இந்த சிறுவனுக்கு தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை என்ற புத்தகத்தை நண்பர் ஒருவர் அறிமுகம் செய்தார். தபூ சங்கரின் பாணியில் சில வரிகள் எழுதத் தோன்றியது..
தர்பூஸ் கவிதைகள்…
உனது பிறந்தநாளில்தான்
துவங்குகின்றன.
நீ பிறப்பதற்கு முன்பான
நாட்கள் வாழாவெட்டி நாட்கள்.
நீ கடற்கரையில் நிற்கும்போது
உன் கால்களைக் கழுவி
கடல் முகம் கழுவிக் கொள்கிறது.
காதல் உணர்வுமல்ல
மதமுமல்ல.
சுவாசம்.
நீ சுவாசித்த காற்றை தந்து
என் சுவாசத்தை மீட்டியெடு.
கடவுள் மனிதனை படைத்தான்
மனிதன் காதலைப் படைத்தான்
உன்னை கண்டதிலிருந்து
கடவுள் மனிதனாக
தவமிருக்கிறான்.
ஒளியற்ற என் வானில்
நிலவாய் வந்தாய் நீ.
இப்பொது
நிலவில் மட்டும் வாழும்
ஆர்ம்ஸ்ட்ராங்காய் நான்.
நீ மடிப்பு, மடிப்பாய்
நீவி நீவி
மறைத்தும் மறைக்காமல்
உடுத்தும் சேலைகள்
என்னை
துவைத்துச் செல்கின்றன.
நிலவில் முகம் காட்டுவதில்லையென
நிலவு குறைபட்டுக் கொள்கிறது.
சற்று உலாவி விட்டு வா.
உன்னிடமும் ஒளிபெற்று
வாழ்ந்துவிட்டு போகட்டும்.
நீ கைகளை குவித்து
கண்களை மூடி
தியானிக்கையில்
உன் மனதில்
வந்து போக
அனைத்து கடவுள்களும்
போட்டி போடுகின்றன.
ஒரு கண்ணில்
காதலைக் காட்டி
மறுகண்ணில்
கோவத்தைக் காட்டி
கடந்து செல்கின்றாய்
இரு கண்களிலும்
காதலைத் ஏந்தி
கசிந்துருகுகிறேன்
வாழ விடு அல்லது
வாழ்க்கை கொடு
கூச்ச நாச்சம் கருதி சில சென்சார்ட் கவிதைகள்..
காற்றின் ஈரப்பதத்தை
அறிய ஹைக்ரோமீட்டர்.
உனது இதழ்களின்
ஈரப்பதத்தை அறிய
என் இதழோமீட்டர்
உன் பார்வை மின்னல்
என் மனதை துளைத்துவிட்டு
நகர்ந்தபோது
எனக்குள் மழை பெய்தது .
இப்போது அலை அடிக்கிறது.
சீக்கிரம் வா.
முத்துக் குளிப்பது போல
முத்தம் குளிக்க வேண்டும்.
சில ரிஜெக்டட் வரிகள்..
காந்தி தேசம்
கண்ணீர் தேசமாக
மாறாமலிருப்பது
சில காதல் வரிகளால் தான்
உனது கண்ணீர்ப்பு விசையில்
சுற்றி வருகிறேன்
நிலவாக.
எனது அமாவாசைகளை
பௌர்ணமியாக்கி விட்டு போ.
உனது பெயர்
இடம்பெறா நிறங்கள்
உனது முகம்
இடம்பெறா ஓவியங்கள்
உனது சிரிப்பு
இடம்பெறா இசைகள்
இவை அனைத்தும்
உயிரில்லா உடல்கள்.
சக்கரத்தின் சுழற்சியில்
தூரம் தெரிகிறது.
உன் விழிகளின் சுழற்சியில்
காதல் தெரிகிறது.