Ashoka the 2nd

Books

சோழ வேங்கை கரிகாலன் பகுதி I

காலத்தால் செல்லரிக்கப்பட்ட தமிழ் வரலாற்றின் விடுபட்ட பக்கங்களில் கண்டெடுக்கப்பட்ட அருமணிகளால் கோர்க்கப்பட்ட மணிமாலை இந்நூல். தமிழ் நிலத்தை மாற்றியமைத்த ஒப்பாரும், மிக்காரும் இல்லா சோழவேந்தன் கரிகாலனின் பேராண்மையை பறைசாற்றும் விதமாக இந்நூல் வடிக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னியிடமிருந்து கதை துவங்குகிறது.
அறமே உயிரென வாழும் இளஞ்சேட்சென்னி சதியால் கொல்லப்பட, நிறைமாத கர்ப்பிணியான அரசி இளவெயினி தனது தமையன் இரும்பிடர்த்தலையாருடன் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மறைந்து வாழ்ந்து, வருங்கால அரசன் கரிகாலனை பெற்று வளக்கும் சம்பவங்களே இப்பாகம் முழுவதும் வியாபித்துள்ளது.
கரிகாலனின் பிறப்பும், பால்யகாலம் முழுவதும் நடைபெறும் சம்பவங்களும் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளன. குடிமக்களின் ஒருவனாக வளரும் திருமாவளவன் கரிகாலன் எனும் பெயரை பெறும் மெய்சிலிர்க்கவைக்கும் தருணத்தோடு இப்பாகம் நிறைவடைகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, ஏறக்குறைய மறக்கப்பட்ட வரலாறொன்று ஆசிரியர் மூலம் தன்னை புதுப்பித்துக்கொண்டுள்ளது. அக்கால மக்களின் நாகரிகம், கலாச்சாரம் மாண்பு, பண்பாடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகளை விளக்குவதன் மூலம் தற்காலத்தின் தேவையையும், எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும் எடுத்துரைக்கிறது. நவீன கதைசொல்லும் பாணி, அழகு தமிழின் இனிமையென கதை நெடுகிலும் பெருவெள்ளமாய் பாய்ந்தோடுகிறான் கரிகாலன். வாசிப்போரை நேசிக்க வைப்பான் இந்த சோழத்தின் வேங்கை.