எங்க ஆபீஸ்ல எந்த ஒரு ட்ரைனிங்க்கு ஒருவரை தேர்ந்தெடுத்தால் அதற்கான பட்டியலை A for Ashok னு தொடங்குவாங்க. ஒருமுறை ITC Grand Chola ட்ரைனிங்கில் என்னையும் சேத்திருந்தார்கள். இந்த வயதில் அசையாம ஒரு இடத்துல உட்கார சொல்வதென்னமோ ‘சல்மான் கானிடம் சட்டைய கழட்டாம நடின்னு’ சொல்ற மாதிரி.
நான் மறுபடி ஸ்கூலுக்கு போற மாதிரி ரெடி ஆனேன். தலைமுடிக்கு 100 மில்லி தேங்காய் எண்ணெய், முகத்தில் 50 கிராம் பவுடர், நெற்றியில் ஒரு பொட்டு. அப்படியே நெற்றியில் ஒரு சுருளுடன் எனது பள்ளிக்கு சாரி ஹோட்டலுக்கு போனேன். அதென்னமோ அந்த வாட்ச்மேன் என்னை உள்ளே விடுறதுக்கு முன்னாடி என் ஐடி கார்டையும் என்னையும் அத்தனை தடவ பார்த்தேன். கண்ணு தெரியலை போல. நான் பழக்கதோஷத்தில் போயி கடைசி பெஞ்சில் உட்கார்ந்துக்கிட்டேன்.
அது இந்திய மற்றும் வெளிநாட்டு அரசின் ஜாயிண்ட் ட்ரைனிங் கோர்ஸ். பாடம் நடத்த வந்தவங்கெல்லாம் 7 அடிக்கு குறையாம இருந்தாங்க. குட் மார்னிங் சா..ர் னு சொல்றதையே மைக்ல சொன்னாதான் அவங்களுக்கு கேட்டதுனா பார்த்துக்குங்க. டீசண்டா போகணும்னு மூஞ்ச நல்லா ஷேவிங் பண்ணிட்டு போனா, அங்க வந்த எல்லா வெளிநாட்டு வாளும் தாடியோட திரியிறாங்க. சும்மா ஒவ்வொருவருக்கும் சில்வெஸ்டர் ஸ்டேலன் இல்லாட்டி அர்னால்டு மாதிரி உடம்பு. ஒருத்தர பிரிச்சா 2 அசோக்கு பண்ணலாம். ஸ்டைலா அவங்க பேசுனப்பெல்லாம் நான் இங்கிலிஷ் படம் பாக்கிற பழக்கதோஷத்தில தமிழுல எழுத்து போடுவாங்களோன்னு வயித்த பார்த்துக்கிட்டு இருந்தேன். நல்ல வேலையா லேடி டீச்சர் யாருமில்லை.
சும்மா ட்ரைனிங்கெல்லாம் பக்காவா பிளான் பண்ணியிருந்தாங்க. மதிய சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு டீ பிரேக். பின்னாடி ஒரு டீ பிரேக். சோழ நாடுன்னாலே சோறுடைத்து. அதனால என் மனசெல்லாம் மதிய சாப்பாட்டையே நினைத்திருக்க, எனக்கும் மதிய சாப்பாட்டிற்கு நடூல ரெண்டு வாத்தியார் இருந்தாங்க. கோர்ஸிலேயே சிறந்த விஷயம் என்னான்னா எல்லா நேரமும் டீயும், பிஸ்கட்டும் ரெடியா இருந்துச்சி. ஏதாவது டவுட்டுன்னா கேள்வி கேளுங்கன்னு சொன்னாங்க. நமக்கு தெரியலைன்னு ஏன் காட்டிக்கணும்னு நான் கடைசி வரைக்கும் கேள்வியே கேட்கலை. வெளி நாட்டிலருந்து வந்த புள்ளிங்கோ வேற. மரியாதை தரணுமில்ல.
ஒவ்வொரு டேபிளிலும் வாட்டர் பாட்டில், கிளாஸ், 10 சாக்லேட் வச்சிருந்தாங்க. எல்லா பக்கத்துலருந்தும் கத்துக்கணும்னு நான் மூன்று முறை இருக்கையை மாற்றிக்கிட்டேன். அடுத்த நாள் சாக்லேட் வைக்கலை. மதிய சாப்பாட்டுக்கு பின் எனக்கு கேட்டதெல்லாம் தாலாட்டு மட்டும் தான். அமெரிக்க தாலாட்டு.
சொல்ல மறந்துட்டனே. இவ்வளவு சாப்பாட்டுக்கும் இடையில் பாடமும் நடத்துனாங்க.