதிரையில் செல்லும் ஓசை எனக்கு இப்பவும் கேட்கும். அருகிலிருப்பவர்கள் மூணாவது முறை கூப்பிட்டு திட்டும் வரை. சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன் என லைப்ரரியின் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட்டு, பைபிள், பகவத்கீதை, ராமாயணம் போன்ற புத்தகங்களில் தீட்சை பெற்றேன். பில்லி சூன்யம் வைப்பது எப்படி, பிளாக் மாஜிக் போன்ற புத்தகங்களையும் விடவில்லை. திருமணம் அவசியமா என்ற புத்தகத்தின் முடிவை யாரோ ஒரு கல்யாணமானவர் கிழித்து விட்டதால் விடை இன்னும் தெரியவில்லை. சமைப்பது எப்படி, பாத்திரம் கழுவுவது எப்படி என்பதை சாய்ஸில் விட்டேன். சங்கர்லால் அந்த காலத்து ஆஸ்தான ஹீரோ. Sujatha is my writer always. முத்து காமிக்ஸ், லயன் காமிக்சில் மூழ்கியது இரண்டாவது அலை. முதல் தேதியானால் காத்திருந்து காத்திருந்து 10ம் தேதிக்குள் punctual க புத்தகம் வந்து விடும். இந்த வயதிலயும் காமிக்ஸ் புத்தகங்கள் மாதாமாதம் வீட்டுக்கு போஸ்டில் வர “யாருங்க வீட்ல காமிக்ஸ் படிக்கிற சின்ன பையன்?” என்று போஸ்ட்மேன் கேட்க, “என் பேரன்”னு சொல்லி அம்மா எனது மானத்தை காப்பாற்றுவது இன்னுமே தொடர்கிறது. ஆண்டவரே இந்த பாவிகளை மன்னியுங்கள். காமிக்ஸ் சுவையறியாத கடோத்கஜன்கள் இவர்கள். வயதாகாமல் தடுப்பதில் காமிக்ஸுகளுக்கு பங்குண்டு. Trust Me. Tex Willer is still my hero and Modesty Blaise is always my queen. கிரைம், உங்கள் ஜுனியர் என்று சிக்குண்டிருந்தது சமகாலம். ராஜேஷ் குமார் சாரின் சுருள் முடிகளுக்குள் அல்ல. கதைகளுக்குள். இத்துடன் வெற்றி, கோனார் என கொஞ்சம் பாடங்களையும் பெற்றோரின் மிரட்டலுக்காக படித்து வைத்தேன். A rose by any other name would smell as sweet என்று சேக்ஸ்பியரின் மொழி பெயர்ப்பு கதைகளில் குதித்தது 11வதில் துவங்கியது. அப்புறம் Robert Ludlum, Sidney, Irwing Wallace, Chase, Robin Cook, Agatha Christie, Jeffrey, போன்ற ஆங்கிலேயர்கள் என்னை ஆண்டார்கள். Ludlum கதைகள் எனது சாய்ஸ். Kane and Abel புத்தகம் எனது கனவு புத்தகம். அதன் பின் புத்தகங்கள் படிப்பது குறைந்து நாட்டுக்கு நல்லது செய்து கொண்டிருந்தேன். எப்போதாவது சுஜாதாவின் கணேஷ், வசந்தினால் தமிழுடன் டச்சில் இருந்தேன். வேள்பாரி எனது பயணத்தை திசை திருப்பிய புத்தகம். தமிழ் அமுதத்தில் முக்குளித்து அதன் தாக்கத்தால் எழுதி பார்க்கலாமே என நீலனின் போர், செம்மாஞ்சேரல் போர் என வேள்பாரி மன்றத்திற்காக துவங்கியது எனது கன்னி எழுத்துகள். வேள்பாரி மன்ற ரசிகர்கள், பாரியின் பாணர்கள் என்ற whatsapp group நண்பர்கள் இவற்றை என்கரேஜ் செய்ய, எழுத முடியும் என்ற நம்பிக்கை தோன்றியது. அதன் பின்னர் சோழவேங்கை கரிகாலன் என்ற புதிய சரித்திர நாவலை எழுத துவங்கியது நானே எதிர்பார்க்காத ஒன்று. Accidental Writer நான். தமிழில் படிக்க எண்ணற்ற புத்தகங்கள் இன்னும் உள்ளன. பார்க்கலாம். Let’s take one at a time. சின்ன வயது தானே. 

Read More
டிவி சூழ் உலகு…..

டிவி சூழ் உலகு…..

டிவி சூழ் உலகு….. டிவி எனப்படும் அகில உலக இடியட் பாக்ஸ் மற்ற நாடுகளில் பொழுதுபோக்கிற்கு பயன்படுகிறன. ஆனால் இந்தியாவில் மட்டும் மக்களை இடியட்டாக்கி, வீடுகளின் நடுவில் அமர்ந்து கொண்டு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டுள்ளன. விடியும்போதே ‘மகர ராசி நேயர்களே’ என்ற கரகர குரலை கேட்காவிட்டால் பலருக்கு மனச்சிக்கல் ஆரம்பித்து மலச்சிக்கலில் முடிகிறது. இதனால்தான் சிலர் வீட்டில் பாத்ரூம் இல்லாவிட்டாலும் டிவி இருக்கிறது. சட்டி போல பெட்டியாக ஆரம்பித்த டிவிக்கள் இப்போது காலத்திற்கேட்ப ஸ்லிம்மாகி சுவரில் பல்லி போல ஒட்டிக்கொண்டுள்ளன. கொரோனோ தாக்குதலுக்கு பின்னர் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளாக டிவி மாறியிருக்கிறது. முதல் பொருள் ஒலிம்பிக் ஜோதி போல அணையாமல் எரியும் கிச்சன் ஸ்டவ். நியூஸ்களை தவறிப்போய் பார்த்தால் உலக அளவில் வெறுக்கப்படும் இரண்டாவது விஷயமாக கொரோனா இருக்கிறது. முதலிடத்தில் யார் என்பது நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை பொறுத்து மாறலாம். ஆனால் முதலிடத்தில் மருமகளுக்கு மாமியார் என்பதும் மாமியாருக்கு மருமகள் என்பதும் சமாதி மேல் அடித்து செய்யக்கூடிய சத்தியமான உண்மை. நண்பர்களின் வீட்டிற்குச் சென்றால் உளமாற உள்ளே அழைத்து உபசரித்தது ஒரு காலம். இப்போதெல்லாம் டீவியில் ஓவர் மேக்கப் பெண்மணி கதறிக் கொண்டிருக்க குடும்பமே ஹாலில் அமர்ந்து கண்ணை துடைத்துக் கொள்கிறார்கள். நம்மை உள்ளே அழைத்து உட்கார வைத்துவிட்டு கமர்சியல் பிரேக்கில் மட்டுமே பேசுகிறார்கள். “வாப்பா சோனையா நல்லா இருக்கியா”. உறவுகளை கொச்சை படுத்தாமல், அடுத்த குடும்பத்தை கெடுக்காமலிருக்கும் டிவி சீரியல்கள் டிராயர் போடாத ஆண்கள் போல அரிதாகி விட்டன. பெரும்பாலும் அனைத்து டிவி சீரியல்களிலும் பெண்களே வில்லிகளாக இருப்பதன் காரணத்தை பெண்கள்தான் சொல்லவேண்டும். கன்னித்தீவு போல சில சீரியல்கள் இவருக்கு பதில் அவர், அவருக்கு பதில் எவர் என்று மாற்றிக்கொண்டு தொடர்கின்றன. கதாநாயகியின் 10 மாத கர்ப்பம் டிவி சீரியலில் 30 மாதத்திற்கு ஓடுகிறது, யானையின் பேறுகாலமே 22 மாதங்கள். விளம்பரங்களுக்கு நடுவில் காட்டப்படும் சில நிமிட மெகா சீரியல் வில்லிகளின் முகத்திலிருக்கும் ஒரு இன்ச் பவுடரும், அவர்கள் மூஞ்சியை சுத்தி சுத்திக் காட்டுவதும் கொரோனோ வைரஸை விட கொடுமையாய் இருக்கின்றன. கொரோனோவால் கிடைத்த ஒரே நன்மை இந்த டிவி சீரியல்களை நிப்பாட்டியதே. பல வீடுகளில் மணியடித்தால் சோறு கிடைப்பதாய் கணவர்கள் சொல்கிறார்கள்.வயதானவர்கள் நியூஸ் சேனலை விடுவதேயில்லை. அருகில் அமர்ந்து கொண்டு மாற்றி மாற்றி நியூஸ் சேனலை பார்க்கிறார்கள். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல.தமிழில் பேசும்போதே “ராமன்ம ரத்தைப்பி டுங்கினானே” என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் பேசும் டிவி ஆங்கர்ஸ் கையை நீட்டி கண்ணை குத்தாத தூரத்தில் பாதுகாப்பாய் அமர்ந்து கொண்டு டிவி பார்ப்பது நல்லது. டிவியின் பயன்பாடு மெதுவாக குறையக் காரணம் டிவி குஞ்சு பொரித்தது போலிருக்கும் மொபைல் போன்களே. அனைத்து செய்திகளும் வாட்ஸ் அப்பில் சுடசுட வர, டிவி எதற்கு என்ற கேள்வி எழுந்தது. பிரபஞ்சம் அழிந்தாலும் லைவாக வாட்ஸ் அப்பில் தெரிந்து விடும் நிலை. இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டு கிடந்த டிவியின் உயிரை காப்பாற்றியதில் சீரியல்களுக்கு பங்குண்டு. அதுவும் குறைந்து போனிலேயே டிவி சீரியல்களை நம்ம அப்ரசெண்டுகள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் கோடைமழை போல வந்த கொரோனா மீண்டும் டிவிக்கு புத்துயிர் தந்துள்ளது. ‘வா வா வாத்யாரே வா வஞ்சிக்கொடி’ என்ற சத்தான பாடல்கள் பக்கத்துக்கு வீட்டு டிவியில் கேட்கத் தொடங்கியுள்ளன. இதிலிருந்து டிவியின் வாழ்வதனை போன் கவ்வும். டிவி மறுபடி வெல்லும் என்பது தெரிகிறது..

Read More