“எந்த …………. என்ன பத்தி இப்படி உங்கிட்ட தப்பா சொன்னா? இதே வேல ……….. போச்சி ……….., ……….” என்று கெளதம் எழுத இயலாத கெட்ட வார்த்தைகளால் திட்டி பல்லை கடிக்க, சோபனாவின் கை மெலிதாக நடுங்கியது.
ஓசைகள் உருகி சிற்றோடையாய் ஓடுவதைப்போல் மேகன் ட்ரைனர் “ஐ வில் பைட் பார் மீ…. ஊகூ” என பாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த ஸ்டார் பக்ஸில் ஒளியும் இருளும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாய் கொஞ்சிக் கொண்டிருந்தன. பழைய கட்டிடத்தை வண்ண மரப்பலகைகள் பொருத்தி வெளித்தோற்றத்தை மாற்றியிருந்தனர். உண்மையின் விகாரம் சில இடங்களில் பல்லிளித்தது.
அரையிருளில் அமர்ந்திருந்த ஷோபனா “ஸாரி கௌதம். நமக்குள்ள சரிப்பட்டு வராது. இந்த கல்யாணம் வேண்டாம்” என்று நிறுத்தி நிதானமாக சொல்ல,
“வாட்” என்று அதிர்ந்தான் கௌதம். “ஏன்… அவங்க சொல்றத நம்பறியா?”
“மத்தவங்க சொல்றது எனக்கு விஷயமே இல்ல. ஆனா இப்படி சரளமா கெட்ட வார்த்தை பேசுற ஒருத்தர கல்யாணம் பண்ணிட்டு என்னால வாழ முடியாது.” கை உயர்த்தி, சர்வரின் கவனத்தை திருப்பி “பில்” என ஓசையின்றி உதடசைக்க, சர்வர் தலையாட்டினான்.
“எது…. கெட்ட வார்த்தை பேசுனா பிரேக் அப்பா! என்ன பேசுற…. இது ஒரு தப்பா, எந்த காலத்துல இருக்க! நமக்கு நிச்சயம் ஆயிருச்சு ஞாபகம் இருக்கா இல்லையா…?”
“இருக்கு. இந்த வார்த்தைகளை கேட்கும்போதே எனக்கு உடம்பு கூசிப்போவுது. இப்படி பேசறது தப்புனு நினைக்காதளவு நீங்க இருக்கீங்க. இப்ப அதான் பிரச்சனை. என் முன்னாடி இப்படி பேசுறது ரெண்டாவது தடவ”
“கமான்யா…” என நெற்றியை தேய்த்து சேரில் சாய்ந்து கொண்டான். அவனுக்கு கோபம் தீர்ந்து அதிர்ச்சியாய் இருந்தது. பிராங்க் செய்கிறாள் என நினைத்தான்.
சர்வர் வந்ததும் பில் தொகையைப் பார்த்து, ஹேண்ட் பேக்கை திறந்து இரு நூறு ரூபாய் தாள்களையும், ஒரு பத்து ரூபாயையும் வைத்துவிட்டு எழுந்தாள்.
“ப்ளீஸ் கொஞ்சம் உட்காரு.. ரெண்டே நிமிஷம்”
அவனை பொருட்படுத்தாமல் கண்ணாடி கதவை திறந்து அவள் வெளியேற வேறுவழியின்றி பின்தொடர்ந்தான். இருள் முளைவிட்டு படர்ந்திருக்க பெங்களூர் வாகனங்கள் கண் திறந்திருந்தன. ரோடு முழுதும் மின்மினிப்பூச்சிகளாய் ஒளிக்கூட்டங்கள் அலைபாய்ந்தன.
“நான் சொல்றத கேட்டுட்டு போ”
“இனி பேச ஒண்ணுமில்ல. இந்த கல்யாணம் வேணாம்னு என்னோட அம்மா அப்பாட்ட நைட்டு சொல்லிருவேன். நீங்க வேணா உங்க வீட்டுக்கு போன் பண்ணி என்ன புடிக்கலைன்னு மொதல்ல சொல்லிருங்க”
“ஆட்டோ” என்று கை தட்டி நிறுத்தி, ஏறிக்கொண்டாள். என்ன நடக்கிறதென புரியாமல் கௌதம் நிற்க, அவள் திரும்பியே பார்க்கவில்லை.
ஆட்டோ சிக்பெட் நெரிசலில் திக்குமுக்காடி, விடுபட்டு பெண்கள் விடுதிக்கு வேகமெடுத்தது. கௌதம் ஷோபனாவின் தந்தையினுடைய நண்பரின் மூலமாக வந்த வரன். இருவரும் பெங்களூரில் கம்பியூட்டர் வேலை, சொத்து, பத்தென அனைத்தும் பொருந்தி வர, அவளுடைய சொந்த ஊரான தருமபுரியில் நிச்சயதார்த்தத்தை விமரிசையாக செய்திருந்தனர். போனில் பேசும்போதும், மெசேஜ் செய்யும்போதும் கௌதம் இதுவரையில் கண்ணியமான முகத்தையே காட்டியிருந்தான்.
ரூமைத் திறந்து உள்ளே நுழைந்ததும் திடீரென சோர்வும், துயரமும் இருளாய் போர்த்தியது. இந்த முடிவை மற்றவர்கள் எப்படியெடுத்து கொள்வார்கள் என்ற எண்ணம் எழுந்தது. மரபு எனும் ஓடுடைத்து வெளியே வரும் அத்தனை பெண்களுக்கும் இதே நிலைதான். முட்களின் மேல் நடந்து வழியை உருவாக்க, அடுத்து வரும் பெண்களின் துயரம் சற்று குறைவாய் இருக்கும். மேலும் புதிய வழிகள் உருவாகலாம்.
நெஞ்சில் பாறையை சுமந்திருப்பது போலிருக்க அசையாமல் படுத்திருந்தாள். கைக்கெட்டும் தூரத்திலிருந்த ஃபேன் ஸ்விட்சை போட தோன்றவில்லை. உடலும், மனமும் கசகசக்க, உடலை வலுக்கட்டாயமாய் இழுத்து சென்று, குளித்து, நைட்டியணிந்து கொண்டாள். போனை எடுத்ததும் பழக்கப்பட்ட விரல் தானாக ரீல்சுக்கு வந்து நின்றது. மனதின் வலியை போன் செயலி புரிந்து கொண்டது போல. முதல் ரீலில் காட்டில் தனித்து நின்ற மானை புலி நெருங்க, மான் கொம்புகளால் குத்தி புலியை துரத்தியது. அடுத்த ரீலில் ஒட்டகச்சிவிங்கி புலியிடமிருந்து தப்பி சென்றது.
பிடிக்காத ரீல்களை நகர்த்தி செல்வது போல வாழ்வும் எளிதாக இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். சில நிகழ்வுகள் மன அறையில் மணமாய் நிரம்ப, சில கல்வெட்டாய் பதிகின்றன. அவற்றை மனச்சுவற்றிலிருந்து தேய்த்து அழிக்க முயல்கையில் ரத்தமும், சதையும் சிதறி அறை முழுவதும் வியாபித்து விடுகிறது.
எப்படி தொடங்குவதென ஒத்திகை பார்க்காமல் வீட்டிற்கு போன் செய்தாள். சில விஷயங்களை மனதின் போக்கில் விடுவது நல்லது. புத்தி குறுக்கிடும்போது உணர்வுகளுக்கு பொய்த்தன்மை வந்து விடுகிறது. “சொல்லு பாப்பா” என்ற அம்மாவின் குரலுக்கு மனம் அழுகையாய் பொங்கி வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டாள்.
“கௌதம் கூட இன்னைக்கு வெளிய போயிருந்தேன். சின்ன பிரச்சனையாயிருச்சிமா”
” ஏன் .. என்னாச்சி?”
நடந்ததை கூற, “அவ்வளவு தானா. நான் என்னமோ ஏதோன்னு பதறிட்டேன்” என்றாள் ஆசுவாசமாய்.
“என்னமா பேசுற, இந்த மாதிரி கேவலமா பேசுறவரோட என்னால வாழ முடியாது. எனக்கு இந்த கல்யாணம் வேணாம். அவங்ககிட்ட சொல்லி நிப்பாட்டிருங்க”
“என்ன விளையாடுறியா! நிச்சயமாகி மண்டபம் பாத்து, பத்திரிகை அடிக்க போறோம். இப்ப வேணாங்கிற. கோவத்துல நாலு வார்த்தை பேசுறதுதான். அதுக்காக கல்யாணத்தை நிறுத்த முடியுமா”
“அது கோவத்துல சொன்னதில்ல. அதோட அர்த்தம் தெரிஞ்சி, அனுபவிச்சு திட்டுற வெறித்தனம். நாளைக்கு என்னையும் இப்படி அருவருப்பா பேச மாட்டாருன்னு என்ன நிச்சயம்”
“அவசரப்படாத. பொறுமையா யோசி. இந்த விஷயத்துக்கெல்லாம்மா கல்யாணத்தை நிப்பாட்ட முடியாது. ஊருல தெரிஞ்சா சிரிப்பாங்க”
“ஊருக்காக வாழ முடியாது. இனி நா இந்த கல்யாணம் பண்ண மாட்டேன். அவங்க கிட்ட சொல்லிரு”
“எல்லாம் சம்பாரிக்கிற திமிரு. ஆ ஊன்னா எதுத்து பேசுற”
“ஏம்மா மனசுக்கு புடிச்சிருந்தா தானே கல்யாணம் செய்ய முடியும். எனக்கு ஏதோ ஒரு விதத்தில் புடிக்கலனு வச்சிக்க”
“அப்பாவுக்கு போன் பண்ணி நீயே சொல்லு”
“நீ சொல்லிரு” என்று போனை கட் செய்தாள்.
அரை மணி கழித்து மறுபடியும் அம்மா போன் செய்தாள். “உங்க அப்பாட்ட சொன்னேன். கத்தறாரு”
அவளுக்கு தெரிந்த ஆண்களில் அப்பா மென்மையானவர். ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டார். அவர்களுக்குள் சண்டை வந்தால் கூட அம்மாதான் பொரிந்து கொண்டிருப்பாள். அவரிடமிருந்து ஒரு வார்த்தை வராது. அவர் கோபமாயிருப்பது கூட வெளியே தெரியாது. சிறு வயதில் “கழுத” என்று திட்டுவது ஞாபகமிருந்தது. அதுவும் கொஞ்சலாகவா, கோபமாகவா என தெரியவில்லை. பெண் பிள்ளைகள் அப்பாவை போலிருப்பவரையே திருமணம் செய்ய விரும்புவார்கள் என்பது உண்மை தானோ!
“அவரு கத்த மாட்டாரு”
“நீயி ரெண்டு நாளு யோசி. அவசரப்படாத”
“எத்தனை நாளு கழிச்சி கேட்டாலும் என்னோட பதில் இதான். கௌதம நெனச்சாலே கடுப்பா வருது. வையி”
மறுநாள் மதிய நேரத்தில் கௌதம் அவளை பார்ப்பதற்கு ஆரக்கிள் ஆபீசுக்கு வந்தான். நிச்சயத்திற்கு பின்னர் இங்கு இரண்டு முறை வந்திருக்கிறான். சிலருக்கு அறிமுகமும் செய்து வைத்திருக்கிறாள். அவனை அறிந்தவர்கள் ஹாய், ஹலோக்களுடன் நகர்ந்தனர். நான்காவது மாடியில் ஜன்னலோர இருக்கை அவளுடையது. நீலவானம் வெண்கறையுடன் திறந்திருந்தாலும் மனநிலையை பொறுத்து பறப்பதா, குதிப்பதாவென தோன்றும். அவனை தள்ளி விடலாமாவென இப்போது தோன்றியது.
பிரீத்தியுடன் அமர்ந்து கோடிங்கை சரிபார்த்து கொண்டிருந்த ஷோபனா நிமிர, எப்படி துவங்குவதென தெரியாமல் “ஹாய்” என்றவாறு எதிரிலிருந்த சேரில் அமர்ந்தான்.
ப்ரீத்தி “ஹாய்” என்று புன்னகைத்து விட்டு அவர்களுக்கிடையே நந்தியாக இருக்க விரும்பாமல் “மதன்…” என்று யாரையோ அழைத்தவாறு நகர்ந்தாள்.
ஷோபனா பேச விருப்பமில்லாததை உணர்த்த “கொஞ்சம் பிசி” என்றாள்.
“சாரி…. ஒரு பொண்ணு முன்னாடி அப்படி பேசிருக்க கூடாது. ஏதோ ஒரு கோபத்துல கத்திட்டேன்…. காலைலயே வாட்சப்ல மெசேஜ் பண்ணிருந்தேன். இன்னும் டபுள் டிக் வரல. அதான் வந்தேன். சாயங்காலம் மீட் பண்ணலாமா?” எதுவும் நடக்காதது போல துவங்கினான்.
“கௌதம் ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்கு இப்படி பேசுற பழக்கம் கிடையாது. மனசுல சடார்னு ஏதோ அறுந்து போன மாதிரி இந்த கல்யாணத்துல விருப்பம் போயிருச்சு. வேண்டாம்னு சொன்னதுக்கப்புறம் சேர்ந்து வாழறது நல்லாருக்காது. சொல்லி காட்டுற மாதிரி ஆயிரும். நீங்க எப்படி எடுத்துட்டாலும் என்னோட முடிவு இதான். உங்க வீட்ல சொல்லிருங்க”
“உண்மையிலேயே கெட்ட வார்த்தை பேசுனதுதான் பிடிக்கலையா?”
“ஆமாம். மாத்தி சொல்ல வேண்டிய அவசியமில்ல”
“இந்த விஷயத்தை யார்ட்டயாவது சொன்னா நம்ப கூட மாட்டாங்க. வேற ஏதாவது பிரச்சனை இருக்கும்னு நினைப்பாங்க”
” அதுக்கு என்ன பண்றது. மாத்தியா சொல்ல முடியும்?”
“கெட்ட வார்த்தை இன்னைக்கு பேஷன் ஆயிருச்சு. பேஸ்புக், ட்வீட்டர்ல நார்மலா பேசிக்கிறாங்க. சினிமாவுல ஹீரோஸ் பேசுறது வைரலாயிட்டிருக்கு. இங்கிலீஸ் படத்துல வரிக்கு நாலு தடவ சொல்றாங்க. நீ என்னடான்னா”
“அதே இங்கிலீஸ் படத்துலதான் குழந்தைங்க முன்னாடி கெட்ட வார்த்தை பேசக்கூடாதுனு திட்டுற மாதிரியும் ஸீன் வைக்கிறாங்க. கெட்ட வார்த்தைல புரையோடிப்போன ஒரு சமூகமே திருந்த பாக்குறப்ப நாம ஏன் அவங்களோட கெட்ட விஷயத்த எடுத்துக்கணும்?”
“எங்க பிரண்ட்ஸுக்குள்ள பேசும்போதே இப்படி தான் பேசிக்குவோம். நீ என்னடான்னா…”
“அந்த கலாச்சாரமே தப்புனு நினைக்கிறேன். நீங்க பேசுனத உங்க வீட்டுல பேச முடியுமா? என்னோட அம்மா, அப்பாகிட்டயோ சொந்தக்காரங்கக்கிட்டயோ பேச முடியாத வார்த்தைய நான் கேட்கவும் விரும்பல. இது ரொம்ப சின்ன விஷயம். இதுக்கு போய் இப்படியானு நினைக்கிறீங்க. ஆனா இது எனக்கு பெரிய விஷயமா படுது”
“இதான் உன்னோட முடிவா?”
“ஆமாம். இந்த சின்ன முரணே பின்னாடி பெரிய முரணுக்கு அடிப்படை ஆயிடும். நாம பிரண்ட்லியாவே விலகிக்குவோம்”
அவளை எப்படி கன்வின்ஸ் செய்வது என யோசிப்பது போல சற்று நேரம் இருந்து விட்டு எழுந்தான். எதுவும் செய்ய முடியாத இயலாமை முகத்தில் தெரிந்தது. “ஓகே.. பை” என்று சொல்லி விட்டு நடந்தான்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவளுடைய அம்மாவிடமிருந்து போன் வர “சொல்லும்மா” என்றாள்.
“நாந்தான் யோசின்னு சொன்னனில்ல. அதுக்குள்ள அந்த பையன்ட்ட எதுக்குடி சொன்ன?” என்று அம்மா ஆரம்பிக்க,
“வேலையா இருக்கேன். நைட் பேசுறேன்..” என்று சொல்லும்போதே “இருடி” என்று கத்துவது கேட்டது. அவசரமாய் கட் செய்து சைலன்டில் போட்டாள்.
ஷோபனாவிடம் வந்த பிரீத்தி “என்னடி கல்யாணம் நின்னுருச்சின்னு கௌதம் சொல்லிட்டு போறாராம்” என்றாள் அதிர்ச்சியாக. அதற்குள் சொல்லி விட்டானா என்றிருந்தது. எப்படியும் தெரிந்துதானாக வேண்டும்.
“சின்ன பிரச்சனை”
“அவரு ஏதோ கோபத்துல கெட்ட வார்த்தை பேசுனாராம். அது பிடிக்காம நீ கல்யாணம் வேணாம்னு சொன்னேன்னு கார்த்திட்ட சொல்லிட்டு போயிருக்காரு!”
ஷோபனாவிற்கு எரிச்சலாய் வந்தது. எதுவும் பேசாமல் விரல் நகத்தை பார்த்தாள். அந்த ஆபீஸிலேயே பிரீத்தி கொஞ்சம் நெருக்கமாய் பழகக்கூடியவள். அவளிடம் எல்லா விஷயங்களையும் பேச முடியும். இனி சொல்வதால் தவறில்லை என தோன்றியது.
“அவனோட ஆபீஸ்ல சில பொண்ணுங்களோட சுத்தறானாம். நிச்சயத்துக்கு அப்புறமும் மாறலனு யாரோ ஒருத்தி பேர சொல்லாம போன் செஞ்சா. இப்படி ஒரு போன் வந்ததுனு சொன்னேன். அவ்ளதான். கன்னா பின்னானு கெட்ட வார்த்தைல கத்தறார். அப்ப அவரு மூஞ்சு போன போக்கு எனக்கு வாழ்க்கைல மறக்காது. அப்படியொரு வெறி. அதை பார்த்துட்டு எனக்கு ச்சீன்னு ஆயிருச்சி. இவரை கட்டிட்டு வாழ முடியாதுனு தோணுச்சு. பட்டுனு சொல்லிட்டேன்.
“இதெல்லாம் ஒரு விஷயமா ஸோபி!”
“கெட்ட வார்த்தைங்க மத்தவங்கள கீழ வச்சி அற்பமா பாக்குறதுனால வர்றது. எவ்வளவு கோபம் வந்தாலும் என்கிட்ட பேசுன மாதிரி அவங்க பாஸ்ட்ட பேசுவாரா? இல்ல இந்த மாதிரி நான் அசிங்கமா கத்தியிருந்தா அவரால ஈஸியா எடுத்துக்க முடியுமா?”
“இப்பல்லாம் லேடிஸே சர்வசாதாரணமா பேசுறாங்காப்பா”
“அதான் பிரச்சனை. ஆம்பளைங்க அசிங்கமா பேசுறாங்கனு இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்க… கெத்துனு நினைக்கிறாங்க போல… இப்படியே போனா அடுத்த ஜெனரேஷன் என்ன ஆவுன்னு தெரில…. நல்ல வார்த்தைல பேசி புரிய வைக்காம கேவலமா திட்டுறதோட அவசியம் புரியல. அவங்க கிட்டருந்து முடிஞ்சவரைக்கும் தள்ளியிருக்க நினைக்கிறேன். நான் செய்யறது சரியா, தப்பாங்கிறத விட, எனக்கு பிடிக்காத ஒன்னை செய்ய வேண்டாம்னு பாக்கறேன்”
“எல்லா சோசியல் மீடியாலயும் இப்படித்தான் இருக்கு. இவரு வேற இதை எங்கயாவது போட்டார்னா நீ ட்ரோல் மெட்டீரியல் ஆயிருவ”
“ஆகட்டும் விடு. இவ்ள மோசமா போயிட்டிருக்க காலத்துல இதப்பத்தி யாராவது பேசித்தான் தீரணும். நாலஞ்சி தடவ ஆச்சுன்னா இப்படி தப்பா பேசுறது ஸ்டைலு இல்ல. அசிங்கம்னு புரியும்”
“அதுவும் சரிதான். ரெண்டாயிரம் வருஷம் பழசு, செம்மொழின்னு பீத்திருக்கிறோம். என் பிள்ளைங்களுக்கு தமிழ் படிக்க, பேச வரமாட்டேங்குது. கடைசீல கெட்ட வார்த்தைங்கதான் தமிழ்னு மிஞ்சும்போல”
“பைலை எடு. கோடிங்கை முடிப்போம்”
மாலை நாலு மணிக்கு ஷோபனாவின் அப்பா வந்திருப்பதாக ரிஷப்ஷனிலிருந்து இன்டர்காம் வந்தது. இதை எதிர்பார்த்திருந்தாலும் வெளிக்காட்டாமல் கீழ்தளத்திற்கு சென்றாள். அப்பா வெயிட்டிங் ஹாலில் அம்மாவுடன் அமர்ந்திருந்தார். இருவரும் திடீரென வயதானது போலிருந்தனர். “வாங்க” என கேன்டீனுக்கு அழைத்து சென்றாள். சிலர் லேப்டாப்புடன் தனியே அமர்ந்திருந்தனர். சிலர் பெஸ்டியுடன் சன்னமான குரலில் பேசிக்கொண்டிருந்தனர். மூன்று காபி சொல்லி விட்டு சுவரோரமாய் அமர்த்தினாள்.
“என்ன ஆச்சுமா?” என்ற அப்பாவின் குரல் உணர்வுகளின் கலவையாக வெளிப்பட்டது.
நடந்தது அனைத்தையும் மெல்லிய குரலில் சொன்னாள். சர்வர் காபி கோப்பைகளை வைத்து விட்டு சென்றான்.
“அவங்க வீட்லருந்து போன் பண்ணுனாங்க. இதான் காரணமா இல்ல வேறேதுமான்னு கேட்கிறாங்க. நீ யாரையோ லவ் பண்றேங்கிற மாதிரி இருக்கு அவங்க கேட்கறது” என்றாள் அம்மா.
“கல்யாணம் நின்னா அடுத்தவங்க மேல பழி போடுறது வழக்கம்தானே”
“அப்படியேதும் பண்ணுனானாலும் பரவால்ல. இப்பயாவது சொல்லு”
“நாந்தான் அப்பவே இல்லைனு சொன்னனேம்மா”
“ஏண்டி இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு சொன்னா எப்படி?”
“ஏம்மா, அன்னைக்கு புது படத்து ட்ரைலர்ல ஹீரோ அசிங்கமா திட்டுறத பாத்துட்டு அந்த காலத்துல எப்படியெல்லாம் படம் எடுப்பாங்கன்னு பொலம்பினியா இல்லையா. இப்ப ஏன் மாத்தி பேசுற. நாளைக்கு உன் முன்னாடி என்னை திட்டுனா கேட்டுட்டு இருப்பியா”
“இந்த மாதிரி சம்மந்தம் அமையாது பாப்பா. பையன் பாக்க நல்லாருக்கான். நல்ல பேமிலிவேற. அவன் நல்லவனா கெட்டவனானுதான் பாக்கணும். இந்த கண்டிஷனெல்லாம் போட்டா பையனே கிடைக்க மாட்டான்”
“நம்ம வீட்ல இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அந்த மாதிரி ஒரு வாழ்க்கைய எதிர்பார்க்கிறேன்”
“கல்யாணங்கிறது விளையாட்டு சமாச்சாரமில்ல. ஞாபகம் வச்சுக்க. எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய. நைட்டுக்குள்ள யோசிச்சி முடிவு சொல்ல சொல்லிருக்காங்க”
“என்னால ஏத்துக்க முடியலம்மா”
“எதுக்கும் ஒரு தடவை அந்த பையனை பார்த்து பேசி பாரேன்”
“பிரயோஜனமிருக்காது. அவன் பேசுறது நார்மல்னு சொல்றானே தவிர கடசி வரைக்கும் இனி அப்படி பேசமாட்டேன்னு சொல்ல மாட்டேங்கிறான். என்னை வற்புறுத்தாத“
அவள் மசிவதாய் தெரியாமலிருக்க “நீங்க சும்மாயிருந்தா எப்படி. அவட்ட சொல்லுங்க” என்றாள். இது வெளியில் தெரிந்தால் சந்தையில் விலை பெறாமல் போயிருவேனோ என்ற சந்தேகம் அவளுக்கு.
அப்பா அமைதியாய் காபியருந்த, அவர் முடிவெடுத்து விட்டது தெரிந்தது. “இவ்வள பிரச்சனை ஆனதுக்கப்புறம் கல்யாணம் செஞ்சா சரிப்பட்டு வராது. பாத்துக்கலாம். நீ ஜாக்கிரதையா இரும்மா” என எழுந்தார்.
“தேங்க்ஸ்ப்பா” என்றாள் மெதுவாக. அப்பாடாவென பெருமூச்சு வந்தது. ஒரு மாற்றத்தை நம்மிடமிருந்துதான் துவங்க இயலும். அதற்கு முதலில் குடும்பம் ஒத்துழைக்க வேண்டும். மேலும் மேலும் எறும்புகள் ஊர, சமுதாயம் என்ற கல் தேயும்.
ஆபீசில் தகவல் பரவியதும் கேலியும், கிண்டலுமே மிஞ்சியது. “தப்பட் படத்துல புருஷன் அறைஞ்சதுக்கு ஹீரோயின் விவாகரத்து கேட்பா. அந்த மாதிரி இருக்குது”
“எதெதுக்கெலாம் வேணாம்னு சொல்றதுன்னு வெவஸ்த்தையே இல்லாம போச்சி”
“இவளுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்குது”
“கெட்ட வார்த்தை பேசாதவனை எங்கிருந்து தேடுறது? பேசாம ஊமைய கட்டி வைக்கலாம்”
நான்கு நாட்களுக்கு பின்னர் அம்மா போன் செய்தாள். “திருமணத்தை நிப்பாட்டியாச்சி. நிச்சயத்துக்கு ஆன மொத்த செலவையும் கேட்டாங்க. குடுத்துட்டோம்”
“சரிம்மா..”
“எனக்கு புரியுது பாப்பா. என்ன பண்றது. இந்த மாதிரி வார்த்தைய கேட்கும்போதே பதறிட்டு வருது. நீ சின்னவளா இருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரங்க அசிங்கமா சண்டை போட்டா அப்பா ரேடியோவ சத்தமா வைப்பாரு. ஞாபகம் இருக்கா. அப்படியே பழகிட்டோம். இப்பிடி துணிச்சலா முடிவெடுக்கத்தான் எங்களால முடியல. அதான் பயமாயிருக்கு. கைய காட்டுன எடத்துலே கல்யாணம் பண்ணவங்க நாங்க. அதுவுமில்லாம உனக்கு கிடச்ச மாதிரி இளிச்சவா அம்மா, அப்பா கிடைக்கல…”
“யாரு சொன்னா நீ இளிச்சவாயினு.. நீ என்னோட அழகு குட்டிச்செல்லம்மா.” அம்மா வாய் விட்டு சிரித்தாள்.
நான்கு மாதங்களுக்கு பின்னர் ஆரக்கிள் டீமில் புதிதாக ஒருவன் சேர்ந்தான். முதல்நாள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உரையாடும் போது…
“நீங்க பேஸ் பண்ணுன கஷ்டமான விஷயம் எது?” என்று கேட்டாள் பிரீத்தி.
“முதல் வருடம் காலேஜ் சேர்ந்தப்ப நடந்த விஷயம். என்னோட சீனியருங்க ராக்கிங் பண்ணும்போது…. மூணு நிமிஷம் தொடர்ந்து கெட்ட வார்த்தை பேசு…. இல்லாட்டி எல்லாரோட ஸூவுக்கும் மூணு நாளு பாலீஸ் போடுன்னு சொன்னாங்க”
“என்ன பண்ணுனீங்க?”
“பாலீஸ் போட்டேன்” என்று சிரிக்க, ஷோபனா மற்றவர்களை கவனித்தாள்.
***********