புனைவின் பாதையில்
வரலாற்றை எழுதுவது ஒருவகை.
வரலாற்றுக்குள் சென்று வாழ்வது ஒருவகை.
கால இடைவெளி கடந்து பின்னோக்கிப் பறந்து கரிகாலனின் நிழல் போல் நின்று தன்னுடைய ஆக்கங்களை தந்து இருக்கிறார் அசோக்குமார்.
நிகரில்லாத அந்த வீரனின் நுண்கண அசைவுகள் ஒவ்வொன்றையும் காட்சிப் படிமம் போல எழுத்தில் பதிவு செய்யும் வித்தகம் இவரால் விளைந்திருக்கிறது.
கரிகாலனை மட்டுமல்ல. அவன் காலத்திலிருந்த எளிய வீரர்களில் இருந்து ஏற்றமிக்க ஆளுமைகள் வரை எல்லோரையும் துல்லியமாய் கண்முன் உலவவிடும் எழுத்து இவருடைய எழுத்து.
போர்க்கள வர்ணனைகளில் தத்துவத் தெறிப்புகளில் அடர்த்தி மிக்க உரையாடல்களில் வரலாற்று நதியை த் தேக்கி வார்த்தை மின்சாரம் எடுக்கும் சொல்லணை படைத்திருக்கும் அசோக் குமார் பரவசம் மிக்க வாசிப்பு அனுபவத்தை உணர வாசகர்களுக்கு வாசல் திறக்கிறார்
- மரபின் மைந்தன் முத்தையா
திரு. அசோக்குமார் அவர்கள் எழுதிய 'சோழவேங்கை கரிகாலன்' நாவல் வரலாற்றின் நிஜத்தில் இருந்த ஒரு செழுமைக்கு நம்மை வலுவோடு அழைத்துச் செல்கிறது. படைப்பாளரின் முதல் படைப்பு என்று துளி அளவும் யோசிக்க முடியாத அளவிற்கு, கண்கள் முன்னே எழுத்து வடிவத்தில் பிரம்மாண்டத்தை கொட்டி வைக்கிற கலை இவருக்கு வாய்த்திருக்கிறது.
ஒவ்வொரு பாத்திரத்தையும் இவர் படைக்கவில்லை, செதுக்கியிருக்கிறார். போர்களால் நிரம்பியது தான் நம் மறைந்து போன வரலாறு. அவற்றில் பல்வேறு போர்களை நாம் மறந்திருப்போம். போர்கள் என்பவை மனிதர்களின் உச்சகட்ட வீரத்தை, அரசனின் உடல் ஆளுமையை, ஒரு நாட்டினுடைய தன்மானத்தை மெய்ப்பிப்பதற்காக நடக்கின்றன என்பதை படிப்பவர்களுக்கு சளைக்காமல் உணர வைத்திருக்கிறார் ஆயிரக்கணக்கான பக்கங்களில். ஒவ்வொரு வருணனையும் சங்கத்தையும் மிஞ்சுகிறது. நவீனத்தையும் தொடுகிறது .ஒரு எழுத்து என்பது இவை இரண்டிற்கும் பாலமாக, அதுவும் புதினத்திற்குள் அமைவது என்பது மிகவும் அரிது. கல்லணைக் கட்டியவன் கரிகாலன் என்பதைத் தாண்டி இன்றைய தலைமுறையோ, நேற்றைய தலைமுறையோ கரிகாலனை தங்களுக்குள் பொதித்து வைத்து யோசிக்காத இடத்தில் இருக்கும்போது கரிகாலனை நம் இதயத்திற்குள் நிலைநிறுத்தி , அவனோடு நின்று பேச வைத்து, அவனை வியந்து, உயரத்திற்கு அழைத்துச் சென்று நம்மை மேல் நோக்கி பார்க்க வைக்கிறார் .
பெண்களைப் பற்றிய பின்புலத்தில்,அது அரசியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் அவர்களுடைய காதலுக்குள்ளே முகிழ்ந்திருக்கிற வீரம் என்பது படிப்பவர்களை நெகழ்வுற வைக்கிறது.
கல்கி, சாண்டில்யன் போன்றவர்களைத் தொடர்ந்து, இன்றைக்கு இந்த டிஜிட்டல் உலகத்தில் வரலாற்றுப் புதினங்களை எழுதுவது குறைந்திருக்கிற காலகட்டத்தில் முழுக்க முழுக்க தொடர்பற்ற ஒரு மாற்றுப் பணியில் தனது தொழிலை தீர்மானித்திருந்தாலும், தமிழனுடைய வரலாற்றை இவர் ஆழ்ந்து சுவாசித்தவர் என்பதை இவருடைய எழுத்து நமக்கு சான்று பகருகிறது.
ச.குருஞானாம்பிகா.
சோழவேங்கை, இமயவேந்தன் கரிகாலன் என அசோக்குமார் அவர்கள் எழுதிய இரண்டு சரித்திரப் புதினங்களும் தமிழ் வாசகர்கள் படித்து, மகிழ்ந்து கொண்டாடக்கூடிய, அற்புதமான படைப்புகள்.
அசோக்குமாரின் எழுதுகோல் இந்த நவீன யுகத்தில் கூட அழகிய தமிழ்ச் சொற்களை, சங்ககால ரசனையில் தோய்த்து மீண்டும் மீண்டும் ரசித்து வாசிக்க வைக்கும் ஒரு விந்தையை ஏட்டில் பதிந்திருக்கிறது.
வாழ்ந்தவர்கள், புதினத்துக்காக ஆசிரியர் உருவாக்கிய பாத்திரங்கள், அரசியல் வஞ்சங்கள், அறம் சார்ந்த அரசனின் மனப் போராட்டங்கள், களப் போராட்டங்கள், காதல் ரசம் ததும்பும் களிப்பூட்டும் காட்சிகள், இயற்கையின் ஜாலங்கள் என விரியும் களம் ஒரு புதுக் கரிகாலனையும், தமிழ் வரலாற்றையும் நமக்கு காட்டுகின்றது.
இவரது தமிழின் ஆளுமை, இவரது புதிய உவமைகளாலும், இதுவரை வாசகன் கண்டிராத வர்ணனைகளாளும் ஒரு மனச் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றது.
ஆழம் மிக்க ஆராய்ச்சியும், அதியற்புதக் கற்பனையும் இணைந்த இவரது படைப்புகளைத் தமிழ் போற்றும் நல்லுலகம் வணங்கி, வாழ்த்தி, வரவேற்று மேலும் பல சிறப்பான படைப்புகள் எழுத ஊக்கம் அளிக்கின்றது. எழுத்துப் பணி தொடரட்டும். எமது தமிழ் சிறக்கட்டும்.