நான் தாடி வளர்த்த கதை.
சுந்தர் பிச்சை போன்று வாழ்க்கையில் சாதித்தவர்கள் எப்படி சாதனை செய்தார்கள் என எழுதுவது வாடிக்கை. எனக்கெல்லாம் தாடி வளர்ப்பதே வாழ்நாள் சாதனை ஆயிருச்சு. சிறுவயதிலேயே முடிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்குறத கண்டுபிடிச்சேன். ஏன்னா எல்லா விஞ்ஞானிகளும் நெஞ்சு வரைக்கும் தாடி வச்சிருப்பாங்க. தாடியை நீவினால் மூளை நன்றாக வேலை செய்யும். தாடி உள்ளவர்கள் அறிவாளிகள் என்பதால் பெண்களுக்கு தாலி மாதிரி, எனக்கு தாடி கனவாக இருந்தது.
பெரியார் தாடி போல பெரியதா இல்லாவிட்டாலும், சின்னவர் கமல் மாதிரி சின்னதா ஆட்டுத் தாடியாவது வளர்க்க ஆசைப்பட்டேன்.
அதென்னமோ வள வளன்னு எண்ணெய் பூசியிருக்க மொட்டை தலையர்களுக்குத்தான் தாடி நல்லா முளைக்குமா இல்ல, தாடி முளைக்க கம்ப்யூட்டர் படிக்கணுமா தெரியல. மொத்தத்தில் எனக்கு முகத்தில் எந்த ராஜாவும் முளைக்காது.
தாடி என்பது ஐந்து வகைப்படும்.
குறிஞ்சி : மலை போல் முடியும், முடி சார்ந்த பகுதியும். பொமரேனியன் நாய் போல் உடலெல்லாம் முடி பூத்துக் குலுங்குவது. நெஞ்சிலேயே சடை பின்னலாம். முகத்தின் ஒண்ணாம் பக்கம் சேவ் பண்ணிட்டு, ரெண்டாம் பக்கம் சேவ் பண்ணும்போதே மீண்டும் ஒண்ணாம் பக்கத்துல முடி முளைக்க ஆரம்பிச்சிடும்.
முல்லை : காடு மாதிரி சாட்டை சாட்டையை முடி வளருவது. “வாடா என் மச்சி, வாழக்கா பஜ்ஜி”னு முடிய ஆட்டி, ஆட்டி, பாடலாம். ஒரு நாளைக்கு ரெண்டு தடவ சேவ் பண்ணனும். அப்பயும் முகத்தில் கருமை படர்ந்து இருக்கும்.
மருதம் : அனைவரும் பொறாமை படும் மாதிரி அளவா முடி முளைக்கும். விதவிதமா ரவுண்டு தாடி, பிரென்ச் தாடி, மட்டன் சாப்ஸ் தாடி, ஹேன்ட்டில் பார் மீசை, டூத் பிரஷ் மீசைனு முனியாண்டி விலாஸ் மாதிரி எப்படி வேணும்னா வச்சி கலக்கலாம். வீட்ல நெருப்பு புடிச்சா மொதல்ல தாடிய காப்பாத்திட்டு அப்புறம் தான் பொண்டாட்டியாவே காப்பாத்துவாங்க.
நெய்தல் : சின்ன பையன்களுக்கு முளைக்கிற அரும்பான பூனை முடி. எங்க, இப்பெல்லாம் பத்தாவது பையன்களுக்கே கரடி மாதிரி முளைக்குது.
பாலை : இது என் போன்றவர்களின் அபலை ஜாதி. இந்த ரக ஆண்களெல்லாம் பஞ்சாப்ல பொறந்திருந்தா ஒரு நல்ல சர்தாரோட கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. சிலருக்கு பாலைவன சோலை மாதிரி ஆங்காங்கே திட்டு திட்டா காணப்படும். இதில ஒரே வசதி என்னான்னா அடிக்கடி சேவ் பண்ணாததால் முகம், மொகரக்கட்டை ஆகாது. இளசாவே இருக்கும்.
என் நண்பர்கள் ஒருநாள் சேவிங் பண்ணாவிட்டாலும் மூஞ்சு பலாப்பழம் மாதிரி ஆகிடும். ஆனால் எனக்கு முகத்துல முடி முளைப்பதற்குள் அத்திவரதர் இன்னொருமுறை குளத்துக்குள்ள போயிட்டு வந்துடுவார். அப்படியும் முகத்தில முளைக்கிற முடி முகத்தில் படர்ந்து வராமல் ஒவ்வொரு முடியும் நவகிரங்கள் மாதிரி ஒவ்வொரு பக்கமும் பார்த்துக் கொண்டிருக்கும். நானும் ஐந்தாண்டு திட்டமெல்லாம் போட்டு எருவா மாட்டின், முட்டை சாப்பிட்டேன், அடிக்கடி சேவ் செய்து பார்த்தேன். நல்லா தாடி முளைச்சா என மைத்துனருக்கு அலகு குத்துறதா கூட வேண்டிக்கிட்டேன். எந்த பிரயோஜனமும் இல்லை.
தலைக்கு ஷாம்பு போட்ட கையோட தாடிக்கும் ஷாம்பு போடுற பரம்பரை என்னுது. எனக்கு மட்டும் பிடரி இல்லாததால வரியில்லா வரிக்குதிரை மாதிரி ஒரு உணர்வு. தன் முயற்சியில் சற்றும் மனம்தளரா விக்கிரமாதித்தன் போல மறுபடியும் பத்து நாட்கள் சேவ் செய்யாம முடி வளர்த்தேன். பார்ப்பவர்கள் எல்லாம் “ஏங்க உடம்பு, கிடம்பு சரி இல்லையா? குடும்பத்தில் ஏதும் பிரச்சனையா?”னு கேட்கவும், உடனே தாடியை அழகு படுத்தி கொள்ள ஒரு சலூனுக்கு ஓடினேன்.
நான் : தாடியை சரி பண்ணனும். (அவன் என்னை கரப்பான் பூச்சியை பார்ப்பது போல் பார்க்க).
நான் : (சின்ன சிரிப்புடன்) முடி கொஞ்சமா தான் இருக்கு. என்ன பண்ணா நல்லா இருக்கும்?
அவன் : சேவ் பண்ணிடுங்க நல்லா இருக்கும்!
நான் : அது இல்லப்பா. ஸ்டையிலா french beard, mutton chops மாதிரி தாடி வைக்க முடியுமா ?
அவன் : அதுக்கெல்லாம் முடி இருக்கணுங்க (அதை ஏண்டா மூளை இருக்கணும்ங்குற மாதிரி சொல்லுற )
நான் : இந்த முடிய வச்சி என்ன பண்ணலாம்?
அவன் : கன்னத்துல சின்னதா மரு வச்சுக்குங்க.
நான் : நீ மொதல்ல பலூனை சேவ் பண்ணி கத்துக்க. உன்கிட்ட வந்ததுக்கு ஆசாரி கிட்ட போயிருந்தா இந்நேரத்துக்கு
தாடியை இளைச்சிருப்பேன்.
விடுங்க. தாடியெல்லாம் ரௌடிங்க உடுறது. கன்னத்துல தழும்பை மறைக்க, எலும்பு கூடு மாதிரி மூஞ்சி ஒட்டிப்போய் இருக்குறவங்க வச்சிக்கிறது. நம்ம மாதிரி குழந்தை முகம் இருப்பவங்களுக்கு வேண்டாம்.