Ashoka the 2nd

கொரோனா திருவிளையாடல்….

கொரோனா திருவிளையாடல்….

கொரானா வைரஸுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் பல நாட்கள் வாய்தா வாங்கிய கொரோனா குழம்பிப் போய் நீதிமன்றத்திற்கு பதிலாக பட்டிமன்றத்தில் ஆஜராகி பராசக்தி டயலாக்கை சைனீசில் பேசியதன் தமிழ் டப்பிங்.

*****

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை கண்டிருக்கிறது. புதுமையான வைரஸ்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரமுமல்ல. வழக்காடும் நான் புதுமையான வைரசுமல்ல.

வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாக தென்படும் ஒரு வைரஸ்தான் நான். மக்களை தாக்கினேன் உயிர்களை பறித்தேன் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. நிச்சயமாக இல்லை.

மக்களை தாக்கினேன். மக்கள் வேண்டாம் என்றல்ல. மியூசிக்கலியில் மாமாக்களும் ஆண்டிகளும் போடும் குத்தாட்டத்தை தாங்கமுடியாமல்.

உயிர்களை பறித்தேன். இவர்களை தின்பதற்கு அல்ல. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் இவர்கள் தின்னுத்தீர்க்கும் உயிர்களை காப்பாற்ற.

உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.

நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக. சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்துள்ளது. தீர்ப்பு எழுதும்முன் கேளுங்கள் என் கதையை.

சைனாவில் பிறந்தேன் நான். என் நாட்டில் தவளைகளும், பாம்புகளும் நெளிந்தன. ஒரு அறிவிலிருந்து ஆறறிவு வரை அத்தனையையும் சாப்பிட்டார்கள் அறிவில்லாமல். பக்கத்து வீட்டுக்கு போனால் பல்லியையும், எதுத்த வீட்டிற்கு போனால் எலியையும் ஸ்னாக்சாக கொண்டுச் சென்றார்கள். எல்லா நாடுகளுக்கும் ஓடினேன். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கும் ஓடிவந்தேன்.

கட்டிப்பிடித்து முத்தா கொடுக்கும் வெளிநாட்டினரையே தள்ளி நின்று கைகூப்பி வணங்க செய்தவன் நான். உலக போலீஸான அமெரிக்கனையே டாய்லெட் பேப்பருக்கு சண்டையிட்டு தண்ணீரில் கழுவச் செய்தவன் நான். ஆனால் இங்கு என்னை நிம்மதியாக வாழ விட்டார்களா கயவர்கள்.

கல்யாணி எல்லாம் கல்யாணி கலப்பட பீரை தூக்கிக்கொண்டு அலைந்தார்கள். அவர்களுக்கு ஊறுகாய் தந்திருக்க வேண்டும். கலப்படமில்லா நல்ல சரக்கை கொடுத்திருக்க வேண்டும். செய்தார்களா. பதினாலு நாட்கள் வீட்டில் இருந்திருந்தால் விலகியிருப்பேன். செய்தார்களா. மீன் வாங்க முண்டியடித்தார்கள். மட்டன் வாங்க கட்டிப் பிரண்டார்கள். தனித்திரு விழித்திரு என்று சொன்னால் ‘திரு’ வுக்குதான் அது. நாங்க திருமதி என்று வெளியே சுத்தினார்கள் கொண்டையர்கள்.

ஒடுங்கி போன மண்டையனை கொரோனா மண்டையன் என்றார்கள். கோமியத்தை குடித்து என்னை மூழ்கடிக்க பார்த்தார்கள். எனக்கு மஞ்சள் பூசி வேப்பிலை அடித்து பேய் ஓட்டினார்கள். இஞ்சி டீ குடித்துவிட்டு குரங்காக சிரித்தார்கள். சப்பாத்தியிலிருந்து கேக் வரை என் உருவத்தை நகையாடினார்கள். அம்மை போட்ட மூஞ்சி போல் என் படத்தை அசிங்கமாக வரைந்தார்கள். கொரோனா என்ற அழகான பெயரை குரானா, சொர்ணா, குருமா பர்மா என்று கேவலப் படுத்தினார்கள். பிறந்த குழந்தைக்கு கொரோனா குமார் என்று பெயர் வைத்தார்கள். ஓடினேன் ஓடினேன். வாழ்வின் எல்லைக்கே ஓடினேன். ஒலியும், ஒளியும் காட்டி என்னை திரும்ப வரவழைத்தனர்.

அரசு சொன்னதைக் கேட்காதது யார் குற்றம்? லுங்கியை போட்டுவிட்டு கேரம் போர்டுடன் ஓடியது யார் குற்றம்? பைக்கில் ட்ரிபிள்ஸில் உலகை வலம் வருவது யார் குற்றம்?

சிகப்பு, ஆரஞ்சு, பச்சை பெயிண்ட் அடித்த மண்டையர்களின் நாட்டுக்கு பெயின்ட் அடித்தேன். நாய்க் கறண்டியதுபோல் அரைமண்டையை சேவ் செய்துவிட்டு தாடையில் சடை போட்டு திரிந்தவர்களின் மண்டையில் முடிவளர்த்தேன். உன்மூஞ்சில பீச்சாங்கையை வைக்க என்று பிரித்து பேசியவர்களின் சோத்தாங்கையையும் மூஞ்சியில் வைக்க முடியாமல் செய்தேன்.

ஹெல்மெட் போட்டு பந்தா பண்ணிய ஆண்களின் தலையில் துண்டு கட்டி வெளக்குமாறை தூக்கச் செய்தேன். மிக்ஸி, கிரைண்டரை பயன்படுத்தாமல் பெட்மாஸ் லைட் போல் மாறிய பெண்களை குத்துவிளக்காக மாற்றினேன். படிப்பு, படிப்பு என்று குமுறிய மாணவர்களை பத்து மணிவரை குப்புறடிச்சி தூங்கச் செய்தேன். ஆண்களின் போலி முகத்தையும், பெண்களின் உண்மை முகத்தையும் உலகிற்கு காட்டினேன். வெயிலில் அலைந்து கருகியிருந்த கருவாயன்களை வெள்ளையாக்கினேன். கிச்சன்களில் கீழடியில் தோன்றிய உப்புமாவைத் தவிர மற்ற உணவுகளையும் மீட்டெடுத்தேன். உலகில் அவசியமேது, அலங்காரமெது என்று புரிய வைத்தேன்.

நிலவில் ஆயா வடை சுடுவதை தெளிவாக தெரியுமளவு பூமியை மாசிலிருந்து காத்தேன். டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீஸ்காரர்கள் இந்த மூவரும் வராமல் இருந்திருந்தால் உலகத்தை மாற்றியிருப்பேன். மனிதர்களை மைனாரிட்டி ஆக்கியிருப்பேன். அன்பை கடவுளாக்கி, மனிதத்தை மதமாக்கி இருப்பேன்.

மனிதன் மாறாதவரை கொரோனோக்களும், கர்மாக்களும் திரும்ப வரும். இதுதான் எங்கள் வாழ்க்கையேட்டின் தத்துவம், பாடம்.

கொரோனா நல்லதா கெட்டதா என்று கன்ப்யூஸ் ஆன நடுவர் துல்கர் சல்மான் பாப்பையா எதிர்கட்சிக்காரரான மொரட்டு தமிழரிடம் அவரின் வாதத்தை தாக்கல் செய்யச் சொன்னதாக கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *