Ashoka the 2nd

மனைவியை ஜெயிப்பது எப்படி

மனைவியை ஜெயிப்பது எப்படி




மனைவியை ஜெயிப்பது எப்படி…

பொறுப்பாகாமை (Disclaimer) :
(இது என் வாழ்க்கையில் நடப்பவையோ, நடந்தவையோ அல்ல. எனவே என்னை வைத்து கும்மி அடிக்க வேண்டாம் என இறைஞ்சுகிறேன்.)

பெண்களை நான்கு வகையாக சாமுத்திரிகா சாத்திரம் பிரிக்கிறது. பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என. ஆனால் கல்யாணம் ஆனதும் பெண்ணின் உடலில் உள்ள ஸ்லீப்பர் செல் எல்லாம் கண்ண முழிச்சிட்டு, முட்டையிலிருந்து வளரும் டைனோசர் போல் ஐந்தாவது பிரிவு தோன்றும். அது பத்தினி. இது இரண்டு வகைப்படும். தர்ம பத்தினி, அதர்ம பத்தினி என.

கணவனின் கண்ணில் கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்பவள் தர்ம பத்தினி. இந்த வகை புராணங்களில் வரும் பத்து தலை ராட்சசன், ஒற்றை கண் பூதம் போல. நம்ம கிரகத்தில் கிடையாது.

கணவனின் கண்ணில் இரத்த கண்ணீர் மட்டும் வராமல் பார்த்துக் கொள்பவள் அதர்ம பத்தினி. இது நம்ம எல்லாத்துக்கும் பொருந்துவது. மனைவியின் சைஸ்ஸ பொறுத்து, அவுங்க ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டா, இல்ல அரை டன் வெயிட்டா என்பது இருக்கும். அடியின் வேகம் என்பது மனைவி புரூஸ்லீ மாதிரியா இல்ல ஜெய் சங்கர் மாதிரியா என்பதை பொறுத்து கூட, குறைய இருக்கும். அவ்வளவு தான்.

நல்ல குடும்பத்துல பொறந்த மனைவிங்க புருசனை கை நீட்டி அடிக்க மாட்டாங்க. அதுக்கு பதிலா இயற்கை அவுங்களுக்கு காளி சிலைக்கு இருக்க மாதிரி நீளமான நாக்கை படைச்சிருக்கு. சாட்டையவிட சற்றே நீளமான இந்த நாக்கை வச்சி ஒரு வீசு வீசினா கணவனின் மனம் மட்டுமல்ல, குடும்பம், சொந்தம், கிராமமே டோடல் டேமேஜ் ஆகும். அதனால தான் சிங்கமாக அலுவலகத்தில் கர்ச்சிக்கும் ஆண்கள் கூட வீட்டில் வாலில்லா பூனையாய் வலம் வருவது. மனைவி கல்யாணமான தினத்துல ஆரம்பிச்சு ஒவ்வொரு விஷயமா சொல்லி திட்டும்போது, கணவர்களுக்கு கோபம் வராது. ஒரு பிரமிப்பு வரும். சொன்னதும் நாய்க்குட்டி மாதிரி 40 நிமிஷம் லேட்டா வர்ற சூரியனை பார்க்குற மாதிரி. இதையெல்லாம் நியாபகம் வைத்துக்கொள்வதற்கு, இந்தம்மா படிக்கும்போது ஒழுங்கா பாடத்தை நியாபகம் வச்சிருந்திருந்தா, இன்னேரம் அமெரிக்காவுக்கு போயிருக்கும், நம்ம தப்பிச்சிருக்கலாமேனு.

முன்பெல்லாம் தமிழகத்தில் பெண்கள் அஷ்ட லட்சுமிகளாக இருந்தனர். ஆனால் நம்மை ஆள்பவர்கள் பெரும்பாலான லட்சுமிகளை சுவிஸ் பேங்குக்கு அனுப்பி விட்டதால், இங்கு மீதம் இருப்பவர்கள் கஜ லட்சுமியும், வீர லட்சுமி மட்டுமே. இது தெரியாமல் ஆண்கள் கவிதையிலும், சினிமாவில் வரும் பூவையர், தேவதை, தையல் போன்ற வார்த்தைகளை கேட்டுட்டு திருமணம் செய்து கொள்ளும்போது, கஜா புயலில் சிக்கும் வாழை மரமாகி விடுகின்றனர். அதுக்கப்புறம் ஓடவும் முடிவதில்லை. ஒழியவும் முடிவதில்லை. புயல் மட்டுமே. முன்பெல்லாம் குடித்து விட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது னு பேப்பர்ல வரும். இப்பெல்லாம் கணவன் கொலை, மனைவி கைதுன்னு டெய்லி வருது. இப்படியே போச்சுன்னா IUCN வெளிவிடும் “அருகிவரும் இனங்கள்” பட்டியலுல தமிழ் நாட்டு புருஷனெல்லாம் வந்துடுவாங்கனு நினைக்கிறேன். இதையெல்லாம் தாங்க முடியாத சில வீரர்கள் துறவியாகி தெருத்தெருவா சுத்துனாலும் பரவாயில்லன்னு, தெறிச்சி ஓடி விடுகின்றனர். மற்றவர்கள் விருப்பு, வெறுப்புகளை துறந்து “இல்லத்துறவி”யாகி விடுகின்றனர்.

மனைவி என்பவள் “மனை”யின் ராணி. இல்லத்தரசி அதாவது இல்லத்து அரசி. கணவர்கள் (இல்ல கணவன்களே போதும்) கணவன்கள் எல்லாம் உணவு கொண்டு வரும் வேலைக்காரத் தேனி போல. எனவே மனைவியை சமாளிப்பது/ ஜெயிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வது கணவன்கள் உயிர் தப்பிக்க அத்தியாவசியமான ஒன்று.

கடவுள் இருக்கிறார் என்பது ஒரு உணர்வு. தாமரை மலர்ந்தே தீரும், இந்தியா வல்லரசாகும் என்பது போல் ஒரு நம்பிக்கை. அதுபோல் மனைவியை ஜெயிப்பது என்பதும் ஒரு உணர்வு. நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்று. எனினும் அத்தகைய உணர்வை சிறந்த பயிற்சியின் மூலம் நமக்குள் வளர்க்கலாம். இதுக்கு சில படிகள் இருக்கு.

விட்டு கொடுத்தல் : வெட்கம், சூடு, சொரணை, மானம், மரியாதை, பிறந்த வீடு போன்றவைகளை விட்டுக் கொடுத்தல். மொத்தத்தில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு வாழ வேண்டியது.

பகிர்ந்து கொள்தல் : வீட்டு வேலைகளை எல்லாம் கணவன்கள் பார்த்துக் கொண்டு, TV சீரியல் பார்த்து அழுவது, போனில் சொந்தக்காரர்களின் கவலைகளை கேட்டு சந்தோசப்பட்டுக்கொண்டே வருத்தப்படுவது போன்ற கடின வேலைகளை மனைவிகளிடம் விட்டு விடுங்கள்.

நித்ய சரணாகதி : அட சீ! படுத்தே விட்டானைய்யா! என்பது போல சரணாகதி அடைந்து விடுதல். முதுகெலும்பு, மீசை என ஒத்து வராதவற்றை கழட்டி வைத்து விட்டு, எப்படி திட்டினாலும் கண்டு கொள்ளாத சாந்த சொரூப நிலை. கொஞ்ச நாள் திட்டி விட்டு “இது வேஸ்டு” என்ற மனநிலைக்கு மனைவிகளை தள்ளுவது.

கணவன்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என இரண்டு பிரிவுகள் உள்ளன.

செய் அல்லது செத்து மடி :

அப்பப்ப புகழ்ந்து கொண்டே இருக்கவும். எதையாவது சொல்லி. நீ இந்த சேலையில் பார்க்க இங்கிலாந்து பிளேயர் பென் ஸ்டோக்ஸ் மாதிரி இருக்கே. (அவர் ஆம்பளை கிரிக்கெட் பிளேயர்னு நமக்கு தான் தெரியும்). இங்க பொய் சொல்லாத வாய்க்கு போஜனம் கிடையாது.

எவ்வளவு மோசமாக சமையல் இருந்தாலும், துப்பாம விழுங்கி பழகவும். நல்ல சாப்பாடு சாப்பிடத்தான் வெளிய ஹோட்டல் இருக்கே.

நண்பர்கள் கணவன்களை புகழ்வது மனைவிகளுக்கு சுத்தமாக புடிக்காது. உங்க பிரண்ட்ஸ் எல்லாமே லூசு தானா உங்கள மாதிரின்னு கேள்வி வரும்.

செய்யாத அல்லது செத்து மடி :

மனைவியை கேட்காமல் மூச்சை கூட விடக் கூடாது.

மொத்தத்தில் “சிவன் சக்தி” யாக வாழ்வது. அதாவது. கணவன்கள் அனைத்து சக்தியையும் மனைவிகளுக்கு தந்துவிட்டு “சிவனே”னு காலத்தை தள்ளுவது. மனைவிகள் சிங்கத்துக்கு பதிலாக கணவன்கள் மேல் அமர்ந்து “சக்தி”யாக வலம் வருவார்கள்.

இது ஒரு வாழ்க்கையா என கேட்காமல் இப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்தால் பூமியில் வாழும் நாட்கள் நரகமாய் இல்லாமல் இருக்கும். அப்புறம் ஏன் மனைவிகளை ஜெயிப்பது எப்படினு தலைப்பு வச்சேன்னு கேட்டீங்கன்னா, இப்படி ஒரு உலக அதிசயத்தை தலைப்பை வச்சா தான் படிக்கிறவங்களுக்கு ஒரு ஆர்வம் வரும் “இதென்னடா புதுசான்னு”. அதனால தான்..

மனைவிகள் மீண்டும் டிவி பார்க்க போங்க. கணவன்கள் மீண்டும் வெங்காயம் வெட்ட போங்க. இதை புரிஞ்சி நடந்துக்கிட்டா, இனியெல்லாம் சுபமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *