Ashoka the 2nd

டிவி சூழ் உலகு…..

டிவி சூழ் உலகு…..

டிவி சூழ் உலகு…..

டிவி எனப்படும் அகில உலக இடியட் பாக்ஸ் மற்ற நாடுகளில் பொழுதுபோக்கிற்கு பயன்படுகிறன. ஆனால் இந்தியாவில் மட்டும் மக்களை இடியட்டாக்கி, வீடுகளின் நடுவில் அமர்ந்து கொண்டு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டுள்ளன. விடியும்போதே ‘மகர ராசி நேயர்களே’ என்ற கரகர குரலை கேட்காவிட்டால் பலருக்கு மனச்சிக்கல் ஆரம்பித்து மலச்சிக்கலில் முடிகிறது. இதனால்தான் சிலர் வீட்டில் பாத்ரூம் இல்லாவிட்டாலும் டிவி இருக்கிறது.

சட்டி போல பெட்டியாக ஆரம்பித்த டிவிக்கள் இப்போது காலத்திற்கேட்ப ஸ்லிம்மாகி சுவரில் பல்லி போல ஒட்டிக்கொண்டுள்ளன. கொரோனோ தாக்குதலுக்கு பின்னர் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளாக டிவி மாறியிருக்கிறது. முதல் பொருள் ஒலிம்பிக் ஜோதி போல அணையாமல் எரியும் கிச்சன் ஸ்டவ்.

நியூஸ்களை தவறிப்போய் பார்த்தால் உலக அளவில் வெறுக்கப்படும் இரண்டாவது விஷயமாக கொரோனா இருக்கிறது. முதலிடத்தில் யார் என்பது நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை பொறுத்து மாறலாம். ஆனால் முதலிடத்தில் மருமகளுக்கு மாமியார் என்பதும் மாமியாருக்கு மருமகள் என்பதும் சமாதி மேல் அடித்து செய்யக்கூடிய சத்தியமான உண்மை.

நண்பர்களின் வீட்டிற்குச் சென்றால் உளமாற உள்ளே அழைத்து உபசரித்தது ஒரு காலம். இப்போதெல்லாம் டீவியில் ஓவர் மேக்கப் பெண்மணி கதறிக் கொண்டிருக்க குடும்பமே ஹாலில் அமர்ந்து கண்ணை துடைத்துக் கொள்கிறார்கள். நம்மை உள்ளே அழைத்து உட்கார வைத்துவிட்டு கமர்சியல் பிரேக்கில் மட்டுமே பேசுகிறார்கள். “வாப்பா சோனையா நல்லா இருக்கியா”.

உறவுகளை கொச்சை படுத்தாமல், அடுத்த குடும்பத்தை கெடுக்காமலிருக்கும் டிவி சீரியல்கள் டிராயர் போடாத ஆண்கள் போல அரிதாகி விட்டன. பெரும்பாலும் அனைத்து டிவி சீரியல்களிலும் பெண்களே வில்லிகளாக இருப்பதன் காரணத்தை பெண்கள்தான் சொல்லவேண்டும். கன்னித்தீவு போல சில சீரியல்கள் இவருக்கு பதில் அவர், அவருக்கு பதில் எவர் என்று மாற்றிக்கொண்டு தொடர்கின்றன. கதாநாயகியின் 10 மாத கர்ப்பம் டிவி சீரியலில் 30 மாதத்திற்கு ஓடுகிறது, யானையின் பேறுகாலமே 22 மாதங்கள்.

விளம்பரங்களுக்கு நடுவில் காட்டப்படும் சில நிமிட மெகா சீரியல் வில்லிகளின் முகத்திலிருக்கும் ஒரு இன்ச் பவுடரும், அவர்கள் மூஞ்சியை சுத்தி சுத்திக் காட்டுவதும் கொரோனோ வைரஸை விட கொடுமையாய் இருக்கின்றன. கொரோனோவால் கிடைத்த ஒரே நன்மை இந்த டிவி சீரியல்களை நிப்பாட்டியதே. பல வீடுகளில் மணியடித்தால் சோறு கிடைப்பதாய் கணவர்கள் சொல்கிறார்கள்.
வயதானவர்கள் நியூஸ் சேனலை விடுவதேயில்லை. அருகில் அமர்ந்து கொண்டு மாற்றி மாற்றி நியூஸ் சேனலை பார்க்கிறார்கள். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல.
தமிழில் பேசும்போதே “ராமன்ம ரத்தைப்பி டுங்கினானே” என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் பேசும் டிவி ஆங்கர்ஸ் கையை நீட்டி கண்ணை குத்தாத தூரத்தில் பாதுகாப்பாய் அமர்ந்து கொண்டு டிவி பார்ப்பது நல்லது.

டிவியின் பயன்பாடு மெதுவாக குறையக் காரணம் டிவி குஞ்சு பொரித்தது போலிருக்கும் மொபைல் போன்களே. அனைத்து செய்திகளும் வாட்ஸ் அப்பில் சுடசுட வர, டிவி எதற்கு என்ற கேள்வி எழுந்தது. பிரபஞ்சம் அழிந்தாலும் லைவாக வாட்ஸ் அப்பில் தெரிந்து விடும் நிலை. இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டு கிடந்த டிவியின் உயிரை காப்பாற்றியதில் சீரியல்களுக்கு பங்குண்டு. அதுவும் குறைந்து போனிலேயே டிவி சீரியல்களை நம்ம அப்ரசெண்டுகள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் கோடைமழை போல வந்த கொரோனா மீண்டும் டிவிக்கு புத்துயிர் தந்துள்ளது.

‘வா வா வாத்யாரே வா வஞ்சிக்கொடி’ என்ற சத்தான பாடல்கள் பக்கத்துக்கு வீட்டு டிவியில் கேட்கத் தொடங்கியுள்ளன.

இதிலிருந்து டிவியின் வாழ்வதனை போன் கவ்வும். டிவி மறுபடி வெல்லும் என்பது தெரிகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *